Published:Updated:

``சொன்ன மாதிரி நடந்துக்கலைனா, என்னால நடிக்க முடியாது!'' - `நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யா Vs நிஷா பஞ்சாயத்து

``சொன்ன மாதிரி நடந்துக்கலைனா, என்னால நடிக்க முடியாது!'' - `நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யா Vs நிஷா பஞ்சாயத்து
``சொன்ன மாதிரி நடந்துக்கலைனா, என்னால நடிக்க முடியாது!'' - `நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யா Vs நிஷா பஞ்சாயத்து

நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் சரண்யா-நிஷா இடையே என்ன பிரச்னை?

சமீபத்தில் 100-வது எபிசோடைக் கடந்தது 'நெஞ்சம் மறப்பதில்லை' தொடர். 'உங்கள் மனசாட்சியைப் பிரதிபலிக்கும் சரண்யாவின் குரல் தொடர்ந்து ஒலிக்கும்' என பிரமாண்ட போஸ்டர்கள் ஒட்டி அதைக் கொண்டாடியது சேனல். அப்போதே, 'குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் ஏன்?' என்ற முணுமுணுப்பைக் கேட்க முடிந்தது. இப்போது தொடரிலிருந்து அதிரடியாக வெளியேறி இருக்கிறார், 'சத்யா' கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த நிஷா கணேஷ் வெங்கட்ராம்.

'தொடரில் சரண்யாவுக்குத் தரப்பட்ட அதிகப்படியான முக்கியத்துவமே நிஷா வெளியேறியதற்குக் காரணம்' என்கிறார்கள் சிலர். 'இல்லை.. நிஷா கர்ப்பமாக இருக்கிறார்' என்கின்றனர் சிலர். 'ஷூட்டிங்கின்போது நிஷா, சரண்யா இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் வந்துட்டே இருக்கும்; அதனாலேயே வெறுத்துப் போய் நிஷா போயிட்டாங்க' என்றும் காதில் விழுகிறது. 'உண்மையிலேயே என்ன நடந்தது... ஏன் வெளியேறினார்?' - சம்பந்தப்பட்டவர்களையே கேட்கலாம்.

தொடர் மூலம் அதிக கவனம் பெற்றிருக்கும் சரண்யாவிடம் பேசியபோது, '' 'குசும் டோலா' ங்கிற வங்காள மொழி சீரியலோட தமிழ் வெர்சன் இந்தத் தொடர். 'பெங்கால்' மொழியில சரண்யா கேரக்டரைப் பண்ணின நடிகையே அங்க டெலிவிஷன் இன்டஸ்ட்ரியில நம்பர் ஒன். அந்த சீரியலைப் பார்த்தாலே இந்தக் கதை சிங்கிள் ஹீரோயின் சப்ஜெக்டா அல்லது டபுள் ஹீரோயின் சப்ஜெக்டானு தெளிவாப் புரிஞ்சுடும். 'நெஞ்சம் மறப்பதில்லை' டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்னு யார் சொன்னது? இதுல சரண்யா மட்டுமே ஹீரோயின். இந்தக் கேரக்டர் பண்ண ஒரு புதுமுகம் வேணும், அதுவும் கொஞ்சம் துணிச்சலான பொண்ணு வேணும்னு என்னைக் கேட்டாங்க. நானும் என்னால எவ்வளவு பெஸ்டா தர முடியுமோ அவ்வளவுக்கு வொர்க் பண்ணிட்டிருக்கேன். நிஷா இது டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்னு நினைச்சாங்களானு எனக்குத் தெரியாது. ஆனா, 'ரெண்டு ஹீரோயின் சப்ஜெக்ட்ல ஒருத்தவங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்தா எப்படி இன்னொருத்தங்க இருப்பாங்க'ங்கிற மாதிரியான பேச்சுகள் என் காதுலயும் விழுந்தததால இதைச் சொல்றேன். மத்தபடி, நிஷா எனக்கு சீனியர். ஒழுங்கா சேலை கட்டத் தெரியாம இருந்த எனக்கு, சேலை கட்டக் கத்துக் கொடுத்ததே அவங்கதான். அவங்களோட வெளியேற்றம் எனக்கும் வருத்தமாதான் இருக்கு. ஆனா, அவங்களோட முடிவு குறித்து நான் என்ன கருத்து சொல்றது?!' என்கிறார்.

'ஆரம்பத்துல சீரியல்ல சின்னச் சின்ன கேரக்டர்ல வந்து போயிட்டிருந்த நிஷா, லீட் ரோல் பண்ண சான்ஸ் கிடைக்காதானு ஏங்கிட்டிருந்தாங்க. அந்த நேரத்துல் 'தலையணைப் பூக்கள்' தொடர்ல ஹீரோயின் கேரக்டர் பண்ண வாய்ப்பு வந்தது. அந்தத் தொடரும் நல்லபடியாதான் போயிட்டிருந்திச்சு. இந்த நேரத்துல 'பிக் பாஸ்'ல கலந்துக்கிட்ட அவங்க கணவர் கணேஷ் வெங்கட்ராம் மூலமா 'நெஞ்சம் மறப்பதில்லை' தொடருக்கு இவரைக் கேட்டாங்க. அப்ப இவர்கிட்ட என்ன சொல்லி ஓ.கே வாங்கினாங்கனு எனக்குத் தெரியலை. ஏன்னா, சத்யா கேரக்டருக்கு முதல்ல அணுகினது வாணி போஜனை. (தெய்வ மகள் தொடரில் இவரது கேரக்டர் பெயரும் சத்யாதான்!) ஆனா, அவர் 'சரண்யா கேரக்டர் தந்தா பண்றேன்'னு சொல்லிட்டாங்க. அப்புறம்தான் இவரைக் கமிட் செய்தார்கள்' என்கிறார்கள், தொடரின் உள் விவகாரங்கள் அறிந்தவர்கள்.

நிஷாவிடம் பேசினோம்.

''சீரியல்ல என்னை கமிட் பண்ணப்போ எனக்கு அந்த கேரக்டர் பத்திச் சொல்லப்பட்டது வேறு, சீரியலுக்குள்ள வந்தபிறகு அந்தக் கேரக்டர் டிராவல் பண்ண விதம் வேறயா இருந்திச்சு. இதுபத்தி சம்பந்தப்பட்டவங்ககிட்ட நான் பேசினேன். அவங்களும் 'பார்க்கலாம்'னாங்க. ஆனா, எந்த மாற்றமும் இல்லாம அப்படியே போயிட்டிருந்ததால நான் வெளியேற வேண்டிய சூழல் உருவாகிடுச்சு. ஹீரோயினோ வில்லியோ, நான் செய்கிற வேலை என் மனசுக்குப் பிடிச்சதா இருக்கணுமில்லையா? இல்லாதபட்சத்துல அந்த இடத்துல இருக்கிறதுல அர்த்தம் இல்லைங்கிறதால வெளியேறிட்டேன்'' என்கிறார், நிஷா.

'அடுத்து எப்போ டிவியில பார்க்கலாம்' என்றதற்கு, 'கொஞ்சம் டிராவல் பண்ண வேண்டியிருக்கு. வீட்டுல சில இன்டீரியர் வேலைகள் செய்ய வேண்டியிருக்கு. அதனால, சின்னதா ஒரு பிரேக் விடலாம்னு நினைக்கிறேன்' என்கிறார், நிஷா. இந்தப் பிரச்னை குறித்து, 'நெஞ்சம் மறப்பதில்லை' சீரியல் இயக்குநர் அப்துல் ஹபீஸிடம் பேச முயற்சி செய்தோம்; அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. 

அடுத்த கட்டுரைக்கு