Published:Updated:

``பவித்ரா பிடியிலிருந்து வாசு விடுபடுவாரா?!" - `தேவதையைக் கண்டேன்' ஷூட்டிங்ல மீட்டிங் - 13

``பவித்ரா பிடியிலிருந்து வாசு விடுபடுவாரா?!" - `தேவதையைக் கண்டேன்' ஷூட்டிங்ல மீட்டிங் - 13
``பவித்ரா பிடியிலிருந்து வாசு விடுபடுவாரா?!" - `தேவதையைக் கண்டேன்' ஷூட்டிங்ல மீட்டிங் - 13

`தேவதையைக் கண்டேன்' சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் அரட்டை : ஷூட்டிங்ல மீட்டிங் - பகுதி 13

சினிமா, சீரியல் என வருடம் முழுக்க ஷூட்டிங் நடந்துகொண்டே இருக்கிற இடம், சென்னை வளசரவாக்கத்திலுள்ள ஏ.ஆர்.எஸ்.கார்டன். ஸ்டுடியோவின் மேற்குப் பக்கம் நீதிமன்ற செட் அமைந்திருந்த ஒரு பகுதியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது, `தேவதையைக் கண்டேன்' சீரியல் யூனிட் . `நம்முடைய இந்த வார `ஷூட்டிங்ல மீட்டிங்' லொகேஷன் இதுதான்!.

ஶ்ரீ (வாசு) ஷாமிலி (லக்ஷ்மி) மகாலக்ஷ்மி (பவித்ரா) மூவரும் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டுக்கொண்டிருந்தன. `காக்கி யூனிஃபார்மும் கறுப்பு கோட்டும் ஃபீல்டுல அங்கங்க தெரியணும்' என யூனிட்டுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு, நம் பக்கம் திரும்பிய தொடரின் இயக்குநர் ரத்தின வாசுதேவன், ``சீரியல்ல அடுத்த சில நாள்கள்ல கோர்ட், கேஸ்னு காட்சிகள் வரப்போகுது. ஹீரோ, ஹீரோயின் எல்லோருமே குற்றவாளிக் கூண்டுல நிற்கிற மாதிரி இருக்கும். இருநூறு எபிசோடு கடந்துட்ட தொடர்ல அடுத்த அதிரடிக்குத் தயாராகிட்டோம்னு சொல்லலாம்!" என்றார்.

``இருநூறு எபிசோடுகள் பயணம்... எப்படி இருந்தது?" என ஹீரோயின் ஷாமிலியைக் கேட்டோம்.

``புதுசா வந்த என்னைத் தமிழ் சீரியல் ரசிகர்கள் ஏத்துக்கிட்டாங்கனு இப்போ ஒரு முடிவுக்கு வர முடியுது. ஏன்னா, எங்க ஜோடிப் பொருத்தம் பார்த்துட்டு, `வாஸ்மி'னு சமூக வலைதளப் பக்கமே உருவாக்கியிருக்காங்க ஃபேன்ஸ். `வாசு - லக்ஷ்மி' ஜோடி ஜீ தமிழ் சேனல்ல ஒளிபரப்பாகிற மத்த எல்லா சீரியல் ஜோடிகளையும் ஓவர்டேக் பண்ணிப் போயிட்டிருக்கிறதாவும் சொல்றாங்க, சந்தோஷம் தாங்கமுடியலை. நான்கூட ஆரம்பத்துல பகல் நேரத்துல ஒளிபரப்பாகிற சீரியலுக்கு என்ன ரீச் இருக்கும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, வீட்டுல இருக்கிற ஹவுஸ் வொய்ஃப்ஸ் ஒட்டுமொத்தமா இந்த சீரியலைப் பார்க்கிறாங்க. வீட்டுக்கு நாலு மொபைல் வெச்சிருக்கிற காலம் இது. இப்போதான் `ஆப்' மூலமா எப்போவேணா சீரியலைப் பார்த்துக்கலாமே...!" - பேசிக்கொண்டே போனவர், `மறக்க முடியாத ஒரு சம்பவம் இருக்கு; சொல்லட்டுமா?' என உற்சாகமானார்.

``மனைவியைத் தவிர வேறு பொண்ணைப் பார்க்காத என் கணவரா நடிக்கிற ஶ்ரீ, மனைவி மீதான அதீத பாசத்தாலேயே அப்பப்போ சைக்கோ மாதிரி நடந்துக்குவார். அப்படி நடந்துக்கிட்ட ஒருமுறை ஒரு ஏரியில் போட்ல இருந்து என்னைத் தள்ளி விடுகிற மாதிரி ஒரு காட்சி..." என ஷாமிலி பேசிக்கொண்டிருக்கும்போதே, `இருங்க, இருங்க..' எனக் குறுக்கிட்ட ஶ்ரீ, `நான் சொல்றேன்' என்றபடி பேசத் தொடங்கினார்.

``பொண்ணுக்கு நீச்சல் தெரியாதுங்கிறது எங்க யாருக்கும் தெரியாது. நீச்சல் தெரியும்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம். கேட்டதுக்கு மழுப்பலான பதிலை சொல்லிக்கிட்டிருந்தவங்க, `ரெடி டேக்'னு சொன்னதும், நான் லேசா தள்ளிவிட்டதும் தண்ணிக்குள்ள விழுந்துட்டாங்க. சரி, நீந்தி மேலே வந்திடுவாங்கனு நாங்களும் அப்படியே இருந்தோம். திடீர்னு பார்த்தா கையைக் காலை உதறிட்டுத் தத்தளிக்கிறாங்க. `சும்மா சீன் போட்டு எல்லோரையும் ஏமாத்துறாங்க'னு நினைச்சோம். ஆனா, போகப் போகத்தான் உண்மை தெரிஞ்சது. நாங்க கொஞ்சம் அசந்திருந்தோம்னா, தண்ணிக்குள்ள போயிருப்பாங்க!" என ஶ்ரீ நிறுத்த, ஷாமிலியைப் பார்த்தோம்.

``நீச்சல் தெரியாதுனு அந்த இடத்துல சொல்லத் தயக்கமா இருந்தது. அதேநேரம், நீச்சல் தெரியாம தண்ணிக்குள்ள விழுந்தோம்னா, சீன் ரியலா இருக்கும்ல!'னு நினைச்சேன். சுத்தி பலபேர் இருக்கிறப்போ விட்டுடுவாங்களா'ங்கிற தைரியமும் உத்வேகம் தர, அந்த நொடிக்குத் தயாரானேன்!" என்றார் அவர்.

``என்ன இங்கே, மீட்டிங்? ஹீரோ, ஹீரோயின்கூட மட்டும்தான் பேசுவீங்களா, சீரியல்ல வில்லியோட வெயிட் தெரியாதா?" என்றபடி லன்ச் முடித்துவிட்டு நம் மீட்டிங்கில் ஐக்கியமானார், தொடரின் வில்லி மகாலக்ஷ்மி. சில நாள்களுக்கு முன் `தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஐயா பேருக்கு அர்ச்சனை' என்ற தமிழக அரசின் விளம்பரம் மூலம் வைரலானவர்.

`அவங்கள்ல நீங்க?' என்றோம்.

``ஹலோ நான் மியூசிக் சேனல் தொகுப்பாளினியா டிவிக்கு வந்தேன். பிறகு சீரியல் பக்கம் வந்து நிறைய தொடர்கள்ல நடிச்சுட்டேன். உங்களுக்குகூட 'அர்ச்சனை' விளம்பரம்தான் ஞாபகத்துக்கு வருதில்ல.." என முறைத்து விட்டு, ``அதென்னவோ தெரியலீங்க, இப்பெல்லாம் நெகட்டிவ் கேரக்டருக்கு மட்டுமே என்னைக் கூப்பிடுறாங்க. என்னோட டிவி அனுபவத்துல வில்லி கேரக்டருக்கு இருக்கிற வெயிட் பத்தி நல்லாவே தெரியும்கிறதால இருந்துட்டுப் போகட்டும்னு நானும் கமிட் ஆகிடுறேன்." என்றார்.

`தொடர்ந்து நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வந்தால், அந்த எஃபெக்ட் வீட்டிலும் எதிரொலிப்பதாக வில்லி நடிகைகள் சிலர் கூறுகிறார்களே!' எனக் கேட்டோம்.

``அதெல்லாம் சும்மாங்க. தொழில் வேறு. வாழ்க்கை வேறு இல்லையா... ஆறு மணிக்கு ஷூட்டிங் பேக் பண்ணிட்டா ஃபேமிலி, கணவர், பசங்கதான் உலகம். என்னைப் பொறுத்தவரை இதுதான்!. மத்தபடி, நீங்க சொல்றதெல்லாம் சும்மா ஹம்பக்னுதான் சொல்வேன்!."

`இப்படிப் பேசுற இந்தத் துணிச்சல் உங்க குணமா?' என்றதும், `யா யா..' எனத் தலையாட்டினார்.

`தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஐயா பேருக்கு அர்ச்சனை'ங்கிற அந்த விளம்பரம்...' நாம் முடிப்பதற்குள் குறுக்கிடுகிறார்.

``ஏங்க நீங்களே சொல்லுங்க... இன்னைக்கும் நம்ம முதல்வர் அவர்தானே!. அரசு விளம்பரம்னா முதல்வரைப் போற்றித்தான் இருக்கும். ஒரு ஆர்ட்டிஸ்டா அதுல நடிக்கக் கேட்டா, நடிக்கிறதுல என்ன தப்பு? அந்த விளம்பரத்துல நான் டயலாக்கூட பேசலை. ரெண்டு செகண்டு  வந்து சும்மா சிரிச்சுட்டுப் போனேன். அதுக்கு ஏக களேபரம் பண்ணி, கடைசியில விளம்பரத்தையே நிறுத்துற அளவுக்குப் பண்ணிட்டாங்க. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்." என நம்மைக் கேட்டவரிடம், `அந்த நாள்களில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சக ஆர்ட்டிஸ்ட் என்ன சொன்னார்கள்?' என்றோம்.

``அந்த விளம்பரம் வெளியான மறுநாள் ஷூட்டிங் ஸ்பாட்ல நுழைஞ்சதுமே, எல்லோரும் என்னைச் சுத்திக் கூடிட்டாங்க. சிலர் உண்மையான அக்கறையுடன் `கொஞ்சம் கேர்ஃபுல்லா இரும்மா'னு சொன்னாங்க. சிலர், `விடு விடு, இதெல்லாம் பப்ளிசிட்டிதான்'னு சொன்னாங்க. மத்தபடி, `ஏன் அதுல நடிச்சீங்க?'னு எல்லாம் யாரும் கேட்கலை. இப்போவும் ஒரு விஷயத்தை கிளியரா சொல்ல விரும்புறேன். இனி ஒருமுறைகூட அந்த மாதிரி விளம்பரத்துல நடிக்கக் கூப்பிட்டா நான் தயங்க மாட்டேன். ஏன்னா, நடிப்பு என் தொழில்." என்கிறார்.

மதியத்துக்குப் பிந்தைய ஷூட்டிங் தொடங்குவதற்கு முன், ஹீரோ ஶ்ரீயை ஓரங்கட்டினோம்.

``இந்த சீரியலைப் பொறுத்தவரை எனக்கும் ஹீரோயினுக்கும் கெமிஸ்ட்ரி செமயா வொர்க் அவுட் ஆகியிருக்கு. `கெமிஸ்ட்ரி'னு சொன்னதும் எதையாச்சும் நினைச்சிடாதீங்க. கெமிஸ்ட்ரிங்கிறது ஒருத்தருக்கு ஒருத்தர் ஸ்பேஸ் கொடுத்து நடிக்கிறாங்க என்பதுதான். அப்படி நடிக்கிறப்போ எந்த சீரியலுமே பிச்சுக்கிட்டுதான் போகும்." என்றவர், இந்தத் தொடரைப் பொறுத்தவரைக்கும் ஆரம்பத்துல வந்த வாசுவைத்தான் மக்கள் அதிகம் விரும்புறாங்க. அந்த வாசு மறுபடியும் வருவாராங்கிறது இயக்குநருக்குத்தான் வெளிச்சம்." என்கிறார்.

அடுத்த ஷெட்யூலுக்குத் தயாராகிக்கொண்டிருந்த இயக்குநர் ரத்தின வாசுதேவனிடம், தொடரில் `அடுத்து என்ன திருப்பம்?' என்றோம்.

``வாசு, லக்ஷ்மி, பவித்ரா... இவங்க மூணு பேரை சுத்தித்தான் மொத்தக் கதையும் நடக்குது. வில்லி பவித்ராவுடன் ஒரே காரில் திருச்சிக்குக் கிளம்புகிற வாசு, பத்திரமா வீடு திரும்பணும்னு லக்ஷ்மி சாமி கும்பிட்டபடி இருக்க, திருச்சி போற வழியிலேயே நிறைய வில்லத்தனங்களைப் பண்றாங்க, பவித்ரா. பவித்ரா பிடியிலிருந்து வாசு விடுபடுவாரா என்பதே பெரிய எதிர்பார்ப்பா இருக்கிறப்போ, ஹீரோயினைச் சம்பந்தப்படுத்தி ஓர் அதிர்ச்சியான சம்பவம் நடக்குது. அதாவது, ஒரு கொலை வழக்கு. ஹீரோயின் யாரை எதற்கு கொலை செய்கிறார், அவருக்குத் தண்டனை கிடைக்குதா, ஹீரோயின் மேல அதீதப் பாசம் கொண்ட ஹீரோ மனைவியைக் காப்பாத்த என்ன செய்கிறார்... இதெல்லாம்தான் அடுத்தடுத்த நாள்கள்ல வர்றதால, இனி தொடர்ல நிறைய ட்விஸ்டுகளை எதிர்பார்க்கலாம்!" என்கிறார், இயக்குநர்.

அடுத்த வாரம் வேறொரு ஷூட்டிங் ஸ்பாட்டில்... மீட்டிங்!

அடுத்த கட்டுரைக்கு