Published:Updated:

''சீரியலில் நான் கொஞ்சம் கோபக்கார மாமியார்தான்!" - 'அவளும் நானும்' கிருபா

வெ.வித்யா காயத்ரி

''எனக்குத் தமிழ்ப் பற்று அதிகம். என் மொழிக்கு எதிரா நடக்கும் விஷயங்களைப் பார்க்கும்போது கோபம் வருது. அந்தக் கோபத்தை முகநூல் பக்கத்தில் பதிவிடுவேன்.

''சீரியலில் நான் கொஞ்சம் கோபக்கார மாமியார்தான்!" -  'அவளும் நானும்' கிருபா
''சீரியலில் நான் கொஞ்சம் கோபக்கார மாமியார்தான்!" - 'அவளும் நானும்' கிருபா

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் 'அவளும் நானும்', ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது. அந்தத் தொடரில், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர், கிருபா. சீரியலைப் பார்க்கும் எல்லோருக்கும்  'இவர் கொடூரமான மாமியாராக மாறிடுவாங்களோ?' என்கிற கேள்வி மனதுக்குள் இருக்கிறது. அதை, அவரிடமே கேட்டுவிடுவோமே எனத் தொடர்புகொண்டேன்.

''உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?''

''நிச்சயமா பார்த்திருப்பீங்க. கமல் சார் வரும் போத்தீஸ் விளம்பரத்தில் நடிச்சிருக்கேன். வேற சில விளம்பரங்களிலும் நடிச்சிருக்கேன். விளம்பரம் வழியேதான் சீரியலில் நுழைஞ்சேன். ஆச்சி மசாலா கம்பெனியில் ஈவன்ட் மேனேஜரா இருக்கேன். நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தால், விளம்பரங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். அப்புறம், 'அவளும் நானும்' வாய்ப்பு வந்துச்சு.''

''உங்க குடும்பம் பற்றி...''

''பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போதே, எனக்குத் திருமணம் செஞ்சு வெச்சுட்டாங்க. எனக்கோ படிக்க ரொம்ப ஆசை. என் கணவரிடம் ஆசையைச் சொன்னதும், நான் படிக்க சம்மதிச்சார். எம்.ஏ., எம்.பி.ஏ (HR) முடிச்சிருக்கேன். எனக்கு ஒரு பையன், ரெண்டு பொண்ணுங்க. மூணு பேருமே பெரிய பசங்க ஆகிட்டாங்க.''

''நீங்க படங்களிலும் நடிச்சிருக்கீங்களா?''

''முக்கியமா சொல்ற மாதிரியான கதாபாத்திரங்களில் இன்னமும் நடிக்கலை. ஏ.எல்.விஜய் சாரின் ஒரு சில புராஜெக்ட்டுகளில் நடிச்சிருக்கேன். 'மெர்சல்' படத்தில் அரசாங்கத்துக்கு எதிரா ஒரு வசனம் பேசியிருப்பேன். அதை கட் பண்ணிட்டாங்க. அதுமட்டும் வெளிவந்திருந்தால், என் முகம் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். இப்போ ரீலீஸான 'தியா' படத்திலும் நடிச்சிருக்கேன்.''

''அந்தப் படத்தின் நாயகி சாய் பல்லவி பற்றிச் சொல்லுங்களேன்...''

''சாய் பல்லவி ரொம்பவே ஸ்வீட். மூன்று நாள்தான் எனக்கு ஷூட் இருந்துச்சு. அந்த மூன்று நாளும் சாய் பல்லவியோடு இருந்தேன். ஸ்மைலிங் ஃபேஸுக்குச் சொந்தக்காரின்னா அது சாய் பல்லவிதான்.''

'' 'அவளும் நானும்' சீரியலில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கு?''

''நான் நடிக்கும் முதல் சீரியல். மாமியார் கதாபாத்திரம். ஆரம்பத்தில் கொஞ்சம் சாஃப்ட் மாமியாராதான் இருந்தேன். இப்போ கொஞ்சம் டெரர் மாமியாரா பதவி உயர்வு பெற்றிருக்கேன். தொடர்ந்து எப்படி இருக்கப் போறேன்னு எனக்கே தெரியலை. செட்டுல எல்லோரும் ஜாலியா பழகுவாங்க. நான் புதுசுன்னு ஒவ்வொரு சீனையும் பொறுமையா டைரக்டர் சொல்லிக்கொடுப்பார்.''

''மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கு?''

''நான் படங்களில் நடிச்சப்போகூட நிறைய பேருக்கு அடையாளம் தெரியலை. இந்த சீரியல்தான் என் முகத்தைப் பரவலா அடையாளப்படுத்தியிருக்கு. பொது இடத்தில் பார்க்கும் பலரும், 'நீங்கதானே 'அவளும் நானும்' சீரியலில் வர்ற பார்வதி?'னு கேட்கறாங்க. என்னோடு செல்ஃபி எடுத்துக்கிறாங்க. 'ஏம்மா அந்தப் பொண்ணை திட்டிட்டே இருக்கே?'னு அதட்டறாங்க. இதெல்லாம் புது அனுபவமா இருக்கு.''

''சோஷியல் மீடியாவில் புரட்சியாளரா இருக்கீங்களே...''

''எனக்குத் தமிழ்ப் பற்று அதிகம். என் மொழிக்கு எதிரா நடக்கும் விஷயங்களைப் பார்க்கும்போது கோபம் வருது. அந்தக் கோபத்தை முகநூல் பக்கத்தில் பதிவிடுவேன். ஜல்லிக்கட்டு போராட்டம் எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திச்சு. நியாயமான எந்தப் போராட்டமா இருந்தாலும் நிச்சயம் கலந்துப்பேன். ஒரு கவிஞராகவும் (சில கவிதைகள் எழுதியிருக்கேங்க) விருது வாங்கியிருக்கேன்.''

''உங்க நெக்ஸ்ட் பிளான்...''

''இப்பவும் ஆச்சி மசாலா நிறுவனத்தில் வேலை பார்த்துட்டிருக்கேன். நிறைய சினிமா வாய்ப்புகள் வருது. ஒரு சில புராஜெக்ட்களில் நடிக்க ஓகே சொல்லியிருக்கேன். இனி, பேசும்படியான கதாபாத்திரங்களில் என்னைப் பார்க்கலாம்.''