Published:Updated:

'சூப்பர் சிங்கர்' செட்டில் 'தமிழ்ப்படம்' டீம்... பிரியங்காவை கலாய்த்த ’மிர்ச்சி’ சிவா..! - ஷூட்டிங்ல மீட்டிங் 12

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'சூப்பர் சிங்கர்' செட்டில் 'தமிழ்ப்படம்' டீம்... பிரியங்காவை கலாய்த்த ’மிர்ச்சி’ சிவா..! - ஷூட்டிங்ல மீட்டிங் 12
'சூப்பர் சிங்கர்' செட்டில் 'தமிழ்ப்படம்' டீம்... பிரியங்காவை கலாய்த்த ’மிர்ச்சி’ சிவா..! - ஷூட்டிங்ல மீட்டிங் 12

சூப்பர் சிங்கர் ஷூட்டிங் ஸ்பாட் அரட்டை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

’ நைன் டு நைன் சீரியல் ஸ்பாட் போல கிடையாது எங்களோடது. அங்கெல்லாம் பிரேக் விட்டாதான் ஜாலி, கேலி, கொண்டாட்டம். மத்த நேரத்துல கிளிசரினும் கையுமா திரிவாய்ங்க. எங்க ஏரியாவோ எனி டைம் ஃபன்தான். எங்க கூடெல்லாம் மீட்டிங் போட மாட்டீங்களா?’ - ரியாலிட்டி ஷோ ஆங்கர்கள் நம்மிடம் வைத்த இந்த வேண்டுகோளை ஏற்றோம். இந்த வார 'ஷூட்டிங் மீட்டிங்' பாயின்ட், பிரசாத் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டுள்ள 'சூப்பர் சிங்கர்' செட். நேரலையாக ஒளிபரப்பாக இருக்கும் இறுதிச்சுற்றுக்கு இன்னும் சில நாள்களே இருக்கிற நிலையில், பரபரப்பில் இருந்தார்கள் டாப் 6 போட்டியாளர்கள். தொகுப்பாளர்கள் பிரியங்கா, மா கா பா ஆனந்த் இருவரும் நடிகர் மிர்ச்சி சிவாவைக் கலாய்க்க, அவரோ, 'நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்' என பதிலுக்கு இருவரையும் வச்சு செய்துகொண்டிருந்தார்.

'சிவா' எப்படி இங்க?' என ஷோ இயக்குநர் ரஊஃபாவிடம் கேட்க, ‘’இது செலிப்ரேஷன் எபிசோடு. சிவா இன்னைக்கு எங்க கெஸ்ட். அவர், முன்னாடி ஃபைனலுக்குத் தேர்வானவங்க, அவங்க ஃப்ரெண்டு ஒருத்தரோட சேர்ந்து பாடுவாங்க' என்றார் .

'பாடுறதெல்லாம்தான் டி.வி-யில பார்க்குறோமே, 'உங்க ஷூட்டிங் ஸ்பாட் எப்படி இருக்கும்' என சக்தி அமரனிடமிருந்து தொடங்கினோம். ''என்ஜினீயரிங்கை பாதியில விட்டுட்டு மியூசிக்ல சாதிக்கணும்னு சேலத்துல இருந்து சென்னைக்கு வந்தேன். 'சூப்பர் சிங்கர்' மூணாவது சீசன்லதான் போட்டியாளரா அறிமுகமானேன். அப்ப ஷோ ஆங்கரிங் பண்ணியது சிவகார்த்திகேயன். அந்த சீசன்ல டாப் 10 போட்டியாளர்கள்ல ஒருத்தாரா இருந்தேன். சிவா அண்ணன் அந்த டைம் நல்ல தொடர்புல இருந்தார். ஆறாவது சீசன்ல நான் ரீ என்ட்ரி ஆனப்ப, சிவா அண்ணன் முன்னணி நடிகர். இந்த சீசன்லயும் அவரை மீட் பண்ணின அந்த நாள் வந்தது. கெஸ்ட்டா எங்க செட்டுக்கு வந்தார். அவர் முன்னாடி நான் பாடவேண்டிய நேரம். பாட்டை நானே எழுதியிருந்தேன். நான் பாடினப்போ, அதை ரசிச்சுச் சிரிச்சார். 

இங்க, எங்களை எனர்ஜெடிக்கா வைக்கிறதுல ஆங்கர்கள் ரெண்டு பேருக்குமே அவ்வளவு பங்கு இருக்கு. அவங்களோட டைமிங் பேச்சுல ஆடியன்ஸ், ஜட்ஜ், ஏன் மொத்த யூனிட்டுமே அதிர்ந்து சிரிக்கும்'' என்கிறார் சக்தி அமரன்.

பிசியான ஷூட்டுக்கு இடையிடையே கிடைத்த கேப்பில் பிரியங்காவிடம் பேசினோம்.

''வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவோம். சில நாள் வர்ற கெஸ்ட்டே 'ஏம்மா மியூசிக் பத்தி உனக்கு எதுனாச்சும் தெரியுமா'ன்னெல்லாம் கேட்பாங்க. சமயத்துல நான் சொல்ற பதிலே தெறிக்க விட, அதையே சேனல்ல ப்ரமோவா போட்டு விட்டுடுவாங்க. நான் மட்டும் ஸ்கோர் செய்யணும்னு நினைச்சா விடுவாரா மா கா பா? அவரும் எடுத்து விடுவார். ரெண்டு பேரும் இப்படி மாத்தி மாத்தி போட்டி போட்டாலும், ஷோ உருப்படியா போயிட்டிருக்கிறதால தப்பிச்சிட்டு வர்றோம்’' என்றவரிடம், 'சூப்பர் சிங்க'ரில் மறக்க முடியாத அனுபவம் இருக்கா' என்றோம்.

’’எல்லாரும் டி.வி-யில பார்த்திருப்பீங்களே, 'காற்று வெளியிடை' பட யூனிட் வந்திருந்த அந்த நாள். ஏப்ரல் ஃபூல்' பண்ண ப்ளான் பண்ணி, ஸ்டேஜ்ல விழுந்து அடி படுற மாதிரி நடிச்சு, எல்லாரையும் ஒரு செகண்ட் ஆடிப் போக வச்சேனே... மா கா பா ஓடி வந்து என் காலையெல்லாம் பிடிச்சு விட்டாரே... அந்த நாளை எப்படி மறக்க முடியும்?’’ என பிரியங்கா பேசிக்கொண்டிருந்தபோதே, எதிர்ப்புற மேடையில் அமர்ந்திருந்த 'மிர்ச்சி' சிவா, இன்னொரு போட்டியாளர் ஶ்ரீகாந்த் ஹரிஹரனின் குரலை பிரியங்காவின் குரலோடு ஒப்பிட்டு காமெடி செய்துகொண்டிருந்தார்.

’'இப்படி ஆளாளுக்கு என்னை வச்சு செஞ்சிட்டிருந்தீங்கன்னா, ஒருநாள் எல்லாரும் வருத்தப்படுவீங்க. அந்த நாள் இந்த பிரியங்கா சூப்பர் சிங்கரை விட்டு வெளியேறுகிற நாளா இருக்கும்’' எனப் பொய்க் கோபம் காட்டியது பொண்ணு.

மா கா பா ஆனந்த் மிர்ச்சி சிவாவைப் பாடச் சொல்லிக் கேட்க, 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' எனப் பாடினார் சிவா. நடுவர்கள் அனுராதா ஶ்ரீராம், உன்னி கிருஷ்ணன், பென்னி தயாள் மூவரும் எழுந்து நின்று ஆரவாரம் செய்தார்கள்.

அடுத்து, ஶ்ரீகாந்த் ஹரிஹரனிடம் பேசினோம்.

’'செலிப்ரேஷன் எபிசோடுங்கிறதால இன்னைக்கு ஜாலியா போயிட்டிருக்கு. ஆனா, எங்க எல்லாருக்கும் ஒரு வருத்தம் இருக்கு. இத்தனை நாளும் எங்களோட இருந்த அனந்த் சார் ஃபைனல் சமயத்துல எங்களோட இருக்காம 'பிக் பாஸ்' வீட்டுக்குப் போயிட்டாரேங்கிறதுதான் அந்த வருத்தம். நாங்க அவரை ரொம்பவே மிஸ் பண்றோம்' என்ற ஸ்ரீகாந்தைத் தொடர்ந்து, மாளவிகாவிடம் பேசினோம்.

'' 'அனந்த் ஆர்மி'னு 'சூப்பர் சிங்கர்' போட்டியாளர்கள், பார்வையாளர்கள்லாம் சேர்ந்து உருவாக்கியிருக்கோம். அவர் அந்த வீட்டுக்குள்ள தனியா ஃபீல் பண்றதா நான் நினைக்கலை. 'சூப்பர் சிங்கர்' போட்டியாளர்கள் எல்லாருமே வயசுல சின்னப் பசங்கதானே. எங்களோட பழகின அனுபவம் அவருக்கு இருக்கே. அதனால, அவர் 'பிக் பாஸ்' டைட்டில் வாங்கினாக்கூட ஆச்சர்யப் படத் தேவையில்லை'’ என்றார் மாளவிகா.

'அவர் டைட்டில் வாங்கட்டும், உங்கள்ல யாரு டைட்டில் வாங்கப் போறீங்க?' என இடையில் புகுந்த மா கா பா., 'ஆர்மி இங்க போருக்குத் தயாரான நேரம் பார்த்து தளபதியை 'பிக் பாஸ்' கூட்டிட்டுப் போயிட்டார்' எனப் பன்ச் விட்டார்.

அனிருத், ரக்‌ஷிதா இருவரும் பாடத் தயாராகிக்கொண்டிருக்க, இன்னொருபுறம் 'சூப்பர் சிங்க'ரின் ஸ்டார் போட்டியாளர்களான செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி ஜோடி ஏதோ கிசுகிசுத்துக்கொண்டிருந்தார்கள். ஜோடியை ஓரங்கட்டினோம்.

’'ஆமாங்க, பேசிட்டே இருக்கிறது எங்களுக்கு பழகிப்போச்சு. ’கல்யாணம் முடிஞ்சு எத்தனை வருஷமாச்சு? நேத்து கல்யாணமான தம்பதி போல பேசிட்டிருக்கீங்களே'னு சிலர் எங்ககிட்டயே கேட்டிருக்காங்க. எங்களுக்குப் பேச விஷயமிருக்கு பேசறோம்’' என்கிறார் ராஜலட்சுமி.

மாலை சிற்றுண்டிக்குப் பிறகு ஷூட்டிங் தொடர, 'ப்ரோ, நீங்க கிளம்புங்க. இவங்க விடிய விடிய எடுத்திட்டிருப்பாங்க' என்றார் மா கா பா.

டைட்டில் வெல்ல அனைவரையும் வாழ்த்தி விடைபெற்றோம்.

அடுத்த வாரம் வேறொரு 'ஷூட்டிங் மீட்டிங்' ஏரியாவில் சந்திப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு