Published:Updated:

``வாய்ஸ் அகாடமி, லைஃப் கோச், காஸ்டியூம் பிரியர்... அனந்த் வைத்தியநாதன் யார்?" #BiggBossTamil2

அய்யனார் ராஜன்

பிக் பாஸ் சீஸன் 2 போட்டியாளர்களின் ஒருவரான அனந்த் வைத்தியநாதன் பற்றிய குறிப்பு.

``வாய்ஸ் அகாடமி, லைஃப் கோச், காஸ்டியூம் பிரியர்... அனந்த் வைத்தியநாதன் யார்?"  #BiggBossTamil2
``வாய்ஸ் அகாடமி, லைஃப் கோச், காஸ்டியூம் பிரியர்... அனந்த் வைத்தியநாதன் யார்?" #BiggBossTamil2

`பிக் பாஸ் 2' வீட்டுக்குள் நுழைந்திருக்கும் 16 போட்டியாளர்களில் வயதில் மிகவும் மூத்தவர், அனந்த் வைத்தியநாதன். `சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடும் பாடகர்களுக்குக் குரல் பயிற்சி தருவதற்காக மும்பையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த இந்த `வாய்ஸ் எக்ஸ்பர்ட்' அப்படியே இங்கு செட்டில் ஆகிவிட்டார். தற்போது கோவை, திருப்பூர், பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட சில இடங்களில் `வாய்ஸ் அகாடமி' தொடங்கி, பாடுவதில் ஆர்வமுள்ளவர்களுக்குக் குரல் பயிற்சிகளைத் தந்து வருகிறார்.

`பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து இவர் கமலிடம் பேசுகையில், `எனக்கும் பல முகமூடிகள் இருந்தன. அவற்றில் ஒன்று கிழிந்தபோது உறவை இழந்தேன். அதிலிருந்து பலவற்றைத் தவிர்க்கத் தொடங்கினேன். ஆனால், இப்படித் தவிர்ப்பதன் மூலம் மனதை பேலன்ஸ் செய்யமுடியாது என்பது புரிந்தது. எனவே, பயப்படுவதற்குப் பதில் அதைக் கடக்க முடிவு செய்திருக்கிறேன்' என்றார். தவிர, `இப்போது எனக்கு ஜோடி இல்லை!' என்றவுடன், பலமாகச் சிரித்த கமல், `லக்கி மேன்' என வாழ்த்தினார். 

`சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும் சூழலில் இவர் எப்படி `பிக் பாஸ்' வீட்க்குள் நுழைந்தார், மற்ற இளம் போட்டியாளர்களுடன் இவர் எப்படி மிங்கிள் ஆவார், முகமூடி அது இது என்கிறாரே... அந்த வீட்டுக்குள் இயல்பாக இருப்பாரா இல்லையா... இப்படி எக்கச்சக்க சந்தேகங்கள் ரசிகர்களுக்கு எழுந்திருக்கும். அது சரி, யார் இந்த அனந்த் வைத்தியநாதன்?! விசாரித்தோம். 

``1957-இல் ஜாம்ஷெட்பூரில் பிறந்த அனந்த் வைத்தியநாதனின் பெற்றோர் கர்னாடக இசையில் ஆர்வம் கொண்ட மருத்துவர்கள். சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற அனந்த், பிறகு ஜாம்ஷெட்பூரில் பிசினஸ் மேனேஜ்மென்ட் முடித்திருக்கிறார். இந்துஸ்தானி இசையின் மீது தீவிர ஆர்வம் வர, கொல்கத்தாவில் உள்ள ஐடிசி சங்கீத் ரிசர்ச் அகாடமியில் சேர்ந்தார். 24-வது வயதில் இவருடைய குரலில் பிரச்னை ஏற்பட்டது. எனவே, சிகிச்சைக்காக அயர்லாந்து சென்றார். சிகிச்சைக்குப் பிறகு அங்கேயே குரல் பயிற்சி தருவது குறித்து படிக்கத் தொடங்கியிருக்கிறார். 

அந்தப் படிப்பை முடித்துவிட்டு, மும்பை திரும்பி ஹெச்.எம்.வி உள்ளிட்ட சில இடங்களில் குரல் பயிற்சியாளராகப் பணிபுரிந்தார். இந்தி தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் இவரைப் பார்த்தது `சூப்பர் சிங்கர்' குழு. அதன் பிறகு அதே நிகழ்ச்சிக்காக 2006-இல் இவரை அழைத்து வந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்குப் பயிற்சி தருவதற்காக வந்தவர், அப்படியே இங்கே தங்கிவிட்டார்'' என்கிறார்கள், அனந்த் வைத்தியநாதனுக்கு நெருக்கமான சிலர். 

`அவன் இவன்' படத்தில் நடித்த அனந்த் வைத்தியநாதன், `இந்த ஒரு படத்துடன் சினிமா அனுபவம் போதும்' எனச் சொல்லிவிட்டாராம். திருமண வாழ்வைத் தவிர்த்து வாழ்ந்து வரும் அனந்த் வைத்தியநாதனுக்கு அம்மா இருக்கிறார். தற்போது அவர் புதுச்சேரியில் வசித்து வருகிறார்.

``நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போதே `பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் போய்விட்டாரே?" என `சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியின் இயக்குநர் ரஊஃபாவிடம் கேட்டோம்.

``ஜூலை 15- ம் தேதி `சூப்பர் சிங்கர்' இறுதிப்போட்டி நடக்குது. அதுக்கு முந்தைய ரவுண்டுக்குத் தேவையான பயிற்சிகளைத் தந்துட்டுப் போயிட்டார். அவர் `பிக் பாஸ்'ல ஜெயிச்சா, எங்களுக்கெல்லாம் பெருமையா இருக்கும். பார்க்கலாம்!' என்கிறார்.

`சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியின் போட்டியாளர்களும், அனந்த் வைத்தியநாதனிடம் பயிற்சி எடுத்தவர்களும் சேர்ந்து அவரை `பிக் பாஸ்' வீட்டுக்குள் அனுப்பி வைத்த காட்சி நெகிழ வைத்தது.

பிக் பாஸ் வீட்டுக்குள் முதலில் யாருடனும் அதிகம் பேசாமல் இருந்த அனந்து அடுத்தநாள் பொன்னம்பலம், நித்யா உள்ளிட்டோர் சூழ, `புத்தம் புது காலை' பாடலைப் பாடி மௌனம் கலைக்கத் தொடங்கியிருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் இந்த வண்ண உடைப் பிரியர் எப்படி நூறு நாள்களைக் கடத்துவார் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.