Published:Updated:

"கடை திறப்பு விழாவுக்குக் கூப்பிடுறவங்க, என்ன கன்டிஷன் போடுறாங்க தெரியுமா?!" - நிஷா

"கடை திறப்பு விழாவுக்குக் கூப்பிடுறவங்க, என்ன கன்டிஷன் போடுறாங்க தெரியுமா?!" - நிஷா
"கடை திறப்பு விழாவுக்குக் கூப்பிடுறவங்க, என்ன கன்டிஷன் போடுறாங்க தெரியுமா?!" - நிஷா

சீரியல்களில் நெகட்டிவ் கேரக்டருக்கு என்னெவெல்லாம் பிரச்னை எனப் பேசுகிறார் நிஷா.

தொகுப்பாளினியாகச் சின்னத்திரைக்கு வந்தவர் நிஷா. பிறகு, சீரியல் பக்கம் போனார். `தெய்வம் தந்த வீடு' தொடரில் இவர் பண்ணிய வில்லத்தனங்கள் சீரியலுக்கு ரேட்டிங்கை வாங்கித் தந்தன. தொடரில் சாதுவான மேக்னாவைவிட இவருக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டதாகப் பேசப்பட்டது. அந்தத் தொடர் முடிந்ததும் சீரியலுக்கு பிரேக் விட்டுவிட்டு, சில மாதங்கள் கேரளாவில் உள்ள சொந்த ஊரில் குடும்பத்துடன் பொழுதைக் கழித்து வந்தார். மறுபடியும் சீரியல் வாய்ப்புகள் வந்தபோது, `பாசிட்டிவான கேரக்டர் கிடைக்குமா' எனக் கேட்டவருக்கு, நெகட்டிவான பதில்களே கிடைத்தன. தற்போது பழையபடி வில்லத்தனம் பண்ணக் கிளம்பி வந்துவிட்டார். கடந்த மாதம் 'றெக்க கட்டிப் பறக்குது' தொடரில் கமிட் ஆனவர், இப்போது `ஈரமான ரோஜாவே' தொடரிலும் வில்லியாக வருகிறார்.

நிஷாவிடம் பேசியபோது, 'நெகட்டிவ் ரோலுக்கு நல்ல ரீச் கிடைக்குது, இல்லைனு சொல்லலை. ஆனா, தொடர்ந்து நெகட்டிவ் கேரக்டர்களிலேயே நடிச்சுக்கிட்டு இருந்தா, அது சமயத்துல மனதளவில் ஒருவித அழுத்தத்தைத் தர்றதோடு, பொதுவெளியில எதிர்மறையான தாக்கத்தையும் உண்டாக்குது. எப்படினா, சீரியலை அதிகம் விரும்புகிற மக்கள்ல, 'அது வெறும் நடிப்புதான்'னு நம்ப மறுக்கிறவங்களும் இருக்காங்க. தெளிவா சொல்லணுமா, ஒரு நிகழ்ச்சிக்கோ அல்லது கடை திறப்பு மாதிரியான விழாக்களுக்கோ இன்னைக்கு டிவி பிரபலங்களை விரும்பிக் கூப்பிடுறாங்க. ஆனா, நெகட்டிவ் கேரக்டர்கள்ல நடிக்கிறவங்களைக் கூப்பிட சிலர் தயக்கம் காட்டுறாங்க. இன்னும் சிலர், 'வில்லிகள் வேண்டாம்'னு ஸ்ட்ரிக்டா கன்டிஷன் போடுறதைக் காதுபடவே கேட்டிருக்கேன்.

`சீரியல் நடிகைகள் எல்லாம் கடை திறப்பு விழாக்கள் மூலமா கல்லா கட்டுறாங்க'னு போற போக்குல பேசுறவங்களுக்கு இதெல்லாம் தெரியுமா. சீரியல் வாய்ப்பு என்பது எங்களுக்குத் தொடர்ச்சியா அமையிறதில்லை. பொருளாதாரத் தேவைகளுக்குக் கிடைக்கிற இந்த மாதிரியான சின்னச் சின்ன வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கலாம்னு நினைச்சா, இப்படியொரு பிரச்னை. என்ன செய்வது?

அதனாலதான், பாசிட்டிவான கேரக்டர்கள் பண்ணுவோமேனு தோணுச்சு. ஆனா, அதுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தா, வீட்டுலேயே உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். 'தெய்வம் தந்த வீடு' சீரியல் ஹிட் ஆனாலும் ஆச்சு, எல்லோருமே சொல்லி வெச்ச மாதிரி 'உங்க முகபாவனை வில்லத்தனத்துக்குதான் சூப்பரா செட் ஆகுது'னு புகழ்ந்து சொல்றாங்க. அந்த வார்த்தைகளைக் கேட்கிறபோதெல்லாம், 'நல்லவளா நடிக்கிறதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்டே'னு சொல்லாம சொல்றாங்களோனு தோணும். அதனால, வெயிட் பண்ணது போதும்ங்கிற முடிவுக்கு வந்து, பழைய ரூட்டுக்கே திரும்பிவிட்டேன். 'றெக்க கட்டிப் பறக்குது மனசு' சீரியல்ல கொடூரமான வில்லி நான். இந்தத் தொடர்ல ஓரளவு பரவாயில்லைனு நினைக்கிறேன்" என்கிறார் நிஷா.

புதிய சீரியலின் கேரக்டர்  குறித்துக் கேட்டோம்.

`வில்லிதான்னு சொல்லிட்டேனே... டிராக் எப்படிப் போகும், மக்கள்கிட்ட வரவேற்பு எப்படி இருக்கும்னு இனிமேதான் தெரியவரும். புரொமோ பார்த்துட்டு சிலர், 'சில மாத இடைவெளியில வெயிட் போட்டுட்டீங்களே'னு கேட்டாங்க. உண்மையிலேயே முன்பைவிட எடையை நான் குறைச்சிருக்கேன். வீட்டுல இருந்த நாள்கள்ல ஒழுங்கா ஜிம்முக்குப் போய், உடம்பைக் கரெக்டா மெயின்டெயின் பண்ணிட்டு வர்றேன். இந்தச் சீரியல்ல சேலையில வர்ற மாதிரி காட்சிகளைத்தான் புரொமோவுல காட்டுனாங்க. சேலையில பார்க்கிறவங்களுக்கு வெயிட் கூடின மாதிரி தெரிஞ்சிருக்கு!' என்று முடிக்கிறார் நிஷா.

வில்லியாக நடிக்கிறவர்களுக்குத்தான் பிரச்னை எந்தெந்த வடிவில் வருகிறது பாருங்கள்!

அடுத்த கட்டுரைக்கு