Published:Updated:

``ஏன் இவ்ளோ அழுகுற சீன் எடுக்குறாங்கனு அழுதுடுவேன்!" - 'மெளன ராகம்' பேபி கிருத்திகா

'மெளன ராகம்' சீரியலில் நடிக்கும் குட்டி பொண்ணு கிருத்திகா சீரியலுக்கு எப்படி வந்தார் என்பதைப் பற்றி பேசியிருக்கிறார்.

``ஏன் இவ்ளோ அழுகுற சீன் எடுக்குறாங்கனு அழுதுடுவேன்!" - 'மெளன ராகம்' பேபி கிருத்திகா
``ஏன் இவ்ளோ அழுகுற சீன் எடுக்குறாங்கனு அழுதுடுவேன்!" - 'மெளன ராகம்' பேபி கிருத்திகா

'மௌன ராகம்' சீரியல் மூலமாக அனைவரின் இல்லத்திலும் ஒருவராக மாறியுள்ளார் பேபி கிருத்திகா. கிராமத்துச் சிறுமியாகவும், சிறுவனாகவும் இரு மாறுபட்ட ரோலில் நடித்துக்கொண்டிருக்கும், பேபி கிருத்திகாவுடன் பேசினோம்.

``உங்களுக்கு சினிமா வாய்ப்பு எப்படி கிடைச்சது?" 

``நான் மாடலிங் பண்ணிக்கிட்டு இருந்தேன். கார்த்திக் ஸ்ரீனிவாசன் அங்கிள் என் போட்டோவை பேஸ்புக்ல போட்டாங்க. அதைப் பார்த்துட்டு, விஜய் டெலிவிஷன் ஆடிஷன்ஸுக்குக் கூப்பிட்டாங்க. அதுல நான் தேர்வானேன். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு"

``அம்மா, அப்பா பற்றி சொல்லுங்க?" 

``நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு. அம்மாதான் என்னை ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூட்டிக்கிட்டு போவாங்க. சில சமயம் அப்பா வருவார். அப்பா, அம்மாதான்  எனக்கு ரொம்ப சப்போர்ட். அப்பா பெங்களூர்ல வேலை செய்கிறார். நானும் அம்மாவும் ஷூட்டிங் இருக்கிறதுனால சென்னையில இருக்கோம். அப்பப்போ பெங்களூர் போயிட்டு அப்பாவைப் பார்த்துட்டு வருவேன்." 

``சிட்டி பொண்ணு கிருத்திகாவுக்கு கிராமத்துப் பொண்ணா நடிக்கிறது எப்படி இருக்கு?"

``நான் இதுக்கு முன்னாடி  பாவாடை, சட்டையெல்லாம் போட்டது இல்லை. ஸோ, ரொம்ப ஹாப்பியா இருந்தது. ஷூட்டிங்கிற்காகத்தான் நான் முதல் முறையா கிராமத்துக்குப் போனேன். விலங்குகள், மரம், செடி கொடினு இருந்தது, சுத்தமான  காற்று இருந்தது. அங்கே ஆட்டுக்குட்டிகளோட நிறைய போட்டோஸ் எடுத்துக்கிட்டேன். எனக்கு அந்த ஊர்ல எப்படிப் பேசுவாங்கனு டைரக்டர் சார் சொல்லிக் கொடுப்பார்." 

``பையனா நடிக்கிறதைப் பற்றி சொல்லுங்க?"

``ஒரு புது அனுபவமாதான் இருந்துச்சு. வேலன் கேரக்டர்ல நடிக்கிறதுல எனக்கொரு கவலை இருக்கு. ஏன்னா, என் நீளமான முடியை வெட்டிட்டாங்க. மத்தபடி இந்த ரோல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. வெளியே எங்கேயாவது போகும்போது, பாய் கட் பண்ணியிருக்கிறதால கவுன் போட்டுப் போகமுடியலை. டி-ஷர்ட், பேண்ட் போட்டுதான் போறேன்." 

``படிப்பு, நடிப்பு இரண்டையும் எப்படி பேலன்ஸ் பண்றீங்க?"

``நான் நாலாம் வகுப்பு படிக்கிறேன். ஷூட்டிங்குக்காகதான் சென்னையில் படிக்கிறேன். ஷூட்டிங்னால என்னால கிளாஸுக்கு சரியா போகமுடியலை. பாடங்களையெல்லாம் அம்மாவுக்கு வாட்ஸ்அப்ல அனுப்பிடுவாங்க. நான் அதைப் பார்த்துப் படிச்சுக்குவேன். எக்ஸாம்ஸ் எல்லாம் கரெக்டா அட்டென்ட் பண்ணிடுவேன். டீச்சர்ஸ், ஃபிரண்ட்ஸ் எல்லோரும் எனக்கு சப்போர்ட் பண்றாங்க. 'மௌனராகம்'  சீரியல் பார்த்துட்டு, 'நல்லா நடிக்கிற'னு பாராட்டுவாங்க. எனக்கு பெங்களூரில் படிக்கணும்னு ஆசை. இந்த சீரியல் முடிஞ்சதும் பெங்களூருக்குப் போய் படிப்பேன். இங்கிலீஷ் சப்ஜெக்ட் ரொம்பப் பிடிக்கும். அதுலதான்  அதிக மார்க் வாங்குவேன். புக் படிக்கிறதும் எனக்குப் பிடிக்கும்."  

``பாராட்டு?"

``இந்த  சீரியல்ல நடிக்கிறதுக்கு முன்னாடி என்கிட்ட யாரும் இப்படிக் கேட்டது இல்லை. ஆனா, 'மௌனராகம்'ல நடிச்சதுக்குப் பிறகு, பலபேர் என்கூட போட்டோ எடுத்துக்கணும்னு சொல்றாங்க. ஷாப்பிங் மால் போனா, அங்கே என் பெயரைக் கூட கேட்கமாட்டாங்க. 'நீ பொண்ணா, பையனா?'னுதான் கேட்பாங்க. எனக்கு சந்தோஷமா இருக்கும்."

``கிருத்திகா எல்லா ஷாட்டும் ஒரே டேக்ல ஒகே பண்ணிடுவாங்களா?" 

``அழுவுற சீன் வந்தா எனக்குக் கஷ்டமா இருக்கும். எனக்கு ஏன் இவ்வளவு அழுவுற சீன் எடுக்குறாங்கனு நானே அழுதுடுவேன். சில சமயம் கிளிசரின் போடுவேன், இல்லைனா உண்மையாவே அழுதுடுவேன். டைரக்டர் சார் எனக்கு அழுவுற சீன்ஸ்ல எப்படி நடிக்கணும்னு சொல்வார். ஹாப்பியான சீன்ஸ் எல்லாம் ஒரே டேக்ல ஓகே பண்ணிடுவேன். இந்த சீரியல்ல நடிக்கிற ஷமிதா ஸ்ரீகுமார் மேடம் (காதம்பரி) என்னை அடிக்கிற மாதிரி சீன்ஸ் வரும்போதெல்லாம், முன்னாடியே என்கிட்ட ஸாரி கேட்டுட்டு நடிப்பாங்க."

``பிடித்த ஹீரோ ஹீரோயின் யார்...?"  

``விஜய் சேதுபதி, நயன்தாரா எனக்கு ரொம்பப் பிடிக்கும். இவங்க ரெண்டுபேரும் சேர்ந்து நடிச்ச 'நானும் ரவுடிதான்' படத்தை 100 தடவை பார்த்திருக்கேன். யூடியூப்ல இவங்க நடிச்ச சீன்ஸ், சாங்ஸ்னு தினமும் பார்ப்பேன். விஜய் சேதுபதி அங்கிளை நேர்ல பார்க்கணும்னு ஆசை. ஆனா, போனில் பேசியிருக்கேன். என் சீரியலை அவர் பார்ப்பேன்னு சொன்னார்." 

``சினிமாவில் கிருத்திகா என்னவா ஆகணும்னு நினைக்கிறீங்க?"  

``எனக்கு பாடுறது ரொம்பப் பிடிக்கும். எதிர்காலத்துல சிங்கர் ஆகணும்னுதான் ஆசை. பெங்களூரில் இருக்கும்போது பாட்டு கிளாஸ் போயிட்டு இருந்தேன். இப்போ ஷூட்டிங்னால போறதில்லை. ஆனா, 'மெளன ராகம்' சீரியல்ல பாட்டு பாடிக்கிட்டுதானே இருக்கேன்."