Published:Updated:

பிக்பாஸுக்கு புது டாஸ்க் பட்டியல்..! - துப்புசிக்கு துப்புசிக்கு பிக்பாஸ்

பிக்பாஸுக்கு புது டாஸ்க் பட்டியல்..! - துப்புசிக்கு துப்புசிக்கு பிக்பாஸ்
பிக்பாஸுக்கு புது டாஸ்க் பட்டியல்..! - துப்புசிக்கு துப்புசிக்கு பிக்பாஸ்

பிக்பாஸுக்கு புது டாஸ்க் பட்டியல்..! - துப்புசிக்கு துப்புசிக்கு பிக்பாஸ்

மல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2  வரும் ஞாயிறு முதல் தொடங்கவிருக்கிறது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் தினமும் விதவிதமான டாஸ்க்குகள் கொடுத்து கடுப்பேற்றுவார். பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகள் போட்டியாளர்கள் மட்டுமின்றி சமயங்களில் பார்வையாளர்களையே வெறியேற்றும். விடியும் வரை விளக்கை அணையாமல் பார்த்துக்கொள்வது, நட்டநடுராத்திரியில் திடுதிப்பென யாரையாவது பயமுறுத்தச் செய்வது எனச் சின்னப்புள்ளைத்தனமாக விளையாடும் பெரிய மனிதர் பிக்பாஸ். ப்ளூவேல் மாதிரி ஓடுற ரயிலுக்கு முன்னாடி குதிக்கவேண்டும் என டாஸ்க் கொடுக்காததே பெரும் ஆறுதல். இந்த சீசனில் பிக்பாஸுக்கு நாமும் சில டாஸ்க் ஐடியாக்களை வழங்கலாமே... 

'கரகாட்டக்காரன்' படம் பார்த்து குறியீடு கண்டுபிடித்தல்:

ஹாலிவுட் ரசிகர்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கும் தொற்றிக்கொண்ட குறியீட்டு வெறி இப்போது கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் வைரஸ் போல வெகுவேகமாகப் பரவி வருகிறது. யதார்த்தமாக ஒரு காட்சி வைத்தாலும் டைரக்டருக்கே தெரியாத குறியீடுகளையெல்லாம் கண்டுபிடித்துச் சொல்லி டர்ராக்குகிறார்கள் விமர்சகர்கள். ஆகவே, இந்த சீசனில் 'கரகாட்டக்காரன்', 'சூரிய வம்சம்', 'நாட்டாமை' உள்ளிட்ட படங்களைப் பார்த்துக் குறியீடு கண்டுபிடிக்கும் டாஸ்க் கொடுப்பார் பிக்பாஸ். சொப்பனசுந்தரியின் கார் கலர் முதல் ராமராஜனின் லிப்ஸ்டிக் கலர் வரை நோண்டி நொங்கெடுத்து கரகாட்டக்காரனை பின்நவீனத்துவ கம்யூனிச செவ்வியல் படைப்பாக்குவார்கள் பிக்பாஸ் போட்டியாளர்கள்.

மீம் டெம்ப்ளேட் கவ்வுதல்:

சமூக வலைதள சமூகத்தினர் வாராவாரம் ஃப்ரெஷ்ஷாக மீம் டெம்ப்ளேட் பிடித்து பிக்சர் குவாலிட்டி தேயும் வரை துவைத்துப் பிழிந்து காயப்போட்டு வருகிறார்கள். துரைமுருகன் ரியாக்‌ஷன் வைத்து இந்த வாரம் மீம் போட்டால் அடுத்த வாரமே 'சூர்யவம்சம்' சின்ராசுவை நோக்கி லாங் பேக் டைவ் அடிக்கிறார்கள். நெட்டிஸன்களின் போக்கு கணிக்க முடியாமல் போய்க்கொண்டிருக்கும் நிலையில் பிக்பாஸில் நடக்கும் அட்ராசிட்டிகள் மீம்ஸ் க்ரியேட்டர்களுக்கு கிடைக்கவிருக்கும் அவல்பொரி. பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் அழிச்சாட்டியங்க ளுக்கு போட்டியாளர்களே மீம் டெம்ப்ளேட் பிடித்துக் கொடுக்கும் டாஸ்க் கொடுக்கப்படலாம். 

ஆண்டவர் ட்வீட்டை டீகோட் செய்தல்:

கமல் ட்வீட் புரியாமல் தவிக்கும் தமிழர்களின் கோரிக்கைக் கடிதங்களால் ட்வீட் லிமிட் 280 கேரக்டர் என அதிகப்படுத்தப்பட்டாலும், இன்னும் விடாமல் சோதிக்கிறார் ஆண்டவர். வழக்கம்போல, பின்னிரவு பதினோரு மணிக்கு சரியாக 140 கேரக்டரில் ஒரு ட்வீட்டைப் போடுவார். விடிவதற்குள் ஆண்டவரின் ட்வீட் சொல்ல வரும் பொருளை டீகோட் செய்து தெரிவிக்க வேண்டும். இது டபுள் தமாக்கா டாஸ்க். ஏனெனில், இரவு முழுக்க விழித்திருக்கும் டாஸ்க்கும் இதில் வேல்யூ ஆடட். 

சாம்பிளுக்கு கற்பனையாக ஆண்டவரின் அர்த்தராத்திரி ட்வீட் ஒன்று... டீகோட் பண்ணுங்களேன்!

மக்கள் தான் பல்லக்கு நீதி நின்று கொல்லற்கு
நாம் காண்பது பூக்கனவு சாலை அது புதிய பாதை
வெறிகொண்ட எவ்வரசும் ஒருகணம் கவிழும்
கல்லாத் தமிழா நில்லடா தயவாய்.

தாமரை மலர ஐடியா தரும் டாஸ்க்:

'தீபாராதன காட்டுறவன மொதக்கொண்டு தீவிரவாதியா மாத்தி வச்சுருக்கானுவ' எனத் தாமரைக் கட்சியின் தலைமையே புலம்பும் விதமாக சின்னக் குழந்தைகள் முதற்கொண்டு கலாய்த்துப் பழகும் பாடிசோடா பேக்கேஜாக இருக்கிறது தமிழக பாஜக. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை அக்கா ஆவேசமாக சபதம் எடுத்தாலும் ஒரே ரிப்ளையில் காமெடி போஸ்ட் ஆக்கிக் கவுத்து மூடி விடுகிறார்கள். இவற்றையெல்லாம் மீறி, தமிழகத்தில் தாமரையை மலரச்செய்ய பொன்னான ஆலோசனைகள் தரும் டாஸ்க் அறிவிக்கப்படலாம். 'வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை' என சீமான் மாடுலேஷனில் போட்டியாளர்கள் டாஸ்க்கை பாய்காட் செய்யவும் வாய்ப்பு உண்டு. 

போட்டி சட்டமன்றம் நடத்தும் டாஸ்க்:

மனநல மருத்துவமனை, பள்ளிக்கூடம், மாறுவேட டாஸ்க் எல்லாம் நடத்திய அனுபவம் இருப்பதால் இந்த முறை போட்டி சட்டமன்றம் நடத்தும் டாஸ்க்கை தேர்ந்தெடுக்கலாம். சட்டமன்றத்தில் நடைபெற வேண்டிய விவாதங்கள் தவிர சட்டைக்கிழிப்பு, டேபிளை தூக்கி அடித்தல், வேட்டி உருவுதல் போன்ற தரமான சம்பவங்கள் அரங்கேறும் என அவதானிக்கலாம். போட்டி சட்டமன்றத்தில் துரைமுருகன் ரியாக்‌ஷனை கனகச்சிதமாகச் செய்பவர்களுக்கு ரசிகர்களின் அமோக ஆதரவும் கிடைக்கலாம். 

தலைமறைவு டாஸ்க்:

கடந்த சீசனில் சில பொருட்களை ஒளித்துவைத்துக் கண்டுபிடிக்கும் டாஸ்க் கொடுத்த பிக்பாஸ், இந்த முறை எஸ்.வி.சேகர் புண்ணியத்தில் தலைமறைவு டாஸ்க்கை கையில் எடுப்பார். போட்டியாளர்கள் 15 பேரும் தலைமறைவாக இருந்துகொண்டே மற்ற தலைமறைவு போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். ரியல் ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது, இதுதான். துப்புசிக்கு துப்புசிக்கு பிக்பாஸ்!
 

அடுத்த கட்டுரைக்கு