Published:Updated:

ஓவியாவே இருக்காங்க ஓ.கே. ஆனா, பிக்பாஸ்-2 ஓவியா யாரு பாஸ்? #BiggBossTamil

ஓவியாவே இருக்காங்க ஓ.கே. ஆனா, பிக்பாஸ்-2 ஓவியா யாரு பாஸ்? #BiggBossTamil

ஓவியாவே இருக்காங்க ஓ.கே. ஆனா, பிக்பாஸ்-2 ஓவியா யாரு பாஸ்? #BiggBossTamil

ஓவியாவே இருக்காங்க ஓ.கே. ஆனா, பிக்பாஸ்-2 ஓவியா யாரு பாஸ்? #BiggBossTamil

ஓவியாவே இருக்காங்க ஓ.கே. ஆனா, பிக்பாஸ்-2 ஓவியா யாரு பாஸ்? #BiggBossTamil

Published:Updated:
ஓவியாவே இருக்காங்க ஓ.கே. ஆனா, பிக்பாஸ்-2 ஓவியா யாரு பாஸ்? #BiggBossTamil

பிக்பாஸ் சீஸன் இரண்டின் குதூலகமான துவக்கம். புதிய போட்டியாளர்களைப் பற்றிய அறிமுகப்படலத்துடன் ஆரம்பித்தது. இரவு ஏழு மணிக்கு ஒளிபரப்பாகத் துவங்கிய நிகழ்ச்சி ஏறத்தாழ நான்கு மணி நேரங்கள் நீண்டு பதினோரு மணிக்குத்தான் நிறைவுற்றது. இதிலேயே பார்வையாளர்கள் பலருக்கு கண்ணைக் கட்டியிருக்கலாம். இனி வரும் வாரங்கள் சுவாரஸ்யமாகவும் பரபரப்பாகவும் அமைவது புதிய போட்டியாளர்களின் கையில்தான் இருக்கிறது. 

முதல் நாளிலேயே அதற்கான சமிக்ஞைகளும் தெரியத் துவங்கிவிட்டன. இல்லையென்றாலும் பிக்பாஸ் விட்டு வைப்பாரா என்ன? அதற்கான சதி திட்டங்கள் எப்போதோ தீட்டப்பட்டிருக்கும்.  சனி மற்றும் ஞாயிறுகளில் கமல்ஹாசனின் பஞ்சாயத்து காட்சிகளும் போன முறையைப் போலவே கூடுதல் சுவாரஸ்யத்தை தரக்கூடும்.

பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே ஆரவாரமாக நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவில் ஒரு புத்தம் புதிய வெள்ளை நிற கார் வந்து நின்றது. கூச்சல்களின் இடையே வந்து இறங்கினார் கமல். ‘Kamal Sir’ என்று கர்ச்சீப் போட்டிருந்த கேரவனின் உள்ளே சென்று தயாராகி மீண்டும் மக்கள் கூட்டத்திடம் திரும்பினார். 

‘இதுபோன்ற மக்களின் அன்பை தமிழகமெங்கும் சந்தித்து வருகிறேன். பிக்பாஸ் மேடை மக்களிடம் பேசுவதற்கான ஒரு வாய்ப்பு. ‘சினிமாவில் இதைச் செய்யலாமே’ என்று கேட்பார்கள். அங்கு வேலுநாயக்கர், சக்திவேல் தேவர், விருமாண்டி என்று அதனதன் பாத்திரங்களில் மட்டுமே இயங்க முடியும். இடைப்பட்ட சந்தர்ப்பங்களில் மட்டுமே என்னுடைய கருத்துகளைச் சொல்ல முடியும். அவ்வளவே. ஆனால், இந்த மேடையில் நான் ‘நானாக’ வெளிப்பட முடியும். சுயநலம் என்பார்கள், இதில் பொதுநலமும் உள்ளது’ என்றார். 

சினிமா என்கிற வலிமையான ஊடகத்தின் மூலம் வளர்ந்தெழுந்தவர் கமல். அதன் சாத்தியங்களை திறம்பட அறிந்தவர். எனவே, அதைக் குறைத்து மதிப்பிடுவது சரியா என்கிற நெருடல் எழாமல் இல்லை. (நிகழ்ச்சியின் பிற்பகுதியில் இதுதொடர்பாக அவர் அளித்த விளக்கம் சற்று தர்க்கத்துக்குப் பொருந்தி வந்தது.)

இப்போதைய கமல் சற்று ‘வளமாக’ இருக்கிறார். வரப்போகிற திரைப்படத்துக்கான முன்தயாரிப்பாக இருக்கலாம். ‘இந்த நிகழ்ச்சி சற்று பிரமாண்டமாக இருக்கப் போகிறது. நான் என்னைச் சொல்லவில்லை’ என்று சுயபகடி செய்துகொண்டது சமயோசித நகைச்சுவை. கேள்விகளை எதிர்கொள்ளும் தைரியத்தையும் பயிற்சியையும் பிக்பாஸ் மேடை தந்தது என்று சொன்ன கமலை பார்வையாளர்கள் சில கேள்விகள் கேட்டனர். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிக்பாஸ் வீட்டை பார்வையாளர்களுக்கு சுற்றிக் காட்டிய கமல், நீச்சல் குளத்தின் அருகே சொல்லிய வசனம், அரசியல் பகடியில் தோய்த்த ரகளையான பட்டாசு. ‘முன்பு அனைத்துக் கிராமங்களிலும் இதுபோன்ற குளங்கள் மக்களின் வசதிக்காக இருக்கும். இப்போது வசதியானவர்களின் வீடுகளில் மட்டுமே இருக்கக்கூடிய குளோரின் குட்டை இது. ஏறத்தாழ இந்த வீடும் ரிசார்ட் மாதிரிதான். 16 பேரை கூட்டி வந்து அடைச்சு பின்பு மாற்றி மாற்றி தீர்ப்பு சொல்லி…’ என்று சட்டென்று நிறுத்தி நகர்ந்ததின் மூலம் சமகால அரசியல் நிலவரத்தை ஜாலியாக கிண்டலடித்ததை உணர முடிந்தது. இதுபோன்ற அரசியல் சரவெடிகள் நிகழ்ச்சி முழுவதும் இருக்கும்போல. 

கன்ஃபெஷன் ரூமுக்குள் நுழைந்த கமல், ‘என்ன பிக்பாஸ், நல்லாயிருக்கீங்களா..  பார்த்து (கேட்டு) ரொம்ப நாளாச்சு.. என்ன பண்றீங்க.. நீங்களா தனியா பேசிட்டிருக்கீங்களா?” என்று பிக்பாஸை ஜாலியாக கலாய்க்க ஆரம்பிக்க, பாகிஸ்தான் தீவிரவாதிகளை எதிர்க்கும் விஜய்காந்த் போல பிக்பாஸ் கறாராக இருந்தார். ‘நீங்க போகலாம் கமல்’ என்ற பிக்பாஸின் குரலில் கரகரப்பு கூடியிருந்தது. (உடம்பு, கிடம்பு சரியில்லையோ).

பிக்பாஸ் வீட்டின் மாற்றங்களில் முக்கியமானது சிறை போன்றதொரு அமைப்பு. பாவனையான ஆச்சர்யத்துடன் அதைப் பார்த்த கமல், ‘ரொம்ப சொகுசு வாழ்க்கை வாழ்ந்துட்டா அதுக்கான தண்டனையும் உண்டுன்னு சொல்றாங்களோ.. என்னவோ… இங்க ஃபேன் வசதி கூட இல்லையே.. அப்ப ஜெயில் இல்லை போலிருக்கே’ என்று சொல்லியது அல்ட்டிமேட் நக்கல்.

பிக்பாஸ் சீஸன் 2-ன் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்டனர். ஆனால், இந்த வரிசை ஏற்கெனவே இணையத்தில் கசிந்த பட்டியலோடு கச்சிதமாக ஒத்துப் போனது. பிக்பாஸ்ஸின் புதிய வீட்டை பத்திரிகையாளர்களுக்கு சுற்றிக்காட்ட அவர்களின் கண்ணைக் கட்டி அழைத்துச் சென்றார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். இத்தனை ரகசியம் காத்தவர்கள் போட்டியாளர்களின் தகவல்களையும் பாதுகாத்திருக்கலாம். இப்படி ‘பப்பரப்பே’ என்று ஆதார் கார்டு விவரம் போல் சல்லிசாய் இணையத்தில் நிறைந்திருப்பதை தவிர்த்திருக்கலாம். 

முதல் போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்டவர் யாஷிகா ஆனந்த். ‘துருவங்கள் பதினாறு’ போன்று சில படங்களில் நடித்திருந்தாலும் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ என்கிற சமீபத்திய `காவியப்படத்தின்' மூலம் இளைஞர்கள் மற்றும் வாலிப வயோதிகர்களின் கவனத்தை ‘பளிச்’ என ஈர்த்தவர். வயது பதினெட்டுதானாம். ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தில் வரும் வசனம் போல ‘எது.. அந்த பதினேழுக்குப் பிறகு வரும் பதினெட்டா?” என்று கேட்கத் தோன்றியது. 

யாஷிகா வலைதளத்தில் துணிச்சலாக நிறைய எழுதுகிறார் என்று தெரிகிறது. அதைப் பாராட்டிய கமல், இணையத்தில் இப்போது மொழி வளம் நன்றாக இருக்கிறது என்று பாவனையாக பாராட்டிய அதே சமயத்தில் ‘நான் சொன்னது ‘தாயைப் பழிக்கும் மொழி வளம்’ என்று அம்மாதிரி எழுதும் இணையதாரர்களின் காலை உடனே வாரி விட்டார். சம்பந்தப்பட்டவர்களுக்கு நிச்சயம் உறைக்கும். உறைக்க வேண்டும்.

முதுகில் நெருப்பு பறக்க அடுத்து வந்தவர் பொன்னம்பலம். பொதுவாகவே வில்லன் நடிகர்களின் இன்னொரு பக்கம் சுவாரஸ்யமானதாக இருக்கிறது. திரையில் அத்தனை முரட்டுத்தனமாக தோன்றுகிறவர்கள், நேரில் ‘மியாவ்’ என்று முனகும் பூனைகளாக இருக்கிறார்கள். ``நான் பெற்ற தோல்விகள் அதிகம், பிக்பாஸில் தோற்பதில் எனக்குப் பிரச்னையில்லை’ என்கிற பொன்னம்பலம் தியான போஸில் அடிக்கடி உட்கார்ந்து கொள்கிறார். ‘ஜெய்ஸ்ரீராம்’ என்கிற வணக்கத்துடனும்தான் எல்லோரையும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். ‘காலா’வில் நானா படேகருக்குப் பதிலாக பொன்னம்பலத்தை உபயோகித்திருக்கலாமோ என்று தோன்றுமளவுக்கு இவரிடம் விபூதி வாசனை. 

கமலின் சில திரைப்படங்களில் தாம் செய்த சாகசங்களை பொன்னம்பலம் விளக்க, ‘நானும் ஒரு ஸ்டண்ட்மேன்தான்’ என்று கமலும் அடக்கத்துடன் தன் பெருமையை சற்று நீண்ட நேரம் விவரித்தார். 

மூன்றாம் போட்டியாளராக வந்தவர் மஹத். சார்லி, சின்னி ஜெயந்த் போல ஹீரோக்கு நண்பராக நடிக்கவென்றே நேர்ந்து விடப்பட்டவரோ, என்னமோ. சமையல் தெரியும் என்பது பிக்பாஸ் வீட்டுக்கான கூடுதல் தகுதி. சிம்புவின் நண்பர் என்றார். ஹ்ம்ம். வாழ்த்துகள். 'களத்தூர் கண்ணம்மா' சமயத்தில் உங்களை சிறுவனாகப் பார்த்தபோது அதே போன்றதொரு மகன் வேண்டுமென்று விருப்பப்பட்டேன்’ என்று டி.ஆர். கமலிடம் ஒருமுறை சொன்னாராம்.


இதற்கிடையில் வீட்டுக்குள் இருந்த போட்டியாளர்கள் வீட்டைச் சுற்றிப் பார்க்கவும் அங்கிருக்கும் உணவுகளை ருசிக்கவும் துவங்கி விட்டார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் பந்திக்கு முந்திக்கொண்டார் யாஷிகா. ‘பெண்களின் படுக்கையறை பக்கமெல்லாம் நீங்கள் வரமுடியாது. கண்ணாடிக் கதவின் முன் தடுப்புகளை வைத்து விடுவேன்’ என்று யாஷிகா, பொன்னம்பலத்திடம் எதற்கோ முன்ஜாக்கிரதையாகச் சொல்லிக் கொண்டிருக்க, ``தோ.. பார்றா.. எத்தனை படத்துல நாம கண்ணாடியை உடைச்சு உள்ளே பாய்ஞ்சிருக்கோம்னு இவங்களுக்கு தெரியல” என்று பொன்னம்பலம் ஜாலியாக சொன்னது சரியான டைமிங். 

நான்காவது போட்டியாளர் டேனியல் ஆன்னி போப். சுருக்கமாக டேனி. ‘ப்ரெண்டு.. லவ் பெயிலரு…’ என்கிற வசனத்திலேயே இவரைச் சுருக்கி விடுவார்கள் போலிருக்கிறது, பாவம். அந்த வசனத்தை எத்தனையோவாவது முறை கமலிடம் சொல்லிக் காண்பித்தார். இவரது நண்பர்கள் இவரைக் கலாய்த்து அனுப்பிய வீடியோ ஜாலியாக இருந்தது. 

ஐந்தாவதாக உள்ளே நுழைந்தவர் பரிச்சயம் இல்லாதவராக இருந்தவர். இருபத்தொன்பது வயதாகும் வைஷ்ணவி, ஊடகவியலாளராக இருக்கிறார். குறிப்பாக, தமிழ் எழுத்துலக ஜாம்பவான்களில் ஒருவராகிய சாவியின் பேத்தி என்பது முக்கியமான அடையாளம். ``அநாவசியமானவைகளுக்கு சண்டை போட மாட்டேன். அதே சமயத்தில் அவசியமான விஷயங்களுக்கு குரல் கொடுக்கத் தயங்க மாட்டேன்’ என்றார். வாங்க, ராசாத்தி. உங்களைப் போன்றவர்களின் சேவை, பிக்பாஸ் வீட்டுக்கு அவசியம் தேவை. 

வைஷ்ணவி பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து பரஸ்பரம் அறிமுகம் ஆகி முடிந்த சமயத்தில் குழாயிலிருந்து குடிநீர் வந்து கொண்டேயிருந்தது. நிறுத்த முடியவில்லை. ‘எந்தப் போட்டியாளருக்கு நீர் சிக்கனம் பற்றிய அக்கறையிருக்கிறது’ என்கிற பிக்பாஸின் சோதனையாக கூட இது இருக்கலாம். நீர் வீணாகக்கூடாது என்கிற பதைபதைப்பில் அனைத்து பாட்டில்களிலும் நீரைப் பிடித்து வைத்தார் வைஷ்ணவி. இதர சிலரும் உதவினார்கள். 

ஆறாவதாக உள்ளே நுழைந்தவர் நடிகை ஜனனி. காந்தக் கண்ணழகி. தன்னை ‘Introvert’ என்று வர்ணித்துக் கொள்ளும் ஜனனி, பொறியியல் படிப்பு முடித்து நடிகையானவர். ‘கடந்த முறையே நீங்கள் பட்டியலில் இடம் பெற்றாலும் தயங்கியதாக கூறினார்களே’ என்றார் கமல். பெரிய திரையில் நடிக்கிறவர்கள், சின்னத்திரையை தாழ்வானதாக நினைப்பதை தகுந்த காரணங்களுடன் மறுத்தார். ‘ஒரு முன்னணி நடிகரின் திரைப்படம் கூட அதிகபட்சம் முப்பது லட்சம் பார்வையாளர்களால் காணக்கூடிய சாத்தியம் மட்டுமே இருக்கிறது. ஆனால் இந்த நிகழ்வின் மூலம் ஐந்து கோடி பார்வையாளர்களுக்கு மேலான எண்ணிக்கையை சென்று அடைய முடிகிறது” என்றார். சின்னத்திரை வருங்காலத்தில் அடையக்கூடிய முக்கியத்துவத்தைப் பற்றி பல வருடங்களுக்கு முன்பே ஆருடம் சொன்னவர் கமல். 

ஏழாவது போட்டியாளர், இந்தியாவின் ஒரே ‘Voice Expert’-ம், ரகளையான வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் உடைகள் அணிபவருமான அனந்த் வைத்தியநாதன். விஜய் டி.வி நிலைய வித்வான்களில் ஒருவர். ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியைப் பார்க்கிறவர்களுக்கு இவருடைய அறிமுகம் தேவையில்லை. பாலாவின் ‘அவன் இவன்’ திரைப்படத்தில், இரண்டு மனைவிமார்களுக்கு இடையில் அல்லறுறும் அம்மாஞ்சி கணவன் பாத்திரத்தைக் கையாண்டிருந்தார். 

‘இவர் பிக்பாஸ்ஸிலா” என்று பலர் வியந்திருக்கக்கூடும். அதற்கான காரணத்தையும் விளக்கினார். தத்துவார்த்தமாகவும் உளவியல்பூர்வமானதாகவும் அந்த விளக்கம் இருந்தது. ‘எனக்கும் பல முகமூடிகள் இருந்தன. அந்த முகமூடிகளுள் ஒன்று கிழிந்தபோது உறவை இழந்தேன். பலவற்றைத் தவிர்க்கத் துவங்கினேன். ஆனால், இப்படித் தவிர்ப்பது சமநிலையற்ற மனோபாவம் என்பதை உணர்ந்த பிறகு, பயப்படுவதற்குப் பதிலாக அதைத் தாண்ட முடிவு செய்தேன். எனக்குள்ளும் எதிர்மறைத்தன்மை இருக்கிறது. இத்தனை காலம் பாதுகாத்த பெருமையின் மீது நானே கரி பூசவும் நேரிடலாம் என்றும் தோன்றுகிறது.. ஆனால், நாம் இறுதியில் மிஞ்சப் போவதும் கரியாகத்தானே” என்றெல்லாம் கமலுக்கே சவால் விடும் வகையில் ‘மய்யமாக’ பேசினார். 

‘இப்ப எனக்கு ஜோடியில்லை’ என்று கமலிடம் இவர் சொன்னபோது, ‘லக்கி மேன்” என்று ஆரவாரமாக கமல் சிரித்தார். ஆனால், அது நிச்சயம் அதிர்ஷ்டம் இல்லை என்று கமலின் மனச்சாட்சி சொல்லியிருக்கக்கூடும். வயோதிகத்தின் தனிமை கொடியது. சூப்பர் சிங்கர் மாணவர்கள் நெகிழ்வுடன் தங்களின் குருவை வீட்டுக்குள் வழியனுப்பி வைத்தார்கள். 

எட்டாவதாக வந்த போட்டியாளர் NSK ரம்யா. தமிழ் சினிமாவின் நகைச்சுவை முன்னோடியான என்.எஸ்.கிருஷ்ணனின் பேத்தி. தாய் வழியில் இவர் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியின் பேத்தியும்கூட. அருமையான பாடகி. சுருள்சுருளாக அழகாக இருந்த சிகையை மாற்றி கந்தர்கோலமாக வந்து நின்றார். 

ஒன்பதாவது போட்டியாளர் சென்றாயன். வடசென்னை வழக்கு மொழியை துல்லியமாக பேசி நடிக்கக்கூடியவர். இவரது பிரத்யேகமான பெயரை சிலாகித்தார் கமல்ஹாசன். கமல் திரைப்படத்தின் டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்று சாப்பிட நேர்ந்த பழைய கதையை சொன்னார். கமலுக்கு முன்னால் பேச்சு வராமல் மிக பதற்றமாக காணப்பட்டார். 

பத்தாவது ரித்விகா. சீஸன் ஒன்றில் பரணி தனிமைப்பட்டதைப் போன்று தன் நிலைமை ஆகக்கூடாது என்று கவலைப்பட்டவர், அவ்வாறு ஆக விடமாட்டேன் என்று தனக்குத்தானே தைரியமும் சொல்லிக்கொண்டார். ‘சில படங்களில் ஹீரோயினாகவும் சில படங்களில் காரெக்ட்டர் ஆர்ட்டிஸ்ட்’ ஆகவும் நடித்திருப்பதாக இவர் சொன்னதும், குணச்சித்திர நடிகர்களின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு லெக்சர் தந்தார் கமல்.  ரங்காராவ், நாகேஷ் போன்றவர்களை உதாரணம் சொன்னார். ‘நான் நடிச்ச படங்கள் சிலது வெளிவரவில்லை’ என்று ரித்விகா சொன்னதும், “நீ்ங்களும் நம்ம கேஸா’ என்று கமல் சிரித்தது அட்டகாசமான நகைச்சுவை. 

பதினோராவது போட்டியாளர் மும்தாஜ். ‘நான் எதற்கு பிக்பாஸுக்கு வருகிறேன் என்று எனக்கே தெரியாது. வெற்றி, தோல்வியைப் பற்றி கவலையில்லை. ஒரு மாற்றம் வேண்டி வருகிறேன்’ என்றார். கமலுக்கு முன்னால் மிக நிதானமாகவும் தன்னம்பிக்கையுடனும் காணப்பட்ட மும்தாஜ், அவருடைய உறவுக்காரப் பெண் ஒருவர் பழைய ரைம்ஸ் பாடலை நினைவுகூர்ந்தபோது சட்டென்று உணர்வுவயப்பட்டு கண்கலங்கினார். 

‘உண்டு… கண்டிப்பா சண்டை உண்டு’… என்று பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் போட்டியாளர்களில் ஒருவர் ‘தாடி’ பாலாஜி. மனைவியுடன் விவாகரத்து, அது சார்ந்த சர்ச்சைகள் என்று சமீபமாக செய்திகளில் வெளியானது.  'நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க’ என்ற ‘டைமிங்கான’ பாடலுக்கு நடனம் என்கிற பெயரில் ஆடினார். சமீபத்தில் சிதைந்துபோன தன் பிம்பத்தை நேர்மறையாக மாற்றிக் கொள்ளவும், இழந்த வாழ்வை திரும்பப் பெறும் நம்பிக்கையுடனும் ‘பிக்பாஸ்’ போட்டியில் கலந்துகொள்ளவிருப்பதை விளக்கினார். 

பதிமூன்றாவது போட்டியாளர் மமதி. தொலைக்காட்சி நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர் போன்ற முகங்களைக் கொண்டவர். ‘திருமணம் என்கிற நிறுவனம். அதில் ஏற்படும் பிரிவு’ போன்ற விஷயங்களைப் பற்றி கறார்தனமாக சில கருத்துகளைச் சொன்ன மமதி, ‘யாரையும் புண்படுத்த மாட்டேன். அதே சமயத்தில் உண்மையைப் பேச வேண்டிய நேரத்தில் பேசாமலும் இருக்க மாட்டேன்’ என்றார். யெஸ்… உங்களைப் போன்றவர்கள்தான் பிக்பாஸ் வீட்டுக்கு அவசியம். சண்டைக்கோழி பார்ட் டூவாக இவர் இருக்கக்கூடும். 

அதீதமான தன்னம்பிக்கையும் அது சார்ந்த மிகையான பாவத்துடனும் இவர் பேசியதாலோ என்னவோ, கமல் இவரிடம் அதிகம் உரையாடாமல் சீக்கிரமாகவே வீட்டுக்குள் அனுப்பி விட்டார். விட்டால் கமலுக்கே போட்டியாளராக வந்து விடுவார் போல. 

கொஞ்சம் சகிச்சுக்குங்க… இதோ முடிஞ்சுடுச்சி…

பதிநான்காவது போட்டியாளர் நித்யா. பாலாஜியின் மனைவி. தம்பதியினருக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் சர்ச்சை, பிக்பாஸ் வீட்டிலும் நிச்சயம் எதிரொலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு காரணமாக போட்டியாளர் பட்டியலில் இணைந்திருக்கிறார். பிக்பாஸ் மனம் மகிழும் படியான விஷயங்களை இவர்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம் போல. வணிக ரீதியில் இதுவொரு நல்ல உத்திதான். ஆனால், தார்மீக ரீதியில்?  பிக்பாஸ் அகராதியில் இதற்கெல்லாம் இடம் இல்லை என்பதால் அலட்டிக் கொள்வது அநாவசியம். 

‘Woman entrepreneur’ என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட நித்யா, தன் மீது எதிர்மறையாக உருவாகிவிட்ட பிம்பத்தை மகளுக்கு முன்னால் மாற்றிக் காட்டுவதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதாக தெரிவிக்கிறார். இதன் மூலம் கிடைக்கும் ஊதியத்தில் மூன்றின் ஒரு பங்கை மகளுக்காகவும், இதர பங்குகளை பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் செலவிடப் போவதாக சொல்கிறார். ஆரோக்கியமான விஷயம். 

பதினைந்தாவது ஷாரிக் ஹாஸன். வில்லன் நடிகராக புகழ்பெற்றிருக்கும் ரியாஸ் கானின் மகன். அவருடைய மினியேச்சர் போலவே இருக்கிறார் ஷாரிக். இவருடைய தாயான உமா மற்றும் பாட்டியான கமலா காமேஷ் ஆகியோரும் திரைத்துறையைச் சார்ந்தவர்கள் என்பது நமக்குத் தெரியும். 

பதினாறாவது போட்டியாளர், ஐஸ்வர்யா தத்தா.. ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் நாயகி. இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பார்க்கும்போது நமக்கு வியர்த்துக் கொட்டுகிறது. டஸ்க்கி அழகி. சென்னையில் ஐந்து வருட வசிப்பு. கொஞ்சிக் கொஞ்சி தமிழ் பேசுகிறார்.  எனவே, தமிழ் நடிகைக்கான அடிப்படை தகுதியுடன் இருப்பது சிறப்பு. பூர்வீகம் மேற்கு வங்காளம். ‘எங்களுக்கும் பெங்காலி தெரியும். தேசிய கீதம் அதுதானே’ என்று டைமிங்காக கமல் நினைவுப்படுத்தியது ரகளை. 

பதினேழாவது போட்டியாளர்…. யெஸ்.. சீஸன் ஒன்றில் அனைவரது உள்ளங்களையும் கவர்ந்து தமிழகத்தின் ‘நிரந்தர டார்லிங்’ ஆக மாறி விட்ட ஓவியா. இவரது வீடியோ முன்னோட்டம் இன்று வெளியானபோதே, ‘இவர் தற்காலிகமான போட்டியாளராகத்தான் இருப்பார் என்பதை பலரும் யூகித்து விட்டார்கள். ‘இனிமேல் பிக்பாஸ் போட்டியில் நுழைய மாட்டேன்’ என்று முன்பு ஓவியா சொன்னது நினைவிருக்கலாம். பரணில் வைத்திருந்த யூனிபார்மை அவசரம் அவசரமாக எடுத்து மாட்டிய, ‘ஓவியா’ ஆர்மியைச் சேர்ந்தவர்களில் சிலர் ஏமாந்திருக்கலாம், பாவம்.

‘ அனுபவம் வாய்ந்த முன்னாள் போட்டியாளர்’ என்கிற முறையில் தற்போதைய போட்டியாளர்களுக்கு ஏதேனும் ‘டிப்ஸ்’ தரலாமே?’ என்றார் கமல். ‘நான் என்ன சொல்றது.. அந்தந்த சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று தனக்கேயுரிய பாணியில் சொன்னார் ஓவியா. கேள்வி கேட்கப்பட்டவுடன் செயற்கையாக அதற்கான பந்தாவெல்லாம் செய்யாமல் உள்ளதை உள்ளபடி சொன்ன அந்த வெள்ளந்தி மனசுக்காகத்தானே தமிழ்நாடே தலையில் வைத்துக்கொண்டாடுகிறது! ராசாத்தி!..

``நீங்க விருந்தினராகத்தான் வந்திருக்கிறீர்கள்’ என்பதைச் சொல்லாமல் ஒரு போட்டியாளர் என்கிற பாவனையுடன் உள்ளே செல்லுங்கள். அவர்களின் பதற்றம் எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம்” என்று வழியனுப்பி வைத்தார் கமல். இந்தத் திட்டம் சரியாகவே வேலை செய்தது. குறிப்பாக பெண் போட்டியாளர்கள் அதிர்ச்சியாகி அட்டென்ஷனில் நின்று விட்டார்கள். ஜனனியின் முகத்தில் திகைப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. அனைவரும் சுதாரித்துக்கொள்ள சில நிமிடங்கள் தேவைப்பட்டன. 

**

பொதுவாக இன்றைய நிகழ்ச்சியைப் பற்றிய சில குறிப்புகள். 

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அடையாளப்படுத்தும் பின்னொட்டுகளை பெயர்களின் பின்னால் உபயோகப்படுத்துவதை தமிழ் சமூகம் பெரும்பாலும் தவிர்த்து வருகிறது. இதற்குப் பின்னால் பல சமூகநீதிப் போராட்டங்களும் விழிப்பு உணர்வு பிரசாரங்களும் உள்ளன. சிலரின் பெயருக்குப் பின்னால் அது தவிர்க்கப்பட்டதும், சிலருக்குப் பின்னால் அது தொடர்வதும், பிக்பாஸுக்கே வெளிச்சம்

‘அடுத்து வீட்டுக்குள் வரப்போவது ஆணா, பெண்ணா’ என்று ஏற்கெனவே உள்ளே இருந்த போட்டியாளர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘ஒருவேளை ரெண்டுங்கெட்டானா’ இருந்தா?’ என்று  பொன்னம்பலம் உளறிக் கொட்டியது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.. 

சமீபத்தில்தான் நடிகை கஸ்தூரி இது போன்றதொரு சர்ச்சையில் மாட்டிக் கொண்டிருக்கிறார். சற்று பிரபலமாக இருக்கிறவர்களுக்கு கூட சமூகப் பொறுப்பும், பொது உரையாடல்களில் அதிக கவனமும் இருக்க வேண்டும். மாற்றுப்பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் அவலங்களையும் அதற்குப் பின்னுள்ள வலியையும் இது போன்ற விஷயங்களை கவனமாக கையாள வேண்டிய நுண்ணுணர்வையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அதிலும் பிக்பாஸ் போன்ற கண்காணிப்பு குடிலுக்குள் இன்னமும் கவனமாக இருக்க வேண்டும். காமிராக்களை மறந்து முதல்நாளே உளறிக் கொட்டுவது அபாயமானது.  


 

சீஸன் ஒன்றில் இருந்த கஞ்சா கருப்புவின் நடவடிக்கைகளை சென்றாயன் நினைவுப்படுத்துகிறார். உற்சாகமாக இயங்கும் அதே சமயத்தில் ஏடாகூடாக சிலவற்றை பேசி விடுகிறார். ஏறத்தாழ பொன்னம்பலமும் அப்படியே. 

‘வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களிடம் ‘flirt’ செய்ய தன் பெண் தோழியிடம் முன்கூட்டிய அனுமதி வாங்கியிருப்பதாக சொல்லும் மஹத், ஆரவ்வின் வாரிசாக இருப்பாரா? ம்ஹூம். அவரைப் பார்த்தால் ‘இந்த வேலைக்கு சரிப்பட்டு வரமாட்டார்’ என்றே தோன்றுகிறது. ஷாரிக் ஹாஸனுக்கு வேண்டுமானால் இந்த அதிர்ஷ்டம் வாய்க்கலாம். 

எத்தனை சாமர்த்தியமாக இருக்க முயன்றாலும் தன் மனைவி நித்யா வீட்டினுள் நுழைந்தபோது ‘ஜெர்க்’ ஆனதை பாலாஜியால் தவிர்க்க முடியவில்லை. வையாபுரியின் இடத்தை இவர் பிடிப்பார் என்று தெரிகிறது. தம்பதிகளுக்குள் சண்டை நிகழாமல் இருக்கட்டும். ஜனனி, பிந்து மாதவியின் ரோலை செய்யக்கூடும். 

நித்யா, வைஷ்ணவி, மமதி ஆகியோர் ஜாக்கிரதையான போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று கணிக்க முடிகிறது. அதிக நாள்களை இவர்கள் கடக்கக்கூடும். காயத்ரியின் இடத்தை இவர்கள் பங்கு போடவும் கூடும். 

எல்லாம் இருக்கட்டும். ஓவியாவாக எவர் இருப்பார்?. மில்லியன் டாலர் கேள்வி இது. எவருக்குமே அந்த சான்ஸ் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

பிக் பாஸ் போட்டியாளர்களின் முழு விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism