Published:Updated:

"உண்மையிலேயே தோற்றது நீங்கள்தான் ஆர்யா!" - ஸ்டூடியோவிலிருந்து ஒரு பெண்ணின் குரல்

எங்க வீட்டு மாப்பிள்ளை முடிவு குறித்து ஆர்யாவுக்கு முதிர்கன்னி ஒருவரின் கோரிக்கை!

"உண்மையிலேயே தோற்றது நீங்கள்தான் ஆர்யா!" - ஸ்டூடியோவிலிருந்து ஒரு பெண்ணின் குரல்
"உண்மையிலேயே தோற்றது நீங்கள்தான் ஆர்யா!" - ஸ்டூடியோவிலிருந்து ஒரு பெண்ணின் குரல்

'பிக்பாஸ்' போல பேசப்படணும்; முடிஞ்சா அதை பீட் பண்ணலாம்... அப்படியொரு நிகழ்ச்சியோட தமிழ் லாஞ்ச் இருக்கணும்'

இரண்டு மாதங்களுக்கு முன் தமிழில் ஒளிபரப்பைத் தொடங்கிய 'கலர்ஸ் தமிழ்' சேனலுக்கு அதன் வட இந்திய தலைமையிடம் இருந்து வந்த கட்டளை இது. அடுத்த நாளே, பிசினஸ் ஆட்களும் கிரியேட்டிவ் டீமும் ரூம் போட்டு யோசித்தார்கள். சினிமா செலிபிரிட்டியில யார் சரியா வருவாங்க, எதைப் பேசலாம், யாருக்கு என்ன பிரச்னை... யோசிச்சிட்டே வந்தப்பதான், அவங்க சிந்தனையில சிக்கினார், கோலிவுட்டின் எலிஜிபிள் பேச்சிலர் ஆர்யா. கரெக்ட்... 'ஆர்யா கல்யாணம்'ங்கிற அந்த வார்த்தை உதயமாச்சு. 'குய்க்.. கான்செஃப்ட் இதுதான், பேசிடுங்க' என்றது, சேனல் தலைமை. மீட்டிங்கில் கலந்து கொண்ட சில நார்த் புள்ளிகள், 'எங்க சைடு இந்த மாதிரி சுயம்வர நிகழ்ச்சி நடிகைகளுக்கே நடந்திருக்கு' என எடுத்துக்கொடுத்தார்கள். 'அங்க செய்வாங்க.. இங்க வெச்சு செய்யப்போறாங்க...' என அப்போதே முணுமுணுத்திருக்கிறார்கள் சிலர். கடைசியில் முதல் மீட்டிங்கிலேயே 'எங்க வீட்டு மாப்பிள்ளை' கான்செப்ட் முடிவாகிவிட்டது.

சரி, ஆர்யாவிடம் பேச வேண்டும். பிசினஸ் ஹெட் நேரில் போனார். 'இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது பாஸ்' என்ற ஆர்யா, 'நான் பாட்டுக்கு பேச்சிலர் லைஃபை என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன். இது வேறயா' என மறுத்தார். சேனல் விடவில்லை. 'ட்ரையல் பண்ணிப் பார்க்கலாம். நம்மூர்ல ஃபர்ஸ்ட் டைம் இப்படிப் பண்றோம். பிக்பாஸைக் கூடத் திட்டினாலும் பிறகு பார்த்தாங்க'.. இப்படி என்னென்னவோ சொன்னவங்க, கடைசியா, அந்த வார்த்தையை விட்டாங்க. 'நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்னுகூட கட்டாயமல்ல பாஸ்! சேனலைப் பொறுத்தவரை கல்யாணம் நடந்தால் சந்தோஷம். இல்லையா, முடிவை அந்த நேரம் பார்த்துக்கலாம்!

'என்ன சொன்னீங்க...' எனக் கேட்ட ஆர்யா, 'வித்தியாசமா இருக்கே இது' என்றபடி ஒருபடி இறங்கியிருக்கிறார். மறுபடி பின்வாங்காதபடி கவனமாகப் பார்த்துக்கொண்டது சேனல். 'ஆமா சார், பெண் பார்க்கிற வைபோகம்னு நடக்குதில்ல, அந்த மாதிரிதான். எவ்வளவோ பொண்ணுங்களைப் பார்க்கிறோம். எத்தனை வீடுகள்ல ஸ்வீட் காபியோட முடிச்சுக்கிடுறோம். எல்லாத்துக்கும்மேல இது ஒரு ஷோதான்' என அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர்கள், கூடவே 'ஓ.கே.,ன்னா பேமென்ட் பேசிடலாம்' என்றார்கள். 'அக்ரீமென்ட்'னு ஒண்ணு போடுவீங்களே, அதைக் கவனமாப் போடுங்கப்பா' என்றாராம்.

சேனல் அறிமுக விழாவிலேயே 'நிச்சயம் ஆர்யா கல்யாணம் செய்துகொள்வாரா' என திரும்பத்திரும்ப செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'கவனமாக 'நாங்களும் நம்புறோம்' என்றே பதிலளித்தார் பிசினஸ் ஹெட் அனூப் சந்திரசேகர்.

இரண்டு மாதங்கள், ஐம்பது எபிசோடுகள்... பதினாறு பெண்கள் கலந்துகொண்டார்கள். 'ஆண்களுக்குதான் ஷோ பிடிக்கலை, பெண்கள் ஆர்வமா பார்க்கிறாங்க' என்றார் ஷோ இயக்குநர். பெண்கள் விரும்பிப் பார்த்தார்கள்தான். ஆனால், அந்தப் பெண்கள் ஷோ இறுதியில் ஆர்யா கல்யாணம் நடக்குமென நம்பினார்கள். 'அந்தப் பதினாறு பெண்களுக்கு எந்தளவு நம்பிக்கை இருந்ததெனத் தெரியவில்லை. ஆனால், அவர்களில் சிலரின் குடும்பத்தினர் ஆர்யா சொந்தமாகமாட்டாரானு ஏங்கினது தெரிஞ்சது' என்கிறார், அந்த யூனிட்டிலேயே இருந்த ஒருவர். 

ஷோவின் நிறைவு நாள் மேடை மூன்று பெண்களுடன் பரபரப்பானது. 'ஆர்யா கட்டிக்கப் போற பொண்ணு யார்யா'னு பார்க்க உலகத் தமிழர்களே காத்துக்கிடக்காங்க' எனத் தன் பங்குக்கு சங்கீதா கிச்சுகிச்சு மூட்டினார். அந்த க்ளைமாக்ஸ் காட்சியும் வந்தது. 'யாராவது ஒருத்தரைத் தேர்வுசெய்தா, மத்த ரெண்டு பேர் நிலைமையை யோசிச்சுப் பாருங்க. அதனால, யார் மனதையும் காயப்படுத்த விரும்பலை. எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்' என ஆர்யா அமைதியாக நிற்க, அந்த மூன்று பெண்களும் அவர்களது குடும்பங்களும் அதிர்ந்தார்களோ இல்லையோ, இரண்டு மாதங்களாக நிகழ்ச்சியைப் பார்த்து வந்த ஆடியன்ஸ் அதிர்ந்துபோனார்கள். 'இப்படித்தான் நடக்கும்னு நாங்க எதிர்பார்த்தோம்' எனக் கழுவி ஊற்றத் தொடங்கிவிட்டார்கள் நெட்டிசன்கள்.

இறுதி நாள் நிகழ்ச்சி ஷூட் செய்யப்பட்டபோது அதில் கலந்துகொண்ட ஒரு டி.வி பிரபலம், ஆர்யாவின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக அங்கேயே பதிவுசெய்திருக்கிறார். 'இதெல்லாம் முன்னாடியே தெரியாதா? அப்ப இது திட்டமிட்ட நிகழ்ச்சியா' என்றெல்லாம் அவர் கேட்க, அவரைத் தொடர்ந்து பேசவிடாமல் தடுத்துவிட்டார்களாம்.

சென்னையில் தனியார் வங்கியில் பணிபுரியும் அந்தப் பெண் நம்மிடம் பேசினார். "இதுவரை பத்து பேருக்கு மேல என்னைப் பொண்ணு பார்த்துட்டுப் போயிட்டாங்க சார். ஒவ்வொருத்தனும் வந்துட்டுப் போன மறுநாள்ல இருந்து ஒரு மாசம் வரை போன் வரும்னு எதிர்பார்ப்பாங்க வீட்டுல. அந்த மனநிலை ஊர் உலகம் அறியாது. கிட்டத்தட்ட அதேநிலைதான் இந்த ஷோவுல நடந்திருக்கு. நாலு சுவருக்குள்ள நடக்கறதை கேமரா வெச்சுக் காட்டியிருக்காங்க, அவ்ளோதான். ஆர்யாவுக்கு இதை மட்டும் சொல்ல விரும்பறேன். தயவு செய்து 'பெண் பார்க்கும் படல'த்திற்குப் பிந்தைய எங்க மனசைப் புரிஞ்சுக்கோங்க. இனியொரு முறை இது மாதிரி நடந்துக்காதீங்க!"

எப்படியோ, பார்த்தவர்களுக்கு ஏமாற்றத்துடன் ஷோ முடிந்துவிட்டது. 'கடைசியில் யார் ஜெயிப்பாங்க' எனக் கேட்டுவிட்டு, மூணு பேருமே தோத்துட்டாங்க' எனச் சொல்லிவிட்டார்கள். உண்மையில் தோற்றது ஆர்யாதான்.