Published:Updated:

``பேட்டர்ன் பிளவுஸ், கறுப்பு நிறம், ஆக்ஸிடைஸ்டு ஜுவல்லரி செம காம்போ!'' - சைத்ரா

வில்லியாக நடித்தாலும் ரசிக்க வைக்கும் முக பாவங்கள், வியக்கவைக்கும் காஸ்ட்யூம்ஸ் என யாரடி நீ மோகினி தொடரில் கிளாப்ஸ் அள்ளும் சைத்ரா.

``பேட்டர்ன் பிளவுஸ், கறுப்பு நிறம், ஆக்ஸிடைஸ்டு ஜுவல்லரி செம காம்போ!'' - சைத்ரா
``பேட்டர்ன் பிளவுஸ், கறுப்பு நிறம், ஆக்ஸிடைஸ்டு ஜுவல்லரி செம காம்போ!'' - சைத்ரா

வில்லியாக நடித்தாலும் ரசிக்கவைக்கும் முகபாவங்கள், வியக்கவைக்கும் காஸ்ட்யூம்ஸ் என 'யாரடி நீ மோகினி' தொடரில் கிளாப்ஸ் அள்ளும் சைத்ரா ரெட்டி, தனது ஆடைகள் மூலம் தனக்கென ரசிகைகள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர். தன்னுடைய வார்ட்ரோப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்ட வானவில் விஷயங்கள் இவை...

ட்ரயல் அண்டு டிரண்டர்:

பொதுவாக, நிறைய பெண்கள் ஃபேஷனில் புதுசா என்ன வந்திருக்கு என்பதைப் பார்த்து, அந்த ஆடையைத் தனக்கு ஏற்ப வடிவமைத்து, ட்ரயல் பார்ப்பாங்க. நான் கொஞ்சம் வித்தியாசம். எனக்கான ஃபேஷனை நானே உருவாக்குவேன். அதுக்காக, நிறைய மெனக்கிடுவேன். எனக்கு இதுதான் பொருந்தும் என்ற பொதுப்படையான கருத்து இல்லாமல், புதிய வகை ஆடைகளையும் தயங்காமல் முயற்சி செய்வேன். அதுதான் இப்போ நிறைய கேர்ள்ஸிடம் டிரண்ட் செட்டராக என்னைக் கொண்டுவந்திருக்கு. ஐம் சோ ஹேப்பி!

பிளவுஸ் ஸ்பெஷல்:

'யாரடி நீ மோகினி' சீரியலில் எனக்கு நெகட்டிவ் ரோல். புடவைதான் ரெகுலர் காஸ்டியூம் என்றதும், தமிழ் மக்களிடம் வில்லிகளுக்கான டிரெடிஷினல் கெட்அப்பை ஃபாலோ பண்ணக்கூடாது, புதிய ஆடைகளை முயற்சி செய்யணும்னு நினைச்சேன். நிறைய சீரியல்களில், ஹீரோயின்ஸ் புடவைகளில் வெரைட்டி காட்டுவதைப் பார்த்திருக்கேன். கலம்காரி முதல் ஸ்டோன் ஒர்க் புடவை வரை எல்லாவற்றிலும் ஹீரோயின் ஃபேஷன் ஐகான் ஆக இருப்பாங்க. அதனால், பிளவுஸ்களில் கெத்து காட்ட நான் முடிவு எடுத்தேன். என் டிசைனர் இளவஞ்சியிடம் பேசி, நிறைய புதுவகை பிளவுஸ்களை உருவாக்கினோம். பிளவுஸ்களில் ஹை காலர், முக்கால் கை, ஃபோட் நெக் மாதிரியான வெரைட்டியே பலருக்கும் தெரியும். ஆனால், 'யாரடி நீ மோகினி' சீரியலில் நான் அணிந்துவரும் பிளவுஸ்கள் எல்லாமே ஃபேட்டர்ன் வகை.  Cold shoulder, Half shoulder, Cut work, Frill work என நிறைய வகைகளை என் டிசைனர் உருவாக்குகிறார். நானும் என் உடல்வாகுக்கு ஏற்ப அணிகிறேன். அதுதான் அந்த சீரியலில் வில்லியாக நடித்தாலும், நிறைய ரசிகைகளைக் கொடுத்திருக்கு.

ஷாப்பிங்:

நான், பெங்களூர் பொண்ணு. ஆனால், இப்போ சென்னையில் தங்கி, சீரியல்கள் பண்ணிட்டிருக்கேன். சென்னையில் ஷாப்பிங்குக்கு பெஸ்ட் இடம் தி.நகர்னு எல்லோரும் சொல்வாங்க. ஆனால், போறதுக்கு நேரம் இருக்காது. இந்தக் கடையில், இந்த பிரான்ட்தான் வாங்கணும் என்றெல்லாம் எந்த பாலிஸியும் எனக்கு இல்லை. ஒரு டிரஸ் மனசுக்குப் பிடிச்சுட்டால், யூடர்ன் போட்டு அந்தக் கடைக்குப் போயிடறது என் பாலிஸி.

அக்சஸரீஸ்:

சீரியலில் எனக்குப் புடவைதான் காஸ்டியூம். அதனால், புடவைக்குப் பொருந்தும் ஆக்ஸிடைஸ்டு ஜூவல்லரி, லாங் நெக் பீஸ், பாலி டைப் கம்மல்கள், டிரெடிஷனல் ஜிமிக்கி எனத் தேர்ந்தெடுத்து போட்டுப்பேன். ரியல் ஃலைப்பில் எனக்கு ஷூ மேல்தான் பெரிய கிரேஸ். எங்கே போனாலும் ஏதாவது ஒரு கலரில் ஷூ வாங்கிடுவேன்.

ஃபேவ்ரைட் டிரஸ்:

எனக்கு எப்போதும் வெஸ்டர்ன் டிரஸ் வகைகளை போட்டுக்கவே ஆர்வம். அதுதான் வசதியாகவும் இருக்கும். பத்தாம் வகுப்பு வரை பாய் ஹேர்கட்லதான் இருந்தேன். ஜீன்ஸ், டிஷர்ட் என் ரெகுலர் காஸ்டியூம். என் அப்பா பெங்களூரில் சொந்தமாக ஒரு ஃபொட்டிக் வெச்சிருக்காங்க. நிறைய வெரைட்டியான டிரஸ்களை அங்கே பார்க்கலாம். அதனால், சின்ன வயசிலிருந்தே எப்போதும் என்னை ஃபேஷனில் அப்டேட்டாக இருப்பேன். அதனால், எனக்கு எந்த டிரஸ் செட் ஆகும்; எது செட் ஆகாதுனு ஒரு தெளிவு இருக்கும். அந்த வகையில் என் மனசைக் கொள்ளை அடிச்ச டிரஸ், ஜீன்ஸ் டிஷர்ட்!

நிறத் தேர்வு:

கறுப்பு நிறம்தான் என் ஃபேவரைட். ஆனால், 'யாரடி நீ மோகினி' தொடர் கிராமத்தில் நடக்கிறதால், சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என இன்டர்மீடியேட் கலர்கள்தான் தேவைப்படும். அதையே செலக்ட் பண்ணி போட்டுக்கிறேன்.

செலிப்ரட்டி டிரண்ட்:

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் டிரஸ்ஸிங்கில் எப்பவும் ஒரு புது லுக் இருக்கும். ஒவ்வொரு படத்திலும் அவரின் ஆடைத் தேர்வு அந்த கேரக்டருக்கு அட்டகாசமா பொருந்திடும். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஸோ... ஐ லவ் ஹெர்!