Published:Updated:

"நந்தினி, பார்வதி. 'செம்பருத்தி' சீரியலில் ஆதி கரம் பிடிக்கப்போவது யாரை?" - 'ஷூட்டிங்ல மீட்டிங்' பகுதி 6

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"நந்தினி, பார்வதி. 'செம்பருத்தி' சீரியலில் ஆதி கரம் பிடிக்கப்போவது யாரை?" - 'ஷூட்டிங்ல மீட்டிங்' பகுதி 6
"நந்தினி, பார்வதி. 'செம்பருத்தி' சீரியலில் ஆதி கரம் பிடிக்கப்போவது யாரை?" - 'ஷூட்டிங்ல மீட்டிங்' பகுதி 6

செம்பருத்தி தொடரின் ஷூட்டிங் ஸ்பாட் : ஷூட்டிங்ல மீட்டிங் பகுதி 6

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை பூந்தமல்லியை அடுத்துள்ள ஈ.வி.பி ஃபிலிம் சிட்டி வளாகத்தில் அமைந்துள்ளது, ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரியின் பிரமாண்ட பங்களா. 'செம்பருத்தி' தொடரின் ஷூட்டிங் ஸ்பாட். அகிலாண்டேஸ்வரி (ப்ரியா ராமன்), புருஷோத்தமன் (சஞ்சய் அஸ்ராணி), ஆதி (கார்த்திக் ராஜ்), அருண் (கதிர்), வனஜா (ஊர்வம்பு லக்ஷ்மி), பார்வதி (ஷபானா) என அத்தனை பேரும் அன்று இருந்தார்கள். நாம் சென்று இறங்கிய நேரம், சாம்பார், பூசணிக்காய் கூட்டு, அப்பளம், தயிர், ஊறுகாயுடன் மதிய உணவு பரிமாறிக்கொண்டிருந்தார்கள். 

'வாங்க ப்ரோ... சாப்பாட்டை ஒரு பிடி பிடிச்சுக்கிட்டே பேசலாம். இன்னைக்கு கத்திரிக்காய் காரக் குழம்பெல்லாம் இருக்கு!' என்ற கதிர், 'பார்வதி நீ சமையல்காரிதானே, எல்லோருக்கும் சாப்பாடு எடுத்து வை' என ஷபானாவை சீண்ட, களைகட்டத் தொடங்கியது இந்தவார 'ஷூட்டிங்ல மீட்டிங்'. அதற்கு முன், 'செம்பருத்தி' பார்க்காதவர்களுக்காக ஒரு சின்ன இன்ட்ரோ.

'ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரி, ஆளுமைமிக்க ஒரு பிசினஸ் பெண். கறாரான குடும்பத் தலைவி. பொறுப்பான மூத்த மகனிடம் அன்பும் 'பிளேபாய்' போலத் திரியும் இளைய மகனிடம் கண்டிப்பும் காட்டும் அம்மா. கணவனே மனைவியிடம் பேசத் தயங்குகிற அளவுக்கு வீட்டில் மதுரை ஆட்சி. ஆனால், கணவரின் தம்பி குடும்பத்தையும் கூடவே அரவணைத்துச் செல்கிறார். இப்படிப்பட்ட அகிலாண்டேஸ்வரியிடம் நீண்டகாலமாக டிரைவராக இருப்பவர், சுந்தரம். பங்களாவிலேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்த சுந்தரத்தின் மனைவி இறந்துவிட, அவரது மகளும், மகனும் அகிலாண்டேஸ்வரி வீட்டுக்கே வருகிறார்கள். 'மகளுக்கு ஏதாச்சும் வேலை போட்டுக் கொடுங்கம்மா' என்ற சுந்தரத்தின் விசுவாசத்துக்காக, அவரது மகள் பார்வதிக்கு வீட்டில் சமைக்கிற வேலையைத் தருகிறார் அகிலாண்டேஸ்வரி. சமையல்காரியாக நுழைந்த பார்வதி, அந்த வீட்டின் மூத்த மருமகளாவாரா?' என்ற கேள்வியுடன் தொடர்கிறது சீரியல்.

வெல்கம் பேக் டூ சீரியல் ஸ்பாட்.

'இந்தா பாரு கதிர். எப்பவும் ஒரேமாதிரி ஜோக் அடிச்சிட்டே இருந்தா சிரிக்க வராது. இதை வெச்சே ஓட்டாத. வேற ஏதாச்சும் யோசி. இதையே பேசிக்கிட்டு இருந்தா, ஸ்பாட்ல நீ பல்பு வாங்கினதையெல்லாம் நானும் எடுத்துவிடுவேன்' எனப் பதிலுக்கு முறைத்தார், பார்வதி.

'எப்பவுமே இதுங்க ரெண்டும் இப்படித்தான். எலியும் பூனையுமா இருப்பாங்க. குறிப்பா, இவன் இருக்கானே, வாய் வாய்... அவ்வளவு பேசுறான். எல்லோரையும் கலாய்க்கிறான்' எனக் கதிர் காதைத் திருகியபடி என்ட்ரி ஆனார், வனஜா.

'பேர்லேயே வம்பை வெச்சுக்கிட்டு நீங்க பேசாதீங்க சித்தி' (சீரியலில் ஊர்வம்பு லக்ஷ்மி, கதிரின் சித்தி!) என்ற கதிர், 'இவங்களைப் பிடிங்க, எக்கச்சக்க மேட்டர்ஸ் கிடைக்கும் ப்ரோ' என்றார்.

ஊர்வம்பு லக்ஷ்மியிடம் பேசினோம்.

''டி.வியில 'ஊர்வம்பு'ங்கிற நிகழ்ச்சி மூலமா பிரபலமானாலும் ஆனேன், அந்த அடைமொழியை வெச்சே எல்லோரும் என்னைக் கிண்டல் பண்றாங்க. இந்த செட்ல என்னோட பட்டப்பேரு 'வாயாடி'. எங்கிட்ட பேசவும் எல்லோரும் பயப்படுறாங்க தெரியுமா!' என்றவர், ப்ரியா ராமனை இமிடேட் செய்து சில காட்சிகள் நடித்துக்காட்டினார். பலபேர் அதை என்ஜாய் பண்ண, மீதி சிலர் 'ஆளை விடுங்க' என எஸ்கேப் ஆகிறார்கள். 

'பிரேக்' அரட்டைகள் குறித்துக் கேட்டதற்கு, 'உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, இங்கே நான் இருக்கிறப்போ யாரும் யாரைப் பத்தியும் எதுவும் பேசமாட்டாங்க. ஏன்னா, என் மூலமா அந்த நியூஸ் வெளியே பரவிடுமாம். அதேநேரம், எங்கிட்ட மட்டும் ஏரியாவுல இன்ட்ரஸ்டிங்கான கிசுகிசு ஏதாவது இருக்கானு கேட்பாங்க' என்றார்.

'எங்க, ஒன்னு எடுத்துவிடுங்களேன்' - நம் பங்குக்குக் கேட்டதும், 'இந்தக் கதிர் இருக்கானே... இவனுக்கு ஊர் கோயம்புத்தூர். சீரியல்ல இவனுக்கு ஜோடியா நடிக்கிற ஜனனி பொண்ணும் கோயம்புத்தூர்தான். இவனும் வி.ஜே, அந்தப் பொண்ணும் வி.ஜே. மேட்டர் இவ்ளோதான்! இதுல மேற்கொண்டு இன்ட்ரஸ்ட்டிங் விஷயம் ஏதும் இருக்கானு நீங்களே விசாரிச்சுக்கோங்க' என்றபடி நகர்ந்தார்.

கதிரிடம் பேசினோம்.

''சீரியல்லதான் ப்ரோ நான் பிளேபாய். நிஜத்துல ரொம்ப நல்ல பையன். ஷூட்டிங் முடிஞ்சா அடுத்த அரைமணி நேரத்துல வீட்டுல இருப்பேன். லோக்கல் கேபிள் டி.வி-யில வேலை பார்த்துக்கிட்டு இருந்தவனை ரியாலிட்டி ஷோவுல கலந்துக்க கூட்டிவந்து, அப்படியே சீரியல் வாய்ப்பும் தந்திருக்காங்க. 'வள்ளி'யில அறிமுகமான ப்ரியா ராமனைச் சுத்தி நடக்கிற கதைனு கேள்விப்பட்டதுமே, எனக்கு ஏதோ ரஜினி சாரோட நடிக்கிற ஒரு ஃபீலே வந்திடுச்சு. அதனால, டைரக்டர் சொல்பேச்சு கேட்டு ஒழுங்கா நடிச்சுக்கிட்டிருக்கேன். 'பார்வதி'யை மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா கலாய்ப்பேன். இது மட்டும்தான் நான் பண்ற சேட்டை. மத்தபடி, என்னைப் பத்தி என்ன நியூஸ் வந்தாலும் அதைக் கேர் பண்ணிக்காதீங்க ப்ரோ' என்கிறார்.

கதிரின் அண்ணனாக வரும் ஆதி, சீரியலில் எப்படியோ அப்படியே நிஜத்திலும்!. அதிகம் பேசுவதில்லை. ஆனாலும் பேச வைத்தோம்.

" 'அது இது எது' ஷோ, 'கனா காணும் காலங்கள்', 'ஆபீஸ்' சீரியல்கள்ல வொர்க் பண்ணிட்டு, சில படங்கள் பண்னேன். நான் நடிச்ச ஒரு படத்தோட சேனல் ரைட்ஸ் பேச வந்து, இந்த சீரியல்ல கமிட் ஆகியாச்சு. ஓப்பனா சொல்லணும்னா, எனக்கு சினிமாதான் பாஸ் குறிக்கோள். சீரியல் போர். சத்தமாப் பேசினா, 'பின்ன எதுக்கு இங்க வந்த?'னு சண்டைக்கு வந்திடுவாங்க" என முடித்துக்கொண்டார்.

மதிய உணவு முடிந்ததும் ஆளாளுக்கு ஏ/சி அறைக்குள் ஒதுங்க, ஹீரோயின் ஷபானா மட்டும் பக்கத்தில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த 'யாரடி நீ மோகினி' செட்டுக்கு கிளம்பத் தயாரானார். பொண்ணுக்கு அங்கும் ஃப்ரெண்ட்ஸ் அதிகமாம்!. வழி மறித்து உட்கார வைத்தோம்.

''ஊர் கொல்லம். ஆனா, ஃபேமிலியா இப்போ மும்பையில செட்டில் ஆயிட்டோம். மலையாளத்துல ஒரு சீரியல் நடிச்சேன். அதைத் தயாரிச்சவங்க தமிழ்நாட்டுக்காரங்க. அந்த கனெக்‌ஷன்ல 'செம்பருத்தி' சீரியல் வாய்ப்பு கிடைச்சது. வாய்ப்பு ஈஸியா கிடைச்சிடுச்சு. அதுக்குப் பிறகு நடக்கிறதையெல்லாம் சுலபமா கடந்துவர முடியலை. எங்க சொந்தக்காரங்க நான் நடிக்கிறதை அவ்வளவா விரும்பலை. அம்மா மட்டும் கொஞ்சம் சப்போர்ட் பண்றாங்க, அதுவும் இப்போதான்' என சோகமாகக் கதை சொன்னவரிடம், 'சீரியல்ல ஹீரோவோட லவ் சீன்ஸ் ஸ்டார்ட் ஆகப்போகுதாமே?' என்றதும், உற்சாகமானார்.

''ஹீரோயின்ங்கிறதால, சீரியல்ல லவ் சீன்ஸ் பெரிய டிராக்கா இருக்கும்னு சொன்னாங்க. ஆனா, இதுவரைக்கும் ஒருத்தருக்கொருத்தர் 'காதலிக்கிறோமா'ங்கிறது தெரியாமலேயே காதலிச்சுக்கிட்டு இருக்கோம். இனி, லவ் சீன்ஸ் அதிகமா இருக்கும்னு சொல்றாங்க. நினைச்சுப் பார்த்தா, கொஞ்சம் கலவரமாத்தான் இருக்கு. தமிழ்ல சீரியல், சினிமா ரெண்டு ஏரியாவிலும் ஒரு ரவுண்டு வரணும்னு ஆசை இருக்கே... சமாளிச்சாகணும்!' என்ற ஷபானாவுக்கு, 'தளபதி' ஷோபனாவை ரொம்பவே பிடிக்குமாம்.

'ரெண்டுபேருக்கும் பேர்ல உள்ள ஒற்றுமைக்காகவா?' என்றால், 'சின்ன வயசுல இருந்தே அவங்க ரசிகை நான். ஒருமுறையாவது அவங்களை நேர்ல மீட் பண்ணனும், ஹெல்ப் பண்றீங்களா?" என அப்பாவியாய் கோரிக்கை வைக்கிறார். 

ப்ரியா ராமனின் கணவராக நடிக்கும் சஞ்சய் அஸ்ரானி, 'விஐபி' படத்தில் வில்லனின் அப்பாவாக நடித்தவர். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோதே ப்ரியா ராமன் வர, 'இதோ பேச வேண்டியதை இவங்க பேசுவாங்க. சீரியல் மட்டுமில்ல தம்பி, வீட்டிலேயும் பெண்களைப் பேசவிட்டுக் கேட்கிற இடத்துல இருந்துட்டோம்னா, வாழ்க்கை சுமூகமா போகும்' எனச் சிரிக்கிறார்.

'சீரியல் உங்களைச் சுத்தியே நகருது. நீங்க ஹீரோவா, ஹீரோயினா, வில்லியா? எங்களால புரிஞ்சுக்கவே முடியலையே?' என ப்ரியா ராமனிடம் கேட்டோம்.

(சத்தமாக சிரிக்கிறார்) "எனக்கே இந்த டவுட் இருக்கு. இதுக்கு என்ன பதில் சொல்றது... 'நீங்க நல்லவரா, கெட்டவரா'னு யாராச்சும் கேட்டா, டக்னு ஒரு பதிலை யாராலும் சொல்ல முடியுதா, அதுமாதிரிதான் இந்தக் கேள்வியும்!.

தமிழ்ல கடைசியா 'கிரிஜா எம்.ஏ' சீரியல்ல நடிச்சேன். பிறகு சில சீரியல்ல நடிக்கக் கேட்டாங்க. ஆனா, அவங்க சொன்ன கதைகள் எனக்கு திருப்தி இல்லைன்னும் சொல்லலாம், நானும் கொஞ்சம் சோம்பேறியா இருந்துட்டேன்னும் சொல்லலாம். பசங்ககூட இருக்கலாம்னு இருந்தேன். இப்போ பெரியவனுக்கு 11 வயசு. சின்னவனுக்கு 7 வயசு. அம்மாவைத் தேடமாட்டேங்கிறாங்க. அதனால ஏதாவது பண்ணலாமேனு தோணுச்சு. சரியான நேரத்துல இந்த சீரியலுக்கு நடிக்கக் கேட்டாங்க. தமிழ் மக்களைப் பார்த்து, பேசி ரொம்ப நாளாச்சா... ஓகே சொல்லிட்டேன். ஆனா, 'வில்லியா'னு கேட்டீங்களே, அந்தக் கேள்விக்கு மட்டும் என்னால பதில்சொல்ல முடியாது. நாளைக்கே கேரக்டர்ல மாற்றம் இருந்திச்சுனா? சூழல்களே குணத்தை மாத்துறதில்லையா? அது இயக்குநர் ஏரியா. எனக்கு எப்படித் தெரியும்" என்ற ப்ரியா ராமன், படப்பிடிப்புச் சூழல் குறித்து இப்படிச் சொன்னார். 'சீரியல்ல மட்டுமில்ல, ஷூட்டிங் ஸ்பாட்டுலேயும் சரி, ஏன் என் வீட்டுலேயும் சரி... நான் அகிலாண்டேஸ்வரிதான். கறாருக்குக் கறார், கருணைக்குக் கருணை!".

சீரியலின் இயக்குநர் சுலைமானிடம் தொடரில் அடுத்து நடக்குப்போகும் திருப்பங்கள் குறித்துக் கேட்டோம். 

'ஆதி நிச்சயிக்கப்பட்ட நந்தினியை கட்டிக்கப்போறாரா அல்லது ஆதி - பார்வதி கல்யாணம் நடக்குமாங்கிறதுதான் இப்போ பெரிய எதிர்பார்ப்பா இருக்கு. பார்வதியை அந்த வீட்டுல இருந்து விரட்ட நந்தினியும் வனஜாவும் சேர்ந்து போடும் திட்டங்கள் எல்லாமே ஃபெயிலாகுது. இன்னொருபுறம், ரெண்டு கண்களோட உருவத்தை ரொம்பவே ரசிச்ச ஆதிக்கு, அந்தக் கண்கள் பார்வதியோட கண்கள்னு தெரிஞ்சதுனால, பார்வதிமேல காதலும் ஆரம்பமாகுது. இன்னைக்கு தேதிக்கு ஆதி - பார்வதி கல்யாணம் நடக்கணும்கிறதுதான் சீரியல் ரசிகர்களோட ஆசையா இருக்கு. அந்த ஆசை நிறைவேறுதா இல்லையாங்கிறதை உடைச்சுச் சொல்ல கொஞ்சம் டைம் தேவைப்படுது. கவலைப்படாதீங்க, மாசக்கணக்குல வெயிட் பண்ண வைக்கமாட்டேன்!" என்கிறார், சுலைமான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு