Published:Updated:

``டி.வியும் சினிமாவும் என்னை மறந்திடுச்சு!'' - `தென்றல்' ஜெயலட்சுமி

``நான் ஃபீல்ட் அவுட் ஆகலை. பிரேக் எடுக்கவும் இல்லை. மறுபடியும் நல்ல புராஜெக்ட்ல நடிக்க ஆவலா இருக்கேன்."

``டி.வியும் சினிமாவும் என்னை மறந்திடுச்சு!'' -  `தென்றல்' ஜெயலட்சுமி
``டி.வியும் சினிமாவும் என்னை மறந்திடுச்சு!'' - `தென்றல்' ஜெயலட்சுமி


 

``நான் ஃபீல்ட் அவுட் ஆகலை. பிரேக் எடுக்கவும் இல்லை. மறுபடியும் நல்ல புராஜெக்ட்ல நடிக்க ஆவலா இருக்கேன்" எனப் புன்னகையுடன் பேசுகிறார், நடிகை கே.எஸ்.ஜெயலட்சுமி. சினிமா, சீரியல்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லி ரோல்களில் புகழ்பெற்றவர்.

`` `தென்றல்' சீரியலுக்குப் பிறகு உங்களைப் பரவலாகப் பார்க்கமுடியலையே..."

``அதற்கான காரணத்தை நானும் பலமுறை யோசிச்சாச்சு. போன வருஷம் `வம்சம்' சீரியல்ல நடிச்சுட்டிருந்தப்போ, என் பொண்ணுக்கு ரெண்டாவது குழந்தைப் பிறந்துச்சு. அதனால், நடிப்புக்குக் கொஞ்சம் பிரேக் எடுத்தேன். சில மாசத்திலேயே நடிக்கத் தயாராகிட்டேன். ஆனா, என்னை சினிமா மற்றும் சின்னத்திரையினர் மறந்துட்டாங்க. இதுவரை வாய்ப்பே வரலை."

``40 ஆண்டுகள் ஆக்டிங் பயணத்தைத் திரும்பிப் பார்க்கிறப்போ என்ன தோணுது?"

``அதுக்குள்ள 40 வருஷமாகிடுச்சா? (சிரிக்கிறார்). அதெல்லாம் ஒப்புக்க முடியாது. நான் இன்னும் இளமையாத்தான் இருக்கேன். எல்லாவிதமான ரோல்களிலும் நடிப்பேன். சின்ன வயசுல டான்ஸ் கத்துக்கிட்டேன். அப்போ நல்ல கலரா அழகா இருப்பேன். பெற்றோர் என்னை போட்டோ எடுக்க நினைச்சாங்க. நாகராஜ ராவ் என்ற பெரிய போட்டோகிராபர் அழகா போட்டோ எடுத்தார். அந்த போட்டோவை சினிமா துறையினர் பார்த்திருக்காங்க. படிப்படியா சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. ஒரு கன்னடப் படத்தில் ஹீரோயினா அறிமுகமானேன். அடுத்து, `எதற்கும் துணிந்தவன்' படத்தில் சிவகுமார் சாருக்கு ஜோடி எனப் பல படங்களில் ஹீரோயினா நடிச்சேன். 1983-ம் வருஷம், முதல்வர் எம்.ஜி.ஆர், ஈரோட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டார். அவர் முன்னிலையில் டான்ஸ் ஆடி பாராட்டுப் பெற்றேன். கல்யாணமாகி குழந்தைப் பிறந்ததும், ஹீரோயின் வாய்ப்பு வரலை. கவர்ச்சிப் பாட்டுக்கு டான்ஸ் ஆடச் சொன்னாங்க. வேணாம்னு மறுத்துட்டு, மூணு வருஷம் மேடை நாடகங்களில் நடிச்சுட்டிருந்தேன். பிறகு, கேரக்டர் மற்றும் காமெடி ரோல்கள் வர, சந்தோஷமா நடிச்சேன். நடிப்பு, குடும்பம்னு இவ்வளவு வருஷம் வாழ்ந்தாச்சு."

``நெகட்டிவ் ரோல்களிலேயே அதிகமா நடிச்சீங்களே..."

``என் சினிமா ரீ-என்ட்ரி வில்லி ரோல் மூலமாகத்தான் தொடங்கிச்சு. `மூடுபனி' படத்தில் வில்லியா நடிக்கவெச்சார், பாலு மகேந்திரா சார். தொடர்ந்து நெகட்டிவ் ரோல்தான் அதிகம் வந்துச்சு. சீரியல்களிலும் பெரும்பாலும் நெகட்டிவ் ரோல்தான். ஆடியன்ஸ்கிட்ட நிறைய திட்டு வாங்கிட்டேன். மலையாளம் போன்ற சில மொழிகளில் ஒரு நடிகைக்குப் பல வெரைட்டி ரோல்கள் கிடைக்கும். ஆனா, தமிழில் ஒரு கேரக்டர்ல நடிச்சு ஹிட் ஆகிட்டா, அதேமாதிரியான ரோல்களே கொடுக்கிறாங்க. அந்த நிலை மாறணும். அப்புறம், காமெடி ரோல்கள் வந்துச்சு. கிளாமரா நடிக்கிறதுக்கு, காமெடி ரோல் எவ்வளவோ மேல். அதில் எனக்கு ரொம்பவே பெருமையுண்டு. அப்படி, கவுண்டமணி, செந்திலுடன் பல படங்களில் காமெடி கேரக்டரில் நடிச்சேன்."  என்றவர் நடிகர் ரஜினிகாந்தை காலா பட செட்டில் சந்தித்து செல்ஃபி எடுத்து வந்திருக்கிறார்.

``சீரியல் ஆக்டிங் பற்றி..."

``தூர்தர்ஷனின் பல சீரியல்களில் நடிச்சேன். அதில், முதன்முதல்ல டூயல் ரோலில் நடிச்சதும் நான்தான். கே.பாலசந்தர் சாரின் பல சீரியல்களிலும் நடிச்சேன். விகடன் சீரியல்களில் தொடர்ச்சியா நடிச்சு ஃபேமஸானேன். சினிமாவைவிட சீரியல்களே எனக்கு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் கொடுத்துச்சு. மறக்கமுடியாத ஒரு மெமரீஸைச் சொல்றேன். `அண்ணாமலை' சீரியலில் நெகட்டிவ் ரோல். கிட்டத்தட்ட 40 எபிசோடுகள் வரை டயலாக் பேசாமலே நடிச்சிருப்பேன். அப்போ ஒரு அவார்டு ஃபங்ஷனுக்குப் போயிருந்தேன். அதில் கலந்துகிட்ட எல்.ஆர்.ஈஸ்வரி, `ஜோதிலட்சுமிக்குத் தண்ணி ஏதாச்சும் ஊத்திக்கொடுக்கிறீங்களா? நீங்க சொல்றபடி அப்படியே நடந்துக்கிறாங்க'னு விளையாட்டா கேட்டாங்க. `தொடர்ந்து சீரியலைப் பார்த்துட்டே இருங்க. பதில் தெரியும்'னு சொன்னேன். `தென்றல்' சீரியலில் வில்லி பிளஸ் காமெடி என ரெண்டு ஜார்னரிலும் நடிச்சேன்" என்கிறார் ஜெயலட்சுமி.