Published:Updated:

`` `பிக்பாஸ்’ ரித்விகா மாதிரி இருக்கேன்னு சொல்லாதீங்க ப்ளீஸ்!’’ - `சின்னதம்பி’ ஹேமா

`` `பிக்பாஸ்’ ரித்விகா மாதிரி இருக்கேன்னு சொல்லாதீங்க ப்ளீஸ்!’’ - `சின்னதம்பி’ ஹேமா
`` `பிக்பாஸ்’ ரித்விகா மாதிரி இருக்கேன்னு சொல்லாதீங்க ப்ளீஸ்!’’ - `சின்னதம்பி’ ஹேமா

நியூஸ் ரீடராக அறிமுகமானவர் ஹேமா. சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்குபவர். தற்போது, விஜய் டிவியின் 'சின்னதம்பி' சீரியலில் செகன்ட் லீடாக நடித்துவருகிறார். அவருடன் ஒரு பர்சனல் சாட்!


 

``சொல்லுங்க உங்க  மீடியா பயணம் எப்படி ஆரம்பிச்சது?’’

``என் சொந்த ஊர், மயிலாடுதுறை. மேற்படிப்புக்காகச் சென்னைக்கு வந்தேன். மீடியா ஆர்வம் அதிகம் இருந்ததால், எம்.சி.ஏ படிச்சுக்கிட்டே டிரை பண்ணிட்டிருந்தேன். மூன்றாம் ஆண்டு படிக்கும்போதுதான், நியூஸ் ரீடர் வாய்ப்பு கிடைச்சது. இப்படித்தான் என் பயணம் ஆரம்பிச்சது.’’

``நியூஸ் ரீடர் டு சின்னத்திரை நடிகை... எப்படி நடந்துச்சு?’’

``எனக்கு வீஜே ஆகணும்னு ஆசை இருந்துச்சு. நியூஸ் ரீடிங் அனுபவம், அதுக்கு கை கொடுத்துச்சு. நியூஸ் ரீடரா இருக்கும்போது, `ஆபீஸ்' சீரியலில் வாய்ப்பு வந்துச்சு. ஆரம்பத்தில் சுத்தமா நடிக்கத் தெரியாது. இயக்குநர் பிரம்மா சார்தான் நடிப்பு சொல்லிக்கொடுத்தார். அவர் சொல்லிக்கொடுத்ததை இப்போ வரை ஃபாலோ பண்ணிட்டிருக்கேன். கிட்டத்தட்ட 10 சீரியல்கள் நடிச்சுட்டேன்.''

``சினிமா வாய்ப்பு பற்றி...’’

`` `பாயும் புலி’ படத்தில் நடிகர் ஹரிஷ் உத்தமனுக்கு ஜோடியா வேற ஓர் ஆர்ட்டிஸ்ட்டை செலக்ட் பண்ணியிருந்தாங்க. அவங்க கடைசி நேரத்துல வராததால், தெரிஞ்சவங்க மூலமா எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சது. முதல் படத்திலேயே பெரிய நடிகருக்கு ஜோடி. அதுதான் என் முதல் படம். தொடர்ந்து நிறைய படங்கள் வந்துச்சு.''

``இதுக்கு உங்க ஃபேமிலி சப்போர்ட்...’’

``என் அப்பாவுக்கு சினிமாவில் நடிக்கணும்னு ஆசை இருந்து, அது அமையல. நான் மீடியாவுக்கு டிரை பண்ணும்போது வீட்டுல யார்கிட்டேயும் சொல்லலை. ஆடிஷன் போறப்பவும் சொல்லலை. நியூஸ் ரீடரா செலக்ட் ஆனதுக்கு அப்புறம்தான் சொன்னேன். அப்பாவுக்குத் தன்னால் முடியாததை என் பொண்ணு பண்றாள்னு சந்தோஷம் இருந்தாலும், சொந்தக்காரங்க என்ன சொல்வாங்களோ என்கிற பயமும் இருந்துச்சு. ஆனாலும், என்னை ஊக்கப்படுத்தி சம்மதிச்சார். அவர் டிப்பார்ட்மென்டல் ஸ்டோர் வெச்சிருக்கார். கடைக்கு வர்றவங்ககிட்ட என்னைப் பற்றி பெருமையாகப் பேசறார். இப்போ, என் கணவரும் சப்போர்ட் பண்றார்.''

``என்னது, உங்களுக்குத் திருமணம் ஆயிடுச்சா?’’

``பலருக்கும் இந்தச் சந்தேகம் இருக்கு. எனக்குத் திருமணமாகி ஒரு வருஷம் ஆச்சு. கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அரேஞ்சுடு மேரேஜ். சத்தியமா எனக்குத் திருமணம் ஆகிடுச்சுன்னு சொன்னாலும் பலரும் நம்பறதில்லை.’’

``மறக்கமுடியாத பாராட்டு...’’

``மறக்க முடியாத பாராட்டும் இருக்கு; மறக்கமுடியாத அடியும் இருக்கு. `சவரக்கத்தி' படத்தின்போது, ஒரு காட்சியில் எப்படி நடிக்கணும்னு மிஷ்கின் சார் சொல்லிக்கொடுத்தார். அப்போ நல்லா நடிக்கலைன்னு கோபத்தில் அடிச்சுட்டார். கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. அப்புறம், அவர் எதிர்பார்த்த மாதிரி அந்தக் காட்சியில் நடிச்சு முடிச்சதும், ஒரு பெரிய சாக்லேட் வாங்கிக்கொடுத்து சமாதானம் பண்ணி பாராட்டினார். அதேமாதிரி, இயக்குநர் பிரம்மா சார் அடிக்கடி என் நடிப்பை பாராட்டுவார்.''

``நெகட்டிவ் ரோலில் நிறைய நடிக்கிறீங்களே...’’

``ஒரு கதைக்கு நெகட்டிவ் கதாபாத்திரம்தான் முக்கியம். நெகட்டிவ் ரோலை வச்சுத்தான் பாசிட்டிவ் கதாபாத்திரத்தைத் தீர்மானிக்க முடியும். `குலதெய்வம்’ சீரியலில், நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிச்சேன். எங்கே போனாலும் மக்கள் என்னைத் திட்டினாங்க. அந்தத் திட்டுதான் தொடர்ந்து இதேமாதிரியான ரோலில் நடிக்கும் எண்ணத்தைக் கொடுத்துச்சு. நெகட்டிவ் மூலமா நம்முடைய நடிப்புத் திறமையை இன்னும் சிறப்பா வெளிப்படுத்த முடியுது.’’

``நீங்க `பிக்பாஸ்’ ரித்திகா மாதிரி இருக்கீங்கன்னு சொல்றாங்களே...’’

``வெளியில் என்னைப் பார்க்கும் 80% பேர், ரித்விகான்னு நினைச்சுதான் பேசுறாங்க. அவங்க வேற, நான் வேறங்கன்னு சொல்லிட்டு வருவேன். இத்தனை நாள் என்னுடைய உழைப்பால் இந்த இடத்தைப் பிடிச்சிருக்கேன். எனக்குன்னு இருக்கும் அடையாளத்தை இந்த மாதிரி சொல்லி முறியடிக்காதீங்க. எனக்கும் அவங்களுக்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கு.’’

``உங்க நெக்ஸ்ட் பிளான்..?’’

``சித்தார்த் நடிக்கும் பெயர் வெளியிடப்படாத படத்தில் நடிக்கிறேன். மக்கள் மனதில் இடம் பிடிக்கணும். நல்ல நடிகை என்கிற பெயர் வாங்கணும் அதுதான் என் ஆசை, திட்டம் எல்லாம்!’’