Published:Updated:

"பிக் பாஸ் நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாங்க. முடியாதுனு சொல்லிட்டேன்!" - அபர்ணதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"பிக் பாஸ் நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாங்க. முடியாதுனு சொல்லிட்டேன்!" - அபர்ணதி
"பிக் பாஸ் நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாங்க. முடியாதுனு சொல்லிட்டேன்!" - அபர்ணதி

'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் போட்டியாளாராகப் பங்கேற்ற அபர்ணதி, நிகழ்ச்சி குறித்தும் வசந்தபாலன் படத்தில் நடித்துக்கொண்டிருப்பது பற்றியும் சொல்லியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"ஆர்யாவோட நண்பர்கள் எல்லாம் ஆர்யா கல்யாணம் பண்ணிக்க மாட்டார். இப்படியேதான் இருப்பார்னு சொல்றாங்க. ஆனா, நான் அவருக்காகத்தான் காத்திருக்கேன்'' என்கிறார், அபர்ணதி. 'எங்க வீட்டு மாப்பிள்ளை' தொடரில் போட்டியாளராகப் பங்கேற்றவர். 

"கும்பகோணம்தான் என்னோட ஊர். அங்கேதான் படிச்சேன். ஃபேஷன் டெக்னாலஜி முடிச்சதுனால மாடலிங் பண்ற பொண்ணுங்களுக்கு காஸ்டியூம்ஸ் டிசைன் பண்ணிக் கொடுத்துக்கிட்டு இருந்தேன். எங்க ஃபேமிலி மிடில் கிளாஸ். அம்மா ஹவுஸ் வொய்ஃப், அப்பா துபாயில் வேலை பார்த்தார். தங்கச்சி ஊட்டச்சத்து நிபுணரா இருக்கா. 

தி.நகர் முழுக்க சுத்தி பேரம் பேசி ஷாப்பிங் பண்ற பொண்ணு நான். சமூகவலைதளங்கள் எதிலேயும் நான் இல்லை. சமீபத்துலதான் இன்ஸ்டாகிராம்ல சேர்ந்திருக்கேன். அதனால, 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியோட அறிவிப்பு வந்தது எனக்குத் தெரியாது. என் தோழி ஒருத்தி வாட்ஸ்அப்ல சொன்னா. டிரை பண்ணிப் பார்க்கலாம்னு இறங்கினேன். நான் ஆர்யாவோட ரசிகை கிடையாது. அவரோட படங்களைப் பார்த்திருக்கேன்.  

நிகழ்ச்சியில கலந்துக்கிறதுக்கான லிங்ல என் பெயர், அட்ரஸ், பாஸ்போர்ட் நம்பர் எல்லாம்கூட கேட்டிருந்தாங்க. ஆனா, நான் எல்லத்தையும் பொய்யான தகவலா பதிவு செஞ்சேன். கொஞ்சம் பயமா இருந்ததுனால, போட்டோவை மட்டும் ஒரிஜினலா வெச்சுடேன். பிறகு மும்பையிலிருந்து ஒரு போன். என் வீட்டுல இருந்தபடி ஒரு வீடியோ அனுப்பச் சொன்னாங்க. நான் தங்குற ரூம், சாப்பிடுற இடம்னு எல்லா இடத்துலேயும் நின்னு வீடியோ எடுத்து அனுப்பினேன். பிறகு இன்டர்வியூவுக்குப் போனேன். சைக்கிளிங் எனக்குப் பிடிக்கும். அதுவரைக்கும் எனக்கு ஆர்யா மேல எந்தக் காதலும் இல்லை. 

பதினைந்து நாள்கள் கழிச்சு மும்பையிலிருந்து திரும்பவும் போன். பதினைந்து பேரை செலக்ட் பண்ணியிருக்கோம். நீங்களும் ஒருத்தர்னு சொன்னாங்க. ஜெய்ப்பூருக்கு ஃபிளைட் டிக்கெட் அனுப்பியிருந்தாங்க. என்னால நம்பவே முடியல. ஆனா, நடந்த இத்தனை விஷயங்களையும் எங்க வீட்டுல சொல்லலை. தங்கச்சிக்குக்கூட தெரியாது. வீட்டுல சொன்னதும், போகாதேனு திட்டுனாங்க. எங்க அப்பா, 'ஆர்யா பெரிய இவனா... போகக்கூடாது'னு சொல்லிட்டார். சும்மா ஒரு மாசத்துக்கு ஊரை சுத்திப் பார்த்துட்டு வரேன்னு வீட்டுல கெஞ்சி, ஓகே வாங்குனேன். 

ஜெய்ப்பூர் போறதுக்கு முன்னாடி, எங்க வீட்டுல ஒரு ஃபுட்டேஜ் எடுத்தாங்க. அப்போ, எங்க ஏரியாவுல கூட்டம் கூடிருச்சு. அவங்ககிட்ட எல்லாம், 'பிக் பாஸ் ஷோவுக்குப் போறேன். அதுக்குதான் ஷூட் பண்றாங்க'னு பொய் சொன்னேன். பிறகு ஜெய்ப்பூர் போயிட்டேன். எங்களுக்குத் தேவையான காஸ்ட்யூம்ஸ் எல்லாம் அவங்களே கொடுத்தாங்க. என் டிரெஸ் விஷயத்துல மட்டும் நான் கவனமா இருந்தேன். ஏன்னா, ஹோம்லியான டிரெஸ்ஸிங்தான் எனக்குப் பிடிக்கும்." என்றவரிடம் சில கேள்விகள்.

"ஆர்யா மேல எப்போ காதல் வந்தது?" 

"என்னோட 'ஸ்பெஷல் டைம்'க்கு அப்புறம்தான் காதல் வந்துச்சு. அதுக்கு முன்னாடியே என்னை வெளியே அனுப்பியிருந்தா, ஃபீல் பண்ணியிருக்கமாட்டேன். நான் ஏதாவது அழுது பேசினா, ஆர்யாவும் கண் கலங்குவார். இப்படிச் சின்ன சின்ன விஷயங்களால இம்ப்ரஸ் பண்ணார், ஆர்யா."

"நிகழ்ச்சியின்போது ஆர்யாவை எப்போதாவது பிடிக்காமல் போயிருக்கா?"

"போட்டியிலே கலந்துக்கிட்ட எல்லோரும் அபர்ணதியைப் பிடிக்கலை. அவங்களை எலிமினேட் பண்ணணும். மரியாதை இல்லாம ஆர்யாவை வாடா, போடானு பேசுறானு சொன்னாங்க. அப்போ ஆர்யா எனக்கு சப்போர்ட் பண்ணிப் பேசியிருக்கலாம். அனா, அமைதியா இருந்தார். 'அவ என்னைத்தானே வாடா போடானு பேசுறா?'னு ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். ஆர்யாவைப் பிடிக்காம போனது, இந்த சம்பவத்துல மட்டும்தான்!. இப்போ, ஆர்யவை அதிகமா காதலிக்கிறேன். குருட்டுத்தனமான காதல்னுகூட சொல்லலாம். அவருக்கு 50 வயசு ஆனாலும், ஆர்யாவுக்காக காத்திருப்பேன். ஆர்யா வேற யாரையாவது கல்யாணம் பண்ணா, பண்ணிக்கட்டும். ஆனா, நான் அந்தக் கல்யாணத்துக்குப் போகமாட்டேன். நானும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஏன்னா, என் நினைவுகளில் ஆர்யாதான் இருப்பார். வீட்டுலே எங்க அம்மாவுக்கும் இப்போ ஆர்யாவைப் பிடிக்க ஆரம்பிச்சிருச்சு. சாமிகிட்ட வேண்டுறப்போகூட, 'ஆர்யா மனசு  மாறணும்'னு வேண்டிக்க ஆரம்பிச்சிட்டாங்க." 

"நிகழ்ச்சியில இருந்து வெளியேறியபோது உங்க மனநிலை எப்படி இருந்துச்சு?"

"தற்கொலை பண்ணிக்கலாம்னு நினைச்சேன். அங்கே இருந்த எல்லோர்கிட்டேயும் சண்டை போட்டேன். பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்தது. 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சி முடியிற வரைக்கும் ஹோட்டல் ரூம்லதான் இருந்தேன். கவுன்சிலிங் கொடுத்தாங்க. எங்க அம்மா, அப்பாவை வரவெச்சு என்கூட இருக்கச் சொன்னாங்க. நிகழ்ச்சியில இருந்து வெளியேறி வீட்டுக்கு வந்தபிறகு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனேன். நிறைய கிஃப்ட்ஸ் வந்திருந்தது. அதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருந்துச்சு." 

"வசந்தபாலன் படத்துல எப்படி கமிட் ஆனீங்க?" 

"மேக்கப் இல்லாத ஒரு செல்பி அனுப்பச் சொன்னாங்க. பிறகு, வசந்தபாலன் சார் என்னை நேர்ல பார்த்தார். டெஸ்ட் ஷூட், வொர்க் ஷாப் நடந்தது. பிறகு, செலக்ட் ஆனேன். ஆர்யா விஷயத்துல இருந்து மீண்டு வர கவுன்சிலிங் போய்க்கிட்டு இருந்தேன். அப்போ, என்னை பிஸியா வெச்சுக்கிற மாதிரி எதையவது பண்ணுங்கனு சொன்னாங்க. இந்தப் படம், அதுல இருந்து என்னை மீட்டுக் கொண்டுவரும். படத்துல ரவுடி பொண்ணா நடிக்கிறேன். கொஞ்சம்கூட மேக்கப் இல்லாம வருவேன்." 

"படத்துல நடிக்கப்போறது ஆர்யாவுக்குத் தெரியுமா?" 

"நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததுக்குப் பிறகு ஒருநாள்கூட நானும், ஆர்யாவும் பேசல. அவருடைய நம்பர் என்கிட்ட இருக்கு. ஆனா, நான் போன் பண்ணலை. அவருடைய மேக்கப் ஆர்டிஸ்ட் எனக்கு நண்பர். அவர் ஆர்யாகிட்ட சொல்லியிருக்கார். ரம்ஜானுக்குப் பிறகு ஆர்யாகிட்ட பேசலாம்னு இருக்கேன். ஏன்னா, அவர் இப்போ நோன்புல இருப்பார். இந்தப் படத்துல கமிட் ஆனதும், 'ஆர்யா மனைவி இப்போ ஜி.வி.காதலி!'னு நியூஸ் வந்தது. அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டேன்."  

"ஆர்யாகூட சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்ததா?"

"ரெண்டு இயக்குநர்கள் கேட்டாங்க. வசந்தபாலன் சார் படம் முடியட்டும்னு வெயிட் பண்றேன். ஏன்னா, வசந்தபாலன் சார் எனக்கு முக்கியமான கேரக்டர் கொடுத்திருக்கார். அதை சரியா பண்ணனும்னு ஆசைப்படுறேன்!" 

"பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்க அழைப்பு வந்ததாமே?" 

"ஆமா. ஆனா, எனக்கு விருப்பம் இல்லை; வேண்டாம்னு சொல்லிட்டேன். நானே சமைச்சு சாப்பிடுறதெல்லாம் என்னைப் பொருத்தவரை ரொம்பக் கஷ்டமான காரியம். பிக் பாஸ் எனக்கு செட் ஆகாது." 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு