Published:Updated:

``டெலிவரிக்குப் பத்து நாள் முன்னாடி வரைக்கும் திருமதி செல்வம்ல நடிச்சேன்'' - ராகவி

``டெலிவரிக்குப் பத்து நாள் முன்னாடி வரைக்கும் திருமதி செல்வம்ல நடிச்சேன்'' -  ராகவி
``டெலிவரிக்குப் பத்து நாள் முன்னாடி வரைக்கும் திருமதி செல்வம்ல நடிச்சேன்'' - ராகவி

``டெலிவரிக்குப் பத்து நாள் முன்னாடி வரைக்கும் திருமதி செல்வம்ல நடிச்சேன்'' - ராகவி

வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் தனக்கென தனி இடத்தைத் தக்கவைத்திருப்பவர், ராகவி. 25 வருடங்களுக்கும் மேலாக மீடியாவில் பயணிப்பவர். தனக்கான கதாபாத்திரத்தைத் நேர்த்தியாகத் தேர்ந்தெடுத்து நடிப்பவர். தற்போது, சன் டிவியின் `மகாலட்சுமி' சீரியலில் நடித்துவருகிறார். அவரைப் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்திருக்கிறார். அதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, அவரைப் பற்றிய குட்டி பயோ...

பெயர்: ராகவி

அறிமுகம்: குழந்தை நட்சத்திரமாக `ராஜா சின்ன ரோஜா' திரைப்படம்.

ஃபேமஸான சீரியல்: திருமதி செல்வம்

தற்போது நடிப்பது: `மகாலட்சுமி' சீரியல்

எதிர்காலத் திட்டம்: நடிப்புடன் பகுதி நேரமாக பிசினஸ் செய்ய வேண்டும்.

``12 வயதில் மீடியாவில் என்ட்ரி ஆனேன். குழந்தை நட்சத்திரமாக `ராஜா சின்ன ரோஜா' படத்தைத் தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. பிறகு, `மருதுபாண்டி', `ஒன்ஸ்மோர்' போன்ற படங்களில் நடிச்சேன். படங்களில் நடிக்கும்போதே சீரியல் வாய்ப்பு வந்துச்சு. சின்ன வயசுங்கிறதால் ரொம்பவே ஆக்ட்டிவா இருப்பேன். எதையும் சேலேஞ்சா எடுத்துட்டு செஞ்சு காட்டிடணும்னு துடிப்பு. வீட்டுல நடிக்கிறதுக்குத் தையில்லை என்றாலும், படிப்பும் ரொம்ப முக்கியம்னு சொல்லிட்டாங்க. அதனால், படிப்பிலும் கவனமா இருந்து எம்.ஏ டிகிரி வாங்கினேன். பிஸியா நடிச்சுட்டிருக்கும்போது காதல் மலர்ந்தது. எட்டு வருஷம் காதலிச்சோம். பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணப் பந்தத்தில் நுழைந்தோம். என் பலம் என் அம்மாதான். அம்மாவுக்கு அடுத்து என்னை உற்சாகப்படுத்தறது கணவர். அவர் சினிமாவில் கேமராமேன் துறையில் இருக்கிறதால் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுட்டிருக்கோம்'' என்றார் ராகவி.

நடிப்புக்கு ஏற்பட்ட பிரேக் குறித்துப் பேசியபோது, ``கர்ப்பமாக இருந்தப்பவே, `திருமதி செல்வம்' சீரியல் உட்பட ஐந்து சீரியல்களில் நடிச்சுட்டிருந்தேன். டைரக்டர் குமரன் சார், ரொம்ப ஃப்ரெண்ட்லி. டெலிவரி டைமில் மற்ற சீரியல்களிலிருந்து விலகிட்டு, `திருமதி செல்வம்' சீரியலில் மட்டும் டெலிவரிக்கு 10 நாளைக்கு முன்னாடி வரை நடிச்சேன். குழந்தை பிறந்து மூன்று நாள் கழிச்சு மறுபடியும் நடிக்க வந்தேன். என் குழந்தைக்கு ஐந்து வயசு ஆகும் வரைக்கும் நடிச்சேன். அப்புறம், அவளுக்காக அதிக நேரம் செலவழிக்க பிரேக் எடுத்தேன். இப்போ, மறுபடியும் சன்டிவியின் `மகாலட்சுமி' சீரியலில் நடிக்கிறேன்'' என்றவர், மகள் குறித்து குஷியுடன் தொடர்கிறார்.

``என் பொண்ணு ஐந்தாம் வகுப்பு போறாங்க. அவங்க சேட்டையைத் தாங்கமுடியலை. என் அம்மாவை நான் எந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணினேனோ அதுக்குப் பல மடங்கு என் பொண்ணு சேட்டை பண்றாங்க. வீட்டுல என் டீச்சர் அவங்கதான். எனக்குச் சுத்தமா சமைக்கத் தெரியாது. நடிப்புக்கு பிரேக் எடுத்து வீட்டில் இருந்தப்போ, மகளுக்காகவே சமைக்கக் கத்துக்கிட்டேன். அவங்க ஆசைப்பட்டு கேட்பதை சமைச்சுக் கொடுப்பேன். வெளியில் போகும்போதெல்லாம் பாப்பாவுக்கு ஏதாவது வாங்கிட்டு வருவேன். அதேநேரம், 60% செல்லம் கொடுத்தால், 40% கண்டிப்புடன் இருப்பேன். செல்லத்துடன் கண்டிப்பும் அவசியம். என்னைவிட அவங்க அப்பாவிடம் பயங்கர குளோஸ். நானும் கணவரும் ரொம்ப நேரம் பேசிட்டிருந்தாலும் அவங்களுக்குப் பிடிக்காது. அவங்க அப்பா, அவங்களுக்கு மட்டும்தானாம். நாங்க கூட்டுக்குடும்பமா இருக்கிறதால், தைரியமா மகளை விட்டுட்டு நடிக்கப்போறேன்'' எனத் தாய்மையில் பூரிக்கிறார் ராகவி.

``பொதுவா, எந்தக் கஷ்டத்தையும் ஈஸியா கடந்துடறது என் பாலிஸி. எதையும் பாசிட்டிவ் கோணத்தில் பார்ப்பேன். ராகவேந்திராவும், பாபாவும் என் இரு கண்கள். ராகவேந்திரா என் அப்பா, பாபா என் குரு. ரெண்டு பேர் மேலும் அளவுகடந்த பக்தியும் அன்பும் வைச்சிருக்கேன். என்னை அவங்கதான் வழிநடத்தறதா நம்பறேன். சிவாஜி சார் முதல் கமல் சார் வரை நிறைய பெரிய நட்சத்திரங்கள் என் நடிப்பைப் பாராட்டியது உண்டு. தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் எண்ணத்தில் இருக்கேன். காஸ்டியூம் பொறுத்தவரைக்கும் என் ஜாக்கெட்டை நானே டிசைன் பண்ணிப்பேன். ஷூட்டிங்குக்காக மட்டும்தான் சேலை கட்டுவேன் மற்றபடி, என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட், ஜீன்ஸ் அண்டு டாப்ஸ். எதிர்காலத்தில் டெய்லரிங் யூனிட் ஆரம்பிக்கும் எண்ணமும் இருக்கு'' என்றார்.

``உங்க பிளஸ், மைனஸ் என்ன?'' எனக் கேட்டால், ``ரெண்டுமே கோபம்தாங்க'' எனப் புன்னகைக்கிறார் ராகவி.

அடுத்த கட்டுரைக்கு