Published:Updated:

''என்னை குண்டா படைச்ச கடவுளுக்கு தேங்க்ஸ் சொன்ன தருணம் அது!" - 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' அஷ்வினி

''என்னை குண்டா படைச்ச கடவுளுக்கு தேங்க்ஸ் சொன்ன தருணம் அது!" - 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' அஷ்வினி
''என்னை குண்டா படைச்ச கடவுளுக்கு தேங்க்ஸ் சொன்ன தருணம் அது!" - 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' அஷ்வினி

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி தொடர் ஹீரோயின் அஷ்வினி பயோடேட்டா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஜீ தமிழ் சேனலில் இரவு 9.30-க்கு ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கும் புதிய தொடர், ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’. ‘தன் ராஜகுமாரனுக்காகக் காத்திருக்கிறாள் இந்த ராஜகுமாரி’ என்று வெளியான சீரியலின் சில நிமிட ’ப்ரமோ’ அனைவரையும் ஒரு நிமிடம் நின்று கவனிக்க வைத்திருக்கும் என நம்பலாம். காரணம், நடுத்தர வயதுத் தோற்றத்தில் தெரிந்த தொடரின் ஹீரோயின். ஆனால், அந்தக் கேரக்டரில் நடித்திருக்கும் அஷ்வினியின் வயது 25. அஷ்வினி, தமிழ் சீரியலுக்குப் புதுவரவாக பெங்களூரில் இருந்து வந்திருக்கிறார்.

''கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சுட்டு சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். கன்னட சேனல்ல ஒரு ரியாலிட்டி ஷோவுல எங்க ஃபேமிலி கலந்துக்கிட்டது. அந்த ஷோவுல என்னைப் பார்த்துட்டு, 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ தொடருக்கு நடிக்கக் கேட்டாங்க. குண்டா இருக்கிற ஒரு பொண்ணு வேணும்னு ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தாங்களாம்!" என்றவர், ''என்னோட ’குண்டு’ மேட்டர் பத்திப் பேசிடலாமா?" எனச் சிரித்தபடியே தொடர்ந்தார்...

''இது ஜீன் பிரச்னை. தாத்தா, அப்பா, பெரியப்பா, சித்தப்பானு எங்க பரம்பரையில பல பேரு ஹைட் அண்ட் வெயிட்டாதான் இருப்பாங்க. இயற்கை தந்த வரம் இது. ஆண்கள் வெளியில பெருமையாப் பேசிக்குவாங்க. அதேநேரம், பொண்ணாப் பிறந்துட்டா, பிறந்ததுமே கவலைப்படுவாங்களாம். நார்மலான பெண்களுக்கே மாப்பிள்ளைக்குப் பஞ்சமா இருக்கே! நாங்க எக்ஸ்ட்ரா வளர்ந்து தொலைஞ்சா... நான் வளரத் தொடங்கினப்பவும் கவலைப்பட்டாங்க. 

ஸ்கூல், காலேஜ் டைம்ல வேற ஒரு பிரச்னை. அங்கே எல்லாரும் நான் 'கண்ணா பின்னானு சாப்பிட்டு இப்படி ஆயிட்டேன்'னு நினைச்சாங்க. ஒவ்வொருத்தர்கிட்டேயும் போய், இது ஜீன் பிரச்னைனு விளக்கிட்டு இருக்க முடியுமா என்ன? சாப்பாடு, உடற்பயிற்சி எல்லா விஷயத்தையும் நானும் பண்றேன். இன்னொரு விஷயத்தையும் சொல்லிடுறேன், என்னோட உடல்ல சேர்ந்திருக்கிறது கெட்ட கொழுப்பு இல்லை. டாக்டர்களே ’கவலைப்படாதீங்க’னு சொல்லிட்டாங்க. ஆனா, இந்தக் கேலி, கிண்டல்கள் இப்போவரைக்கும் தொடர்ந்துக்கிட்டேதான் இருக்கு. காதுல விழுற தூரத்துக்குக் கமெண்ட் அடிச்சுட்டுப் போவாங்க. ‘தக்காளி’னு கேட்டிருக்கேன். ‘பப்பாளி’னு சில பேர் கூப்பிடுவாங்க. ’உருளைக்கிழங்கு’னு சொல்றவங்க நிறைய... இப்படியெல்லாம் கேட்குறப்போ கொஞ்சம் ஃபீல் ஆகும். சில சமயம் நானே கமென்ட் அடிச்சவனைக் கூப்பிட்டு, ‘இதெல்லாம் ரொம்ப ஓல்டு. புதுசா கிளாமரா யோசி’னு சொல்லிடுவேன்; தலைதெறிக்க ஓடுவாங்க.

ஆனா, முதல்முறையா என்னைக் குண்டா படைச்ச கடவுளுக்கு தேங்க்ஸ் சொல்லி, சந்தோஷப்பட்டது இந்த சீரியல் வாய்ப்பு கிடைச்ச நிமிடம்தான். எங்க வீட்டுலகூட காமெடி பண்ணி இன்னும் அசிங்கப்படுத்திடுவாங்களோனு பயந்தாங்க. சீரியல் கதையைக் கேட்டதும், ஃபன் இருந்தாலும், சீரியஸான சப்ஜெக்ட்னு புரிஞ்சது. என்னை மாதிரி ஒரு ஆள் கிடைக்கிறதுக்காக இந்த சீரியல் டீம் மெனக்கெட்டு அலைஞ்சதையும், ரொம்ப நாளா காத்திருந்ததையும் நினைச்சப்போ, இன்னொரு விஷயத்தையும் புரிஞ்சுகிட்டேன். அது என்னனா, தமிழ் மக்களோட சீரியல் பிரியத்துக்கு இந்தமாதிரி மெனக்கெடல்கள்தான் காரணம்னு எனக்குத் தோணுது.

எப்படியோ... நானும் தமிழ் சீரியலுக்குள்ள வந்துட்டேன். ஏற்கெனவே எங்க ஊர்ல இருந்து வந்த ரச்சிதா, சைத்ரா போல என்னையும் உங்க ஊருல ராஜகுமாரியா ஏத்துப்பீங்களா?’ என்ற அஷ்வினி, ''இந்த சீரியல் கதை மாதிரியே நிஜத்துலேயும் ’எனக்குக் கல்யாணம் நடக்குமா’னு சொந்த பந்தங்கள்ல பலபேருக்குக் கவலை இருந்துச்சு. ஆனா, அதெல்லாம் கடந்த காலம். ஏன்னா, எனக்காகப் பிறந்த ராஜகுமாரன் இப்போ என்னோடதான் இருக்கார். எனக்கு மேரேஜ் ஆகிடுச்சுங்க!’ எனச் சிரிக்கிறார்.

அஷ்வினியின் அந்த ராஜகுமாரனின் பெயர், மிதுன். பெங்களூரில் ஐ.டி துறையில் பணிபுரிகிறார். 'சாஃப்ட்வேர் பணியிலிருந்தபோது ’லவ்’வா என்றால், வெட்கச் சிரிப்பைப் பதிலாகத் தருகிறார், அஷ்வினி. 

வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு