Published:Updated:

ஒரு ஷோ ஓஹோ வாழ்க்கை...  ஹீரோ ராமர், ஃபாரின் ரிட்டர்ன் ரமணியம்மாள்!

ஒரு ஷோ ஓஹோ வாழ்க்கை...  ஹீரோ ராமர், ஃபாரின் ரிட்டர்ன் ரமணியம்மாள்!
News
ஒரு ஷோ ஓஹோ வாழ்க்கை...  ஹீரோ ராமர், ஃபாரின் ரிட்டர்ன் ரமணியம்மாள்!

'என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ - இந்த ஒரேயொரு டயலாக், `சரிகமப’ இந்த ஒரேயொரு ஷோ.. ராமர், ரமணியம்மாள் இருவரின் வாழ்க்கையையே மாற்றிவிட்டதென்றால் அது மிகையல்ல.

'என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ - இந்த ஒரேயொரு டயலாக், `சரிகமப’ இந்த ஒரேயொரு ஷோ.. ராமர், ரமணியம்மாள் இருவரின் வாழ்க்கையையே மாற்றிவிட்டதென்றால் அது மிகையல்ல. இப்போது தமிழகம் அறிந்த சின்னத்திரைப் பிரபலங்களாகி விட்ட `சிரிச்சா போச்சு' ராமரும் `ராக் ஸ்டார்' ரமணியம்மாளும் கடந்து வந்த பாதையைப் பார்ப்போம்...

ராமர்:

மதுரையில் பட்டிமன்றப் புகழ் பேராசிரியர் கு.ஞானசம்பந்தனின் `நகைச்சுவை மன்றம்' வெகுபிரபலம். மதுரை அருகேயுள்ள அரிட்டாபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமரும் ஆரம்ப காலத்தில் அங்கு பயிற்சி பெற்றவரே. சிவகார்த்திகேயன் எந்த ஆடிஷன் மூலம் விஜய் டிவியின் 'கலக்கப்போவது யாரு’ ஷோவுக்குத் தேர்வானாரோ அதே ஆடிஷனில் தேர்வானவர்தான் ராமரும். பிறகு அமுதவாணனுடன் சேர்ந்து 'சாம்பியன்' நிகழ்ச்சியில் பெர்ஃபாம் பண்ணினார். அந்த நிகழ்ச்சியில் அமுதவாணன் - ராமர் ஜோடிதான் டைட்டில் வின்னர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிறகு 'அது இது எது' நிகழ்ச்சியின் 'சிரிச்சா போச்சு’ சுற்றுக்கு வந்தார். அந்த நேரத்தில் நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஜீ தமிழில் தொகுத்து வழங்கிய 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்கு நல்ல ரேட்டிங் கிடைத்துக்கொண்டிருந்து. அந்த நிகழ்ச்சியைக் கலாய்த்து லக்ஷ்மி ராமகிருஷ்ணனை இமிடேட் செய்தார் ராமர். பெண் வேடம் போடத் தயங்கிய ராமரை சேனல்தான் வற்புறுத்தி அந்தக் கேரக்டரைப் பண்ண வைத்தது என அப்போது பேசினார்கள்.

அந்த நிகழ்ச்சியில் 'என்னம்மா இப்படிப் பண்றீகளேம்மா' என ராமர் பேசியது அவ்வளவு வைரலாகியது. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் விஜய் டிவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பும் அளவுக்கு விவகாரம் போனாலும் ராமருக்கு அன்று முதல் ஏறுகாலம்தான். பிறகு அந்த டயலாக் பல படங்களில் பயன்படுத்தப்பட்டது. 'அந்த ஒரேயொரு டயலாக் மூலம் ஒன்பது படங்கள் கமிட் ஆச்சு' என்கிறார் ராமர். லேட்டஸ்ட்டாக ராமர் நடிக்கும் 'படைப்பாளன்' என்ற படத்துக்குப் பூஜை போடப்பட்டுள்ளது.

"லக்ஷ்மி ராமகிருஷ்ணனைக் கொஞ்சநாள் டென்ஷனாக வெச்சாலும் அந்த டயலாக்தானே டேர்னிங் பாயின்ட்?" என்று கேட்டால், "பழசெல்லாம் மறுபடியும் பேசணுமா? இப்ப லக்ஷ்மி ராமகிருஷ்ணனே எனக்கு நல்ல ஃப்ரெண்ட்" என்று சிரிக்கிறார் ராமர். மதுரைப் பக்கம் அரசுப் பணியில் இருக்கிறவரை நகைச்சுவை நடிகராக்கி அழகு பார்க்கிறார்கள் தமிழ் டிவி ரசிகர்கள். 

'ராக்ஸ்டார்’ ரமணியம்மாள்:

கேள்வி ஞானத்தில் பாட்டுப் பாடிக்கொண்டு அக்கம்பக்க வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தவர் ரமணியம்மாள். வேலை பார்த்துவந்த ஒரு வீட்டின் உரிமையாளரால் 'ஜீ தமிழ் சேனலின் 'சரிகமப' நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வைக்கப்படுகிறார். சேனலே 'ராக் ஸ்டார்' என்கிற பட்டத்தைத் தந்து ஊக்கப்படுத்துகிறது. பேரன் பேத்தி வயதுப் போட்டியாளர்களுடன் பங்கெடுத்து ஃபைனல்வரை வந்து இரண்டாமிடம் பிடித்தார். நிலம் பரிசாகக் கிடைத்தது. பரிசுத் தொகையாகக் கிடைத்த சில லட்சங்கள் மூலம் கடன் அடைக்கப்பட்டு விட்டது.

சென்னையைத் தாண்டி வெளியில் செல்லாதவர் ஷோ நடந்துகொண்டிருந்தபோதே சிங்கப்பூர் சென்று வந்தார். ஷோ முடிவடைந்து விட்டாலும் அதன் பயனாகத் தற்போது பல மேடைகளில் ரமணியம்மாளுக்குத் தனி மரியாதை. பல வெளிநாட்டு கலைநிகழ்ச்சிகளில் பாட பறந்துகொண்டிருக்கிறார். இந்த நிமிடத்தில் ரமணியம்மாள் இலங்கையில் இருக்கிறார். அடுத்த மாதம் (ஜூலை) ஆஸ்திரேலியப் பயணம் காத்திருக்கிறது.

"இப்போதும் வீட்டு வேலை பார்க்கிறீர்களா?" எனக் கேட்டோம். "திருச்சி, மதுரைன்னு பாடக் கூப்பிடுறாங்க. மாசத்துக்கு ஒண்ணோ ரெண்டோ வருது. வேலை பார்க்கிற வீடுகள்ல லீவு கொடுக்க ரொம்பவே யோசிக்கிறாங்க. அதனால எட்டு வீடுகள்ல பார்த்துட்டு இருந்த வேலையை விட்டுட்டேன். கடந்து வந்த பாதையை மறக்கக் கூடாதுங்கிறதுக்காகவே ரெண்டு வீடுகள்ல மட்டும் பார்த்துட்டு இருக்கேன். 'இருக்கிற இந்த ரெண்டு வீடும் கைவிட்டுப் போகாதபடி பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு'னு, என்னைப் பாடகியா இந்த உலகத்துக்குக் காட்டின, நான் கும்பிடுற அந்த ஆஞ்சநேயர்ட்ட சொல்லிட்டேன்'' என்று உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்குகிறார் ரமணியம்மாள்.