Published:Updated:

``வெட்கப்படும் அன்வர், கலாய்க்கும் சமீரா!" - `றெக்கை கட்டிப் பறக்குது மனசு' ஷூட்டிங் ஸ்பாட்

றெக்க கட்டிப் பறக்குது மனசு தொடரின் ஷூட்டிங் ஸ்பாட் அரட்டைகள்

``வெட்கப்படும் அன்வர், கலாய்க்கும் சமீரா!" - `றெக்கை கட்டிப் பறக்குது மனசு' ஷூட்டிங் ஸ்பாட்
``வெட்கப்படும் அன்வர், கலாய்க்கும் சமீரா!" - `றெக்கை கட்டிப் பறக்குது மனசு' ஷூட்டிங் ஸ்பாட்

ஹீரோயினும் புரொடியூசரும் ஒரே ஆளாக இருக்கும் சீரியலுடைய ஷூட்டிங் ஸ்பாட்டின் மதிய உணவு இடைவேளை எப்படி இருக்கும்? - இந்தச் சந்தேகத்துடனேயே `றெக்கை கட்டிப் பறக்குது மனசு' தொடரின் ஷுட்டிங் ஸ்பாட்டில் நுழைந்தோம். இடம் : சென்னைப் புறநகரான ஆலப்பாக்கம்.

`சாப்பாடு நல்லா இருக்கா, பாகற்காய், வாழைக்காய், சிக்கன்லாம் கேட்டுச் சாப்பிடுங்க. சாப்பிட்டு `டேஸ்ட் எப்படி இருக்கு'னு எங்கிட்ட சொல்லணும்' என சக ஆர்ட்டிஸ்டுகள், டெக்னீஷியன்களிடம் அன்பான ஆர்டர் போட்டுக் கொண்டிருந்தார் சமீரா. `ஷூட்டிங்ல மீட்டிங்' பகுதியை வாசித்ததாகக் கூறியவர், `நேரடியா மேட்டருக்குப் போயிடலாமா' என்றபடியே பேசத் தொடங்கினார்.

`ஒரு நடிகையா ஆந்திராவுல இருந்து இங்கே வந்தேன். `பகல் நிலவு' தொடருக்கு ஹீரோயின் தேடிக்கிட்டு இருந்தப்போகூட, அன்வர் தனக்கு ஜோடியா என்னை முதல்ல நினைச்சுப் பார்க்கலை. (இருவரும் நிஜக் காதலர்கள் என்பது டிவி ஏரியா அறிந்த ஒன்றே!) ஒருநாள் நானும் அன்வரும் சேர்ந்திருக்கிற போட்டோவைப் பார்த்த சேனல்காரங்கதான், `பேசாம இவங்களே ஜோடியா நடிக்கட்டுமே'னு சொல்லியிருக்காங்க. அப்படித்தான் `பகல் நிலவு' தொடர் மூலமா தமிழ் சீரியல் உலகத்துக்கு அறிமுகமானேன். அந்தத் தொடர்ல இருந்து நானும் அன்வரும் வெளியேறினதுதான் ஊருக்கே தெரியுமே, அதைப் பத்தி இனியும் பேச ஒண்ணுமில்லை.

அந்த சீரியல்ல நடிக்கிறதுக்கு முன்னாடியே ரியாலிட்டி ஷோ புரொடியூசரா `டான்ஸ் ஜோடி டான்ஸ்' ஃபினாலே நிகழ்ச்சியை எடுத்து நடத்துற வாய்ப்பு கிடைச்சது. அப்போதான் `ஆரஞ்ச் மீடியா'ங்கிற என் கம்பெனி தமிழுக்கு அறிமுகமாச்சு. அந்த ஷோவை நடத்திய எக்ஸ்பீரியன்ஸ்தான் `சீரியலும் தயாரிக்கலாமோ?'ங்கிற ஆசையை மனசுல விதைச்சது. சில முயற்சிகளைத் தொடங்கினோம். ஆசைக்கு றெக்கை முளைக்க, `றெக்கை கட்டிப் பறக்குது மனசு' தொடர் உருவாச்சு.

மராட்டி சீரியலை டப் பண்ணலாம்னு முடிவு செய்தோம். ஆனா, `வில்லேஜ் லவ்' சப்ஜெக்ட்ங்கிறதால, தமிழ்நாட்டுக் கிராமங்கள் ரிஃப்ளெக்ட் ஆகணும்கிறதுல உறுதியா இருந்தேன். அதனால ஆரம்ப எபிசோடுகளுக்குத் தேனிப் பக்கம் போய் கலெக்டர்கிட்ட அனுமதி வாங்கி, ரியலா `ஜல்லிக்கட்டு' நிகழ்ச்சி நடத்தி ஷூட் பண்ணோம்.''

சீரியல் புரொடக்‌ஷனில் டிஸ்டிங்ஷனில் தேறிவிட்டதுபோல இருக்கிறது சமீராவின் பேச்சு.

அப்போது, `புரொடியூசர் மேடம், லஞ்ச் முடிஞ்சது. சின்ன பிரேக் எடுத்துட்டு வர்றேன். உத்தரவு கிடைக்குமா' என்றபடி அங்கு வந்தார் சித்தார்த் குமாரன். தொடரின் ஹீரோ. `சரவணன் மீனாட்சி'யில் `வைத்தி'யாக நடித்துக் கவனம் ஈர்த்தவர்.

`என்ன கலாய்க்கிறீங்களா, நான் கலாய்க்கட்டுமா? இன்னைக்கு எக்ஸ்ட்ரா எபிசோடு எடுக்க வேண்டியிருக்கு. ஸோ, யாருக்கும் ரெஸ்ட் கிடையாது. எல்லாம் ரெடியாகுங்க. கிளம்புவோமா' எனச் சிரித்த சமீரா, தொடர்கிறார்.

`தமிழ் (சித்தார்த்தின் கேரக்டர் பெயர்) ஆளு பார்க்கத்தான் சீரியஸானவர் போலத் தெரிவார். பழகிட்டா அவ்ளோ ஜாலியான பேர்வழி. அன்வரை வம்புக்கு இழுக்கிறதே இவருக்கு வேலையாப் போச்சு. பாதியில சீரியலுக்குள்ள வந்திருக்கிற அன்வருக்கும் ஒரு ஜோடி அறிமுகப்படுத்தினோம். ஸ்வேதாங்கிற அந்தப் பொண்ணுகூட அன்வருக்கு ரொமான்ஸ் சீன்லாம் வெச்சோம். லொகேஷன்ல நான் இருக்கிறதாலேயோ என்னவோ... ஏற்கெனவே வெட்கப்படுறார் அன்வர். இவர்வேற `சமீரா பக்கத்துல இருக்கிறப்பவே இன்னொரு பொண்ணுகூட ரொமான்ஸா, எப்படி பாஸ் முடியுது'னு அவர்கிட்ட போய் வம்பிழுப்பார். ஏன் நானே அன்வரைக் கலாய்க்கிறேன்னுதான் வெச்சுக்கோங்களேன். ஆனா, டேக் போயாச்சுனா வேலையில அவ்ளோ சீரியஸாகிடுவார் தமிழ்!

``இந்த சீரியலுக்கு ஏன் நீங்களே ஹீரோயின் ஆனீங்க'னு கேளுங்க ப்ரோ" என சித்தார்த் எடுத்துக் கொடுக்க, அந்தக் கேள்வியையும் கேட்டோம்.

`உங்க ஃபீல்டுல இருந்தே பதில் தர்றேன். ஒரு ஆர்ட்டிகிள் நல்லா வரணும்னு நினைக்கிறீங்க, நீங்களே பண்ணுவீங்களா, வேற யாருக்காவது அசைன் பண்ணுவீங்களா? அதேபோலத்தான். என்னோட புராடெக்ட் நல்லபடியா மக்கள்கிட்ட போகணும்னு ஆசைப்பட்டேன். நானே பண்ணா நல்லா இருக்கும்னு தோணுச்சு' என்கிறார்.

இப்போது இந்தக் கேள்வியை வைத்தோம்.

``உங்க காம்பினேஷன், கெமிஸ்ட்ரிக்காகத்தான் `பகல்நிலவு' தொடருக்கு ரேட்டிங் கிடைச்சதும், அதேபோல `அன்வர் - சமீரா' இருந்தா இந்தத் தொடருக்கும் ரேட்டிங் வரும்னே அன்வர் சீரியலுக்குள்ள வந்ததாகவும் பேசிக்கிறாங்களே?"

`என்னது, இந்த சீரியல்ல அன்வர் சமீராவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறாரா'ங்கிற ஓர் எதிர்பார்ப்புலேயே சிலநாள் நகர்ந்தது. சீரியல்னா ஏதாச்சும் பரபரப்பு இருக்க வேணாமா? புரொடியூசர் மூளை அப்படித்தான் யோசிக்கும். நாங்க என்ன யதார்த்தத்தை மீறியா காட்சிகள் வைக்கிறோம். சீரியல் பிரியர்களோட எண்ணங்களைத் தெரிஞ்சுகிட்டு, அதுக்கேத்த மாதிரி சில ட்விஸ்டுகளை வைக்கிறோம். 'பகல் நிலவு' தொடர்ல இருந்து வெளியேறினதும், அன்வரும் என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டிருந்தார். அந்த நேரம், இந்தத் தொடருக்கும் `அருள்' கேரக்டர் தேவைப்பட்டது. அவ்ளோதான்!'

சித்தார்த்திடம் பேசினோம்.

``கண்ணை மூடி முழிச்ச மாதிரிதான் இருக்கு. அதுக்குள்ள 250 எபிசோடுகள் வந்திடுச்சு. போன வருடம் கோடையில வேலூர்ல ஷூட்டிங் வெச்சாங்க. சம்மர்ல மத்த சீரியல்கள்லாம் ஊட்டி, கொடைக்கானல்னு கிளம்புறப்போ வெயிலுக்குப் பேர் போன வேலூருக்குப் போறாங்களேனு எங்களுக்கெல்லாம் ஒரே டென்ஷன். அதுக்கான காரணம் இப்போவரை தெரியலை. அதேநேரம் ஷூட்டிங் நேரத்தை காலை 6 முதல் மாலை 6 மணி வரைனு வெச்சு கருணை காட்டினாங்க. அதேபோல செட்டுக்கு வந்துட்டா சமீரா தன்னை ஆர்ட்டிஸ்ட்டாதான் நினைக்கிறாங்க. `இந்த சீரியல் பத்தி எனக்குக் கிடைச்ச ரெஸ்பான்ஸ்னா இதுதான்...' எங்க வீட்டுல குழந்தைகள் உங்க டைட்டில் சாங் கேட்டாத்தான் சாப்பிடுதுக'! என்றார் சித்தார்த்.

தொடரில் சித்தார்த்தின் அப்பாவாக நடித்து வருகிறார், இயக்குநர் பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ்.

தேனிப்பக்கம் ஷூட்டிங் நடந்தபோது இயக்குநர் பாரதிராஜாவே அதைப் பார்வையிட வந்ததாகக் குறிப்பிட்ட தொடரின் இயக்குநர் பஷீரிடம் `சீரியலில் அடுத்து என்ன?' என்றோம்.

`மலர் டீச்சருக்கும் (சமீரா) ஆஞ்சநேயர் பக்தரான தமிழுக்கும் லவ்வாகி திருமணமும் நடந்திடுது. தமிழ் தம்பி கார்த்திக் - நந்தினி இன்னொரு ஜோடி. ரெண்டு ஜோடிகளுக்கும் குழந்தை பிறக்குது. நந்தினி பெண் குழந்தையே வேண்டாம்கிறாங்க. ஆனா, அவங்களுக்குப் பெண் குழந்தையும், மலருக்கு ஆண் குழந்தையும் பிறக்குது. நந்தினியின் பெண் குழந்தையைக் காப்பாத்துறதுக்காக அதை மலர் குழந்தையாகவும், மலரின் மகனை நந்தினியோட குழந்தையாகவும் ஆள் மாறாட்டம் செய்றாங்க. இப்போ இந்த உண்மை எல்லாருக்கும் தெரிஞ்சிடுது. மலர்கிட்ட வர்ற பெண் குழந்தைக்குப் பேச்சு வரலை. குழந்தைகள் ரெண்டும் அவங்களோட ஒரிஜினல் பெற்றோர்கிட்ட வந்துடுறாங்களா? பேச்சு வராமல் இருந்த பெண் குழந்தைக்கு என்ன நடக்கப்போகிறது? இந்த ரெண்டு கேள்விகளுக்கும் அடுத்த சில நாள்கள்ல விடை கிடைக்கும். கூடவே அன்வர் - ஸ்வேதா ஜோடிக்கு இடையில கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகுமாங்கிறதையும் சீக்கிரமே தெரிஞ்சுக்கலாம்!' என்கிறார், பஷீர்.