Published:Updated:

``சீரியல்ல மட்டுமா, நிஜத்திலும் அவமானம்தான் மிஞ்சியது!" - `நிறம் மாறாத பூக்கள்' ரவி

``சீரியல்ல மட்டுமா, நிஜத்திலும் அவமானம்தான் மிஞ்சியது!" - `நிறம் மாறாத பூக்கள்' ரவி
``சீரியல்ல மட்டுமா, நிஜத்திலும் அவமானம்தான் மிஞ்சியது!" - `நிறம் மாறாத பூக்கள்' ரவி

`நிறம் மாறாத பூக்கள்' தொடரில் அவமானப்படுத்தப் பட்டதாகச் சொல்கிறார், நடிகர் ரவி

ட்விஸ்டுகளுக்காக கதை தாறுமாறாகப் பயணிப்பது சீரியல்களில் புதிதல்ல. ஆனால், நடிகர் ஒருவர், நிஜமாகவே ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் அவமானப்படுத்தப்பட்டது மட்டுமன்றி, சீரியலிலும் தன் கேரக்டரை `அவமானத்தால் ஊரை விட்டு வெளியேறியது போல' காட்டி விட்டார்கள் எனக் குமுறுகிற விவகாரம் இது. நடிகை நீலிமா ராணி தயாரிப்பில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் `நிறம் மாறாத பூக்கள்' தொடரில்தான் இது நடந்திருக்கிறது. என்ன நடந்தது? பாதிக்கப்பட்டதாகச் சொல்லும் நடிகர் ரவியிடமே பேசினோம். 

(ரவி தற்போது `சரவணன் மீனாட்சி' தொடரில் சரவணனின் (ரியோ) அப்பாவாக நடித்து வருகிறவர். `செல்லமே', `வாணி ராணி' என சில சீரியல்களிலும், `சண்டியர்', `பாஸ் என்கிற பாஸ்கரன்', `மெட்ராஸ்', `கபாலி' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்)

``சீரியல் தொடங்கினப்போ, ரெண்டு ஹீரோயின்கள்ல ஒரு ஹீரோயினோட அப்பா கேரக்டர் இருக்கு. நீங்க பண்ணா நல்லா இருக்கும்னு கேட்டாங்க. கதை சென்னையிலேயும் நாகர்கோவில்லேயும் நடக்கிற மாதிரி இருக்கும்னும் சொன்னாங்க. அப்போவே `நாகர்கோவில்ல வசிக்கிற ஹீரோயின், சென்னைக்கு ஷிஃப்ட் ஆவாங்கனு சொல்றீங்க; அதுக்குப் பிறகு என் கேரக்டர் என்னாகும்?'னு கேட்டேன். கூடவே, `இருபது முப்பது எபிசோடுக்கு மட்டும்தான் நான் இருப்பேன்னா, எனக்கு இந்த வாய்ப்பே வேண்டாம்'னும் சொன்னேன்.

அதுக்கு, சீரியலோட இயக்குநரும், தயாரிப்பாளருக்கும் எனக்கு சொன்ன பதில், `அப்படியில்ல... உங்க பொண்ணு சென்னையில இருக்கிற விஷயம் உங்களுக்குத் தெரியவரும். உடனே நீங்களும் உங்க மனைவியுடன் கிளம்பி சென்னைக்கு வந்திடுவீங்க. அதுக்குப் பிறகு தொடர்ந்து உங்க டிராக் இருக்கும். இடையில இருபது எபிசோடுகளுக்கு மட்டும்தான் நீங்க வரமாட்டீங்க!'னு சொன்னாங்க.

அவங்களோட இந்த வார்த்தைகளை நம்பி, எனக்கு வந்த மற்ற சில வாய்ப்புகளையெல்லாம்கூட ஏத்துக்காம, இந்த சீரியல்ல கமிட் ஆனேன். ஆனா, சீரியல் தொடங்கி 15 எபிசோடு போச்சு. `விஷ்ணுப்ரியா' என்ற என் பொண்ணு கேரக்டர் சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டுக் கிளம்பி, காதலனைத் தேடி சென்னைக்குப் போயிட்டதா காட்டினாங்க. அந்தநாள்ல இருந்து எனக்கும் ஷூட் இல்லை. `இருபது எபிசோடு இருக்கமாட்டீங்கனு சொன்னாங்களே'னு நானும் ஏதும் கேட்காம, வெயிட் பண்ணேன். ஆனா, நாள்கள் கடந்துபோனதே தவிர, என்னைக் கூப்பிடவே இல்லை. என்ன ஏதுனு விசாரிக்கலாமேனு போன் பண்ணா, யாரும் எடுக்கிறதே இல்லை. ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே நேரடியா போயிட்டேன். டைரக்டர் அங்கே இருந்தார். ஆனாலும், `அவரு ஸ்பாட்ல இல்லை'னு சொல்லி அவமானப்படுத்தி அனுப்பிட்டாங்க.

கொஞ்சநாள்ல `பொண்ணு வீட்டை விட்டு ஓடிப்போன சோகத்துல அந்தக் குடும்பம் ஊரைவிட்டே வெளியேறிடுச்சு'னு லாஜிக்கா சீரியலை மாத்திட்டாங்க. இப்போ சீரியல் 200 எபிசோடுகளைக் கடந்து போயிட்டிருக்கு. நான் தெளிவா கேட்டப்பவே, இருபது எபிசோடு வரைக்கும்தான் நீங்க இருப்பீங்கனு சொல்லியிருந்தா, நான் இந்த சீரியல்ல கமிட் ஆகியிருக்கவே மாட்டேனே! எதுக்கு என்னை கமிட் பண்ணி அவமானப்படுத்தணும்?! ஒருவேளை, என் கேரக்டர் சீரியலுக்குத் தேவையில்லாம போனா, அதை நல்லவிதமாகூட முடிச்சிருக்கலாம். அதுவுமில்லாம, என்ன ஏதுனு கேட்டா பதில்கூட சொல்லாம ஏன் இப்படி நடந்துக்கணும்?" எனக் குமுறுகிறார், நடிகர்  ரவி.

ரவியின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து தொடரின் தயாரிப்பாளரான நீலிமா ராணியிடம் கேட்டதற்கு, ``கதையின் போக்குக்கு ஏத்தபடி சீரியல் போய்க்கிட்டு இருக்கு. அவரோட கேரக்டர் இனி சீரியல்ல வரவே வராதுனு எப்படி அவர் முடிவுக்கு வந்தார்னு தெரியலை!" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு