Published:Updated:

" 'ஐ திங், அச்சச்சோ பகவானே'ங்கிற டயலாக் என் குரல்!" ஸ்ரித்திகா

" 'ஐ திங், அச்சச்சோ பகவானே'ங்கிற டயலாக் என் குரல்!" ஸ்ரித்திகா
" 'ஐ திங், அச்சச்சோ பகவானே'ங்கிற டயலாக் என் குரல்!" ஸ்ரித்திகா

'ஐ திங், அச்சச்சோ பகவானே... நேக்கு என்னன்னமோ பண்றதே'ங்கிற 'யாரடி நீ மோகினி' படத்துல வர்ற டயலாக் ரொம்ப ஃபேமஸ். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரி நான்தான்.

`` 'யாரடி நீ மோகினி' படத்தில், 'ஐ திங், அச்சச்சோ பகவானே... நேக்கு என்னன்னமோ பண்றதே' என்கிற சரண்யா மோகன் டயலாக், அன்றைக்குப் பயங்கர ட்ரெண்ட். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரி நான்தான். அப்புறம், ஆக்டிங்கில் பிஸியானதால் டப்பிங்கை தள்ளிவெச்சிருந்தேன். இனி, நடிப்பு, டப்பிங் ரெண்டிலும் கவனம் செலுத்தப்போறேன்" எனப் புன்னகையுடன் பேசுகிறார், ஸ்ரித்திகா. சீரியல்கள் வழியே ஒவ்வோர் இல்லத்திலும் குடியிருக்கும் நாயகி.

``நடிக்க வந்தது எப்படி?"

``என் பூர்வீகம், மலேசியா. அங்கே குழந்தை நட்சத்திரமா சீரியல்களில் நடிச்சுட்டிருந்தேன். அப்புறம் படிப்புக்காக இந்தியா வந்தேன். என் அக்கா சுதா, தமிழில் ஆங்கர் மற்றும் சீரியல் நடிகை. அவங்க ஆங்கரிங் பண்றதைப் பார்க்க ஒருமுறை போயிருந்தேன். அப்போ, 'நீங்களும் நடிக்கலாமே'னு சிலர் சொன்னாங்க. விளம்பரங்களில் தொடங்கி சீரியல்கள், சில படங்களில் நடிச்சேன். 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் கதையாசிரியர் பாஸ்கர் சக்தி சாருக்கு நன்றி சொல்லணும். அவர் ரெஃபர் பண்ணித்தான், சீரியல் மூலம் மக்கள் கவனத்துக்கு வந்தேன். அப்போ நான் சினிமாவில் கவனம் செலுத்திட்டிருந்ததால், சீரியலில் நடிக்கத் கொஞ்சம் தயங்கினேன். ஆனாலும், பெரிய பேனர் என்பதால் ஒப்புகிட்டேன். அடுத்தநாளே காரைக்குடியில் ஷூட்டிங். அதில் நிறையப் புதுமுகங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமா இருந்துச்சு. அப்புறம் எல்லோரும் பழக்கமாகிட்டோம்."

`` 'மலர்' கேரக்டர் பெரிய ரீச் ஆனதே..."

``மிடில் கிளாஸ் குடும்பப் பொண்ணு. நிறைய பிரச்னைகளுக்குப் பிறகு காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிற கேரக்டர். புகுந்த வீட்டின் நலனில் அக்கறையோடு இருக்கும் 'மலர்' கதாபாத்திரம் மக்கள் மனசுல பெரிய தாக்கத்தை ஏற்படுத்திச்சு. அதில் நடிச்ச அஞ்சு வருஷமும், எங்கே போனாலும் 'மலர்'னு ரசிகர்கள் வாழ்த்தி மகிழ்வாங்க. இப்போ, 'பிரேமம்' படத்தின் மலர் டீச்சர் மாதிரி, சின்னத்திரையில் 'மலர் பெயரால் கிடைச்ச புகழ் பெரிசு."

``உங்களுக்குப் பெயர் வாங்கிக்கொடுத்த ரெண்டு சீரியலிலும் உங்களுக்குக் கல்யாணம் ஆகிறது பெரிய சவாலா இருந்துச்சே..."

(சிரிப்பவர்) ``அதுக்கு நான் என்னங்க பண்ண முடியும். கேரக்டர் அப்படி. முதல் சீரியலில் சில பிரச்னைகளைக் கடந்தாவது கல்யாணம் ஆச்சு. ஆனால், அடுத்த சீரியலில் தொடக்கத்திலிருந்து கடைசிவரை எனக்குக் கல்யாணம் ஆகிறது பெரிய டிவிஸ்டாக இருக்கும். அலமேலுவுக்குக் கல்யாணம் ஆகுமானு பலருக்கும் கேள்வியா இருந்துச்சு. என்னடா இது நமக்கு வந்த சோதனைனு எனக்குள்ளே சொல்லிச் சிரிச்சுக்கிட்டேன்." 

``டப்பிங் ஆர்டிஸ்ட் பணி தொடர்கிறதா?"

`` 'யாரடி நீ மோகினி' படத்தில் நடிகை சரண்யா மோகனுக்கு டப்பிங் கொடுக்கும் வாய்ப்பு வந்துச்சு. அந்த வாய்ப்பை சந்தோஷமா செய்தேன். நிறைய ரீச் கிடைச்சுது. 'ஜெயம்கொண்டான்', 'ஆறுமுகம்', 'ஈரம்' உள்ளிட்ட பல படங்களிலும் சரண்யாவுக்கு டப்பிங் கொடுத்தேன். வேற ஹீரோயின்களுக்கும் டப்பிங் கொடுக்கும் வாய்ப்பு வந்துச்சு. ஆனால், சீரியலுக்காகப் பெரும்பாலும் காரைக்குடியிலேயே இருந்ததால், டப்பிங் வாய்ப்புகளை ஏத்துக்க முடியலை. இனி, ஆக்டிங், டப்பிங் ரெண்டிலும் கவனம்செலுத்த முடிவுசெய்திருக்கேன். இன்னொரு விஷயம் சொல்லட்டுங்களா? நான் நல்லா பாடவும் செய்வேன்."

``ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி போனில் பேசிட்டே இருப்பீங்களாமே..."

``வெளியூர் ஷூட்டிங்கில் இருக்கிறதால், சென்னையில் இருக்கும் அம்மாவுக்குப் போன் பண்ணி நேரம் போறது தெரியாமல் பேசுவேன். ரொம்ப சைலன்டாவே பேசறதால், 'பாய் ஃப்ரெண்டுகிட்ட பேசுறியா?'னு பலரும் கிண்டல் பண்ணுவாங்க. என்னால் அம்மா, அக்காவோடு பேசாமல் ஒருநாள்கூட இருக்க முடியாது. ஒவ்வொரு நாள் நடந்த நிகழ்வுகளை அவங்ககிட்ட ஷேர் பண்ணிட்டே இருக்கணும். அதுதான் விஷயம். மற்றபடி, என் வேலையில் சரியாவே இருப்பேன்."

அடுத்த கட்டுரைக்கு