Published:Updated:

பிக் பாஸ் ஷுட்டிங்... ஃபெப்சி பஞ்சாயத்து... முற்றுகையும் தீர்வும்!

பிக் பாஸ் ஷுட்டிங்... ஃபெப்சி பஞ்சாயத்து...  முற்றுகையும் தீர்வும்!
News
பிக் பாஸ் ஷுட்டிங்... ஃபெப்சி பஞ்சாயத்து... முற்றுகையும் தீர்வும்!

முடிவுக்கு வந்ததா பிக் பாஸ் - பெப்சி இடையிலான பிரச்னை?!

டிவி, மொபைல் என எந்தத் தொடர்பும் இல்லாமல், நூறு நாள்கள் ஒரே வீட்டுக்குள் தங்கியிருக்கிற அந்தப் பதினாறு நபர்களுக்கிடையே பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருந்த பிக் பாஸே பாதுகாப்பு கேட்டு கோர்ட்டுக்கு வந்ததுதான், சின்னத்திரை ஏரியாவின் இந்தவார பரபரப்பு. ஒருபுறம், 'பிக் பாஸ் - ஃபெப்சி' இடையிலான பிரச்னை சுமூகமாக முடிவுக்கு வந்துவிட்டது' எனச் சொன்னாலும், சத்தமில்லாமல் விவகாரத்தை நீதிமன்றத்திற்கும் கொண்டு சென்றிருக்கிறது, பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தயாரிக்கும் எண்டமால் நிறுவனம்.

ஃபெப்சி - பிக் பாஸ் இடையே உண்மையிலேயே என்ன பிரச்னை?  இந்தக் கேள்விக்கு 'ஃபெப்சி' அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறிய பதில்...

''சீரியலோ, ரியாலிட்டி நிகழ்ச்சியோ... தமிழ் சேனல்கள்ல ஒளிபரப்பாகிறப்போ, அதற்கான படப்பிடிப்பில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமான 'ஃபெப்சி'யில் உறுப்பினர்களாக இருப்பவர்களை கணிசமாகப் பயன்படுத்தி, அவங்களுக்கு வேலை தரணும். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்துல இதை வலியுறுத்தி ஒரு ஒப்பந்தம் இருக்கு. எண்டமால் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க இப்போ தமிழ் தொலைக்காட்சித் தயாரிப்பாளர் சங்கத்துல உறுப்பினர். அப்போ, ஒப்பந்தத்தை மதித்து அதுக்கு ஏத்தபடி 'பிக் பாஸ்' ஷூட்டிங்கில் ஃபெப்சி ஆட்களுக்கு வேலை கொடுங்கனு நாங்க கேட்கிறோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த சீஸன்ல 'இது வித்தியாசமான செட்அப், தமிழ்நாட்டுல உள்ள டெக்னீஷியன்களுக்குப் புடிபடாது'னு சொல்லி, ஐம்பது சதவிகிதம் வரை ஃபெப்சி உறுப்பினர்களைப் பயன்படுத்தினாங்க. நாங்களும் அதுக்கு சம்மதிச்சோம். அடுத்தடுத்த சீஸன்கள்ல ஃபெப்சி உறுப்பினர்களுக்கு வாய்ப்பு தர்றதா அன்னைக்கு வாய் வார்த்தைகள்ல சொன்னதை, நாங்களும் நம்பினோம்.

இரண்டாவது சீஸன் தொடங்கியது. வேலை கிடைக்கும்னு நம்பிய ஃபெப்சி உறுப்பினர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த சீஸன் போலவே இந்த வருடமும் எல்லா டெக்னீஷியன்களுமே மும்பையிலிருந்து வந்திருந்தாங்க. 'போனா போகுது'னு பத்து சதவிகிதம் பேர் இங்கே இருக்கிறவங்களைக் கூப்பிட்டாங்க. 'இது முறையில்ல; சரி பண்ணுங்க'னு ஆரம்பத்துலேயே சொன்னோம். அவங்க சரியான பதிலை தராததுனாலதான், இந்த விஷயத்தை நாங்க சீரியஸா அணுகவேண்டிதா போச்சு. 

கடைசியா இப்போ தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கம், என்டமால், ஃபெப்சி... மூணு தரப்பும் பேசியதுல ஒரு உடன்பாடு ஏற்பட்டிருக்கு. என்டமால் நிறுவனம், சமரசத்துக்கு உடன்பட்டு ஒப்பந்தத்துல கையெழுத்து போட்டுட்டதுனால இந்த விவகாரம் இதோட முடிவுக்கு வந்திடுச்சு!'' என்றார்.

முன்னதாக ஜூன் 30-ஆம் தேதிக்குள் தங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், இப்போது 'பிக் பாஸ்' படப்பிடிப்பில் பணி புரிந்துகொண்டிருக்கிற ஃபெப்சி தொழிலாளர்கள் அடுத்தநாள் முதல் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளமாட்டார்கள் என அறிவித்திருந்தார், செல்வமணி.

இன்னொருபுறம், ஃபெப்சி உறுப்பினர்கள் பிக் பாஸ் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு எதிரே தர்ணா நடத்தும் திட்டமும் இருப்பதாக செய்திகள் வந்தன. "தர்ணா என்பதுபோல் கிளம்பிய தகவல்களால்தான், எண்டமால் நிறுவனம் நீதிமன்றத்தை நாடி, 'பிக் பாஸ் ஷூட்டிங்கிற்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது' என்கிற உத்தரவைப் பெற்றிருக்கிறது" என்கிறார்கள், இந்த விவகாரத்தைத் தொடர்ந்து கவனித்து வருகிறவர்கள்.

ஆரம்பத்திலிருந்து இந்தப் பிரச்னையில் சமரசத்துக்கு முயற்சி செய்த தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் குஷ்புவிடம் பேசியபோது, "கமல் சார்கிட்ட டிஸ்கஸ் பண்ணதுல பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது" என்றார். எண்டமால் நிறுவனம் இந்த விவகாரத்தைக் கோர்ட்டுக்குக் கொண்டுபோனது குறித்த கேள்விக்கு, "நீங்க எண்டமால் நிறுவனத்தைத்தான் கேட்கவேண்டும்" என்பது, குஷ்புவின் பதில். 

விஜய் டிவி தரப்பிலோ, "இந்த விவகாரத்தில் சேனல் தரப்பு கருத்து என எதையும் சொல்வதற்கில்லை" என மறுத்துவிட்டார்கள்.

ஃபெப்சியின் உறுப்பினர் என்ற முறையில், கமலும் ஷூட்டிங்கைப் புறக்கணிப்பார் என நம்புவதாக ஆர்.கே.செல்வமனி சொல்லியிருந்த நிலையில், கமலின் கருத்தை அறிய தொடர்புகொன்டோம். "பிரச்னை தீர்ந்துவிட்டதுனு சொல்லித்தான் இந்தவார ஷூட்டிங்கிற்குக் கூப்பிட்டாங்க. இப்போ ஷூட்டிங் சுமூகமா போயிட்டிருக்கு" என்றார், கமலின் உதவியாளர்.

"இதை சட்டபூர்வமாக அணுகுகிறோம். ஷூட்டிங் நடத்த யாரும் இடையூறு செய்யக்கூடாது என கோர்ட் ஆர்டர் வாங்கியிருக்கிறோம். அதேநேரம், சுமூகமான உடன்பாடும் ஆகிட்டதுனால இனி ஷூட்டிங் நடத்த எந்தப் பிரச்னையும் இருக்காது" என்கிறார்கள், எண்டமால் தரப்பினர்.

இந்த பிரச்னை தொடர்பாக, தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் குஷ்பு மற்றும் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி இன்று கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது "ஃபெப்சிக்கும் - எண்டமால் நிறுவனத்தின் பிரதிநிதிக்கும் குஷ்பு முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. இரு தரப்புக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கைப்படி இனி ஃபெப்சி தொழிலாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பணிபுரிவார்கள்." என்றார்கள்.