Published:Updated:

``என் மேலயும் அந்த முத்திரையைக் குத்திட்டாங்க!" 'திருமதி செல்வம்' கெளதமி

``என் மேலயும் அந்த முத்திரையைக் குத்திட்டாங்க!" 'திருமதி செல்வம்' கெளதமி
News
``என் மேலயும் அந்த முத்திரையைக் குத்திட்டாங்க!" 'திருமதி செல்வம்' கெளதமி

`` `சீரியல்ல ரொம்ப ஃபேமஸாகிட்டாங்க; அதனால சினிமாவுக்கு செட் ஆக மாட்டாங்க'னு என் மேல முத்திரை குத்திடுறாங்க. இது எனக்கு மட்டுமல்ல, சீரியல்ல ஃபேமஸான பல நடிகர், நடிகைகளுக்கும் இந்தப் பிரச்னை உண்டு."

``சின்ன பிரேக் எடுக்க நினைச்சேன்; எடுத்தேன். அதனால நடுவுல சில மாதங்கள் நடிக்கலை. இப்போ மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சுட்டேன்" என்கிற சின்னத்திரை நடிகை கெளதமி, தன் நடிப்புப் பயணம் குறித்துப் பேசுகிறார்.

``ஆக்டிங்ல பிரேக் எடுக்க என்ன காரணம்?"

``சன் டிவி 'பொன்னூஞ்சல்' சீரியலுக்குப் பிறகு சில சீரியல்கள்ல நடிச்சேன். பிறகு பிரேக் எடுத்துகிட்டேன். அதுக்கு ரெண்டு காரணங்கள். `திருமதி செல்வம்' பாக்கியத்தோட தாக்கம் மக்கள் மனசுல குறையாமல் இருக்குது மற்றும் ஃபேமிலிக்காக. மறுபடியும் நடிக்க முடிவெடுத்தேன். இப்போ `சந்திரலேகா' சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். இனி தொடர்ந்து நடிப்பேன்."

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``திருமதி செல்வம்' சீரியலுக்குப் பிறகு பெரிய ரீச் கிடைக்கலைனு நினைக்கிறீங்களா?"

``ஆமாம். நான் பல படங்கள்ல சின்ன கேரக்டர்கள்ல நடிச்சிருந்தாலும், சீரியல் மூலம்தான் எனக்கு அடையாளம் கிடைச்சுது. அதிலும், இப்போ வரை `திருமதி செல்வம்'ல நடிச்ச என் பாக்கியம் கேரக்டரைதான் எங்க போனாலும் சொல்றாங்க. அதுக்கு முன்னாடியும் பின்னாடியும் நான் நடிச்ச சீரியல்களோட பேரை மக்கள் சொல்றதில்லை. அதனால், எனக்கு வருத்தம் இருக்குது.''

`` `திருமதி செல்வம்' நடிப்பில் மறக்க முடியாத சில மெமரீஸ் பற்றி..."

``முதல்ல பாக்கியம் கேரக்டர்ல வத்சலா மேடம் நடிச்சுக்கிட்டிருந்தாங்க. நூறு எபிசோடுகள் கடந்த நிலையில அவங்க வெளிநாட்டுக்கு ஷிஃப்ட் ஆகிட்டாங்க. அதனால, அவங்களுக்கு பதிலா அந்த கேரக்டர்ல நான் கமிட் ஆனேன். போகப் போக என்னோட கேரக்டர் ரொம்ப நெகட்டிவா மாறிடுச்சு. நான் எதிர்பார்க்காத வகையில அந்த கேரக்டருக்குப் பெரிய வரவேற்பு கிடைச்சுது. சீரியஸான டயலாக் பேசுறப்போ, திடீர்னு யாராச்சும் சிரிச்சுடுவோம். அதில் என் கணவரா நடிச்ச ஜெயமணி சார்கூட, `சுந்தரி நீயும்' பாட்டுக்கு டான்ஸ் ஆடினது மறக்க முடியாதது. சிரிப்பை அடக்க முடியாம ரொம்பச் சிரமப்பட்டேன். ஒருமுறை அர்ச்சனா ரோல்ல நடிச்ச அபிதாகூட நான் சண்டைப் போடுற மாதிரி ஒரு காட்சி. அப்போ அவங்க சீரியல் கதைப்படியும், நிஜத்துலயும் கர்ப்பமா இருந்தாங்க. `உன் கர்ப்பம் தங்காது; அந்தக் குழந்தை தங்காது'னு சொல்லி மண்ணைத் தூற்றிப் போட்டுச் சாபம் விடுற மாதிரி நடிக்க ரொம்பவே தயங்கினேன். அப்புறம் நடிப்புதானேனு எல்லோரும் சம்மதிச்சு நடிச்சோம். இப்போ அந்த சீரியல் டீம் நபர்களை ரொம்ப மிஸ் பண்றேன். நாங்க நேர்ல பார்த்து மீட் பண்றதில்லை. ஆனா, போன்ல பேசிப்போம்." 

``அப்போ ஆடியன்ஸ்கிட்ட திட்டு வாங்கினீங்களா?"

``ஒண்ணா... ரெண்டா...! அந்த சீரியல் ஒளிபரப்பாகிட்டு இருந்தப்போ, தமிழ்நாட்டுல நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னைத் திட்டினவங்க ரொம்பவே அதிகம். எங்க போனாலும் என்னை அடிக்க வராத குறைதான். அப்போ டப்பிங் பேசப்போகும்போது ஸ்கூட்டியிலதான் போவேன். ரோட்டிலேயோ அல்லது சிக்னல்லயோ என்னை அடையாளம் கண்டுபிடிச்சுத் துரத்திவந்து பலர் திட்டிட்டுப்போயிருக்காங்க. பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்கு ஒருமுறை போயிருந்தேன். அங்க ஒரு பெரியவர், `ஏன் பாக்கியம் இப்படிப் பண்றேன்னு' சொல்லி என்னை அடிக்க கையோங்கினார். எப்படியோ தப்பிச்சுட்டேன். இப்படிப் பல நிகழ்வுகள் நடந்திருக்கு. அப்போதெல்லாம், என் நடிப்பை நினைச்சுப் பெருமைப்பட்டுக்குவேன்." 

``சினிமா வாய்ப்புகளைப் பற்றி..."

``சில படங்கள்ல நடிச்சிருக்கேன். அப்படி, `நகரம்' படத்துல வடிவேலு சார்கூட நடிச்சது நல்ல அனுபவம். அடுத்து `கலகலப்பு 2' படமும் ஓரளவுக்கு அடையாளம் கொடுத்துச்சு. `சீரியல்ல ரொம்ப ஃபேமஸாகிட்டாங்க; அதனால சினிமாவுக்கு செட் ஆக மாட்டாங்க'னு என் மேல முத்திரை குத்திடுறாங்க. இது எனக்கு மட்டுமல்ல, சீரியல்ல ஃபேமஸான பல நடிகர், நடிகைகளுக்கும் இந்தப் பிரச்னை உண்டு. இதனால் நிறைய சீரியல் ஆர்டிஸ்டுகளுக்கு சினிமா வாய்ப்புகள் சரியா வர்றதில்லை. ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல நடிச்சு தொடர்ந்து மக்கள் மனசுல இடம்பிடிக்கிற எங்களுக்கு சினிமாவுல நடிக்க முடியாதா? அதை நினைக்கும்போதுதான் வருத்தமா இருக்கும். சீரியல்லதான் முதல்ல நடிக்கத் தொடங்கினேன். அப்புறம், மேடை நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சு, இப்போ வரை நாடகங்கள்லயும் நடிச்சுகிட்டுதான் இருக்கேன்."