Published:Updated:

"இனிமே ரியாலிட்டி ஷோவுல கோமாளி ஆகமாட்டேன்!" - 'கிச்சன் சூப்பர் ஸ்டார்' சாய் சக்தி

"இனிமே ரியாலிட்டி ஷோவுல கோமாளி ஆகமாட்டேன்!" - 'கிச்சன் சூப்பர் ஸ்டார்'  சாய் சக்தி
"இனிமே ரியாலிட்டி ஷோவுல கோமாளி ஆகமாட்டேன்!" - 'கிச்சன் சூப்பர் ஸ்டார்' சாய் சக்தி

டிவி நடிகர் சாய் சக்தி ரியாலிட்டி ஷோக்களில் தன்னைக் காமெடிக்காகவே சேர்க்கிறார்களா என்பது குறித்துப் பேசுகிறார்.

சாய் சக்தியை நினைவிருக்கிறதா? 'கிச்சன் சூப்பர் ஸ்டார்', 'ஜோடி நம்பர் ஒன்' உள்ளிட்ட ஷோக்களில் போட்டியாளராகப் பங்கேற்று சக போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்குமே என்டர்டெய்னராகத் திகழ்ந்தவர். பிறகு திடீரென ஒரு நாள் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி தந்தார். கொஞ்சநாள் கழித்து டிவியே வேண்டாமென்று சொல்லிவிட்டு பிஸ்னஸ் பண்ண துபாய் கிளம்பினார். சென்ற வேகத்தில் திரும்பியவர், பழையபடி டிவி பக்கம்... அதுவும் சமையல் நிகழ்ச்சிக்கே ஆங்கராக வந்திருக்கிறார்.

இந்த நேரத்தில் முன்பு 'கிச்சன் சூப்பர் ஸ்டார்' பண்ணியபோது இவர் செய்த அட்ராசிட்டி, அலும்புகள் மீம்ஸ் வீடியோவாக வெளியாகி லைக், ஷேர்களை லட்சக் கணக்கில் அள்ளிக்கொண்டிருக்கிறது. செஃப் தாமு, நடிகர் சுரேஷ், வெங்கடேஷ் பட் போன்றவர்கள் இருக்கும் அந்த வீடியோ 'சாய் சக்தி ஸ்பெஷல் கலாட்டா' என்ற பெயரில் பட்டையைக் கிளப்பி வருகிறது. 

'கேப்பேஜ்'னா என்ன?' என்கிறார். 'கத்தரிக்காய் ஆலம் கட்டா' என்கிற டிஷ் தயாரிப்பதாகச் சொல்கிறார், சக்தி. 'எல்லாரையும் இவன் இன்னைக்கு கொல்லப் போறான்' எனப் பின்னணியில் கவுண்டமணி பேசுகிறார். மொத்தத்தில் நெட்டிசன்கள் வெச்சு செய்து வெளியிட்டிருக்கிறார்கள், இந்த வீடியோவை.

சாய் சக்தியிடம் பேசினோம்.

'எல்லா ரியாலிட்டி ஷோக்களிலும் காமெடிக்காகவே உங்களைச் சேர்த்துக்கிறதா சொல்றாங்களே, அப்படியா?' 

'' 'கிச்சன் சூப்பர் ஸ்டார்'ல கலந்துகிட்டப்போ எனக்கு சமையல் பத்தி எதுவுமே தெரியாதுதான். 'ஜோடி'யில கலந்துகிட்டப்போ நடனம் பத்திக் கொஞ்சம் தெரியும். ஆனா, நிகழ்ச்சியில சம்பந்தப்பட்ட விஷயங்கள் தெரிஞ்சவங்க மட்டுமே கலந்துக்கணும்னு சொல்லலையே. அதனால கலந்துக்கிட்டேன். ஷோ டெலிகாஸ்ட் ஆகத் தொடங்கின பிறகு வெகுளித்தனமா நான் பண்ண சில விஷயங்கள், அல்லது நான் பண்ணின கோமாளிச் சேட்டைகள் ஆடியன்ஸ் மத்தியில அட்ராக்ட் பண்ணவே, அப்படியே என்னை ஷோவுல தொடர விட்டாங்க. ஒரு கட்டத்துக்குப் பிறகே என்னை வெச்சுக் காமெடி பண்றாங்கனு தெரிய வந்துச்சு. சம்பந்தப்பட்ட சேனல், இதை பிளான் பண்ணிச் செய்யலைனு நம்புறேன். அதேநேரம், மத்தவங்களை அழ வைக்கிறது யார் வேணாலும் செய்யலாம். சிரிக்க வைக்கிறது எல்லாருக்கும் வராது. அதை நாம பண்றோமேனு சந்தோஷப்பட்டுக்கிட்டு, அதைப்பத்தி எல்லாம் பெருசா எடுத்துக்கலை. ஆனா, இனிமேல் எந்த ரியாலிட்டி ஷோவுக்காவது கூப்பிட்டா, 'கோமாளிச் சேட்டை செய்யக்கூடாது'ங்கிறதுல தெளிவா இருக்கேன்."

'ஆங்கர் சாய் சக்தியை மறுபடியும் சீரியல் நடிகரா எப்போ பார்க்கலாம்?'

 " 'நாதஸ்வரம்' எனக்கு அடையாளம் தந்த சீரியல். சில கசப்பான சம்பவங்களால அதுல இருந்து வெளியேற வேண்டி வந்துச்சு. 'நாதஸ்வர'த்துல நடிச்சிட்டிருந்தப்போ என்னை ரியாலிட்டி ஷோவுக்குக் கூப்பிட்டவங்க, தொடர்ந்து சீரியல் வாய்ப்பும் தருவதாகச் சொன்னாங்க. ரியாலிட்டி ஷோவுல என்னைப் பயன்படுத்திக்கிட்டவங்க, இன்னைக்கு வரை எந்த சீரியல் வாய்ப்பும் தரலை. மறுபடியும் சீரியல் பண்ண ஆர்வமாவே இருக்கேன்."

'உங்க லேட்டஸ்ட் கிச்சன் மீம்ஸ் வீடியோ பார்த்தீங்களா?'

''நான் மட்டுமா பார்த்தேன்... 'கிச்சன் சூப்பர் ஸ்டார்' ஷோ புரொடியூசரான ரஊஃபா மேடமே பார்த்துட்டுப் பேசினாங்க. 'ஷோ வெளியானப்போகூட இவ்ளோ ரீச் ஆகியிருக்க மாட்டீங்க சாய்'னு சொன்னாங்க. நான் ஏற்கெனவே சொன்னதுதான், மக்களுக்கு நல்ல என்டர்டெய்னரா தெரியறேனா... சந்தோஷம்தான்!".

பின் செல்ல