Published:Updated:

"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்!" - 'சூப்பர் சிங்கர்' செந்தில் கணேஷ்

"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்!" - 'சூப்பர் சிங்கர்' செந்தில் கணேஷ்

சூப்பர் சிங்கரில் டைட்டில் வென்றது குறித்துப் பேசுகிறார், செந்தில் கணேஷ்.

"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்!" - 'சூப்பர் சிங்கர்' செந்தில் கணேஷ்

சூப்பர் சிங்கரில் டைட்டில் வென்றது குறித்துப் பேசுகிறார், செந்தில் கணேஷ்.

Published:Updated:
"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்!" - 'சூப்பர் சிங்கர்' செந்தில் கணேஷ்

``என்னோட அம்மா அவங்களோட பருவ வயசுலதான் முதன் முதலா சினிமா பார்த்ததாச் சொல்வாங்க. `படம் ஓடுது, படம் ஓடுதுனு சொல்வாய்ங்கய்யா... எப்படி ஓடும்னு பார்க்க ஆசையா இருக்கும். முதல் தடவையா சினிமா கொட்டகைக்குப் போனப்போ, திரையைப் பார்த்து, என்ன இது வேட்டியைத் துவைச்சு காயப் போட்டிருக்காங்கனு கேட்டிருக்கேன். கூட வர்றவுக, அவுகளுக்குத் தெரிஞ்சதை எடுத்து விடுவாக'னு என்கிட்ட சொல்லிக்கிட்டிருந்த அம்மாகிட்ட, `உன் புள்ள சினிமாவுல பாடப்போறேன்'னு சொன்ன அந்த நிமிடம், என் வாழ்க்கையில முக்கியமான சம்பவம் சார்!'' - `சூப்பர் சிங்கர்' சீசன் 6-ல் டைட்டில் வென்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பைப் பெற்றுள்ள செந்தில் கணேஷ் சொல்லும் வார்த்தைகள் நெகிழ வைக்கின்றன.

``கிராமத்து மக்கள் முன்னாடி எத்தனையோ கோயில் மேடைகள்ல பாடியிருக்கோம். ஆனா, உலகம் முழுக்கப் பார்த்துக்கிட்டு இருக்கிற ஒரு மேடையில அதுவும் போட்டினு வந்துட்டதால, அந்த நிமிடம் எனக்கு திக் திக்னுதான் இருந்தது. கலைமகள் அருளால இது நடந்ததுனு நம்புகிறேன். அன்னைக்கு ராத்திரி 12 மணிக்கு சிம்பு சார் போன் பண்ணி, `நீங்க ஜெயிச்சதுல நான் ரொம்பவே சந்தோஷப்படுறேன். ஒருநாள் வீட்டுக்கு வாங்க, விருந்து வைக்கிறேன்'னு சொன்னார். கேட்கும்போதே சந்தோஷமா இருந்துச்சு. இதை எனக்கான வெற்றியா நான் நினைக்கலை. பஸ் கூட போகாத குக்கிராமங்களுக்கும் போய், கூட்டம் கம்மியா தெரிஞ்சாலும், மனசைத் தளரவிடாம பாடி, நாட்டுப்புற இசையை வாழ வெச்சுக்கிட்டு இருக்கிற ஒவ்வொரு கலைஞனுக்குமான வெற்றி இது.

நாங்க தம்பதியா, இந்த நிகழ்ச்சியில கலந்துக்க தேர்வானப்போ, `நிகழ்ச்சியில ஜெயிக்கிறோமோ இல்லையோ, நம்ம ஊருக்கு, நம்ம பாட்டுக்கு சூப்பர் சிங்கர் மேடை மூலமா என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்யணும்'கிறதை மட்டும் மனசுல நினைச்சுக்கிட்டோம். நினைச்ச மாதிரியே, இந்த நிகழ்ச்சி மூலமா நான் பிறந்த கலபம் கிராமத்தின் குடிநீர்த் தேவைக்கு ஒரு போர்வெல் வசதி கிடைச்சது. என் மனைவி ராஜலட்சுமி ஊர்ல தறி நெசவு செய்றவங்க அதிகமா வசிக்கிறாங்க. அவங்க இந்த நிகழ்ச்சி மூலமா பயனடைகிற மாதிரி சில விஷயங்கள் பண்ணினோம். இப்போ டைட்டில் கிடைச்சிருக்கு. இந்த வெற்றி மூலமா இன்னும் மக்களிசைக்கும், எங்க ஊருக்கும் என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யணும்'' என்ற செந்திலிடம், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பு குறித்துக் கேட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியோட டிராவல்ல ரெண்டு மூணு முறை அவர் முன்னாடி பாடியிருக்கேன். `இவன் ஜெயிச்சா இவனுக்கு என்ன பாட்டு தரலாம்'னு யோசிச்சு வெச்சிருப்பார். அவரோட ஃபோக் இசையில பாடுறது ரிஸ்க்னு சிலர் சொல்லக் கேட்டிருக்கேன். அந்த அனுபவத்துக்காக நானும் ஆவலோட காத்திருக்கேன்!'' என்கிறார்.

`` `செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி, ரமணியம்மாள் போன்றவர்களை டி.ஆர்.பி ரேட்டிங்கை மனதில் வைத்தே நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்கள்!' என்கிற ஒரு பேச்சு நிலவுகிறதே, கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" என்றேன். 

``சிலர் சொல்லக் கேட்டிருக்கோம். ரேட்டிங் கிடைக்கணும்னா, நிகழ்ச்சியை மக்கள் அதிகமாப் பார்க்கணும். அவங்களை ஏமாத்திப் பார்க்க வைக்க முடியாதுனு நாங்க நம்புறோம். ஏன்னா, இப்போ டிஜிட்டல் உலகத்துல இருக்கிறோம். ரியாலிட்டி நிகழ்ச்சிகள்ல ரியலா நடக்கிறதுக்கும், செட் பண்றதுக்கும் உள்ள வித்தியாசம் மக்களுக்குத் தெரியும்னு நினைக்கிறோம்''

" 'எதிலும் புதுமை தமிழன் பெருமை', 'தமிழ் கடவுள் முருகன்' என எங்கும் தமிழை உயர்த்திப் பிடிப்பதன் தொடர்ச்சியாகவே, சேனல்  உங்களை டைட்டில் வின்னர் ஆக்கியிருக்கிறது என்கிற விமர்சனமும் எழுந்துள்ளதே?"

''தமிழ் பாரம்பரிய இசைக்கு ஒரு வாய்ப்பு தரலாம்னு 'சூப்பர் சிங்கர்' மேடை நினைச்சிருக்கலாம். ஆனா, நானும் சரி என் மனைவியும் சரி, ஆடிஷன் மூலமா தேர்வாகித்தான் ஷோவுக்குள் வந்தோம். அதேபோல எங்க திறமையைப் பார்த்து மக்கள் எங்களுக்குத் தந்த ஆதரவும் பெரியது. 'டைட்டில் வலியத் தரப்பட்டிருக்கலாம்'ங்கிற விமர்சனம் வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க! கர்நாடக இசையோ, மக்களிசையோ இறுதி எபிசோடுல நடுவர்கள் வழங்குகிற மதிப்பெண்களைக் காட்டிலும் பொதுமக்களின் வாக்குக்கு முக்கியத்துவம் தரணும்கிறதை ஆரம்பத்துல இருந்தே ஷோவுல கடைபிடிச்சுக்கிட்டு வர்றாங்க. இந்த விஷயத்தையும் நீங்க கவனிக்கணும்!"  - கணவனும் மனைவியும் சேர்ந்து உறுதியான குரலில் சொல்கிறார்கள்.

வாழ்த்துக்கள் இருவருக்கும்!