Published:Updated:

`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்!' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்! பகுதி 7

அய்யனார் ராஜன்

பிரியமானவள் தொடரின் ஷூட்டிங் ஸ்பாட் அரட்டைகள்.

`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்!' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்! பகுதி 7
`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்!' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்! பகுதி 7

சினிமா ஷூட்டிங் என்பது மூன்று மாதங்களிலோ ஆறு மாதங்களிலோ முடிவடைந்துவிடக்கூடியது. சீரியல் படப்பிடிப்புகள் வருடக் கணக்கில் நடக்கின்றன. இந்த நெடிய பயணம் நட்சத்திரங்களிடையே நிரந்தரப் பிணைப்பை உண்டாக்க, சீரியல் படப்பிடிப்புத் தளங்களை எட்டிப் பார்த்தாலே, அன்பு, வம்பு, கோபம், குதூகலம், அரட்டை, ஜாலி, கேலி என ஒரு குடும்பத்தில் இருக்கக்கூடிய அத்தனை அம்சங்களையும் அங்கும் காண முடிகிறது. சீரியல் பிரியர்களுக்காக ‘விகடன் ஒளித்திரை’ உருவாக்கித் தந்திருக்கும் அப்படியொரு குடும்பம், சன் டி.வியில் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகிற ‘பிரியமானவள்’ குடும்பம். பத்து சதம் (ஆயிரம் எபிசோடு) அடித்த பின்னும் அசராமல் நின்று ஆடிக்கொண்டிருக்கிற இந்த டீம் உடனேயே இந்த வார ஷூட்டிங்ல மீட்டிங்.

உமா (பிரவீனா) குடும்பத்தைச் சந்திக்க நாம் சென்றநேரம், ஓர் உச்சி வெயில் வேளை. சம்பந்திகளான கிருஷ்ணனும் (சுபலேக சுதாகர்) ராஜாராமும் ஒன்றாக அமர்ந்திருக்க, அன்று மாலை எடுக்க இருக்கிற காட்சிகள் குறித்து அவர்களிடம் விவரித்துக் கொண்டிருந்தார், தொடரின் இயக்குநர் விக்ரமாதித்தன். அந்த ஹால் முழுக்கப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

``இன்னைக்கு இங்க விசேஷம் சார். எங்களோட பேரன், பேத்திக்குப் பெயர் சூட்டு விழா நடக்குது. அவந்திகா (சிவரஞ்சனி), பூமிகா குழந்தைகளுக்குப் பெயர்கள்லாம்கூட செலக்ட் பண்ணிட்டோம். நல்ல நேரத்துலதான் நீங்க வந்திருக்கீங்க. நீங்களும் விழாவுல கலந்துக்கோங்க" என நம்மை வரவேற்றார், விக்ரமாதித்தன். அப்போது பக்கத்து அறை ஒன்றிலிருந்து ‘ஹேய்ய்ய்ய்’ என இரைச்சல்.

``அங்க ரியலா ஒரு கொண்டாட்டம் போயிட்டிருக்கு. அவந்திகாவுக்கு இன்னைக்குப் (மே 17) பிறந்தநாள். ஆளாளுக்கு வாழ்த்துறதும், பரிசுகளைத் தர்றதுமா இருக்காங்க. ஷூட்டிங் பிஸி தெரியாம, கேக்கூட வாங்கி வெச்சிருக்காங்க. இந்தக் காலத்துப் பசங்க. டைரக்டரும் அனுமதி தந்திட்டார்னு நினைக்கிறேன். அதான், இந்த ஆர்ப்பாட்டம்" என்றார், சுபலேக சுதாகர்.

சத்தம் வந்த அறைக்குள் என்ட்ரி ஆனோம். பர்த்டே பேபி அவந்திகா மையமாக இருக்க, இசை, பூமிகா, பிரபா, திலீபன் ஆகியோர் அவருக்கு வாழ்த்துசொல்லி, ‘ஹேப்பி பர்த்டே’ பாடிக்கொண்டிருந்தனர். கணவர் நடராஜை ஸ்பாட்டில் காணவில்லை. தன் உயரமுள்ள டெடி பியர் ஒன்றை அக்காவுக்குப் பரிசளிக்கக் காத்திருந்தார், பூமிகா. அவந்திகாவுக்கு நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டுப் பேசினோம்.

``இப்போ ரெண்டு மூணு வருடமா என்னோட வீட்டுலகூட செலிபிரேஷன் சிம்பிள்தான். பிரியமான இந்தக் குடும்பத்துல அசத்திடுறாங்க. காலையில ஷூட்டிங் கிளம்புறப்பவே, இன்னைக்கு என்ன சர்பிரைஸ் தரப்போறாங்கனு நினைச்சுக்கிட்டே வருவேன். எனக்குப் பிடிச்ச பரிசுப் பொருள்களை வாங்கித் தந்து சந்தோஷப்படுத்துறாங்க. கேக் கட் பண்ணித் திக்குமுக்காட வைக்கிறாங்க. இந்த 'பர்த்டே’க்கு நீங்க வந்தது இன்னும் சர்பிரைஸா இருக்கு. கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிறேன்" என்கிறார்.

``பர்த்டே மெசேஜ்’னு ஏதாச்சும் எடுத்து விடேன்" என திலீபன் எடுத்துக்கொடுக்க, ``ஆயிரம் எபிசோடுகள் வரை ஆதரவு தந்த மக்களே... அந்த ஆதரவை இன்னொரு ஆயிரம் எபிசோடுகளுக்குக் கன்டினியூ பண்ணுங்களேன்னு கேட்டுக்கிறேன்" என்றவர், "என்னோட ரசிகர்கள் சிலர் பர்த்டேவை ஞாபகம் வெச்சிருந்து இங்கேயே வாழ்த்த வந்திருக்காங்கனா பாருங்க. வெளியில வெயிட் பண்றாங்களாம்!" என்றார்.

``ஏய், அவங்கெல்லாம் ஷூட்டிங் பார்க்க வழக்கமா வர்றவங்கடி. உன்னைக் கலாய்க்கிறதுக்காக ஃபேன்ஸ், பர்த்டேனு பிரபா எடுத்து விட்டிருக்கான். நம்பிட்டியா நீ" என இசை விஷயத்தை உடைக்க, கூட்டம் எழுப்பிய கூச்சல் அடங்க சில நிமிடங்களானது.

``ஃபிராடு, ஃபிராடு. எப்பப் பாரு வாயைத் திறந்தா பொய்!" எனப் பிரபாவை அடிக்கப் பாய்ந்தார், அவந்திகா. இன்னொருபுறம், ``பூமிகா, அந்தக் கரடி பொம்மை எல்லோரும் காசு போட்டு வாங்கினது. சபையில மறக்காம அதையும் பதிவு பண்ணிடுறேன். உன் பாச அக்காகிட்ட நீ மட்டும் வாங்கித் தந்ததா சொல்லிடாத!" என திலீபன் பூமிகாவிடம் லந்து செய்து கொண்டிருந்தார்.

சுபலேக சுதாகரிடம் பேசினோம்.

``இங்கே பார்க்குறீங்கல்ல... இந்தக் கொண்டாட்டமான சூழல்தான் பெரும்பாலும் நிலவும். ஆயிரமாவது எபிசோடைத் தொட்டதையும் சில நாளுக்கு முன் இப்படித்தான் கொண்டாடினாங்க. இன்னைக்கு ஜெனரேஷன் எதுலேயும் திருப்தியடையாத ரகமா இருக்கு. நாம என்னதான் வித்தியாசமா பண்ணினாலும், ‘அடுத்து என்ன’ங்கிற மாதிரி பார்க்கிறாங்க. இப்படிப்பட்ட மக்களை திருப்தியடைய வெச்சு ஒரு சீரியல் 1000 எபிசோடுகளைக் கடந்திருக்குனா, அது சாதாரண விஷயமில்லை. ஆனா, எனக்கு இந்தக் கொண்டாட்டங்கள்ல கலந்துக்கிறதுல எல்லாம் விருப்பம் கிடையாது. தவிர, 'கொண்டாட்டம் நடக்கட்டும், தப்பில்லை, அதேநேரம் வேலையிலேயும் கருத்தா இருங்க’னு சமயத்துல சொல்லிடுவேன். அதனால, என்னை யாரும் கட்டாயப்படுத்தவும் மாட்டாங்க.’ என்கிறார், இவர்.

உணவு இடைவேளைக்குப் பிந்தைய ஷூட்டிங் தொடங்கும் நேரம் வந்ததும் அங்கு வந்தார், நடராஜாக நடிக்கும் விஜய். சீரியலிலும் நிஜ வாழ்க்கையிலும் அவந்திகாவின் கணவர். ``சப்போர்ட் பண்ற மக்களுக்குத் தேங்க்ஸ் சொல்லிடுங்க ப்ரோ" என்றவரிடம், ``காதல் மனைவிக்கு என்ன பிறந்தநாள் பரிசு தரப்போறீங்க?" என்றோம். அதற்குள் அலைபேசி அழைக்க, நகர்ந்தார் விஜய்.

உமாவிடம் பேசியபோது, ``மூத்த மருமகளுக்குக் காலையிலயே 'மனசுபோல வாழ்க்கை அமையட்டும்னு வாழ்த்தியாச்சு. நல்லதா நாலு விஷயங்களை சொல்லித்தர நாங்க ரெடி. பெரியவங்க என்ன சொன்னாலும் அதுல அர்த்தம் இருக்கும். அதைக் கேட்டுப் புரிஞ்சு நடந்துக்கணும். அவந்திகா பக்குவமான பொண்ணு. இந்த சீரியல் மூலமாதான் அவ கல்யாணமும் நடந்தது. நல்லது கெட்டது எதுனு தெரிஞ்சு வாழ கத்துக்கோனு சொல்லியிருக்கேன்" என்றார்.

மாலை இரண்டு குழந்தைகளுக்கும் பெயர் சூட்டும் விழா இனிதே நடந்தேறியது. ``அப்படியே அவந்திகாவுக்குக் கேக் கட் பண்ணவும் ரெடி பண்ணிடுங்கப்பா" என்ற இயக்குநர், "சீரியல் இன்டஸ்ட்ரி முன்ன மாதிரி இல்லை. இப்போ பரபரப்பா போயிட்டிருக்கு. முன்னவிட அதிக நிமிடங்கள் கன்டென்ட் தரவேண்டியிருக்கு. அதனால, காலையில ஷூட்டிங் தொடங்கிடுச்சுனா ஓடிக்கிட்டே இருப்போம். ரேட்டிங், டுவிஸ்ட்னு எல்லாத்தையும் கவனிக்கணுமே! அதுக்கிடையில, இந்த மாதிரியான சின்னச் சின்ன விஷயங்கள்தான் ரிலாக்ஸ் தருது!" என்றவர், ``இந்த உழைப்புக்குப் பலனா மக்களோட சப்போர்ட் கிடைக்குது. அதுதான், எங்களோட பெரிய சந்தோஷம். அந்த சந்தோஷத்தைத் தக்கவெச்சுக்க ஓடிக்கிட்டிருக்கோம்!" என்கிறார்.

சீரியலில் அடுத்து நிகழவிருக்கும் திருப்பங்கள் என்னவாம்? 

``இலங்கையில இருந்து அகதியா தப்பி வந்த பொண்ணு, உமா. தமிழ்நாட்டுல வளர்ந்து வந்தப்போ, ராமேஸ்வரத்துல வசிச்ச கிருஷ்ணனுக்கு உமாவைப் பிடிச்சுப்போக, அவங்க தம்பதிகளாகிடுறாங்க. அவங்களுக்கு நாலு பையன்கள். பையன்கள் தலையெடுத்த பிறகு, பிசினஸும் வளர, அந்தக் குடும்பம் உயருது. கிருஷ்ணனைக் கட்டிக்க விரும்பின இன்னொரு பொண்ணு குடும்பம், கிருஷ்ணன் – உமா கல்யாணத்தால கடுப்பாகி எதிரியாகிடுது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தர்மா கிருஷ்ணன் குடும்பத்தைப் பழி வாங்கத் துடிக்கிறார். இந்த ரெண்டு குடும்பத்துக்கும் பகை வளர்ந்துக்கிட்டே இருக்கிறப்போ, மனநோயாளிகளைக் கடத்திட்டு போய் சில பல விஷயங்களைச் செய்து காசு பார்க்கிற தர்மாவோட சட்டவிரோத வேலைகளை அம்பலப்படுத்த, கிருஷ்ணனின் ஒரு மகனே மனநோயாளியா நடிச்சு தர்மா கும்பலுக்குள் நுழைகிறார். தர்மா கிருஷ்ணனின் மகனைக் கண்டுபிடித்து விடுகிறாரா, கிருஷ்ணன் குடும்பத்தைப் பழிவாங்க தர்மா செய்கிற ஒரு பெரிய செயலில், கிருஷ்ணனுக்கு என்ன ஆகிறது? அடுத்த சில நாள்களில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியப்போகிறது" என்று முடித்தார் இயக்குநர்.