Published:Updated:

``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்!’’ - பிரியங்காவின் தோழிகள்

``சட்டென ஏதோ ஒரு கோபத்தில் இந்த முடிவை எடுத்திருக்கணும். முந்தாநாள்கூட எங்ககிட்ட பேசினா. ஒருநாள் விட்டு ஒருநாள் வாட்ஸ்அப் குரூப்ல பேசிப்போம். நேற்று பேசியிருந்தால்கூட இந்த முடிவை எடுத்திருக்க மாட்டாளோன்னு தோணுது."

``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்!’’  - பிரியங்காவின் தோழிகள்
``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்!’’ - பிரியங்காவின் தோழிகள்

சின்னத்திரை நடிகைகளின் தற்கொலைப் பட்டியலில் இன்று மற்றொரு பெயர் இடம்பிடித்து அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. 'வம்சம்' சீரியலில் ஜோதிகா என்ற கதாபாத்திரம் மூலம் அனைவரையும் கவர்ந்த நடிகை பிரியங்கா, தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஜீ தமிழ், சன் டிவி, வேந்தர் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் வீஜேவாக பணியாற்றியவர். அவரின் இந்த முடிவு சின்னத்திரையில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையில் மட்டுமல்ல; படிப்பில் மிகவும் கெட்டிக்காரியாக வலம்வந்தவர் பிரியங்கா. 'வம்சம்' சீரியலில் அவருடன் நடித்த கிருத்திகா, கலங்கிய கண்களுடன்  நம்மிடம் பேசினார்.

``செட்டில் ரொம்ப சுட்டியான பொண்ணு பிரியங்கா. ஆங்கரிங் பண்ணினவள் என்பதால், அந்தக் கலகலப்பும் துருதுருப்பும் எப்பவும் இருக்கும். அவளால் ஒரு நிமிஷம்கூட அமைதியா இருக்கவே முடியாது. அவளுக்கும் பர்சனல் பிரச்னைகள் இருந்துச்சு. எல்லா வீடுகளிலும் இருக்கும் கணவன் - மனைவி பிரச்னைதான். ஆனாலும், 'என் மாமா இல்லைன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் அக்கா'னு சொல்வா. அவளுடைய கணவரை மாமான்னுதான் கூப்பிடுவா. அவர் மேலே ரொம்ப அன்பு வெச்சிருந்தா. ரெண்டு பேருக்குள் என்ன பிரச்னைன்னு தெரியலை. ரொம்பவே பாஸிட்டிவான பொண்ணு, இப்படி ஒரு முடிவு எடுப்பான்னு கொஞ்சமும் நினைச்சு பார்க்கலீங்க. ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் ஒரு பார்லர் ஓப்பன் பண்ணினாள். நாங்க எல்லாரும் போய்ட்டு வந்தோம். ரெண்டு நாளைக்கு முன்னாடிகூட அவளைப் பார்த்தேன். இப்படி ஒரு முடிவை எடுத்துட்டாளே'' என வருத்தப்பட்டார்.

`அபூர்வ ராகங்கள்' சீரியலில் பிரியங்காவுடன் இணைந்து நடித்த ஸ்ருதிராஜ், ``எல்லோரிடமும் ஃப்ரெண்ட்லியா பழகுவாங்க. ஒரு மாசத்துக்கு முன்னாடி அவங்களுடைய பொட்டிக் ஓப்பனிங்குக்கு கூப்பிட்டாங்க. அவங்க இறந்துட்ட செய்தியைக் கேட்டு ஜீரணிக்கவே முடியலை. செட்டில் அவங்க ஒருநாளும் சோகமா இருந்து பார்த்ததே இல்லே. எனர்ஜடிக் வுமன். பர்சனல் விஷயங்களைப் பகிர்கிற அளவுக்கு நாங்க குளோஸ் இல்லே. தவிர, அவங்க ஃபேமிலி பற்றி நெகட்டிவா எதுவுமே பேசினதில்லே. `அபூர்வ ராகங்கள்' டீம் ஒரு வாட்ஸ்அப் குரூப் வெச்சிருக்கோம். ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தாங்கன்னு அந்த குரூப்ல எல்லோரும் வருத்தப்பட்டு பேசினோம். அவங்களுக்குள்ளே என்ன வருத்தம்னு புரியலே. சின்னத்திரை நடிகைகள் எல்லோருக்கும் சொல்ற விஷயம் ஒண்ணுதான். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க. தற்கொலை எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. சிரிச்ச முகத்தோடு பிரியங்காவைப் பார்த்த நினைவுகளே எனக்கு போதும். பிணமா அவங்களை பார்க்கவே தயாராக இல்லே. அதனால், பார்க்ககூட போகலை'' என்கிறார்.

பிரியங்காவின் நெருங்கிய தோழியும், 'வம்சம்' சீரியலில் நடித்தவருமான சந்தியா, ``பிரியங்கா எனச் சொன்னதும் எனக்கு ஞாபகம் வர்றது 'எனர்ஜடிக் கேர்ள்' என்கிற வார்த்தைதான். இந்தச் சின்ன வயசிலேயே சாதிக்கும் எண்ணத்தோடு வலம் வந்தவள். நாலு வருஷமா ஒரே ஃபேமிலி மாதிரி பழகினோம், சீரியல் முடிஞ்சும் அதே நட்புடன் இருக்கோம். என்னை அக்கான்னுதான் கூப்பிடுவா. 'வம்சம்' ஃபேமிலிக்குன்னு ஒரு வாட்ஸ்அப் குரூப் இருக்கு. அதில் பேசிட்டே இருப்போம். சினிமாவுக்குப் போகிறது, வெளியே மீட் பண்றதுன்னு இருந்தோம். அக்காவா, அம்மாவா, அண்ணனா நாங்க பழகினோம். எந்த விஷயத்தையும் ஷேர் பண்ற அளவுக்கு எங்க உறவு இருந்துச்சு. அப்படியிருந்தும் எப்படி இந்த மாதிரி ஆச்சுன்னு நினைக்கிறப்போ பேசவே முடியலை.

சொந்த ஃபேமிலியில் இழப்பு ஏற்பட்ட மாதிரி இருக்கு இந்த இறப்பு. சின்ன வயசிலிருந்து பிரியங்கா சந்திச்ச கஷ்டங்களை ஷேர் பண்ணியிருக்கா. சின்ன வயசுல அவளுக்கு மஞ்சள் காமாலை அதிகமாகி டாக்டர்ஸ்  காப்பாற்றவே முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம். 'ஆனாலும், எனக்குச் சரியாயிடும்னு நம்பிக்கையோடு போராடி பிழைச்சேன்'னு சொல்லியிருக்கா. டியூஷன் சொல்லிக் கொடுத்துதான் அவளுடைய காலேஜ் ஃபீஸ் கட்டிருக்கா. ரொம்பவே கஷ்டப்பட்டுத்தான் இந்த உயரத்துக்கு வந்திருக்கா. ரொம்ப ஸ்ட்ராங்கான பொண்ணு. கணவன் - மனைவிக்குள்ளே என்ன நடந்ததுன்னு தெரியலை. கடந்த இரண்டு மணி நேரமா `வம்சம்' டீம் நண்பர்கள் முழுக்க பிணவறை வாசலில் நின்னுட்டிருக்கோம். அவள் ஃபேமிலியைச் சேர்ந்தவங்க மதுரையில் இருக்காங்க. அவங்க வந்து கையெழுத்து போட்டதுக்கு அப்புறம்தான் போஸ்ட் மார்ட்டமே  ஆரம்பிப்பாங்க. இன்னைக்கு அவள் முகத்தைப் பார்க்கவே முடியாதுன்னு நினைக்கிறப்போ அழுகையா வருது. பிரியங்கா கண்ணுக்குள்ளவே நிக்கிறா. நாலு வருஷம் ஃபேமிலியா வாழ்ந்திருக்கோம். போன மாசம் திறந்த பொட்டிக் ஷாப்புக்கு சந்தோஷமா போய்ட்டு வந்தோம். சட்டென ஏதோ ஒரு கோபத்தில் இந்த முடிவை எடுத்திருக்கணும். முந்தாநாள்கூட எங்ககிட்ட பேசினா. ஒருநாள் விட்டு ஒருநாள் வாட்ஸ்அப் குரூப்ல பேசிப்போம். நேற்று பேசியிருந்தால்கூட இந்த முடிவை எடுத்திருக்க மாட்டாளோன்னு தோணுது. மாமா, மாமான்னு அவ கணவர் பற்றி சொல்லிட்டே இருப்பா. ரெண்டு பேரும் க்யூட் ஜோடி. அவ்வளவு அன்பா இருந்தாங்க. என்ன நடந்துச்சுன்னு தெரியாமல் குழப்பத்தில்தான் இருக்கோம். இந்த இறப்பை எங்களால் சுலபமா கடந்துட முடியாது'' என்றார்.

ஏப்ரல் 19, 2016 அவள் விகடனில், 'கேபிள் கலாட்டா' பகுதிக்கு பிரியங்கா கொடுத்த இன்டர்வியூவிலிருந்து...

``மதுரைப் பொண்ணு நான். டென்த்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட். பி.எஸ்ஸி., ஃபிசிக்ஸ் முதல் வருஷம் படிச்சுட்டிருந்தப்போ, லோக்கல் சேனலில் ஆங்கரிங் பண்ண ஆரம்பிச்சேன். பாரதிராஜா சாரின் ‘அன்னக்கொடி’ படத்தின் ஷூட்டிங்கை பார்க்கப்போக, அதில் எனக்கும் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். மதுரையில் இருந்துகிட்டே சென்னையின் சேனல்ஸுக்கு ட்ரை பண்ணிட்டிருந்தேன். இமயம், கேப்டன் என வாய்ப்பு கிடைச்சது. காலேஜ் படிச்சுட்டிருந்ததால், சனிக்கிழமை சென்னை வந்து நாள் முழுக்க ஷூட் முடிச்சுட்டு, சண்டே மதுரைக்கு பஸ் ஏறிடுவேன். படிப்பு முடிஞ்சதும் சென்னைப் பயணம். 

ஜீ தமிழ் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, சன் டி.வி ‘அழகி’, விஜய் டி.வி ‘சரவணன் மீனாட்சி’ சீரியல்னு சேனல் ஏரியாவுக்குள்ளே வந்து, இப்போ சன் டி.வி-யின் ‘வம்சம்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘பைரவி’, ராஜ் டி.வி-யில் ஒரு சீரியல்னு பிஸியா நடிச்சுட்டிருக்கேன். ‘வம்சம்’ சீரியல் ‘ஜோதிகா’ கேரக்டர்தான், எனக்கான அடையாளத்தை வாங்கிக்கொடுத்துச்சு. ஐ.ஏ.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி  `குரூப் 1' எக்ஸாமுக்கு சீரியஸா படிச்சுட்டிருக்கேன். எப்பவும் புக்கும் கையுமாதான் இருப்பேன்!''

தற்கொலை எதற்குமே தீர்வாகாது!