Published:Updated:

``சில இயக்குநர்கள் விட்டுக்கொடுத்திருந்தால், பலர் சினிமாவில் சாதித்திருப்பார்கள்..!" - `பிரியமானவள்' பத்மினி

``சில இயக்குநர்கள் விட்டுக்கொடுத்திருந்தால், பலர் சினிமாவில் சாதித்திருப்பார்கள்..!"  -  `பிரியமானவள்' பத்மினி
``சில இயக்குநர்கள் விட்டுக்கொடுத்திருந்தால், பலர் சினிமாவில் சாதித்திருப்பார்கள்..!" - `பிரியமானவள்' பத்மினி

``என் கணவர் டைரக்டர். `பயபுள்ள', `கிள்ளாதே' என இரண்டு படங்களை இயக்கியவர். ஓர் உறைக்குள்ளே இரண்டு கத்தி இருக்கக் கூடாதுன்னு சொல்வாங்க. அப்படி, அவர் எடுக்கும் படங்களில் நான் நடிக்க மாட்டேன்னு ரொம்ப உறுதியா இருக்கேன்!"

வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும், சின்னத்திரை மூலம் பிரபலமானவர், பத்மினி. 17 வருடங்களாகச் சின்னத்திரையில் நடித்துவருபவர். `சின்னத்திரை வில்லி' என்றாலே பலரும் கண்ணை மூடிக்கொண்டு இவரை கைகாட்டும் அளவுக்கு வில்லியாகக் கலக்குபவர். அவருடன் ஒரு பர்சனல் சாட்.

பெயர்: பத்மினி

அறிமுகம்: குழந்தை நட்சத்திரம்

ஃபேமஸ் சீரியல்: இளவரசி

தற்போது: பிஸியான சீரியல் நடிகை

எதிர்காலத் திட்டம்: ஹோட்டல் வைக்க ஆசை

``என் அப்பா சினிமாவில் இருந்ததால் என்னை எட்டு வயசிலேயே மீடியாவில் அறிமுகப்படுத்திட்டார். குழந்தை நட்சத்திரமா பல படங்களில் நடிச்சேன். எனக்கே விவரம் புரிஞ்சு நடிச்ச படம், `கன்னிராசி'. தமிழ், மலையாளம் எனப் பல மொழிப் படங்களில் நடிச்சேன். மலையாளத்தில் அதிக வாய்ப்பு கிடைச்சது. ஆனாலும், தமிழ்ப் படங்களில் வந்த வாய்ப்புகளை விட்டு விடவில்லை. `மடிசார் மாமி' என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அப்போ எனக்கு 21 வயசு. ஆனாலும், பெரிய பொண்ணு மாதிரி கெட்டப் போட்டு நடிச்சேன். பல நல்ல கதாபாத்திரங்களில் நடிச்சிருந்தாலும், `இளவரசி', `அழகி' சீரியல்கள் எனக்கு ஒரு பெயர் வாங்கிக்கொடுத்துச்சு. இப்போ, எங்க செட்டுல நான்தான் சீனியர் ஆர்ட்டிஸ்ட்'' எனப் புன்னகைக்கிறார் பத்மினி. 

குடும்பம் பற்றிப் பேசும்போது புன்னகையின் எடை கூடுகிறது. ``என் கணவர் டைரக்டர். `பயபுள்ள', `கிள்ளாதே' என இரண்டு படங்களை இயக்கியவர். ஓர் உறைக்குள்ளே இரண்டு கத்தி இருக்கக் கூடாதுன்னு சொல்வாங்க. அப்படி, அவர் எடுக்கும் படங்களில் நான் நடிக்க மாட்டேன்னு ரொம்ப உறுதியா இருக்கேன். திருமணமாகும்போதே வேலை வேற, ஃபேமிலி வேற என நாங்க பேசி தெளிவுபடுத்திக்கிட்டோம். அவர் எடுக்கும் படங்களில் நான் நடிக்க மாட்டேன். நான் நடிக்கும் சீரியலை அவர் டைரக்ட் பண்ண மாட்டார். ஆனால், நடிப்பு விஷயத்தில் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்றார். எங்களுக்கு ஒரே ஒரு பொண்ணு. ஆறாவது படிக்கிறாங்க. இதுதான் என் அழகான குடும்பம்'' என்றவர், மீண்டும் தொழில் பக்கம் டர்ன் ஆகிறார்.

``என்னைப் பார்த்ததுமே இந்த முகத்துக்கு நெகட்டிவ் ரோல்தான் செட்டாகும்னு சொல்லிடறாங்க. கிட்டத்தட்ட 30 சீரியல்களில் மெயின் வில்லியா நடிச்சாச்சு. புதுசா ஒரு சீரியலில் `வில்லி' கதாபாத்திரம் வேணும்னு பேசிக்கிட்டாலே, என் பெயரைத்தான் முதல்ல சொல்றாங்க. நெகட்டிவ் மூலமாதான் திறமையை அதிகம் வெளிப்படுத்த முடியுது. ஆனால், நான் பாசிட்டிவ் கதாபாத்திரத்திலும் நடிச்சுப் பெயர் வாங்கியிருக்கேன். அதுக்கான சரியான உதாரணம்தான், `பிரியமானவள்'. என்னுடைய வாழ்க்கையில் நான் நடிச்சதில் மறக்கமுடியாத கேரக்டர், `பிரியமானவள்' உலகநாயகி. ஏன்னா, அந்தக் கதாபாத்திரம் எப்படியோ அப்படித்தான் நிஜத்தில் என் கேரக்டர்'' என்கிறார் பத்மினி. 

தற்போது, `பிரியமானவள்', `மின்னலே', `நாம் இருவர் நமக்கு இருவர்' போன்ற சீரியல்களில் பிஸியாக நடித்துவருபவர், `` `மாசாணி' என்ற படத்தில் நடிச்சிருக்கேன். நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தாலும் என்னால் நடிக்க முடியலை. ஏன்னா, தேதி பிரச்னை ஏற்படுது. சில டைரக்டர்ஸுக்கு விட்டுக்கொடுக்கும் தன்மை கிடையாது. சில சந்தர்ப்பங்களில், அட்ஜெஸ்ட் பண்றது தப்பு இல்லையே. ஒருநாள் சீரியல் ஷூட் நடக்கலைன்னாலும் மறுநாள் எடுத்துக்கலாம். ஆனால், சினிமா அப்படியில்லே. அதைப் புரிஞ்சுட்டு விட்டுக்கொடுத்தால், பல சீரியல் ஆர்ட்டிஸ்ட்ஸ் படங்களிலும் திறமையைக் காண்பிக்க முடியும். எனக்கு சினிமாவில் மெயின் வில்லியா நடிக்க ஆசை. இன்னொரு விஷயம் தெரியுமா மக்களே... நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சிருக்கேன். அதனால், ஹோட்டல் வைக்கும் ஆசையும் இருக்கு'' என்கிறார் பத்மினி.

அடுத்த கட்டுரைக்கு