Published:Updated:

நெட்ஃப்ளிக்ஸின் முதல் இந்திய சீரிஸ்... எப்படி இருக்கிறது #SacredGames #NetflixOriginals

நெட்ஃப்ளிக்ஸின் முதல் இந்திய சீரிஸ்... எப்படி இருக்கிறது #SacredGames #NetflixOriginals
News
நெட்ஃப்ளிக்ஸின் முதல் இந்திய சீரிஸ்... எப்படி இருக்கிறது #SacredGames #NetflixOriginals

இரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு கேங்க்ஸ்டர் கதை.. நெட்ஃப்ளிக்ஸ் வெளியிடும் முதல் இந்திய சீரிஸ்.. எப்படி இருக்கிறது? #SacredGames

இந்தியர்களின் பேவரைட் லிஸ்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக தவறாமல் இடம்பெற்று இருப்பவை தொலைக்காட்சித் தொடர்கள். தொலைக்காட்சி தொடர்கள் பெரும்பாலும் குடும்பங்கள், குழந்தைகள், ஆன்மிகம் முதலானவற்றை கருவாகக் கொண்டு இயக்கப்பட்டன. வெப் சீரிஸ் இந்தியாவிற்குள் நுழையத் தொடங்கியதும், சினிமாவில் இருப்பதைப் போன்ற வெரைட்டியான தொடர்கள் இந்தியர்களின் பார்வைக்கு தென்பட்டன. ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் முதலான நிறுவனங்கள் இந்திய வெப் சீரிஸ் உலகில் தங்களுக்கான இடத்தைப் பிடித்துக் கொண்டாலும், உலகமே கொண்டாடும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் சற்று தாமதாக நுழைந்திருக்கிறது. #Sacredgames

“லோக்கல் கதைகளை இன்டர்நேஷனல் தரத்தில் உருவாக்க விரும்புகிறோம்” என்று இந்தியாவுக்குள் நுழைந்த போது நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்தது. கொலம்பியா நாட்டில் போதைப் பொருட்கள் கடத்தும் கேங்க்ஸ்டர்கள் பற்றிய ‘நார்கோஸ்’ என்ற சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைப் போலவே இந்தியாவின் முதல் சீரிஸையும் கேங்க்ஸ்டர் கதையாக வெளியிட்டிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ்.  

2006ஆம் ஆண்டு ஆங்கில எழுத்தாளர் விக்ரம் சந்திரா வெளியிட்ட ‘சேக்ரெட் கேம்ஸ்’ நாவல் இந்திய வாசகர்களால் மிகவும் வியந்து பாராட்டப்பட்டது. ஏறத்தாழ 900 பக்கங்கள் கொண்ட அந்த நாவல், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில்  மீண்டும் அதே பெயரில் வெப் சீரிஸாக வெளியிடப்பட்டிருக்கிறது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

’சேக்ரெட் கேம்ஸ்’ தொடரின் இயக்குநர்கள் அனுராக் காஷ்யப் மற்றும் விக்ரமாதித்ய மோட்வானே. மனிதர்களின் மனங்களில் இருக்கும் இருண்ட பக்கங்களை மிகத் துல்லியமாக திரைப்படமாக்குவதில் தலைசிறந்த இந்திய இயக்குநர்களுள் முக்கியமானவர் அனுராக் காஷ்யப். விக்ரமாதித்ய மோட்வானே அனுராக் காஷ்யப்பின் பட்டறையில் இருந்து வந்தவர். இந்தத் தொடரின் முன்னணி கதாபாத்திரங்களாக பாலிவுட் நட்சத்திரங்களான சயிப் அலி கான், நவாசுதீன் சித்திக்கி, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்துள்ளனர். 

வழக்கமான ‘கேங்க்ஸ்டர் போலீஸ்’ கதை தான். சர்தாஜ் சிங் (சைப் அலி கான்) நேர்மையான காவல்துறை அதிகாரி. மிகச் சமீபத்தில் விவாகரத்தானவர். எந்நேரமும் தன் பாக்கெட்டில் மன அழுத்ததைக் குறைப்பதற்கான மாத்திரைகளை சுமந்து திரிபவர். அப்பாவி சிறுவன் ஒருவனை என்கவுன்டர் செய்த வழக்கில் தன் உயரதிகாரியைக் காட்டிக் கொடுக்காமல் இருக்க நிர்பந்திக்கப்படுபவர். பிக் பாக்கெட்களை மட்டுமே தேடிப் பிடிக்க அனுப்பப்படும் சர்தாஜ் சிங்கின் வாழ்க்கையை ஒரு செல்போன் அழைப்பு மாற்றுகிறது. பதினைந்து ஆண்டுகளாக தேடப்படும் மும்பையின் மிகப்பெரிய கேங்க்ஸ்டர் கணேஷ் கய்டொண்டே (நவாசுதீன் சித்திக்கி) அந்த செல்போன் அழைப்பை மேற்கொள்கிறான். 25 நாட்களில் மும்பை நகரத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஒன்று வரப்போவதாகவும், அதனிடமிருந்து நகரத்தைக் காப்பாற்றவும் சொல்லிவிட்டு, சர்தாஜ் சிங்கின் கண் முன்னே தற்கொலை செய்து கொள்கிறான். 

மும்பையைக் காப்பாற்றும் இந்த ஆபத்தான பயணத்தில் சர்தாஜ் சிங்கின் உதவியை நாடுகிறார் உளவுத்துறை அதிகாரி அஞ்சலி மாதுர் (ராதிகா ஆப்தே). சர்தாஜ் சிங், அஞ்சலி மாதுர் இருவருமே தங்கள் துறையின் உயரதிகாரிகளின் உதவி இல்லாமல் மும்பைக்கு வரவிருக்கும் ஆபத்தைத் தேடுவதாக ஒரு ட்ராக் பயணப்படுகிறது. அதே நேரத்தில், பம்பாய் நகரத்துக்கு எழுபதுகளின் முடிவில் வந்து, பின்னாளில் மும்பை நகரத்தின் ’டான்’ ஆக கணேஷ் கய்டொண்டே எப்படி உருவானார் என்பதும் மற்றொரு ட்ராக்கில் ‘நான்-லீனியர்’ முறையில் சொல்லப்படுகிறது. 

இந்தியாவின் அரசியல் வரலாற்றைப் பின்னணியில் வைக்காமல் ஒரு கேங்க்ஸ்டர் உருவாவதை தத்ரூபமாகக் காட்ட முடியாது. ‘சேக்ரெட் கேம்ஸ்’ இந்திரா காந்தி காலத்தின் எமர்ஜென்சியில் தொடங்கி, ராஜீவ் காந்தியின் ஆட்சி, ஷாபானு வழக்கு, இந்தியாவின் முதல் தொலைக்காட்சி சீரியலாக ஒளிபரப்பான மகாபாரதம், பா.ஜ.க நடத்திய ரத யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு, அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த கலவரங்கள், குண்டு வெடிப்பு சம்பவங்கள் முதலானவற்றோடு கணேஷ் கய்டொண்டேவின் வளர்ச்சியைப் பொருத்தி, பிணைந்து பேசுகிறது. 

கேங்க்ஸ்டர் திரைப்படங்களிலும், கதைகளிலும் முக்கியமானது அந்த பின்னணியில் இருக்கும் நிலம். ’சேக்ரெட் கேம்ஸ்’ பம்பாய் நகரத்தில் தொடங்கி, மும்பைக்கு ஆபத்து என்ற இடத்தில் வந்து நிற்கிறது. 1992ஆம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தைக் கதையின் முக்கியமான திருப்பமாக இடம்பெறச் செய்துள்ளார் விக்ரம் சந்திரா. அதே நேரம், மும்பையின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியின் பின்னணியில் இயங்கிய மதம், அரசியல், நிழலுக மாஃபியா, சினிமா ஆகிய கண்ணிகளையும் ஒரே புள்ளியில் இணைத்திருக்கிறது அனுராக் காஷ்யப் – விக்ரமாதித்ய மோட்வானே கூட்டணியின் இயக்கம். 

சென்சார் போர்டுக்கு பயப்படாமல் இயங்கும் சுதந்திரத்தை இணையம் அளித்திருக்கிறது. ‘சேக்ரெட் கேம்ஸ்’ அதனை சாதகமாக பயன்படுத்தி இருக்கிறது. மிகச் சாதாரணமாக புழங்கும் வசவுகளையும், கெட்ட வார்த்தைகளையும் ஒவ்வொரு காட்சியிலும் காண முடிகிறது. அது லைவ்வாக ஒரு சம்பவத்தைக் கண்ட உணர்வை அளிக்கிறது. வன்முறையும் அடல்ட் காட்சிகளும் இல்லாத கேங்க்ஸ்டர் திரைப்படங்கள் இல்லை. ‘சேக்ரெட் கேம்ஸ்’ அதற்கு விதிவிலக்கு அல்ல. வன்முறையும் அடல்ட் காட்சிகளும் அதீதமாக தொடர் முழுவதும் இடம்பெற்று இருக்கின்றன. 

விக்ரம் சந்திராவின் நாவலில் இந்த கதை 2006இல் நடப்பதாக எழுதப்பட்டிருந்தது. ’சேக்ரெட் கேம்ஸ்’ சீரிஸ் தற்காலத்தில் நடப்பதாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. மேலும் நாவலில் இருந்த பல கதாப்பாத்திரங்கள் மாற்றப்பட்டுள்ளனர். பலர் நீக்கப்பட்டுள்ளனர். புதிதாக சிலர் சேர்க்கப்பட்டுள்ளனர். அப்படியாக சேர்க்கப்பட்டுள்ள கேரக்டர்களில் நவாசுதீன் சித்திக்கின் காதலியாக குப்ரா சேட் நடித்துள்ளார். குக்கூ என்ற திருநங்கையாக வரும் குப்ரா சேட்டின் காட்சிகள் இந்த சீரிஸின் மிகச்சிறந்த காட்சிகள் எனக் கூறலாம். 

’சேக்ரெட் கேம்ஸ்’ சீரிஸின் பலம் அதன் வசனங்கள். “இந்த உலகின் மிகப்பெரிய வர்த்தகம் மதம்; கடவுளின் மீதான பயத்தை அறுவடை செய்து உலகம் முழுவதும் மக்களை ஆள்கிறார்கள்”, “தேர்தல் செலவுக்கு ஐம்பது லட்சம் கொடுத்தால் ஜனநாயகத்தை வாங்கி விடலாம்” முதலான வசனங்களைக் கூர்மையாக தீட்டியிருக்கிறார் தேசிய விருது பெற்ற பாடலாசிரியரும் எழுத்தாளருமான வருண் குரோவர். 

இந்த சீரிஸ் எட்டு எபிசோடுகளாக வெளியிடப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த எபிசோடுகளைப் பார்க்க தூண்டுதலாக இருக்கிறது அலோகானந்தா தாஸ்குப்தா அமைத்திருக்கும் பின்னணி இசை. 

ஏற்கெனவே பழகிய கதைக்களம், க்ளீஷே காட்சிகள், பல இடங்களில் முகத்தில் நடிப்பைக் கொண்டு வரத் தடுமாறும் சயீப் அலி கான், அஞ்சலி மாதுர் கேரக்டராக நடிப்பை வெளிபடுத்தும் ஸ்கோப் இல்லாத ராதிகா ஆப்தே முதலானவை இந்த சீரிஸின் மிகப்பெரிய மைனஸ் ஆக அமைந்துள்ளன. 

இதன் தொடர்ச்சியாக முன்று சீசன்களை வெளியிட இருப்பதாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மும்பையின் அழிவின் பின்னணியில் மதத்தை அடிப்படையாகக் கொண்ட மிகப்பெரிய போர் உருவாகிக் கொண்டிருப்பதோடு முதல் சீசன் முடிவடைந்துள்ளது. ’சேக்ரெட் கேம்ஸ்’ மட்டுமல்லாமல், இன்னும் அரை டஜன் இந்திய சீரிஸ்களையும், பத்து இந்திய திரைப்படங்களையும் வெளியிட திட்டமிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம். 

அனுராக் காஷ்யப், விக்ரமாதித்ய மோட்வானே, நவாசுதீன் சித்திக் ஆகியோர் இதைவிட சிறந்த படைப்புகளை அளித்திருக்கின்றனர். எனினும் இந்திய தொடர்களின் வரலாற்றில் ‘#SacredGames’ நிச்சயம் ஒரு பாய்ச்சலாக அமையும்.