Published:Updated:

`` `சின்னத்திரையின் டி.ராஜேந்தர்'னு சொல்லிட்டுத் திரியிறேன்.... ஏன் தெரியுமா?" - `முள்ளும் மலரும்' முனீஸ் ராஜா

`` `சின்னத்திரையின் டி.ராஜேந்தர்'னு சொல்லிட்டுத் திரியிறேன்.... ஏன் தெரியுமா?" - `முள்ளும் மலரும்' முனீஸ் ராஜா
`` `சின்னத்திரையின் டி.ராஜேந்தர்'னு சொல்லிட்டுத் திரியிறேன்.... ஏன் தெரியுமா?" - `முள்ளும் மலரும்' முனீஸ் ராஜா

காமெடி நடிகராக சீரியலுக்குள் நுழைந்தவர், முனீஸ் ராஜா. நடிகர் சண்முகராஜனின் தம்பி. அதிர்ஷ்டம் அவரை அடுத்த சீரியலிலேயே ஹீரோ ஆக்கிவிட்டது. 'முள்ளும் மலரும்' தொடரின் ஷூட்டிங்கில் இருந்தவரைச் சந்தித்தோம்.

" 'இட்லி கேட்டவனை 'இதுவும் ஆவியிலதான் வேகுது'னு இடியாப்பம் சாப்பிடச் சொன்னாங்களாம். அந்தக் கதைதான்ணே எனக்கும். சினிமா ஆசையில சென்னைக்கு வந்தவனுக்கு, சீரியல்தான் அமைஞ்சது. அதுவும், முதல் சீரியல்லயே காமெடி வேடம். 'நீ ஸ்க்ரீன்ல வந்து நின்னாலே ஜனங்க சிரிச்சிடுவாங்கடா; அந்தமாதிரி பண்ணிடலாம்'னு 'சம்பந்தம்' கேரக்டரை உருவாக்கினாங்க. அதுவும் ஏமாத்தலை. அந்தக் கேரக்டர் தந்த ரீச்தான், 'முள்ளும் மலரும்' புரொடியூசரை ரிஸ்க் எடுக்கத் தூண்டியிருக்கு" என்றவரிடம், 'ஹீரோ ஆனபிறகு நடந்ததைச் சொல்லுங்க' என்றோம்.

''நான் 'ஹீரோ'ங்கிற தகவல் முதல்ல அரசல் புரசலா என் காதுக்குக் கிடைச்சது. 'என்னது என்னை ஹீரோவாக்கப் போறாங்களா; என்னடா சொல்றீங்க'னு தகவல் சொன்னவங்களையே கேட்டேன். வெளியில அப்படிக் கேட்டாலும், அந்த செகண்டே மனசுக்குள்ள பட்டாம்பூச்சி குறுக்கும் நெடுக்குமா பறக்கத் தொடங்கிடுச்சு. 'ஹீரோன்னா, நிச்சயம் ஹீரோயின் இருப்பாங்கல்ல'னு மனசு கிடந்து துள்ளிக் குதிக்குது. டூயட் பாடுற மாதிரி, ரொமான்ஸ் பண்ற மாதிரினு நானே டைரக்டராகி விதவிதமா சீன்லாம் யோசிச்சிட்டேன். ஆசைப்பட்டது அத்தனையும் அப்படியே நடந்திடுமா என்ன?

ஹீரோயினும் இங்கிருந்து இல்ல, பெங்களூர்ல இருந்து வந்தாங்க. ஷூட்டிங்கும் தொடங்கி, இப்போ நூறாவது எபிசோடை நெருங்கிடுச்சு. ஆனா, இப்ப வரைக்கும் ஹீரோயினை என் விரல்கூட தொட்டு நடிச்சதில்லை. (பார்த்து எழுதுங்கண்ணே, தப்பா எடுத்துக்கப் போறாய்ங்க... என்கிறார்) வில்லன்கூட 'கடத்துறேன் பேர்வழி'னு ஹீரோயின் கையைப் பிடிச்சு இழுத்திருக்காப்ல. எனக்கு அந்த வாய்ப்பும் வரலை. வேற வழி இல்லாம `நான் சின்னத்திரையின் டி.ராஜேந்தர்'னு சொல்லிட்டுத் திரியறேன். எனக்கு வந்த இந்த நிலை வேற எந்த ஹீரோவுக்கும் வரக்கூடாதுண்ணே!' என்றவருக்காக, `உச்' கொட்டினோம்.

கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தவர் ’இதுல இன்னொரு சீரியசான ஒரு மேட்டர் இருக்கு' என டிராக் மாறினார்.

``கதைப்படி ஆர்யா மாதிரி பொண்ணு தேடி அலையிற கேரக்டர் என்னோடது. வரிசையா பொண்ணு பார்க்கப் போயிட்டிருப்பேன். எல்லாப் பொண்ணுகளும் ஏதோவொரு காரணம் சொல்லி, என்னை ரிஜெக்ட் பண்ணிக்கிட்டே இருப்பாங்க. எங்கிட்ட இந்தக் கதையைச் சொல்லித்தான் ஓ.கே. வாங்கினாங்க. சீரியல் தொடங்கி ஒரு வாரம் ஆச்சு. எங்க ஊருக்குப் போய் இறங்கினதும், எங்கம்மா முன்னாடி போய் உட்கார்ந்து, `உன் புள்ள ஹீரோவாகி எப்படி நடிக்கிறேன்னு பார்த்தியாத்தா?'னு கேட்டேன். அது கண்ணுல இருந்து பொழபொழன்னு கண்ணீர். எதுவும் பேசமாட்டேங்குது. வீட்டுல உள்ள மத்தவங்களும் சைலன்டா இருக்காங்க. `என்னப்பா விஷயம்'னு கேட்டா, யாருமே சீரியலைப் பார்க்கலை. ஒருத்தருக்கொருத்தர் எதுவும் பேசாம இருக்காங்க. `என்னனு சொல்லித் தொலைங்களேன்'னு கத்தினதும், 'உன்னை அசிங்கப்படுத்தணும்னே இந்த சீரியலை எடுக்குறாங்கடா; ஹீரோவாம்! யார் என்ன சொன்னாலும் யோசிக்காம சரி சொல்லிடுவியா? உன் நிஜக் கதையைத் தெரிஞ்சுகிட்டு, அதை சீரியலாக்கி இருக்காங்கடா'னு அழுதுச்சு எங்க ஆத்தா.

ஒண்ணு ரெண்டு முறை நான் ரியலா பொண்ணு பார்க்கப்போய் வந்ததே அப்போதான் எனக்கு ஞாபகத்துக்கு வருது. `விடுங்களேன், இது கதை'னு சொன்னா சமாதானம் ஆகமாட்டேங்குறாங்க. அதனால, இப்போ வரைக்கும் கூட என்னோட சீரியலை வீட்டுல யாரும் பார்க்கிறதில்லை!" என்கிறார், முனீஸ்.