Election bannerElection banner
Published:Updated:

’’ ‘ஏண்ணா இப்டி பண்ற’னு என் தங்கச்சி அழுதா...!’’ - அசார் & TSK

’’ ‘ஏண்ணா இப்டி பண்ற’னு என் தங்கச்சி அழுதா...!’’ - அசார் & TSK
’’ ‘ஏண்ணா இப்டி பண்ற’னு என் தங்கச்சி அழுதா...!’’ - அசார் & TSK

கலக்கப்போவது யாரு சீசன் 7 நிகழ்ச்சியின் வெற்றியாளர்களான அசார் மற்றும் திருச்சி சரவணக்குமாரின் ஜாலியான நேர்காணல்...

’’ஒரு பக்கம் சிம்பு அண்ணன், இன்னொரு பக்கம் என்கூட 7 மாசமா பொண்டாட்டி மாதிரி கூடவே இருந்த டி.எஸ்.கே நிக்கிறாங்க. கவுன்ட்டவுண் ஸ்டார்ட் பண்ணியாச்சு. ’யார் அந்த வின்னர்’னு கேட்டதும் சிம்பு அண்ணன், ‘அட்றா... அட்றா... அசார் அண்ட் டி.எஸ்.கே...’னு சொன்னதும் செம சந்தோஷமா இருந்துச்சு. அந்த நிமிஷத்தை என்ஜாய் பண்றதுக்குள்ள முடிஞ்சுப்போச்சு ப்ரதர்...’’ என தங்களுக்கு மகுடம் சூட்டப்பட்ட மொமெண்ட்டை அசார் & டி.எஸ்.கே விவரிக்க, பல கலாய்களுடன் உரையாடல் தொடர்ந்தது. 

’’நான்  மூணாவது படிக்கும்போது சும்மா விளையாட்டா இந்த மிமிக்ரியை ஸ்டார்ட் பண்ணிணேன்’’ என அசார் பேட்டியை ஸ்டார்ட் பண்ண, ’’நானும் ஸ்கூல் டைம்லேயே மிமிக்ரி ஸ்டார்ட் பண்ணிட்டேன். எனக்கு பாட்டுப் பாடுறது ரொம்பப் பிடிக்கும். அதுக்கு அடுத்தது மிமிக்ரிதான். ஸ்கூல்ல எங்க வாத்தியார் மாதிரி இமிடேட் பண்ணுவேன். அப்படித்தான் என்னோட மிமிக்ரி ஸ்டார்ட் ஆச்சு. அடுத்து நடிகர்கள் மாதிரியும் பண்ண ஆரம்பிச்சேன். அந்த சமயத்துலதான் புது வாய்ஸ்னு நான் நினைச்சுட்டு இருந்த உசிலைமணி, பாலையா, கிருபானந்தவாரியார்னு நிறைய பேரோட வாய்ஸை ஸ்கூல் ஃபங்ஷனில் மிமிக்ரி பண்ணுனேன். அதைப் பார்த்துட்டு ஆஹா, ஓஹோனு புகழ்ந்து தள்ளிட்டாங்க’’ என்ற டி.எஸ்.கே, இவர்கள் நண்பர்களான கதையையும் சொல்ல ஆரம்பித்தார்.

’’வேற வேற ட்ராக்ல ட்ராவல் பண்ணிட்டு இருந்த நாங்க, ’இசையருவி’ சேனல் மூலமா ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்கிட்டோம். ’மிமிக்ரி’ சேது அண்ணா ’இசையருவி’யில ’என்னோடு பேசுங்கள்’னு ஒரு ஷோ பண்ணிட்டு இருந்தார். அந்த ஷோல போன் பண்ற காலர்ஸ், ஒண்ணு ஜோக் சொல்லணும், இல்லை மிமிக்ரி பண்ணணும். இந்த ஷோவுக்கு இவன், நான், ஆதவன், விக்னேஷ் கார்த்திக்னு ஒரு கூட்டமே ரெகுலர் காலர்ஸா இருந்தோம். இவன் சென்னையில இருந்து கால் பண்ணுவான், நான் திருச்சியில இருந்து கால் பண்ணுவேன். இப்படித்தான் நான் அசாரை தெரிஞ்சுக்கிட்டேன். முகம் பார்க்காமலேயே காலர் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்’’ என்று டி.எஸ்.கே சொல்ல, இவர்கள் சேர்ந்த கதையை அசார் சொல்ல ஆரம்பித்தார்.

’’இவன் ஆதித்யா சேனல்ல ’சின்னவனே பெரியவனே’னு ஒரு ஷோ பண்ணிட்டு இருந்தான். நானும் அதே சேனல்ல ’திண்டுக்கல்’ சரவணனோடு சேர்ந்து ’டபுள் டமாக்கா’னு ஒரு ஷோ பண்ணிட்டு இருந்தேன். எங்க ரெண்டு பேருக்குள்ளும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்தனால அந்த ஷோ செம சூப்பரா போயிட்டு இருந்தது. அந்த சமயத்தில் அவருக்கு சில சினிமா வாய்ப்புகள் வந்ததும் பிஸி ஆகிட்டார். அதுனால எங்க ஷோல ஒரு வெற்றிடம் வந்துருச்சு. அந்த வெற்றிடத்தை நிரப்ப வேற்றுக் கிரகத்தில் இருந்து ஒருத்தரை கூப்பிடலாமானு யோசிக்கும்போதுதான், ‘திருச்சி’ சரவணக்குமார் எங்க மண்டைக்குள் மணியடிச்சார். சரி, இவனை வெச்சே போகலாம்னு அந்த ஷோவோட பெயரை ’தல-தளபதி’னு மாத்திட்டு, செகண்ட் இன்னிங்ஸை ஸ்டார்ட் பண்ணினோம். இந்த ஷோவும் செம ஹிட்டாச்சு. எந்தளவுக்கு ஹிட்டாச்சுன்னா, கோவில்பட்டியில இருந்து ஒரு பொண்ணு கடலை மிட்டாய் எல்லாம் பார்சல் பண்ணி அனுப்புனாங்க. அந்தளவுக்கு பட்டித்தொட்டி எல்லாம் படு ஹிட். இந்த ரசிகர்கள்தான் நாங்க ’கலக்கப்போவது யாரு’ ஷோல பண்ணும்போதும் சப்போர்ட் பண்ணினாங்க’’ என்ற அசார், ஹீரோவானதற்குப் பிறகும் மிமிக்ரி ஷோவில் கலந்துகொண்ட காரணத்தையும் சொல்கிறார். 

’’நாங்க ஒரு எண்டர்டெயினர். எங்க போனாலும் மக்களை எண்டர்டெயின் பண்ணணும்னுதான் நினைப்போம். நாங்க இந்த ஷோவுக்கு போறோம்னு தெரிஞ்சதும் நிறைய பேர், ’நீங்க ஏன் போட்டியாளரா போறீங்க’னு கேட்டுட்டே இருந்தாங்க. என் தங்கச்சி போன் பண்ணி, ‘ஏண்ணா நீ மறுபடியும் ஆரம்பிச்ச இடத்துக்கே போற’னு அழுதாங்க. நான் யார் சொல்றதையும் கேட்கலை. எனக்கு பெர்ஃபார்ம் பண்ணனும். அதுக்கு இந்த ப்ளாட்பார்ம் வேணும். அதை மட்டும் முடிவா வெச்சுக்கிட்டு வேலைப் பார்க்க ஆரம்பிச்சேன். ரெண்டு, மூணு எபிசோடு போக, போக எல்லாருக்கும் பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு. முதலில் வேணாம்னு சொன்னவங்களும் என்ஜாய் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. ஆனால், நாங்க போட்டியாளர்களாக போனதும் மத்த போட்டியாளர்கள்தான் முதலில் குழம்பிப் போயிட்டாங்க. இவங்க இந்த நிகழ்ச்சியோட நடுவர்களா, இல்லை தொகுப்பாளர்களானு யோசிச்சாங்க. அப்பறம் வாராவாரம் கெஸ்ட் பெர்ஃபார்மென்ஸ் பண்ணப் போறாங்க போலன்னு நினைச்சாங்க. நாங்களும் ஒரு போட்டியாளர்கள்னு தெரிஞ்சதுக்கு அப்பறம் கொஞ்சம் விநோதமாகத்தான் பார்த்தாங்க. அதுக்கப்பறம் எல்லாரும் ’அண்ணா... அண்ணா’னு ரொம்ப நல்லா பழக ஆரம்பிச்சுட்டாங்க’’ என்று அசார் சொன்னதும், தங்களின் கெமிஸ்ட்ரியைப் பற்றி பேச ஆரம்பித்தார் டி.எஸ்.கே.

’’ரெண்டு பேரும் சேர்ந்து பெர்ஃபார்ம் பண்ணும்போது ஸ்கிரிப்ட் அதுக்கு தகுந்தமாதிரி இருக்கணும். என்னோட ப்ளஸ் எதுன்னு எனக்குத் தெரியும். இவனோட ப்ளஸ் என்னான்னு எனக்கு ரொம்ப நல்லா தெரியும். அதையெல்லாம் வெச்சுத்தான் ஸ்கிரிப்ட் வொர்க் பண்ணுனோம். எனக்கு டக்கு டக்குனு வாய்ஸ் மாத்த வராது. ஆனால், அசார் அதை அசால்ட்டா பண்ணிடுவான். அதுனால நீ அதை பண்ணு, நான் இதை பண்றேன்னு பிரிச்சுக்குவோம். அதுனாலதான் எங்க பெர்ஃபார்மென்ஸ்ல ரெண்டு பேருக்கும் ஒரே ஸ்பேஸ் இருக்கும்; அதிகமா விட்டுக்கொடுத்துப்போம். எங்களைப் பொறுத்தவரை அந்த ஸ்கிரிப்ட் ஜெயிக்கணும். இதுல நீ ஜெயிக்கணும்; நான் ஜெயிக்கணும்னு பார்க்க மாட்டோம். அப்படிப் பார்த்திருந்தால் நாங்க ஆரம்பத்துலேயே தோத்துப் போயிருப்போம். நான் இந்த நிகழ்ச்சியில அசார்கூட பண்ணாம வேற யார்க்கூடவாச்சும் சேர்ந்து பண்ணியிருந்தா ஃபைனலுக்கு வந்து, வின் பண்ணியிருப்பேனானு தெரியலை. அந்தளவுக்கு எனக்கு சப்போர்ட்டா இருப்பான் அசார். எங்களுக்கும் சண்டை வரும்; ஒரு நாள் முழுக்க பேசாமக்கூட இருந்திருக்கோம். ஆனால், அதெல்லாம் அடுத்த நாளே ஒண்ணுமில்லாம போயிரும். இந்த கெமிஸ்ட்ரிதான் எங்களை வழிநடத்துதுனு நாங்க நினைக்கிறோம்’’ என்று டி.எஸ்.கே சொல்ல, இருவரும் தங்களது அடுத்தகட்டப் பிளானை அடுக்க ஆரம்பித்தார்கள்.

’’ ’நினைத்தது யாரோ’ படம் மூலமா விக்ரமன் சார்தான் என்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்துல நாலு ஹீரோல நானும் ஒரு ஆள். அடுத்து என்னோட நண்பன் விக்னேஷ் கார்த்திக் இயக்குன ’ஏண்டா தலையில் எண்ண வெக்கல’ படம் சமீபத்தில் ரிலீஸாகி, எனக்கு ஒரு நல்ல பெயர் கிடைச்சது. இப்போ சில படங்கள் பேசிட்டு இருக்காங்க; டி.வியில புது ஷோவும் கமிட்டாகியிருக்கோம். இனிமேல் நிறைய அவதாரங்களில் பார்க்கலாம்’’ என அசார் சொல்ல, ’எஸ்.பி.ஜனநாதன் சார் இயக்கின ’புறம்போக்கு எனும் பொதுவுடைமை’ படத்துல விஜய் சேதுபதி சாரோட படம் முழுக்க நடிச்சிருப்பேன். இப்போ ஜி.வி.பிரகாஷ், சரத்குமார் நடிச்சிருக்குற ’அடங்காதே’ படத்தில் நானும் நடிச்சிருக்கேன். மே மாதம் ஒரு புது டீமோட புது படம் ஒண்ணு ஸ்டார்ட் பண்றோம். சினிமாவுல நடிக்கிறதுதான் எங்களோட இலக்கா இருந்தாலும், எங்களை வளர்த்துவிட்ட டிவியை நாங்க மறக்க மாட்டோம். அதுனால டிவிலேயும் தொடர்ந்து பண்ணிட்டுத்தான் இருப்போம்’’ என டி.எஸ்.கே முடித்தார். 

’கடைசி வரை இதே ஒற்றுமையோடு இருங்க பாஸு...’ என நாம் சொல்ல, ‘’கண்டிப்பா...’’ என்றபடியே ‘பை பை’ காட்டி பறந்தது இந்த வெற்றி ஜோடி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு