Published:Updated:

"தயவு செஞ்சு என்னைத் திட்டுங்க ப்ளீஸ்!" - 'சந்திரலேகா' சுமங்கலி

"தயவு செஞ்சு என்னைத் திட்டுங்க ப்ளீஸ்!" - 'சந்திரலேகா' சுமங்கலி
"தயவு செஞ்சு என்னைத் திட்டுங்க ப்ளீஸ்!" - 'சந்திரலேகா' சுமங்கலி

கிட்டத்தட்ட 30 வருடங்களாகச் சின்னத்திரையில் நடித்துவருபவர், சுமங்கலி. பல சீரியல்களில் பாசமான அம்மா கதாபாத்திரத்தில் அனைவரையும் ஈர்த்தவர். சினிமா, சின்னத்திரை என வலம் வந்தவர். தன்னுடைய கதாபாத்திரத்தை முழு ஈடுபாட்டோடு ஏற்று நடிப்பவர். தற்போது, 'யாரடி நீ மோகினி', 'சந்திரலேகா', 'முள்ளும் மலரும்' போன்ற சீரியல்களில் நடித்துவருகிறார். அவரைச் சின்ன பயோடேட்டாவுடன் தொடர்வோம்.

பெயர்: சுமங்கலி

அறிமுகமான படம்: என்ன தவம் செய்தேன்

அறிமுகமான சீரியல்: லேடிஸ் ஹாஸ்டல்

தற்போது: சீரியலில்கள்.

எதிர்காலத் திட்டம்: நடிப்பைத் தவிர வேறில்லை.

''11 வயதில் மீடியாவில் நுழைந்தேன். என் தாய்மொழி தெலுங்கு. எங்க ஃபேமிலியில் பலர் சினிமாவில் இருந்ததால், எந்தத் தடையும் இல்லை. தமிழில் 'என்ன தவம் செய்தேன்' படத்தில் அறிமுகமானேன்.  தொடர்ந்து தெலுங்கு, தமிழ் என 20 படங்களுக்கும் மேலாக நடிச்சிருக்கேன். அந்த நேரத்தில், கிரேஸி மோகன் சாரின் ஸ்டேஜ் டிராமா குரூப்பிலும் சேர்ந்தேன். நேரடியாக மக்கள் எதிரில் நடிக்கிறது சவாலாகவும் ரொம்ப பிடிச்சும் இருந்துச்சு. அந்த குரூப்பில் சிறிது காலம் நடிச்சேன். அப்போ, தூர்தர்ஷன் டிராமாவில் வாய்ப்பு கிடைச்சது. 'நாடகம்' மேலிருந்த காதலால், அந்த வாய்ப்பையும் சந்தோஷமா ஏத்துக்கிட்டு நடிச்சேன். அந்த நேரம்தான் சன் டிவியில் சீரியல் ஆரம்பிச்சாங்க. ஏவிஎம் புரொடக்‌ஷனின் 'லேடிஸ் ஹாஸ்டல்' என் முதல் சீரியல். தொடர்ந்து பல சீரியல்களில் நடிக்க ஆரம்பிச்சேன்.

பாஸிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு விதமாக நடிச்சிருக்கேன். இப்போதான் பாசத்தில் அழும் கதாபாத்திரமாகவே வருது. கொஞ்ச நாளில் மறுபடியும் வில்லி கதாபாத்திரம் கிடைக்கும்னு நம்பறேன். ஏன்னா, எனக்குப் பிடிச்சது, நெகட்டிவ் கதாபாத்திரம்தான். ஏன்னா, அதுலதான் முழுமையான நடிப்புத் திறமையை வெளிப்படுத்த முடியும்'' என்கிற சுமங்கலி, குடும்பம் பற்றி தொடர்ந்தார்.

''எனக்குத் திருமணம் செய்துக்கணும்னு தோணவே இல்லை. அதனால் செஞ்சுக்கலை. என் வாழ்க்கையே நடிக்கிறதுக்கு மட்டும்தான்னு நினைக்கிறேன். நடிப்பைத் தவிர்த்து ஒரு கிளாசிக்கல் டான்சர். முன்னாடி நிறைய நிகழ்ச்சிகளில் நடனம் ஆடியிருக்கேன். இப்போ எல்லாத்தையும் விட்டுட்டேன். சிவாஜி சாருடன் 'தியாகம்' படத்தில் நடிச்சேன். அவர் கண்ணைப் பார்த்தாலே போதும்னு தோணுச்சு. டயலாக் இருக்கும்போது மட்டும் அவர் முன்னாடி பேசிட்டு, மற்ற நேரங்களில் ஓரமா நின்னு அவரையே பிரமிப்புடன் பார்ப்பேன். அவர் மேலே மரியாதை கலந்த பயம் இருக்கும். அவருடன் நடிச்சது என் பாக்கியம்.

நான் நடிச்ச எல்லா சீரியல்களுமே 1000 எபிசோடுகளைக் கடந்திருக்கு. என்னை வெளியில் பார்க்கும் சிலர், 'சந்திரலேகா சீரியலில் அமைதியான நல்ல மாமியாரா இருக்கீங்களேம்மா. உங்களைப் போய் உங்க மருமகள் கொடுமைப்படுத்தறாளே'னு சொல்வாங்க. தெலுங்கு சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிச்சபோது, திருப்பதி கோயிலுக்குப் போயிருந்தேன். அங்கே என்னைப் பார்த்தவங்க, 'ஏன் இவ்வளவு கொடூரக்காரியா இருக்கீங்க'னு திட்டுவாங்க. பாராட்டைவிட திட்டு வாங்குறது எனக்குப் பிடிச்சிருக்கு. அதனால நல்லா திட்டுங்க! 30 வருஷத்துக்கு முன்னாடி, கிரேஸி மோகன் சார் டிராமாவில் நடிச்ச 'ஜானகி' கதாபாத்திரத்தை இப்பவும் ஞாபகம்வெச்சு பாராட்டறவங்க உண்டு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னால முடிஞ்ச அளவுக்கு நடிப்புல இன்னும் திறமையை வெளிக்காட்டணும். அதுதான் என் எதிர்காலத் திட்டம்'' எனப் புன்னகைக்கிறார் சுமங்கலி.