Published:Updated:

''இப்போ நான் வொர்க்கிங் உமன்!" நடிகை பிருந்தா தாஸ்

கு.ஆனந்தராஜ்
''இப்போ நான் வொர்க்கிங் உமன்!" நடிகை பிருந்தா தாஸ்
''இப்போ நான் வொர்க்கிங் உமன்!" நடிகை பிருந்தா தாஸ்

"கொஞ்ச காலம் நடிப்பு உள்ளிட்ட மீடியா ஃபீல்டிலிருந்து விலகியிருக்கேன். மக்கள் என் மேல் காட்டும் அன்பு, அந்த விலகலை மறுபரிசீலனை செய்யும் எண்ணத்தை எனக்குள் உண்டாக்கியிருக்கு" எனப் புன்னகையுடன் பேசுகிறார், நடிகை பிருந்தா தாஸ். சன் டிவி 'ஆனந்தம்' சீரியலில் அபிராமியாக மிரட்டியவர்.

" 'அபிராமி'யாக மிரட்டிய காலங்களைக் கொஞ்சம் மீட்டெடுங்களேன்..."

" 'புது சீரியல் பண்றோம். உங்களுக்கு நெகட்டிவ் ரோல்'னு சொன்னபோது கொஞ்சம் தயங்கினேன். ஏன்னா, இயல்பாகவே நான் சைலன்ட் டைப். அதனால், அந்த ரோல் செட்டாகுமானு டவுட். வில்லியா கண்ணை உருட்டி மிரட்டி நடிக்கவெச்ச இயக்குநர்களுக்குதான் நன்றி சொல்லணும். 2003-ம் வருஷம் தொடங்கின 'ஆனந்தம்' சீரியல், 2009-ல் முடிஞ்சது. கிட்டத்தட்ட அஞ்சரை வருஷப் பயணம். சைலன்ட் வில்லியா நடிச்சிருப்பேன். போகப்போக என் கேரக்டரைப் பார்த்து எனக்கே ஆச்சர்யம். எங்கே போனாலும், 'அபிராமி'னு பாராட்டும் கிடைக்கும்; பயங்கரமா திட்டும் கிடைக்கும். என் நிஜ பெயரையே மறந்துட்டாங்க. அந்த சீரியல் என் மனசுக்கு ரொம்பவே நெருக்கமானது. அதில் வொர்க் பண்ணினது, மறக்கமுடியாத காலகட்டம். செட்டுல நாங்க பண்ணின குறும்புகள், பேச்சுகள் எல்லாம் அடிக்கடி நினைவுக்கு வரும். அதில், என் தம்பியா நடிச்ச வெங்கட், தங்கை ஐஸ்வர்யா உள்பட ஒட்டுமொத்த சீரியல் டீமையும் மிஸ் பண்றேன். அதே காலகட்டத்தில் பல படங்களிலும் நடிச்சிருக்கேன்.''

"உங்க மீடியா பயணம் தொடங்கியது எப்படி?"

"சின்ன வயசுல கிளாஸிக்கல் டான்ஸ் கத்துக்கிட்டேன். காலேஜ் படிக்கிறப்போ என் டான்ஸைப் பார்த்துதான், ஆக்டிங் வாய்ப்பு வந்துச்சு. டி.டி.மெட்ரோ சேனலின் 'நம் குடும்பம்', என் முதல் சீரியல். எதிர்காலத் திட்டம் பற்றி பெரிய எதிர்பார்ப்புகள் வெச்சுக்கலை. ஆனால், அடுத்தடுத்து இருபதுக்கும் அதிகமான சீரியல்கள், மேடை நாடகங்களில் நடிச்சேன்.''

"நடிப்பிலிருந்து விலக்கக் காரணம் என்ன?"

"ரொம்ப காலமா நடிச்சாச்சு. 'ஹாய் டா'னு ஒரு படமும் இயக்கினேன். ஒரு சேஞ்ச் வேணும்னு ஆசைப்பட்டேன். பர்சனல் காரணங்கள் எதுவுமில்லை. கார்ப்பரேட் நிறுவனத்தில் வொர்க் பண்ற வாய்ப்பும் கிடைச்சது. நடிகை என்கிற எந்தப் பிம்பத்தையும் காட்டிக்காமல் சராசரி பெண்ணாக அந்த வேலையைப் பண்ணிகிட்டிருக்கேன். இதுவும் சிறப்பா போயிட்டிருக்கு."

"இனி நடிக்கும் எண்ணமே இல்லையா?"

"அப்படிச் சொல்லிட முடியாது. வாய்ப்புகள் வந்துட்டுதான் இருக்கு. பெரிசா நான் எதையும் ஏத்துக்கிறதில்லை. மார்னிங் டு ஈவ்னிங் வரை ஆபீஸ் வொர்க். அப்புறம், குடும்பப் பொறுப்புகள் எனப் போயிட்டிருக்கேன். நல்ல கதையாக வந்தால் நடிக்கும் ஆசையும் இருக்கு. குறுகிய காலத்துக்குள் முடியுற மாதிரி இருந்தால் நிச்சயம் நடிப்பேன். இப்போகூட வெளியே போனால், 'உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே. ஆங்! நீங்க அபிராமிதானே'னு சொல்றாங்க. எனக்குச் சந்தோஷமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கும். அபிராமி மாதிரி மக்கள் மனசுல இடம்பிடிக்கும் இன்னொரு சீரியலில் நடிச்சிருக்கலாமோனு நினைப்பேன். அப்படி ஒரு சூழல் அமையலை."

"இப்போ நெகட்டிவ் ரோலில் நடிக்கிறவங்களில் உங்களை அதிகம் கவர்ந்திருப்பது யார்?"

"ஒருத்தரை சொல்றது கஷ்டம். சினிமாவில் வில்லிகளின் ஆதிக்கம் ரொம்பவே குறைவு. ஹீரோக்களே சிறப்பா நெகட்டிவ் ரோல் பண்றாங்க. ஆனால், சீரியலில் பெண்களின் ஆதிக்கம்தான். இன்னிக்கு சேனல்களும் சீரியல்களும் அதிகமாகிடுச்சு. அதில் நடிக்கும் எல்லோருமே சிறப்பா நடிக்கிறாங்க. ஸோ, ஒருத்தரை குறிப்பிட்டுச் சொல்றது கஷ்டம். 1990-களுடன் ஒப்பிடுகையில், டெக்னாலஜி வளர்ச்சியால், ஆக்டிங், டப்பிங் உள்படப் பல வேலைகளும் இன்னிக்கு எளிதாகிடுச்சு."

"பையனும் நீங்களும் சேர்ந்து நடிச்ச அனுபவம்...''

"பையன் கிஷேன் தாஸ், மீடியா ஃபீல்டுலதான் வொர்க் பண்றார். ஆங்கரிங், ஷார்ட் ஃபிலிம், விளம்பரப் படங்கள் எனக் கவனம் செலுத்தறார். ஃபேமஸான 'ஏசியன் பெயின்ட்ஸ்' விளம்பரத்தில் நடிச்சிருக்கார். 'மீட் அவர் மம்மீஸ்' உள்பட சில ஷார்ட் ஃபிலிம்களில் பையனும் நானும் சேர்ந்து நடிச்சிருக்கோம். வீட்டுல இருக்கிற மாதிரியே ஷூட்டிங் ஸ்பாட்டிலும் ஃப்ரெண்ட்ஸ் மாதிரி பேசிப்போம்."