Published:Updated:

``இப்போவே அம்மா கதாபாத்திரத்தில் என்னால நடிக்க முடியாதுங்க..!" -' Mr&Mrs கில்லாடிஸ்' ஜெனிஃபர்

வெ.வித்யா காயத்ரி

பாரதிராஜா சாருடைய `ஈர நிலம்' படத்துக்கு நிறைய பேர் ஆடிஷனுக்குப் போயிருக்காங்க. என் புகைப்படம் பார்த்துட்டு அந்தப் படத்துல நடிக்க என்னைக் கூப்பிட்டாங்க. அவருடைய படத்துல நடிக்கிறதே மிகப்பெரிய அங்கீகாரம். அந்தப் படம் நடிக்கும்போதுதான் எனக்கு `நந்திதா'ன்னு பெயர் வைச்சார்.

``இப்போவே அம்மா கதாபாத்திரத்தில் என்னால நடிக்க முடியாதுங்க..!" -' Mr&Mrs கில்லாடிஸ்' ஜெனிஃபர்
``இப்போவே அம்மா கதாபாத்திரத்தில் என்னால நடிக்க முடியாதுங்க..!" -' Mr&Mrs கில்லாடிஸ்' ஜெனிஃபர்

ளம் வயதிலேயே மீடியாவில் நுழைந்தவர் ஜெனிஃபர். நடிகை, டான்ஸர்.. எனப் பன்முகம் கொண்டவர். தமிழ்த் திரைப்பட உலகில் `நந்திதா'வாக அறியப்பட்டவர். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ' Mr&Mrs கில்லாடிஸ்' நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் பங்கேற்றுள்ளார். அவருடன் ஒரு ஜாலி கேலி இன்டர்வியூவைத் தொடர்வதற்கு முன்னர் அவரைப் பற்றிய குட்டி பயோ.

பெயர்: ஜெனிஃபர்

அறிமுகமான படம்: காதல் ஜாதி

நடிப்பைத் தவிர்த்து: கோரியோகிராஃபர்

ஃபேமிலி: காதல் கணவர், சேட்டைக்காரப் பையன்

எதிர்காலத் திட்டம்: தொடர்ந்து நடிக்கணும். அதே சமயம் டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிக்கணும்.

"என்னுடைய சின்ன வயசுலேயே மீடியா எனக்கு அறிமுகமாகிடுச்சு. அப்பா கோரியோகிராஃபர் என்பதால அவர் கூட ஷூட்டிங் ஸ்பார்ட்டுக்குப் போவேன். அப்பாவுக்கு நான்தான் அசிஸ்டென்ட் கோரியோகிராஃபரா இருந்தேன். டான்ஸ் என் பேஷனாக ஆரம்பிச்சது. கஸ்தூரி ராஜா அங்கிள்கூட அப்பா வொர்க் பண்ணிருக்கார். அப்பாகூட நானும் போகும்போது என்னைப் பார்த்துட்டு அவர் படத்துக்கு `14 வயதுப் பெண் தேவை.. உங்கப் பொண்ணை நடிக்க வைக்கலாமா'னு கேட்டார். அப்பா என்கிட்ட விருப்பம் இருக்கான்னு கேட்டாங்க. எனக்கும் பிடிச்சிருந்தது அப்படித்தான் `காதல் ஜாதி' படம் மூலமா என் திரைப் பயணம் ஆரம்பிச்சது.

அந்தப் படத்துக்கு அப்புறம் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைச்சது. என் பள்ளிப்படிப்பை நிறுத்திட்டு நடிப்பிலும், நடனத்திலும் கவனம் செலுத்தினேன். பாரதிராஜா சாருடைய `ஈர நிலம்' படத்துக்கு நிறைய பேர் ஆடிஷனுக்குப் போயிருக்காங்க. என் புகைப்படம் பார்த்துட்டு அந்தப் படத்துல நடிக்க என்னைக் கூப்பிட்டாங்க. அவருடைய படத்துல நடிக்கிறதே மிகப்பெரிய அங்கீகாரம். அந்தப் படம் நடிக்கும்போது தான் எனக்கு `நந்திதா'ன்னு பெயர் வெச்சார். அந்தப் பெயர் எனக்கு சென்டிமென்ட்டா செட்டாகலை. அதனால, இப்போ என் நிஜப் பெயர் ஜெனிஃபரைத்தான் பயன்படுத்துறேன். பாரதிராஜா சாரைப் பார்த்து நிறைய பேர் பயப்படுவாங்க. அவர் திட்டுவார், அடிப்பார்னுலாம் சொல்லுவாங்க. ஆனா, அவர் ரொம்ப ஸ்வீட். அவர் நடிச்சிக்காட்டுற மாதிரியே நடிச்சிருவேன். ஷூட்டிங் ஸ்பார்ட்டில் சாக்லேட்லாம் வாங்கிக் கொடுப்பார்" என்றவரிடம் அவரது காதல் திருமணம் குறித்துக் கேட்டதும் தொடர்ந்தார்.

"நான் ஒரு சோசியல் அவேர்னஸ் ஃபிலிமில் நடிச்சேன். அங்கேதான் காசி விஸ்வநாதன் எனக்கு அறிமுகமானார். அவர் யு.கே.செந்தில்குமார் சாரிடம் அசிஸ்டென்ட் கேமராமேனாக இருந்தார். அவருக்கு என்னைப் பிடிச்சிருக்குனு சொன்னார். எனக்கும் அவரைப் பிடிச்சிருந்தது. வீட்டில் பேசி பெற்றோர்கள் சம்மதத்துடன் என் பத்தொன்பதாவது வயசில் எனக்குத் திருமணம் நடந்துச்சு. இப்போ வரைக்கும் குறையாத காதலோடும், புரிதல்களோடும் பயணிக்கிறோம். எங்களுக்கு ஒரு பையன். ஆறாம் வகுப்பு படிக்கிறார். என் கணவர்தான் என் தைரியம். இந்த விஷயம் பண்ணு; இதைப் பண்ணாதேன்னு பல விஷயங்களில் ஆலோசனை கூறுவார்" என்றவரிடம் இப்போது தமிழ்ப் படங்களில் அதிகமாக உங்களை பார்க்க முடிவதில்லையே என்கிற கேள்வியை முன்வைத்தோம்.

"திருமணமானால் ஹீரோயின் நடிக்க மாட்டாங்கன்னு அவங்களாகவே தீர்மானிக்கிறது தவறான விஷயம். திருமணம் முடிந்தும் தொடர்ந்து நடிச்சிட்டுதான் இருக்கேன். இப்போ கூட இரண்டு படங்களில் நடிச்சிருக்கேன். எனக்குக் குழந்தை பிறந்தாலும், முன்னாடி எப்படி இருந்தேனோ அப்படியேதான் இருக்கேன். புதுசா வருகிற இயக்குநர்கள் அம்மா கதாபாத்திரம், அக்கா கதாபாத்திரத்துக்கு நடிக்கக் கூப்பிட்டா எப்படி நடிக்க முடியும்..? எனக்கு அவ்வளவு வயசுலாம் ஆகல. என் மேல நம்பிக்கை வெச்சி என்னைத் தேடி வருகிற வாய்ப்புகளை நான் நிராகரிக்கிறது இல்ல. இரண்டு படங்களுக்கு கோரியோகிராஃபி கூட பண்ணிருக்கேன் என்றவரிடம் ' Mr&Mrs கில்லாடிஸ்' நிகழ்ச்சி குறித்து கேட்டோம்.

இப்போ நிறைய பேர் ரியாலிட்டி ஷோக்களை விரும்புறாங்க. என் கணவரை ஸ்கிரீனுக்குப் பின்னாடிதான் பலருக்குத் தெரியும். அவரை இப்போ ஸ்கிரீன்ல அறிமுகப்படுத்தியது இந்த நிகழ்ச்சிதான். இதுக்கு முன்னாடி இந்த மாதிரியான அட்வென்சர்ஸை டிரை பண்ணினது கிடையாது. எனக்கு உயரம்னா பயம். இப்போ எல்லாத்தையும் சந்திக்கிற அளவுக்குத் தைரியம் வந்துடுச்சு. நான் ரொம்ப பாசிட்டிவான பர்சன் சொல்லப்போனா அதுதான் என் பியூட்டி சீக்ரெட்" என்றவரிடம், `நீளமான முடியை எப்படிப் பராமரிக்குறீங்க' என்றதும் சிரிக்கிறார்.

``எந்தவித கெமிக்கலையும் என் முடிக்குப் பயன்படுத்த மாட்டேன். இயற்கையான முறையில்தான் முடியைப் பராமரிப்பேன். வாரத்துக்கு மூன்று முறை வெங்காய ஜூஸ் போட்டு முடி அலசுவேன். இயற்கையாக இருக்கிறதுனால தலை முடியும் செழிப்பா வளருது" என்கிறார், ஜெனிஃபர்.