Published:Updated:

''என்னை மம்மினு கூப்பிடுவா... இப்போ வாய்க்கரிசி போட்டுட்டேனே!’’ - பிரியங்கா பற்றி ஸ்வேதா

''என்னை மம்மினு கூப்பிடுவா... இப்போ வாய்க்கரிசி போட்டுட்டேனே!’’  - பிரியங்கா பற்றி ஸ்வேதா
''என்னை மம்மினு கூப்பிடுவா... இப்போ வாய்க்கரிசி போட்டுட்டேனே!’’ - பிரியங்கா பற்றி ஸ்வேதா

ரு மாடலாக மீடியாவில் பயணத்தை ஆரம்பித்து, 20 வருடங்களாக சீரியலில் நடிப்பவர், ஸ்வேதா. 'அண்ணாமலை' சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது, 'செம்பருத்தி', 'ரோஜா' போன்றவற்றில் நடித்துக்கொண்டிருப்பவருடன் ஒரு சந்திப்பு...

''நான் பிறந்தது மும்பை. ஆனால், படிச்சு வளர்ந்தது எல்லாமே சென்னைதான். 19 வயசிலேயே மீடியாவில் என்ட்ரி ஆகிட்டேன். 1998-ல் மாடலிங் பண்ணிட்டிருந்தேன். சின்னச் சின்ன விளம்பரங்களில் நடிச்சேன். தொடர்ந்து, ராஜ் டிவியில் ஆங்கரிங். அப்போதான், சீரியல் வாய்ப்பு கிடைச்சது. பொதிகை தொலைக்காட்சியின் 'உறவுகள் ஒரு தொடர்கதை', என் முதல் சீரியல். நிறைய சீரியல்களில் நடிச்சாச்சு. சன் டிவியின் 'அண்ணாமலை', எனக்கு நல்ல ரீச் கொடுத்துச்சு. இப்போ நடிச்ச 'வம்சம்' சீரியலும் ஹிட். மீடியாவிலேயே டிராவல் பண்றது எனக்குப் பிடிச்சிருக்கு'' என்ற ஸ்வேதா, பர்சனல் விஷயங்கள் பக்கம் சென்றார்.

''என் கணவர் பெயர், தமிழ் பாரதிராஜன். நிறைய சீரியலை இயக்கியிருக்கார். விஜய் டிவியின் 'பைரவி' சீரியலில் நடிச்சபோது அதில் அவர் ஒர்க் பண்ணினார். காதல் வந்துச்சு. பெற்றோர்கள் சம்மதத்துடன் கல்யாணம். எங்களுக்கு ரெண்டு பசங்க. 11-ம் வகுப்பும், 2-ம் வகுப்பும் படிக்கிறாங்க. சீக்கிரமே என் கணவர் வெள்ளித்திரையிலும் தடம் பதிக்கப்போறார். 'பிருந்தா' மாஸ்டர்கிட்டதான் நான் டான்ஸ் கத்துக்கிட்டேன். 'மானாட மயிலாட' சீசன் 1 & 2-வில் டான்ஸ் ஆடியிருக்கேன். சீரியலில் பிஸியானதால், ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக்க முடியலை. கேட்டரிங்கும் படிச்சிருக்கேன். நான் சமைக்கும் நாட்டுக்கோழி ரசம், என் வீட்டுக்காரருக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்'' என்கிறார்.

''சினிமா வாய்ப்பும் வந்துச்சு. ஆனால், என் பசங்களைப் பார்த்துக்கணும். அதனால், அவுட் டோர் ஷூட் வரமுடியாது. சென்னைக்குள்ளே எங்கேன்னாலும் ஓகே என இருந்தேன். அதனால், நிறைய வாய்ப்புகளைத் தவிர்த்தேன். 'ஐந்தாம் படை', 'வீராப்பு' போன்ற சில படங்களிலும் நடிச்சிருக்கேன். 'காதல் சரிகம' என ஒரு படத்தில் ஹீரோயினா நடிச்சேன்'' என்றவரிடம், நடிகை பிரியங்கா குறித்து கேட்டதும் குரல் உடைகிறது. 

'' 'வம்சம்' சீரியலில் பிரியங்காவின் அம்மா கதாபாத்திரத்தில் நடிச்சேன். ஷூட் இல்லாத நாள்களிலும் என்னை மம்மின்னு கூப்பிடுவா. அவளை என் பொண்ணாவே நினைச்சேன். நிறைய அட்வைஸ் பண்ணியிருக்கேன். கணவன் - மனைவிக்குள் சண்டை வர்றது இயல்பான ஒன்றுதான் எனச் சொல்லியிருக்கேன். போன மாசம்தான் ஒரு பியூட்டி பார்லரை ஆரம்பிச்சா. அதுக்காகவே பியூட்டிஷியன் கோர்ஸ் படிச்சா. 'சின்னப் பொண்ணா இருந்தாலும், வாழ்க்கையைப் பிளான் பண்ணி கொண்டுபோறா' பெருமைப்பட்டோம். அந்த பார்லரின் தொடக்க விழாவில் அங்கேயும் இங்கேயும் ஓடிட்டிருந்தா. என் கையைப் பிடிச்சு, 'மம்மி... சாப்பிட்டுத்தான் போகணும்'னு சொன்னா. நானும் சாப்பிட்டதோடு, பிஸியா திரிஞ்சுட்டிருந்தவளைத் திட்டி இழுத்துவந்து, என் கையால் சாப்பாடு ஊட்டிவிட்டேன். அதுதான் கடைசியா அவளுக்கு ஊட்டிவிட்டது.

சின்ன வயசில் ரொம்ப கஷ்டப்பட்டு வளர்ந்தவள். நிறைய விஷயங்களை என்கிட்ட ஷேர் பண்ணியிருக்கா. மனக்குழப்பத்தில் இருந்திருந்தால், எங்ககிட்ட பேசியிருக்கலாம். நாங்க தீர்வு சொல்லியிருப்போம். இப்பவும் அவள் திரும்பி வந்துட மாட்டாளான்னு மனசு ஏங்குது. பிரியங்காவுக்கு அவள் மாமா மேலே உயிர். 'மாமா இல்லைன்னா செத்துருவேன் மம்மி'னு சொல்லிட்டிருப்பா. ரெண்டு பேரும் கொஞ்ச மாசமா பிரிஞ்சு  இருந்தது உண்மை. ஆனால், அவரும் இவள் மேலே உயிரா இருப்பார். எனக்குத் தெரிஞ்சு பிரியங்காவும் அருணும் நல்ல ஜோடி. எந்தப் பிரச்னையா இருந்தாலும், இப்படியொரு முடிவை எடுத்திருக்க வேண்டாம். அவளின் இறுதி காரியம் முடியும் வரை நானும் என் கணவரும் அங்கேதான் இருந்தோம். பாசத்துக்காக ரொம்ப ஏங்கியவள். 'நீ மாசமானதும் வளைகாப்பை எங்க வீட்டுல நடத்தறேன்டீ'னு சொல்லியிருந்தேன். எப்பவும் கலகலன்னு சிரிச்சு பேசும் என் பொண்ணா இப்படி பொணமா கிடக்கிறான்னு நினைச்சு மனசு அந்த இறப்பை ஏத்துக்கவே இல்லை'' என உடைந்த குரலில் முடிக்கிறார் ஸ்வேதா.