Published:Updated:

`` `பிக் பாஸ்' போட்டியாளர்களும் ஆடியன்ஸும்தான் பலியாடுகள்!" - காயத்ரி ரகுராம்

கு.ஆனந்தராஜ்

``அந்த நிகழ்ச்சியில் நாங்க சண்டை சச்சரவுகளோடு இருந்ததுக்கான காரணங்கள் வேறு. ஆனால், நிகழ்ச்சி முடிஞ்சதும் எல்லோரும் நண்பர்களாக இருக்கோம். மக்கள்தான் குழப்பிக்கிறாங்க."

`` `பிக் பாஸ்' போட்டியாளர்களும் ஆடியன்ஸும்தான் பலியாடுகள்!" - காயத்ரி ரகுராம்
`` `பிக் பாஸ்' போட்டியாளர்களும் ஆடியன்ஸும்தான் பலியாடுகள்!" - காயத்ரி ரகுராம்

ன்னும் சில தினங்களில் 'பிக் பாஸ் 2' தொடங்கவுள்ளது. அவரா... இவரா? யாரெல்லாம் போட்டியாளர்களாக இருக்கக் கூடும் என்ற யூகங்களும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகிறது. முதல் சீசனைப் போலவே, இந்த முறையும் பரபரப்புகளுக்குப் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 'பிக் பாஸ்' முதல் சீசனில் அதிக கவனம் ஈர்த்தவர்களில் ஒருவரான நடிகை காயத்ரி ரகுராம், அந்த நிகழ்ச்சி குறித்து தன் கருத்துகளைப் பகிர்கிறார்.

`` `பிக் பாஸ் 2' தொடங்கப்போகுது. உங்களின் எதிர்பார்ப்பு பற்றி..." 

``முதல் சீசனைப் போலவே, இரண்டாவது சீசனும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். போட்டியாளர்கள்தான் மாறுவாங்களே தவிர, டாஸ்க் உள்ளிட்ட செயல்பாடுகளில் மாற்றம் இருக்காது. அதனால், எதிர்பார்ப்பு கொஞ்சம் குறையலாம்னு நினைக்கிறேன். பார்வையாளராக அந்த நிகழ்ச்சியைப் பார்க்க நானும் ஆவலாக இருக்கேன். போன வருஷம் என்னை வெச்சு செஞ்சாங்க. இந்த முறை யாரையெல்லாம் செய்யப்போறாங்கன்னு தெரியலை. பொறுத்திருந்து பார்ப்போம்."

``ரெண்டாவது சீசனுக்கான போட்டியாளரா உங்களை அணுகினாங்களா?" 

``முதல் சீசனுக்கே பொறுக்கலை. இதுல ரெண்டாவது சீசன் வேறயா? `நீங்க மறுபடியும் போட்டியாளராக போறீங்களா? மறுபடியும் போனால் அந்த வீடு கலகலனு இருக்கும்'னு சொல்றாங்க. பார்க்கிறவங்களுக்கு கலகலனுதான் இருக்கும். சிரிச்சும் திட்டியும் ரசிப்பீங்க ஆனால், இன்னொருமுறை என் பேரை டேமேஜ் பண்ணிக்க விரும்பலை. அந்த வீட்டுக்குள்ளே நான் நானாக இருக்கவே முடியாது. ஒருமுறை கிடைச்ச படிப்பினையே போதும். போட்டியாளராக இந்த முறை எங்கிட்ட யாரும் கேட்கலை. கேட்டாலும், மீண்டும் போட்டியாளராக எனக்கு விருப்பமில்லை."

``சீசன் 2 போட்டியாளர்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புவீங்க?"

``எதுவுமே சொல்லப்போறதில்லை. யாரெல்லாம் போட்டியாளர்கள்னு எனக்குத் தெரியாது. அவங்களுக்கு சீசன் 1 போட்டியாளர்களின் கருத்தும் தேவைப்படாது. ஏன்னா, முதல் சீசனை நிச்சயம் அவங்க பார்த்திருப்பாங்க. ஒருவேளை பார்க்கலைன்னா, கொஞ்சம் பாருங்க. உங்களுக்கே எல்லாம் புரியும். ஆனால், மக்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்பறேன். ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை (முதல் சீசனை), ரொம்ப சீரியஸா பார்த்தீங்க. பிரதான வேலையையெல்லாம் மறந்து, மீம்ஸ், ட்ரோல்னு சிலர் ரொம்ப மோசமாவும் நடந்துகிட்டீங்க. அதில் சிலருக்கு ஆதாயம் கிடைச்சுது. யாரெல்லாம் அவங்க என நல்லா யோசிச்சுப் பாருங்க. மக்கள் இந்தமுறை எப்படி ரியாக்ட் பண்ணப்போறாங்கனு தெரியலை. பார்க்க ஆவலாக இருக்கேன்."

`` `பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலமாக உங்களுக்குக் கிடைச்ச பாடம் என்ன?"

`` `பிக் பாஸ்' நிகழ்ச்சியினு இல்லை, எங்கே போனாலும் நாம நாமளாவே இருக்கணும். போன சீசனில் பப்ளிசிட்டிக்காக சிலர் செய்த செயல்கள் ரொம்ப மோசமா இருந்துச்சு. அந்த வீட்டுக்குள்ளே நிஜமாகவே நடந்தது என்னனு எங்களுக்குத்தான் தெரியும். மக்களுக்குத் தெரியாது. அந்த நிகழ்ச்சியால் நான் எந்தப் பாடத்தையும் கத்துக்கலை. எனக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தலை. இந்த முறை போட்டியாளர்கள் நிஜமாவே மனசாட்சிப்படி நடந்துக்கிறது பெரிய சந்தேகம்தான். அந்த நிகழ்ச்சி, யாருக்கும் எந்தப் பாடத்தையும் கத்துக்கொடுக்கப் போறதில்லை. போட்டியாளர்களும் ஆடியன்ஸும்தான் பலியாடுகள். இதை அனுபவத்தில் சொல்றேன்."

``முதல் சீசன் போட்டியாளர்களுடனான உங்க நட்பு எப்படி இருக்கு?"

``அந்த நிகழ்ச்சியில் நாங்க சண்டை சச்சரவுகளோடு இருந்ததுக்கான காரணங்கள் வேறு. ஆனால், நிகழ்ச்சி முடிஞ்சதும் எல்லோரும் நண்பர்களாக இருக்கோம். மக்கள்தான் குழப்பிக்கிறாங்க. நான்தான் ஜூலிய கலைஞர் டிவியில் 'ஓடிவிளையாடு பாப்பா' நிகழ்ச்சிக்கு கலா மாஸ்டரிடம் ரெஃபர் பண்ணினேன். முதல் சீசன் போட்டியாளர்கள் அனைவருமே வாட்ஸ்அப் குரூப்ல ஆக்டிவா இருக்கிறோம். போனிலும் பேசிப்போம்; நேரிலும் மீட் பண்றோம். ஓவியா, சக்தி, ஆரவ், வையாபுரி அண்ணானு பலரும் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். ஆனால், அந்த நிகழ்ச்சியைப் பற்றி பேசிக்க மாட்டோம்."

``இந்த சீசனில் கமல்ஹாசனின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என நினைக்கிறீங்க?" 

``சீசன் 1-ல் நான் வெளியே வரும்போது, எனக்குப் பக்கபலமா இருப்பேன்னு அவர் வாக்குறுதி கொடுத்தார். என்னைப்போல பல போட்டியாளர்களுக்கு அன்பான வார்த்தைகளையும் வாக்குறுதிகளையும் சொன்னார். அதில் எதையுமே அவர் செய்யலை. அந்த நிகழ்ச்சி முடிஞ்ச பிறகு எங்களைக் கூப்பிட்டுப் பேசவேயில்லை. அந்த நிகழ்ச்சியால் நிறைய பேர் மனரீதியாக பாதிக்கப்பட்டாங்க. அவங்களுக்காகவும் அவர் எதுவும் செய்யலை. சொன்னதுபோல அவர் நடந்துக்கணும்னு நான் எதிர்பார்க்கவும் இல்லை. இப்பவோ அரசியல்வாதியாகவும் ஆகிட்டார். அதனால், நிச்சயம் அரசியல் பேச்சுகள் அதிகம் இருக்கும்."