Published:Updated:

'சரிகமப' ஷோவில் பொதுமக்கள் ஓட்டு ரமணியம்மாளுக்குதான் அதிகம் கிடைத்ததா? - என்ன சொல்கிறது சேனல்?

'சரிகமப' ஷோவில் பொதுமக்கள் ஓட்டு ரமணியம்மாளுக்குதான் அதிகம் கிடைத்ததா? - என்ன சொல்கிறது சேனல்?
'சரிகமப' ஷோவில் பொதுமக்கள் ஓட்டு ரமணியம்மாளுக்குதான் அதிகம் கிடைத்ததா? - என்ன சொல்கிறது சேனல்?

சரிகமப இறுதிப் போட்டியில் என்ன நடந்தது

ஜீ தமிழ் சேனலின் 'சரிகமப' ஷோவில் டைட்டில் வின்னராகி 40 லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்றைப் பரிசாகப் பெற்றிருக்கிறார், வர்ஷா. இறுதிப் போட்டி முடிந்து வின்னராக அறிவிக்கப்பட்ட நிமிடத்திலிருந்து இடைவிடாது வந்துகொண்டிருக்கும் மொபைல், வாட்ஸ்அப் அழைப்புகளுக்குப் பதிலளித்துக்கொண்டிருந்தவர், கிடைத்த இடைவெளியில் நம்மிடம் பேசினார்.

''சொந்த ஊரு திருவனந்தபுரம். அம்மா வழித் தாத்தா கேரளா முழுக்க இசைக் கச்சேரிகள் பண்ணியிருக்கார். அவருக்கு அம்மாவை பெரிய பாடகி ஆக்கணும்ங்கிறது ஆசை. ஆனா, ஒருகட்டத்துக்கு மேல அம்மாவால தாத்தா நினைச்ச மாதிரி வர முடியலை. 'என்னால முடியல; என் பொண்ணு பண்ணுவா'னு தாத்தாகிட்ட அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்களாம் அம்மா. அதனால மூணு வயசுலேயே என்னை மியூசிக் கிளாஸுக்கு அனுப்பிட்டாங்க. ஸ்கூல் முடிக்கிறதுக்குள்ள முறைப்படி இசை கத்துக்கிட்டேன். ஆனா, அதுக்குப் பிறகுதான் திருவனந்தபுரத்தைவிட சென்னைதான் திறமையாளர்களுக்கான சரியான இடம்னு தெரிய வந்தது. வீட்டைப் பிரிஞ்சு சென்னைக்கு நான் மட்டும் வந்தேன். இங்கே கல்லூரியில சேர்ந்து படிச்சுக்கிட்டே இசை சம்பந்தமான முயற்சிகளையும் தொடர்ந்தேன். பிறகு, எனக்காக அப்பா மட்டும் டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு சென்னைக்கு வந்துட்டாங்க. இன்னைக்கு வீட்டைப் பிரிஞ்சு சென்னை வந்த நோக்கத்துல பாதி நிறைவேறியிருக்குனு சொல்லலாம்'' என்றவரிடம், 'சரிகமப' அனுபவங்கள் குறித்துக் கேட்டோம்.

''மலையாள சேனல்கள்ல சில ஷோக்கள்ல கலந்துட்டிருக்கேன். சிலவற்றில் ஃபைனல் வரை வந்து வாய்ப்புகள் நழுவிப்போயிருக்கு. அந்த நேரத்துல எல்லாம் எனக்கு ரொம்பவே ஆறுதலா இருந்தது, என்னோட அப்பா. 'சரிகமப' நிகழ்ச்சியில கலந்துக்கிறதுக்காக நான் பாடிய முதல் பாட்டு, 'அழகு மலராட'. அன்னைக்கு ஆடிஷன்ல தேர்வானபோதே என் மனசுக்குள்ள ஒரு இனம் புரியாத உணர்வு உண்டாச்சு. எப்படியும் இந்த ஷோவுல ஜெயிப்பேன்கிற தன்னம்பிக்கைனுகூட அதைச் சொல்லலாம். அப்படியொரு ஃபீல் எனக்கு வந்ததைக் கடவுள் செயலாதான் நினைக்கிறேன். அதேபோல தொடர்ந்து எல்லா எபிசோட்லேயும் 'கோல்டன் பர்ஃபாமென்ஸ்' வாங்கினதுக்கும் அதே கடவுள் கருணைதான் காரணம்'' என்கிறவர், நிகழ்ச்சியில் சித்ரா, சங்கர் மகாதேவனிடமிருந்து கிடைத்த பாராட்டுகளை நினைவுகூர்கிறபோது, நெகிழ்ந்துபோகிறார்.

இதனிடையே, இறுதிப் போட்டியில் பொதுமக்கள் வாக்களித்ததில், அதிக வாக்குகள் ரமணியம்மாளுக்கே கிடைத்ததாகத் தகவல்கள் உலா வந்துகொண்டிருக்கின்றன. கடைசிச் சுற்றில் பப்ளிக் வாக்கெடுப்பு நடத்தப்படும் இந்த மாதிரியான ரியாலிட்டி ஷோக்களில், எந்த அடிப்படையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருந்துவருகிறது. 'நடுவர்கள் வழங்கிய மதிப்பெண்கள் குறைவாக இருந்தாலும், பப்ளிக் வாக்களிப்பு அடிப்படையில் தேர்வுசெய்தோம்' என சில சேனல்களில் வெற்றியாளரைத் தேர்ந்தெடுத்தது, கடந்த காலத்தில் நடந்திருக்கிறது.

ஜீ தமிழ் சேனல் தரப்பில் பேசினோம். 'இறுதிப் போட்டியில் நடுவர்கள் வழங்கிய மதிப்பெண்களையோ, ஒவ்வொரு போட்டியாளருக்கும் கிடைத்த பொதுமக்களின் ஓட்டுக்களையோ புள்ளி விபரமாகத் தரமுடியாது. மொத்தமாக 13 லட்சம் வாக்குகள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. பொதுமக்களின் வாக்குகளுக்கு 50 %, நடுவர்களின் மதிப்பெண்களுக்கு 50 % என்கிற விகிதத்திலேயே வெற்றியாளர் முடிவு செய்யப்பட்டார்' என்றவர்கள், 'ரமணியம்மாளுக்குப் பொதுமக்களிடமிருந்து அதிகமான வாக்குகள் கிடைத்ததா என்பதுகுறித்தும், உறுதிப்படுத்த இயலாத நிலையில் உள்ளோம்' என முடித்துக்கொண்டார்கள்.

பின் செல்ல