Published:Updated:

"என் காதல் கணவர் நினைவுகள்ல இருந்து மீளமுடியலை!" - 'சின்னதம்பி' பவானி ரெட்டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"என் காதல் கணவர் நினைவுகள்ல இருந்து மீளமுடியலை!" - 'சின்னதம்பி' பவானி ரெட்டி
"என் காதல் கணவர் நினைவுகள்ல இருந்து மீளமுடியலை!" - 'சின்னதம்பி' பவானி ரெட்டி

"என் காதல் கணவர் நினைவுகள்ல இருந்து மீளமுடியலை!" - 'சின்னதம்பி' பவானி ரெட்டி

'சின்னதம்பி' சீரியலின் மூலம் நம் அனைவரின் மனதையும் கொள்ளைகொண்ட கதாநாயகி பவானி ரெட்டி. இவருக்கென இவருடைய ரசிகர்கள் உருவாக்கியுள்ள ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பேஜ்கள் ஏராளம். சீரியலில் அசத்தும் பவானிக்குப் பின்னாலிருக்கும் சோகம் யாரும் அறியாதது. அதற்கு முன்  யார் இந்தப் பவானி ரெட்டி..? என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
 

பெயர் : பவானி ரெட்டி

ஊர் : ஹைதராபாத்

படிப்பு : பேஷன் டிசைனிங்

அறிமுகமான சீரியல் : இரட்டை வால் குருவி

நடித்துக்கொண்டிருப்பது : 'சின்னதம்பி' சீரியல்

எதிர்கால திட்டம் : பொட்டிக் ஆரம்பிப்பது, சீரியலில் நடிப்பது

என்னுடைய சொந்த ஊர் ஹைதராபாத். நான் பேஷன் டிசைனிங் முடிச்சிருக்கேன். எனக்குச் சின்ன வயசுலருந்தே எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டிவிட்டீஸில் ஆர்வம் அதிகம். படிக்கிறதைவிட அதிகமா போட்டிகளில் கலந்துகிட்டுதான் பரிசுகள் வாங்கியிருக்கேன். மாடலிங் பண்ணலாம்னு நினைச்சு மாடலிங் ஃபீல்டுல இறங்கினேன். என்னோட மாடலிங் ஃபோட்டோஸைப் பார்த்துட்டு எனக்கு மூவி ஆஃபர் வந்துச்சு. ஒரு சில படங்களில் நடிச்சேன். ஆனா, அந்தப் படங்கள் எனக்குன்னு ஒரு அங்கீகாரத்தைக் கொடுக்கல. அப்போ தான் விஜய் டி.வியில் 'ரெட்டை வால் குருவி' சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அந்த சீரியல் கொஞ்ச காலம்தான் டெலிகாஸ்ட் ஆச்சு. ஆனால் அந்த சீரியலுக்கான புரொமோவுக்கு ரசிகர்கள் அதிகம். அப்படித்தான் சீரியல் உலகுக்குள் அடியெடுத்து வைச்சேன்'' என்றவர் தன்னுடைய வலி மிகுந்த பர்சனல் பக்கங்களை நம் கண் முன் புரட்டுகிறார்..

''நானும் என் கணவர் பிரதீப்பும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். நாங்க ரெண்டு பேரும் நண்பர்களாகத்தான் திருமணத்துக்கு பின்பும் இருந்தோம். ஆனா ஒருநாள் காலையில் எழுந்து பார்க்கிறப்ப அவர் என் பக்கத்துல இல்லை. தற்கொலை பண்ணிக்கிட்டார். கூடப் பழகி, சிரிச்சு, நேசிச்ச ஒருத்தர் என் கண் முன்னால் உயிரோட இல்லைங்கிறதை மனசு நம்பவே இல்லை. 

மத்தவங்களைவிட எனக்குத்தான் அதிர்ச்சி. ஆனால் கூட இருந்தவங்க எல்லாம் அவர் இறப்புக்குச் சொன்ன காரணம் என்னை இன்னும் அதிகமா பாதிச்சது.  அது என் மேல சொல்லப்பட்ட குற்றச்சாட்டா இருந்தப்ப, ரொம்ப வலிச்சது. நானும் அவரும் எவ்வளவு அன்னியோன்யமா இருந்தோம்னு மத்தவங்ககிட்ட என்னால எப்படிப் புரியவைக்க முடியும். அவரோட இறப்பை என்னால மறக்கவும் முடியலை, அந்த வலியிலேருந்து மீளவும் முடியலை. என்னுடைய வலி எனக்குத்தான் தெரியும். அவர் இறந்து கொஞ்ச மாசத்திலேயே நான் நடிக்க வந்துட்டேன்னு பலரும் பேசுனாங்க. நடிப்பு என்னுடைய தொழில். நான் சின்னப் பொண்ணு இல்ல. அம்மா, அப்பாவோட சம்பளத்துல உட்கார்ந்து சாப்பிடுறதுல எனக்கு உடன்பாடு இல்ல. எனக்கு என்னுடைய வேலை முக்கியம். சொல்லப்போனா, ஒரு கட்டத்துல எனக்கு எந்த வாய்ப்பும் அமையல. சரி, நடிப்பை விட்டுட்டு வேற எதாவது வேலையைப் பார்க்கலாம்னு யோசிச்சுட்டு இருந்த சமயம் தான், மறுபடியும் விஜய் டி.வியில் இருந்து வாய்ப்பு வந்துச்சு'' என்றவர் இயல்பு நிலைக்குத் திரும்புகிறார்

'' 'சின்னதம்பி' சீரியல் எனக்கு புது அங்கீகாரத்தைக் கொடுத்துருக்கு. நிஜத்துல நான் ரொம்ப குறும்புக்கார பொண்ணு. எப்பவும் துறுதுறுன்னு இருப்பேன்.  செட்டுல எல்லோரும் ஃபேமிலி மாதிரிதான் பழகுறாங்க. நான் சென்னைக்கு புதுசு. ஆனா, இப்போ சென்னையை விட்டுட்டு எனக்கு எங்கேயும் போகப் பிடிக்கல. அந்த அளவுக்குச் சென்னையோட நான் ஒன்றிட்டேன். நான் நிறைய நாள் செட்டுக்கு வரும்போது சாப்பாடு கொண்டு வரமாட்டேன். எனக்காக விதவிதமா சமைச்சு எடுத்துட்டு வருவாங்க என்கூட நடிக்கிற கோ-ஆர்ட்டிஸ்ட்ஸ். இப்போலாம் என் அம்மாவை மனசு தேடாதபடி என்னை அவ்வளவு அன்பா என்கூட நடிக்கிறவங்க பார்த்துகிடுறாங்க.  

நான் நடிக்க வந்தப்போ நிறைய விமர்சனங்கள் என்மேல எழுந்தாலும், எனக்கு ஆதராவாகவும் பலர் இருந்தாங்க. இப்பவும் இருக்காங்க. என் பெயரில் பல பேஜ்கள் நடத்துறாங்க. என்னை கொண்டாடுறாங்க. அவங்களுக்கு நான் கடமைப்பட்டுருக்கேன். அவங்க இல்லன்னா நான் இல்ல. சொல்ல முடியாத அளவுக்கு அவங்க என் மேல வைச்சிருக்க அன்புதான் என் வலிகளை மறைக்க வைச்சு வெளியில் என்னைச் சிரிக்க வைச்சது'' என்றவருக்கு பொட்டிக் ஆரம்பிக்க வேண்டும் என்பது எதிர்கால ஆசையாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு