Published:Updated:

``கேரக்டருக்காகலாம் வெயிட் குறைக்க முடியாது..!" - 'ராஜா மந்திரி' வைஷாலி

``கேரக்டருக்காகலாம் வெயிட் குறைக்க முடியாது..!" - 'ராஜா மந்திரி' வைஷாலி
``கேரக்டருக்காகலாம் வெயிட் குறைக்க முடியாது..!" - 'ராஜா மந்திரி' வைஷாலி

'ராஜா மந்திரி' படத்தில் 'மஹா' கதாபாத்திரத்தில் கிராமியப் பெண்ணாக ஈர்த்தவர், வைஷாலி. சீரியலிலும் முத்திரை பதித்தவர். தொகுப்பாளினி, நடிகை என வலம்வந்தவர். இப்போது புது அவதாரம் எடுத்துள்ளார். அதைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு, குட்டி பயோ...

பெயர்: வைஷாலி

படிப்பு: இன்ஜினீயரிங்

தற்போது: டீச்சர்

முதல் படம்: சென்னையில் ஒரு நாள்

அறிமுக சீரியல்: கனா காணும் காலங்கள்

``என் சொந்த ஊர் சென்னை. நான் இன்ஜினீயரிங் முடிச்சிருக்கேன். நல்லா படிக்கும் பொண்ணு. என் ஃப்ரெண்டு ஒரு படத்தின் ஆடிஷனுக்காக ரேடான் அலுவலகத்துக்குப் போகவேண்டியிருந்தது. நானும் அவங்களோடு போயிருந்தேன். ஆடிஷன்ல அவங்களை பர்ஃபார்ம் பண்ணச் சொன்னாங்க. 'இப்படி நடிங்க அப்படி நடி'னு சொல்லிட்டிருந்தேன். அதைப் பார்த்துட்டு, 'நீங்களே இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறீங்களா?'னு கேட்டாங்க. அதுதான் 'சென்னையில் ஒரு நாள்'. என் முதல் படம். மிகப்பெரிய டீமில் நானும் நடிச்சது ஹேப்பியா இருந்துச்சு. இப்படித்தான் என் மீடியா பயணம் ஆரம்பிச்சது. அந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸை, சன் டிவியில் டெலிகாஸ்ட் பண்ணாங்க. அப்போ, ஃபர்ஸ்ட் இயர் படிச்சுட்டிருந்தேன். எங்க காலேஜ் பொண்ணுங்க, பசங்க எல்லாம் செம்மையா பாராட்டினாங்க. காலேஜ்ல ரொம்ப ஃபேமஸ் ஆகிட்டேன்'' எனச் சிரிக்கிறார் வைஷாலி.

``நான் காலேஜில் என்சிசி ஸ்டூடண்ட். அங்கே புரோகிராமை நான்தான் தொகுத்து வழங்குவேன். அதைப் பார்த்துட்டு எங்க ஹெச்ஓடி, தமிழ் சேனலில் ஆங்கரிங் ஆடிஷனில் கலந்துக்கச் சொன்னார். பேசுறதுதான் நமக்குக் கைவந்த கலையாச்சே. நல்லா பேசவும் செலக்ட் பண்ணிட்டாங்க. அப்போதான் விஜய் டி.வி-யின் 'கனா காணும் காலங்கள்' சீரியல் வாய்ப்பும் கிடைச்சது. சினிமா, ஆங்கரிங், சீரியல் என வரிசையாக வாய்ப்பு வந்தபோதும் ஒரு விஷயத்தில் தெளிவா இருந்தேன். அதாவது, நான் நிறைய வெளிநாடுகளுக்கு டிராவல் பண்ணுவேன். ஜப்பான் மக்கள் பின்பற்றும் விஷயம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்க ஒரு நேரத்தில் ஒரு வேலையில் அதிக கவனம் எடுத்து பண்ணுவாங்க. நிறைய பண்றேன்னு எல்லாத்திலும் ஈடுபாட மாட்டாங்க. நானும் அப்படித்தான். 'ராஜா மந்திரி' கமிட்டானதும் டி.வி-யில் முகம் காட்டவே இல்லை. அதேமாதிரி, ஆங்கரிங், சீரியல்னு பண்ணும்போதும் என்னைத் தேடிவந்த சினிமா வாய்ப்புகளைத் தவிர்த்தேன். ஒரு வேலை பண்ணாலும் முழு கவனத்துடன் செய்வேன்'' என்கிற வைஷாலி இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?

``மீடியாவில் ஒரு சில படங்களுக்காக என்னைத் தேடி வரும் சிலர், 'நீங்க குண்டா இருக்கீங்க. கொஞ்சம் வெயிட் குறைச்சா எங்க கதாபாத்திரத்துக்கு செட்டாகும்'னு  சொல்வாங்க. 'நான் அந்த அளவுக்கு குண்டு இல்லை. 'Chubby'யாதான் இருக்கேன். ஒல்லியான ஆள்தான் தேவைன்னா, அந்த உடல்வாகு இருக்கிறவங்களையே பயன்படுத்திக்கங்க. நான் நானா இருக்கவே பிடிக்கும்'னு சொல்லிடுவேன். ஒரு கதாபாத்திரத்துக்காக என்னால் எடையைக் குறைக்க முடியாது. இதனாலேயே பல வாய்ப்புகளை மறுத்துட்டேன். இப்போ, ஒரு தமிழ் படத்தில் லீட் ரோல் வந்திருக்கு. ஆனாலும், ஒரே வேலையைத் தொடர்ந்து பண்ணிட்டிருக்கிறது பிடிக்காது. சின்ன வயசிலிருந்தே டீச்சிங் லைன்ல எனக்கு அதிக விருப்பம். இப்போ, டீச்சர்ஸுக்கு எப்படியெல்லாம் இருக்கணும்னு ஒரு டீச்சரா சொல்லிக்கொடுக்கிறேன். ' xseed education' மூலமா நிறைய ஆசிரியர்களை சந்திச்சு, கிளாஸ் எடுக்கிறேன். இது புது அனுபவமா இருக்கு'' என்கிறார் புன்முறுவலோடு.

அப்படின்னா, எதிர்காலத் திட்டம்...

``ஒரு ஸ்கூல் ஆரம்பிக்கணும். 'நண்பன்' படத்தில் வருகிற மாதிரி புராஜெக்ட்ஸ் மூலமா எல்லாத்தையும் விருப்பத்துடன் கற்கும் ஸ்கூலா அது இருக்கணும். ஸ்கூல் ஆரம்பிக்க நிச்சயம் கொஞ்ச வருஷமாகலாம். அதுக்கு முன்னாடி, இன்னும் ரெண்டு வருஷத்துக்குள் பிசினஸ் ஆரம்பிச்சிருவேன். அந்த பிசினஸில் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பேன்'' என்கிற வைஷாலி கண்களில் கனவுகள் நிறைந்துள்ளன.

அடுத்த கட்டுரைக்கு