Published:Updated:

"ஸ்கூல் நிர்வாகம், ஆக்டிங்... சூப்பரான இரட்டை சவாரி!" - ’மெட்டி ஒலி’ அருணா தேவி

கு.ஆனந்தராஜ்

``குழந்தைகளின் சிரிப்பும் சேட்டையும் ரொம்பவே பிடிச்சுப் போச்சு. `நாமும் ஒரு பிளே ஸ்கூல் தொடங்கலாமே’ என நினைச்சேன். அதுக்காக, அட்வான்ஸ்டு டிப்ளோமா கோர்ஸ் படிச்சேன். சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு ஸ்கூல் ஆரம்பிச்சேன். அஞ்சு வருஷமா ஸ்கூல் நல்லாப் போய்ட்டிருக்கு."

"ஸ்கூல் நிர்வாகம், ஆக்டிங்... சூப்பரான இரட்டை சவாரி!" - ’மெட்டி ஒலி’ அருணா தேவி
"ஸ்கூல் நிர்வாகம், ஆக்டிங்... சூப்பரான இரட்டை சவாரி!" - ’மெட்டி ஒலி’ அருணா தேவி

“மறுபடியும் நடிக்க வந்ததில் சந்தோஷம். பல வருஷங்களாக நடிக்காமல் இருந்திருந்தாலும், மக்கள் என்னை இன்னும் மறக்கலை. அந்த அன்பை இழந்துட வேணாம்னு நடிக்க முடிவு பண்ணியிருக்கேன்” எனப் புன்னகையுடன் பேசுகிறார், அருணா தேவி. சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர்.

``நடிப்புக்கு பிரேக் விட்டதுக்குக் காரணம் என்ன?”

``விஜய் டிவி `ஜோடி நம்பர் 1’ என் கடைசி டெலிவிஷன் பயணம். பிறகு, கல்யாணம், இரண்டு குழந்தைகள், என்னுடைய பிளே ஸ்கூல் என நேரம் சரியா இருந்துச்சு. பல வாய்ப்புகள் வந்தும் மறுத்துட்டேன். ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு, `குலதெய்வம்’ சீரியலில், வடிவுகரசி அம்மாவின் ஃப்ளாஸ்பேக் கேரக்டரில் நடிச்சேன். அது சின்ன போர்ஷனா இருந்தாலும், நல்ல வரவேற்பு கிடைச்சுது. இப்போ, `கல்யாண வீடு’ சீரியலிலும் கமிட் ஆகியிருக்கேன்.”

``ஆக்டிங் கரியரை செலக்ட் பண்ணினது யதேச்சையாக நடந்ததுதானா?”

``ஆமாம்! சின்ன வயசுல தூர்தர்ஷன் சீரியல்களில் சின்னச் சின்ன ரோல்களில் நடிச்சேன். ராஜ் டிவியில் ஆங்கராக, நல்ல அடையாளம் கிடைச்சுது. ஜெயா டிவி தொடங்கியபோது, `தனுஷ்கோடி’ என்கிற சீரியலில் நடிச்சேன். ஆங்கராவும் நிறைய நிகழ்ச்சிகள் பண்ணினேன். அப்புறம், `மெட்டி ஒலி’, `மனைவி’, `ஆசை’, `சிதம்பர ரகசியம்’ என 30 சீரியல்களுக்கும் மேலே நடிச்சுட்டேன். பெரும்பாலும் வில்லி ரோல்தான்.”

``உங்களுக்கு `மெட்டி ஒலி’ கொடுத்த ரீச் எப்படிப்பட்டது?'' 

``இன்னைக்கும் `மெட்டி ஒலி’ கேரக்டரான நிர்மலா எனச் சொன்னால்தான் பலருக்கும் தெரியுது. அந்த அளவுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்துச்சு. அந்த சீரியலில் நடிச்ச பல ஆர்டிஸ்டுகளுக்குப் பெரிய பிரேக் கிடைச்சது. அதில் நடிச்ச சக ஆர்டிஸ்டுகள் எல்லோருமே இப்பவரை ரொம்ப அன்போடுதான் இருக்கோம். வாட்ஸ்அப் குரூப்ல ஆக்டிவா இருக்கோம். ரெண்டு மாதத்துக்கு முன்னாடி, `மெட்டி ஒலி’ டீமின் சந்திப்பு நடந்துச்சு. நீண்ட காலத்துக்குப் பிறகு எல்லோருமே சந்திச்சு மனம்விட்டுப் பேசினோம். அங்கே பலரும் ஆனந்தக் கண்ணீரில் நனைஞ்சோம்.''

``டான்ஸ் ஆர்வம் இப்போதும் இருக்கிறதா?”

``நிச்சயமா இருக்கு. நடிப்பு, டான்ஸ் இரண்டையும் புரொஃபஷனலா பண்ணலைன்னாலும் என்னோடு தொடர்ந்து டிராவலாகுது. நான் கிளாசிக்கல் டான்ஸர். தனிப்பட்ட முறையில் வெஸ்டர்ன், ஃபோக் டான்ஸ் கத்துக்கலை. ஆனால், சன் டிவி `மஸ்தானா மஸ்தானா' போட்டியின் சீசன் 2-ல் கலந்துகிட்டு எல்லா வகையான டான்ஸும் ஆடினேன். அதில் என் ஜோடி டான்ஸர் நேத்திரன். நாங்க டைட்டில் வின்னர். அப்புறம், `ஜோடி நம்பர் 1’-ல் ஃபைனல் வரை வந்தோம். பிறகு, எந்த ரியாலிட்டி ஷோவிலும் கலந்துக்கலை. ஆனால், வீட்டிலிருந்தபடியே பரதநாட்டிய வகுப்புகள் எடுக்கிறேன்.”

``பிளே ஸ்கூல் நடத்தும் எண்ணம் எப்படி உருவாச்சு?”

``ரெண்டரை வயசுல என் பெரிய பொண்ணை வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பிளே ஸ்கூலில் சேர்த்தேன். தினமும் குழந்தையை விடறதும் கூட்டிட்டு வர்றதுமா இருந்தேன். குழந்தைகளின் சிரிப்பும் சேட்டையும் ரொம்பவே பிடிச்சுப் போச்சு. `நாமும் ஒரு பிளே ஸ்கூல் தொடங்கலாமே’ என நினைச்சேன். அதுக்காக, அட்வான்ஸ்டு டிப்ளோமா கோர்ஸ் படிச்சேன். சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு ஸ்கூல் ஆரம்பிச்சேன். அஞ்சு வருஷமா ஸ்கூல் நல்லா போய்ட்டிருக்கு. இதில் என் நோக்கம் பணம் இல்லை. அதனால், ஒரு பேட்சுக்கு 20 குழந்தைகளுக்கு மேலே சேர்த்துக்கிறதில்லை. நானும் கிளாஸ் எடுப்பேன். என் அப்பா நிர்வாகத்தைப் பார்த்துக்கிறார். வேற டீச்சர்ஸும் இருக்காங்க. ஸ்கூல் நடத்துறதில் பாதிப்பு வராத வகையில், இப்போ நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். இரட்டை சவாரி பயணம், நல்லாப் போகுது. அதுக்கு என் கணவர் ஆனந்தன் முழு சப்போர்ட் பண்றார்.”