Published:Updated:

`ஆதித்யா' அர்ச்சனா... நடிகை... தொகுப்பாளினி... பாடகி... இப்போ பிசினஸ் உமன்!

`ஆதித்யா' அர்ச்சனா... நடிகை... தொகுப்பாளினி... பாடகி... இப்போ பிசினஸ் உமன்!
`ஆதித்யா' அர்ச்சனா... நடிகை... தொகுப்பாளினி... பாடகி... இப்போ பிசினஸ் உமன்!

"'ஆதித்யா'வில் ஆங்கரிங் பண்ணும்போது எனக்குன்னு சில காலர்ஸ் இருப்பாங்க. அவங்க ஹலோ சொன்னதுமே கண்டுபிடிச்சிருவேன். அவங்க எல்லாரையும் அதிகமா மிஸ் பண்றேன்."

'ஆதித்யா' டிவியின் முக்கியமான தொகுப்பாளர்களில் ஒருவர், அர்ச்சனா. துள்ளல் நிறைந்த இவரது குரலுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது. தற்போது, பிசினஸ் வுமனாக களமாடி வருகிறார். ஆதித்யா நிகழ்ச்சியில் கலக்கியது, தற்போது செய்துகொண்டிருக்கும் பிசினஸ் என அர்ச்சனாவுடன் சில நிமிடங்கள்...

``அம்மா, அப்பாதான் என் பலம். வீட்டில் என் குழந்தைகளை அவங்கதான் பார்த்துக்கிறாங்க. என் கணவர் சவுண்ட் இன்ஜினீயர். ஒருவரை ஒருவர் நல்லா புரிஞ்சு வச்சிருக்கோம். என் விருப்பத்துக்கு அவர் எந்தத் தடையும் சொன்னதில்லே. குடும்பத்தைவிட்டு புரொபஷனலுக்காக வெளியில் போகும்போது, என் குழந்தைகள் பற்றிக் கவலையில்லாமல் இருக்கேன்னா, இவங்கதான் காரணம். இப்படியான சப்போர்ட் ஃபேமிலிக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். நிறைய பேருக்கு என்னை வீஜே அர்ச்சனாவா மட்டுமே தெரியும். ஆனால், வீஜேக்கு முன்னாடியே சின்னத்திரை நடிகையாக அறிமுகமானேன். பாலசந்தர் சாரின் `அண்ணி', என் முதல் சீரியல். மீடியா என்ட்ரி சீரியல் மூலமா ஆரம்பிச்சது. நிறைய சீரியல்ஸ் நடிச்சேன். 'திருமதி செல்வம்' சீரியலுக்கு அப்புறம் பர்சனல் விஷயங்களுக்காகப் பிரேக் எடுத்தேன்'' என்றவரிடம், 'ஆங்கரிங் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?' எனக் கேட்கவும் குரலில் குஷி கூடுகிறது.

``முதல் குழந்தை பிறந்த சமயம். சீரியல்ன்னா ஷூட்டிங்குக்கு நிறைய டைம் கொடுக்கணும். குழந்தையைப் பார்த்துக்க முடியாது. அதனால், ஆங்கரிங் பண்ணலாம்னு முடிவெடுத்தேன். ஆங்கரிங் பற்றி எதுவும் தெரியாதுன்னாலும் டிரை பண்ணி பார்ப்போமேன்னு இறங்கினேன். ஆதித்யா டிவி-யில் வாய்ப்பு கிடைக்க, பின்னியெடுத்துட்டேன். கிட்டத்தட்ட 8 வருஷம், அந்தச் சேனலில் ஆங்கரிங் பண்ணினேன். இரண்டாவது குழந்தை டெலிவரிக்காக, ஆங்கரிங்கையும் விட வேண்டியதாச்சு. அதனால், ஆதித்யாவிலிருந்து விலக வேண்டியதாச்சு. அப்புறமும் வீட்டில் சும்மா இருக்க பிடிக்கலை. என் அம்மாதான், 'ஃபேஷன் டிசைனிங் கிளாஸுக்குப் போகலாமே'னு ஐடியா கொடுத்தாங்க. எம்பிராய்டரி, ஆரி வேலைப்பாடு எல்லாம் கத்துக்கிட்டேன். கேமல்கார்ட் (Camelkart) என ஒரு பொட்டிக் ஆரம்பிச்சு, ஒரு வருஷமா சக்ஸஸ்ஃபுல்லா நடத்திட்டிருக்கேன். நமக்குப் பிடிச்ச வேலையைப் பண்றதே வேற மாதிரியான ஃபீலீங்'' எனச் சிலிர்த்தவர், ஆங்கரிங் பயணம் பற்றி தொடர்ந்து பகிர்ந்தார்.

``இப்பவும் ஆங்கரிங் பண்ண வாய்ப்பு தேடிட்டுதான் இருக்கேன். 'ஆதித்யா'வில் ஆங்கரிங் பண்ணும்போது எனக்குன்னு சில காலர்ஸ் இருப்பாங்க. அவங்க ஹலோ சொன்னதுமே கண்டுபிடிச்சிருவேன். அவங்க எல்லாரையும் அதிகமா மிஸ் பண்றேன். டெலிவரிக்குப் பிறகு நான் நடிச்ச சீரியல் 'கல்யாணப் பரிசு'. அதைத் தொடர்ந்து, பெரிய வாய்ப்புகள் அமையலை. விஜய் டிவியில், 'சிரிப்புடா' நிகழ்ச்சி பண்ணேன். சீரியலோ ஆங்கரிங்கோ இப்பவும் நான் ரெடி. மீடியா என் ரத்தத்தில் ஊறினது. அதை அவ்வளவு சீக்கிரம் விட்டுட முடியாது. நடிப்பு, ஆங்கரிங் தவிர்த்து நான் ஒரு சிங்கரும். என் பாடல்களைக் கேட்கும் சிலர், 'என் மியூசிக்ல நீங்க ஒரு பாட்டு பாடுங்க'னு சொல்வாங்க. அதுக்கப்புறம் மறந்துடுவாங்க. நானா யாரையும் வாய்ப்புக் கேட்டு தொந்தரவு பண்றதில்லே. அதனால், சினிமாவில் பாட்டு பாடும் வாய்ப்பும் அமையலை. என் பொட்டிக்கை அடுத்தகட்டத்துக்கு கொண்டுபோகணும். சீரியலிலோ தொகுப்பாளரகவோ ரீஎன்ட்ரி கொடுக்கணும். இப்போதைக்கு பிளான் இதுதான்'' எனப் புன்னகையுடன் கூறுகிறார் அர்ச்சனா. 

அடுத்த கட்டுரைக்கு