Published:Updated:

`பரபரப்பா சீரியல்ல நடிச்சுட்டு வீட்ல சும்மா இருக்கிறது கொடுமைங்க..!' - காயத்ரி பிரியா

வெ.வித்யா காயத்ரி

அன்பான மகளாகவும், பாசமான மருமகளாகவும் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்ற காயத்ரி பிரியா நான்கு வருடங்களாக சீரியலுக்கு பிரேக் எடுத்துள்ளார். அவரிடம் பேசினோம்.

`பரபரப்பா சீரியல்ல நடிச்சுட்டு வீட்ல சும்மா இருக்கிறது கொடுமைங்க..!' - காயத்ரி பிரியா
`பரபரப்பா சீரியல்ல நடிச்சுட்டு வீட்ல சும்மா இருக்கிறது கொடுமைங்க..!' - காயத்ரி பிரியா

`பாவம் இந்தப் பொண்ணு. எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தறாங்க...ச்சோ பாவம்' எனப் பலரின் அனுதாபத்தையும் அன்பையும் பெற்றவர், காயத்ரி பிரியா. பல சீரியல்களில், அன்பான மகளாகவும் பாசமான மருமகளாகவும் நடித்து, பாராட்டைப் பெற்றவர். நான்கு வருடங்களாக சீரியலுக்கு பிரேக் எடுத்துள்ளார். அவருடன் பேசும் முன்பு ஒரு குட்டி பயோடேட்டா.

பெயர்: காயத்ரி பிரியா 

முதல் சீரியல்: நாகபந்தம் (தெலுங்கு)

நடித்த கதாபாத்திரம்: பாசிட்டிவ் & நெகட்டிவ்

வசிப்பது: சென்னை

தற்போது செய்வது:  மலையாள சீரியல்.

பிடித்த ரோல்: பாசிட்டிவ்

குழந்தைகள்: ஒரு பொண்ணு 8 வயசு. ஒரு பையன் 6 வயசு.

நெக்ஸ்ட் பிளான்: தமிழ் சீரியலுக்காக வெயிட்டிங்.

``ஜெயா டிவியில் தொகுப்பாளராகத்தான் மீடியாக்குள் நுழைஞ்சேன். ரொம்ப பிடிச்சு, ரொம்ப ரொம்ப ரசிச்சு ஷோ பண்ணிட்டிருந்தேன். என் நிகழ்ச்சியைப் பார்த்துட்டு சீரியலில் நடிக்கக் கூப்பிட்டாங்க. கே.பாலச்சந்தர் சாரின் `நாகபந்தம்', என்னுடைய முதல் சீரியல். தமிழ், தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் நடிச்சுட்டேன். தமிழில் 50 சீரியல்களுக்கு மேலே நடிச்சிருக்கேன்'' என்றவர் பணியிலிருந்து, குடும்பம், குழந்தை எனப் பாதையை மாற்றி பூரிப்புடன் அழைத்துச் செல்கிறார்.

``என் பசங்க ரெண்டு பேருமே செம்ம ஸ்மார்ட். படிப்பிலும் சரி, சேட்டையிலும் சரி, செம துருதுருப்பு. நான் நடிச்ச சீரியல்கள் சிலவற்றை ரீடெலிகாஸ்ட் பண்ணும்போது, `அம்மா நீங்க டிவியில் வர்றீங்க'னு பயங்கர குஷியாகிடுவாங்க. ஒருநாள், நானும் என் பசங்களும் ஷாப்பிங் போயிருந்தோம். அப்போ, ஒரு அம்மா என்கிட்ட வந்து, `நீங்க ஏன் இப்போவெல்லாம் சீரியலில் நடிக்கிறது இல்லே. நாங்க உங்களை ரொம்ப எதிர்பார்க்கிறோம். சீக்கிரமே ரீஎன்ட்ரி கொடுங்க'னு சொன்னாங்க. உடனே என் பசங்க, `அம்மா நடிச்ச சீரியல்தான் டிவியில் ரீடெலிகாஸ்ட் ஆகுதே. அதைப் பாருங்க ஆன்ட்டி'னு சொன்னாங்க'' என்கிறார் புன்னகையுடன்.

``பெரும்பாலும் அமைதியான கதாபாத்திரமாகவே எனக்குக் கிடைச்சது. அந்தக் காலகட்டத்து சீரியல்களில் நாயகி என்றாலே, அழுதுட்டுதான் இருப்பாங்க. நானும் அப்படி நிறைய நடிச்சேன். என் திருமணத்துக்கு அப்புறம் `உறவுக்குக் கைகொடுப்போம்' சீரியலில் நெகட்டிவ் ரோல் வாய்ப்பு வந்துச்சு. ஒரு சவாலா எடுத்து நடிச்சேன். அந்தச் சமயத்தில் நேரில் பார்க்கிறவங்க `இதுவரைக்கும் உங்களை எங்க வீட்டில் ஒருத்தராவே நினைச்சுட்டிருக்கோம். தயவுசெய்து நெகட்டிவ் ரோலில் நடிக்காதீங்க'னு உரிமையோடு சொல்வாங்க. மக்களுக்குப் பிடிக்கலைன்னு தெரிஞ்சதும், இனி நெகட்டிவ் ரோல் வேண்டாம்னு முடிவெடுத்துட்டேன்'' என  நினைவலைகளில் நீந்தித் திரும்புகிறார்.

``இரண்டு குழந்தைகளின் தாயானதும் அவங்களுக்காக சீரியலுக்கு பிரேக் எடுத்தேன். என் கணவரின் வேலை காரணமாக மலேசியாவுக்குப் போய்ட்டோம். நான்கு வருட மலேசியா வாழ்க்கை. சீரியலில் பிஸியா நடிச்சுட்டு திடீர்னு வீட்டுல சும்மா இருக்கிறது ரொம்பக் கொடுமையான விஷயம். தமிழ், தெலுங்கு, மலையாளம் என எப்பவும் ஷூட்டிங்லேயே என் லைஃப் போய்ட்டிருந்துச்சு. மலேசியா போனதுக்கு அப்புறம் எல்லாத்தையும் மிஸ் பண்ணினேன். நடிப்பு ஆசை தீரலை. என் கணவரும் சரி, குடும்பத்தினரும் சரி எப்பவுமே எனக்கு ஃபுல் சப்போர்ட். அதனால், எனக்காகவே மலேசியாவிலிருந்து சென்னைக்கு ரிட்டன் டிக்கெட் எடுத்து வந்துட்டோம். இப்போ, மலையாள சீரியலில் நடிச்சுட்டிருக்கேன்.

முன்னாடி சீரியல்களில் நடிக்கும்போது பயன்படுத்தின டிரெஸ், ஜூவல்ஸ் எல்லாத்தையும் பத்திரமா வெச்சிருந்தேன். அதையே இப்போ உள்ள டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி ஆல்டர் பண்ணி, யூஸ் பண்ணிட்டிருக்கேன். என் தமிழ் சீரியல் ரசிகர்களைப் பார்க்கிறதுக்கு ஆர்வமா இருக்கேன். என்னை மீடியாவுக்கு அறிமுகப்படுத்திய தொகுப்பாளர் வேலையையும் செய்ய கொள்ளை ஆசை. வாய்ப்பு கிடைச்சா உங்க எல்லோரின்  வீட்டு வரவேற்பறையிலும் என்னைப் பார்க்கலாம்'' என்றவரின் பேச்சில் அத்தனை பூரிப்பு!