Published:Updated:

“இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையா நிகழ்ச்சிக்காக வெளிநாடு போனது நாங்கதான்!” #25YearsOfSunTV

“இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையா நிகழ்ச்சிக்காக வெளிநாடு போனது நாங்கதான்!” #25YearsOfSunTV
“இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையா நிகழ்ச்சிக்காக வெளிநாடு போனது நாங்கதான்!” #25YearsOfSunTV

ஒரு வீட்டுக்குள்ளேயே சுற்றிச்சுற்றி எடுக்கப்படும் ஒரு மணிநேர நாடகம், எதிரெதிரே அமர்ந்து பேசிக்கொண்டே இருக்கும் நேர்காணல்கள்... இப்படி குறிப்பிட்ட வடிவத்தில் வட்டமடித்துக்கொண்டு இருந்த நிகழ்ச்சிகளை மாற்றியதிலும் டிவி பார்க்கும் அனுபவத்தில் மாற்றங்களைப் புகுத்தியதிலும் சன் டிவிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. புது நிகழ்ச்சிகள், `இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக’ என்று ஒளிபரப்பிய புதிய திரைப்படங்கள், பரபர தொடர்கள், விறுவிறு செய்திகள்... என்று சன் டிவியின் வரவு நம் அன்றாட நிகழ்வையே மாற்றியமைத்தது என்றால் அது மிகையல்ல.  

இப்படித் தமிழர்களின் வாழ்வோடு இரண்டரக் கலந்துவிட்ட சன் டிவி நாளை (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு நாளில் தன் 25வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இந்தக் கால் நூற்றாண்டு பயணத்தில் அது அழுந்தப் பதித்த முக்கியமான 25 நிகழ்ச்சிகளைப் பற்றி அதனுடன் தொடர்புடையவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.  

முதலில் `நீங்கள் கேட்ட பாடல்கள்’ விஜயசாரதி. வாரம் ஒரு வெளியூர், வெளிநாடு என்று சுற்றிக்காட்டி, அந்த இடங்களின் சிறப்புகளைப் பட்டியலிட்டு, அங்கிருக்கும் குடும்பங்களைச் சந்தித்து, அவர்களைப் பற்றி பேசவைத்து, அவர்கள் கேட்கும் பாடல்களை ஒளிபரப்புவதே இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட். அதுவும் பின்னால் நடந்தபடி அந்த ஊரைப்பற்றி விஜயசாரதி தம்கட்டி பேசும்போது நாமும் அவருடன் சேர்ந்து அந்த ஊரைச் சுற்றிப்பார்த்த உணர்வு நமக்குள் ஏற்படும்.  

வந்திருக்கும் குடும்பத்தினர் ஒவ்வொருவரிடமும், ‘உங்க பேர் என்ன, நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க, உங்களுக்குத் திருமணமாகி எத்தனை வருஷமாகுது, திருமணத்துக்குப் பிறகு பார்த்த முதல் படம் எது? இத்தனை வருஷத்தில் இந்த ஊர் மாறியிருக்குனு நினைக்கிறீங்களா...’ என்று விஜயசாரதி அடுக்கும் கேள்விகளுக்கு.. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் குடும்பத்தினர் பதில் சொல்வார்கள். அப்போது நிகழ்ச்சியைப் பார்க்கும் நேயர்களும் விஜயசாரதியின் கேள்விக்கான தங்களுடைய பதில்களையும் மனதுக்குள்ளேயே ஓட்டிப்பார்த்துக்கொள்வார்கள். ‘ஏம்மா,  கல்யாணத்துக்குப் பிறகு நாம பார்த்த முதல் படம் எதும்மா?’ என்று பரிமாறும் அனுபவங்கள் மூலம் ‘நீங்கள் கேட்ட பாடல்’ நிகழ்ச்சி தமிழ்க் குடும்பங்களுக்கான ரீவைண்ட் போல இருந்தது. 

`நீங்கள் கேட்ட பாடல்கள்’ அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் விஜயசாரதி.  

 `` `நீங்கள் கேட்ட பாடல்' நிகழ்ச்சியை முதலில் தொகுத்து வழங்கியது விஜய ஆதிராஜ். அப்ப நான் `விடாது கறுப்பு’ தொடரில் நடிச்சுட்டு இருந்தேன். என்னுடன் நடிச்சுட்டு இருந்த தேவதர்ஷினி செட்ல லொடலொடனு பேசுற என்னைப்பார்த்து, ‘நீ ஷோ ஆங்கரிங் பண்ண முயற்சி பண்ணேன்’னு சொன்னாங்க. அப்ப அவங்க சன் டிவியில் `திரைக் கொண்டாட்டம்'னு ஒரு நிகழ்ச்சி பண்ணிட்டு இருந்தாங்க. 

பிறகு நானும் ஆங்கரிங் ஆடிஷனுக்குப் போனேன். ஒரு டிராவல் ஷோவுக்கு ஆங்கர் பண்றமாதிரி பேசச் சொன்னாங்க. `இந்த வாரம் நாம ஊட்டிக்கு வந்திருக்கிறோம். வாங்கப் போகலாம்’னு கேமிராவைக் கைப்பிடிச்சு கூட்டிட்டு போற மாதிரி செஞ்சேன். நான் அப்படி லைவ்லியா பண்ணினது எங்க பாஸுக்குப் பிடிச்சுப்போச்சு. அப்படித்தான் `நீங்கள் கேட்டப் பாடல்' நிகழ்ச்சிக்கு வந்தேன்.  

தமிழில் ஆரம்பிக்கப்பட்ட முதல் டிராவல் ஷோ `நீங்கள் கேட்ட பாடல்'தான். நான் தொகுத்து வழங்க ஆரம்பிச்ச அந்த நிகழ்ச்சு 11 வருஷம் போச்சு. அந்த நிகழ்ச்சி அதுவரை 580 எபிசோடுகளுக்கும் மேல முடிச்சிருந்தோம். வாரம் ஒரு ஊர்னு இந்தியாவுல பிரபலமான பல இடங்களுக்குப் போயிருக்கோம். பிறகு வெளிநாடுகளுக்கும் போனோம். அப்படி இதுவரை 13 நாடுகளை நம் நேயர்களுக்குச் சுத்திக்காட்டியிருக்கோம். இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக ஒரு டிராவலா ஷோவுக்காக வெளிநாடு போனது நாங்கதான். 

எந்த ஊருக்குப் போறோம்னு முன்னாடியே திட்டமிட்டுடுவோம். இப்ப கூகுளை தட்டினா கொட்டுறமாதிரி அப்ப எந்த வசதிகளும் கிடையாது. முதல்ல அந்த ஊர் பற்றின விவரங்களை சன் டிவி நிருபர்களிடமிருந்து வாங்குவோம். பிறகு அந்த ஊர் பற்றின புத்தகங்களையும் வாசிப்போம். மேலும் சம்பந்தப்பட்ட ஊரைச்சேர்ந்தவங்கள்ட்ட பேசி அதை ஊர்ஜிதப்படுத்திப்போம்.  

அப்படிதான் ஒருமுறை மகாபலிபுரம் அர்ஜுனன் தபசு பாறையில் ஒரு தாய் மான், குட்டி மான் இருக்கும். அதைப்பற்றிப் பேசிக்கிட்டு இருக்கும்போது, அந்தப்பக்கமா வந்த ரிக்‌ஷாக்காரர், ‘இதை இந்திராகாந்தி அம்மா வந்து பார்த்துட்டு இந்த இரண்டு மான்களையும் பத்து ரூபாய் நோட்டில் இடம்பெறச்செஞ்சாங்க’னு சொன்னார். பிறகு அது உண்மையானு செக் பண்ணிட்டு அதை நிகழ்ச்சியிலும் சேர்த்தோம்.  

இப்படிப் பண்ணின எல்லா எபிசோடுகளும் எனக்குப் பிடித்தவைதாம். ஆனாலும், அந்தமான் தீவுல இருக்குற பாலதாங்ஸ் தீவுல மக்ரோன்ஸ் மாதிரி சில குன்றுகள் இருக்கு. அதன் மேல ஏறி குதிச்சுட்டு இருந்தேன். அப்ப அதிலிருந்து ஆவி பறக்க ஒருவகையான திரவம் வெளியே வந்தது. அதில் சல்ஃபர் வாடை வந்தது. ‘இதை அரசாங்கத்தைச் சேர்ந்த புவியியலாளர்கள் கவனிக்க வேண்டும்’னு நிகழ்ச்சியிலேயே சொன்னேன். பிறகு இயக்குநர் நாகா அதைப்பற்றி சொல்லும்போது, ``அது பூமியின் டெக்டானிக் பிளேட்ஸின் அசைவுகள்"னு சொன்னார். பிறகு கொஞ்ச நாளில் சுனாமி வந்தது. அது மறக்கமுடியாத எபிசோட். 

இப்பவும் நான் சன டிவியில்தான் இருக்கேன். சுட்டி டிவி சேனலை நிர்வகிக்கிறேன். நான் ‘நீங்கள் கேட்ட பாடல்கள்’ ஷோவை விட்டு 10 வருஷங்களுக்கும் மேல ஆச்சு. ஆனா இன்றைக்கும் என்னை எல்லாருக்கும் தெறியுதுன்னா, அதுக்கு சன் டிவியும் 'நீங்கள் கேட்ட பாடல்' குழுவும்தான் காரணம். அவங்களுக்கு நன்றி” என்கிறவரிடம், “அதே ஷோவை இப்ப யார் தொகுத்து வழங்கினா நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்க?” என்றேன்.  

“இதை கர்வமாவே சொல்லுவேன். நான் நல்ல உச்சரிப்போட தமிழைப் பிழையில்லாம சுத்தமாப் பேசுவேன். இதை இந்தியா தாண்டியும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் ஏகப்பட்ட பேர் பாராட்டியிருக்காங்க. அப்படி நல்ல தமிழ் உச்சரிப்பும் புத்தக வாசிப்பும் உள்ள ஒருத்தர் கிடைச்சா அவங்களைத் தொகுத்து வழங்கச் சொல்லலாம். அப்படி யாராவது இருக்கங்களா பாஸ்!” என்கிறார். 

அது சரி...