Published:Updated:

" 'தமிழ்க் கடவுள் முருகன்' சீரியலை தப்புத் தப்பா எடுத்திருந்தாங்க!" - பிரியா

" 'தமிழ்க் கடவுள் முருகன்' சீரியலை தப்புத் தப்பா எடுத்திருந்தாங்க!" - பிரியா
" 'தமிழ்க் கடவுள் முருகன்' சீரியலை தப்புத் தப்பா எடுத்திருந்தாங்க!" - பிரியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த `தமிழ்க் கடவுள் முருகன்' சீரியல் நிறுத்தப்பட்டது குறித்து, அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகள் குறித்தும் பேசியிருக்கிறார். `தமிழ்க் கடவுள் முருகன்' சீரியலில் பார்வதியாக நடித்த பிரியா.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் 2- ம் தேதி `விஜய் டி.வி'யில் ஒளிபரப்பப்பட்ட `தமிழ்க் கடவுள் முருகன்' சீரியல் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பலதரப்பட்ட புரமோஷன்களுடன் வெளியான இந்த சீரியல் தடாலென ஐந்தே மாதத்தில் முடிவடைந்தது. ஏன் இவ்வளவு அவசரமாக சீரியலை முடிக்க வேண்டும்? - வெளிப்படையாகப் பேசுகிறார், அந்த சீரியலில் பார்வதியாக நடித்த பிரியா. 

`` `தமிழ்க் கடவுள் முருகன்' சீரியல் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்ததே?"

``ஆமாம். பெரிய பொருள்செலவில் எடுக்கப்பட்டது அந்த சீரியல். என்னைப் பார்வதியாக நடிக்க அழைத்திருந்தார்கள். எனக்கும் அந்த  கேரக்டர் பிடித்திருந்ததால், உடனே ஓகே சொன்னேன். அதற்கான ரிகர்சல், ஃபோட்டோஷூட் என ஒவ்வொரு நாளும் பிஸியாகவே இருந்தேன். சீரியல் ஆரம்பிக்கப்பட்ட சிலநாள்களில் இன்னும் கொஞ்சம் மெலிந்தால் அந்த கேரக்டருக்குச் சரியாக இருக்கும் என நினைத்ததால், நானே முன்னெடுத்து என் எடையைக் குறைத்தேன்."

`` `தமிழ்க் கடவுள் முருகன்' சீரியல் ஃபெயிலியர் ஆனதுக்குக் காரணமாக நீங்கள் நினைப்பது?"

``நான் இப்போதெல்லாம் உண்மையைப் பேசுறதுக்குப் பயப்படுறதில்ல. தயங்குறதும் இல்ல. வெளிப்படையாகவே சொல்றேன். அந்த சீரியல் நல்லாப் போகாததுக்குப் பல காரணங்கள் சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை அந்தக் கதைக்கான மைத்தாலஜியை (Mythology) மாற்றாமல் எடுத்திருக்கலாமோனு தோணுச்சு. தப்புத் தப்பா எடுத்ததாலதான் சொதப்பிடிச்சுனு நினைக்கிறேன். முக்கியமா, என் கதாபாத்திரத்துக்கான வடிவமைப்பில் சின்னச் சின்ன சறுக்கல்கள். முருகன் குழந்தையாக இருக்கும்போது, பார்வதியை மகிஷாசூரன் வர்ணிக்கிறான். இதுவே தவறானது என்கிறேன். திருமணத்துக்கு முன்புதான் பார்வதியை மகிஷாசூரன் வர்ணிப்பதாகத்தான் கதை... நான் கேள்விப்பட்டவரை, படித்தவரை!. ஆனால், இதில் வேறுமாதிரி காட்டியிருந்தார்கள். என்னைப் பொறுத்தவரை இந்த சீரியல் நல்ல முயற்சிதான். இன்னும் கொஞ்சம் சொதப்பாமல் எடுத்திருக்கலாம்." 

``அந்த சீரியலில் உங்களுடைய உழைப்பு பற்றி?"

``அதைப் பத்தி சொல்லியே ஆகணும். பதினாறு மணி நேரம்கூட தொடர்ந்து வேலை பார்த்திருக்கேன். பழங்கள் மட்டுமெ சாப்பிட்டு உடம்பு வெயிட் போடாம பார்த்துக்கிட்டேன். அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு நடித்த சீரியல் ஹிட் ஆகலனா எனக்கு மட்டுமல்ல, அதில் நடித்த எல்லோருக்குமே கஷ்டமாதானே இருக்கும்." 

``ஃபேஸ்புக் பக்கத்தில் பழைய சேலைகளை ரீ-டிசைன் செய்த படங்களைப் வெளியிட்டிருந்தீங்களே... என்ன ஸ்பெஷல்?"

``அதுவா... நான் `என் பெயர் மீனாட்சி' சீரியல் ஆரம்பித்தபோது ஐம்பதுக்கும் மேற்பட்ட சேலைகளை வாங்கியிருந்தேன். ஒரு கட்டத்தில் அந்தச் சேலைகளை என்ன பண்றதுனு தெரியாம, தெரிஞ்சவங்களுக்கெல்லாம் கொடுத்துட்டேன். கடைசியாகப் பத்துச் சேலைகளை மட்டும் கொடுக்காமல் நானே வெச்சுக்கிட்டேன். சமீபத்தில் அதைப் பார்க்கும்போது `இப்படி வேஸ்டா போகுதே'னு கவலையாக இருந்தது. உடனே, எனக்குத் தெரிந்த பொட்டீக்கில் கொடுத்து ரீ-டிசைன் பண்ணச் சொன்னேன். என் பொண்ணுக்கும், எனக்கும் ஒரே மாதிரியான கவுன்களை டிசைன் பண்ணச் சொன்னேன். இப்படிப் பல சேலைகளை ரீ-மாடலிங் பண்ணி டிசைன்களை சேர்த்து, இப்போ பார்ட்டி வேற  லெவலுக்குக் கொண்டுவந்துட்டேன். மெட்டீரியலுக்குத்தாங்க விலை அதிகம். தையலுக்கு அவ்வளவு செலவாகாது. இப்போ இருக்கும் சூழலில் காசு கொடுத்து வாங்கணும்ங்கிறதெல்லாம் ஆகாத காரியம். ரீ-டிசைன் பண்ணும்போது எப்படிப் பார்த்தாலும் பத்து முறைக்கும் மேல் டிரெயல் பார்ப்பேன்." 

``மறுபடியும் சீரியலில் கமிட் ஆகியிருக்கீங்களா?" 

``இன்னிக்கு இருக்கிற சூழல்ல அடுத்தடுத்து ஓடிக்கிட்டே இருக்கவேண்டியிருக்கே!. பூர்ணிமா பாக்யராஜ் மேடம் இயக்கும் சீரியலில் அவரோட பொண்ணா நடிக்கிறேன். சன் டி.வியில ஒளிபரப்பாகப்போகுதுனு சொன்னாங்க. ஆனால், அது எங்கே எப்போனு தெரியலை. ஆனா, இரண்டு மாதங்களாக ஷூட்டிங் போய்க்கிட்டு இருக்கு. இன்னும் சீரியல் பெயரும், புரமோவும் வரலை. எப்போ ரிலீஸ்னு தெரியலை. தெரிந்ததும் கண்டிப்பாச் சொல்றேன்."

``நடிப்பு தவிர வேறு ஒரு விஷயத்தில் நீங்கள் கவனம் செலுத்துறீங்களாமே?"

``அட ஆமாங்க. இது எப்படித் தெரிஞ்சது?. இன்னும் ஒரு மூன்று மாதத்தில் டயட்டீஷியனாக என்னைப் பார்க்கலாம். இப்போதும் டயட்டீஷியனாகத்தான் இருக்கேன். ஆனால், தொழில் ரீதியாக இன்னும் ஆரம்பிக்கலை. இனி அதைத்தான் செய்யப்போறேன். என்னைப் பொறுத்தவரை எல்லோருமே ஹெல்த்தியா இருக்கணும். அப்படி இருந்தாலே நாம செய்ய நினைப்பதை எந்தத் தடையும் இல்லாமல் செய்யமுடியும். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும். எனக்கு நடிப்பைத் தவிர வேற எதுவும் தெரியாதுனு சொல்ற நிலைக்கு வர்றதுல எனக்கு விருப்பம் இல்லை. அதனாலதான் அப்பப்போ இந்தமாதிரி டயட் விஷயத்திலும் என்னை ஈடுபடுத்திக்கிட்டே இருக்கேன்." 

பின் செல்ல