Published:Updated:

''நான் கிருஷ்ணகுமாரியை மனசார நேசிக்கிறேன்!'' - 'கலக்கப் போவது யாரு?' நவீன் #VikatanExclusive

''நான் கிருஷ்ணகுமாரியை மனசார நேசிக்கிறேன்!'' - 'கலக்கப் போவது யாரு?' நவீன்  #VikatanExclusive
''நான் கிருஷ்ணகுமாரியை மனசார நேசிக்கிறேன்!'' - 'கலக்கப் போவது யாரு?' நவீன் #VikatanExclusive

"நான் கிருஷ்ணகுமாரியை மனசார நேசிக்கிறேன். விவாகரத்து வாங்கிட்டு, கடனை வாங்கியாச்சும் எனக்கும் கிருஷ்ணகுமாரிக்கும் பெரிய அளவுல கல்யாணம் நடக்கும்'' என அழுத்தமாகச் சொல்கிறார், நவீன்.

மிமிக்ரி கலைஞர் நவீன் மீது அவரது முதல் மனைவி திவ்யலட்சுமி பல குற்றச்சாட்டுகளைத் தொடுத்துள்ள நிலையில், இதுகுறித்து தெரிந்துகொள்ள நவீனைத் தொடர்புகொண்டோம்.

''திவ்யலட்சுமியை நான் காதலிச்சது உண்மைதான். திருமணம் செய்துகொண்டதும் உண்மைதான். ஆனால், அந்தத் திருமணம் என் விருப்பம் இல்லாமல் நிர்பந்தத்தால் நடந்துச்சு. நான் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல வெறும் கையெழுத்து மட்டும்தான் போட்டிருக்கேன். மாலை மாற்றி, தாலி கட்டலை. ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணனும்னு திவ்யா என்னை டார்ச்சர் பண்ணினாங்க. ரிஜிஸ்டர் மேரேஜ் ஏற்பாடுகளையும் செய்தாங்க. ரவி என்பவரின் வீட்டில் வைத்து கல்யாணம் நடந்ததாக அதைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்தாங்க. அந்த ரவி யாருன்னே எனக்குத் தெரியாது. பெற்றோர் முன்னிலையில் நடந்த கல்யாணமா இருந்திருந்தால், என் அப்பா அம்மாவோ அல்லது, அவள் அம்மா, அப்பாவோ சாட்சி கையெழுத்து போட்டிருக்கணுமே? அதையும் விடுங்க, நான்தான் திருமணம் செஞ்சுக்க வற்புறுத்தினதா சொல்றாங்க. அப்படின்னா, என் நண்பர்கள்தானே சாட்சி கையெழுத்து போட்டிருப்பாங்க. ஆனால், கையெழுத்து போட்ட ரெண்டுபேருமே திவ்யாவின் நண்பர்கள். இதுக்கு அவங்க என்ன பதில் சொல்லப்போறாங்க?'' எனக் கேட்கிறார், நவீன்.

"திவ்யாவை நீங்க அப்யூஸ் பண்ணதா குற்றம் சாட்டியிருக்காங்களே...''

''அவங்க சொன்ன மார்ச் 27-ஆம் தேதி அன்னைக்கு என் அப்பா, அம்மாவுக்குத் திருமண நாள் என்பது உண்மைதான். அம்மா, அப்பா திருமண நாளில் நாங்கதானே கிஃப்ட் வாங்கப் போயிருப்போம். அவங்க ஏன் வாங்கப் போகணும்? இன்னொன்னு, வீட்டுல யாருமே இல்லைனு தெரிஞ்சும் அந்தப் பொண்ணு ஏன் வீட்டுக்குள்ளே வரணும்? யாருமில்லைனு போயிருக்க வேண்டியதுதானே? ஏன்னா, அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லைங்கிறதுதான் உண்மை. அவங்கதான் எல்லா ஆதாரங்களையும் சேகரித்து வெச்சிருக்கிறதா சொல்றாங்களே... இதுக்கும் சரியான ஆதாரம் காட்டச் சொல்லுங்க.''

"உங்களுக்கு நிறைய பணத்தை செலவு பண்ணியிருக்கிறதா சொல்றாங்களே...''

''லவ்வர்ஸ் மத்தியில பணம் கொடுத்தல், வாங்கல் நிச்சயம் இருக்கும். திவ்யாவுக்குக் காசு இல்லாமல் இருந்தப்போ நான் உதவி பண்ணியிருக்கேன். எனக்கு திவ்யா உதவி பண்ணியிருக்காங்க. ரெண்டு பேருக்கிடையில் நடந்ததை பலரிடம் சொல்லும்போதே அங்கே காதல் செத்துப்போச்சு.''

''அவங்க கேரக்டர் பற்றி பொய்யாக குற்றச்சாட்டு பரப்புறீங்களா?''

''எனக்கு பொய் குற்றச்சாட்டு சொல்லும் அவசியம் இல்ல. எனக்கும் ரெண்டு தங்கச்சிகள் இருக்காங்க. ஒரு பொண்னோட லைஃப்பை கெடுக்கக்கூடாதுனு இத்தனை நாளா அமைதியா இருந்தேன். ஆனா, எப்போ அவங்க ஒரு சேனலில் இன்டர்வியூ கொடுத்தாங்களோ, அப்போவே இனியும் அமைதியா இருக்கக்கூடாதுனு முடிவெடுத்தேன். தப்பு பண்ணவங்க நல்லவங்க மாதிரி நடிக்கும்போது, தப்பு பண்ணாத நான் ஏன் அமைதியா இருக்கணும்? அந்த ஆதாரம் எல்லாமே என்கிட்ட இருக்கு. அதை நான் கோர்ட்டில் காட்டப்போறேன்.''

''எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றோம், விவாகரத்து கொடுங்கனு வற்புறுத்துறீங்களாமே...''

''அவங்களுக்குக் கொடுக்கிற அளவுக்கு என்கிட்ட பணம் இல்லீங்க, அதான் உண்மை. அவங்கதான் என்கிட்ட பணம் கேட்டு மிரட்டினாங்க. அந்த ஆதாரம்கூட என்கிட்ட இருக்கு. அவங்க வக்கீலும், 'பணம் கொடுத்துட்டா போதும்; விவாகரத்து தந்துடுறோம்'னு சொல்றாங்க. நான் பணம் கொடுக்கமாட்டேன். கோர்ட்டில் நியாயமான முறையில் விவாகரத்து வாங்குவேன். பணத்துக்கு ஆசைப்படலைனு சொல்றவங்க, என்னை ஏன் மிரட்டணும்? அவளால் நிறைய டார்ச்சர் அனுபவிச்சாச்சு. நான் கிருஷ்ணகுமாரியை மனசார நேசிக்கிறேன். விவாகரத்து வாங்கிட்டு, கடனை வாங்கியாச்சும் எனக்கும் கிருஷ்ணகுமாரிக்கும் பெரிய அளவுல கல்யாணம் நடக்கும்'' என அழுத்தமாகச் சொல்கிறார், நவீன்.

இந்த விவகாரம் தொடர்பாக, திவ்யலட்சுமி ஏதாவது கருத்து தெரிவிக்க விரும்பினால், அவர் தரப்பு கருத்தையும் வெளியிடத் தயார்! 

அடுத்த கட்டுரைக்கு