Published:Updated:

"அப்போ பாராட்டினாங்க... இப்போ திட்டறாங்க!" - 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' சுபத்ரா

"அப்போ பாராட்டினாங்க... இப்போ திட்டறாங்க!" - 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' சுபத்ரா
"அப்போ பாராட்டினாங்க... இப்போ திட்டறாங்க!" - 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' சுபத்ரா

"அப்போ பாராட்டினாங்க... இப்போ திட்டறாங்க!" - 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' சுபத்ரா

வீஜேவாக அறிமுகமாகி, சீரியலில் நுழைந்தவர் சுபத்ரா. கதாநாயகியாக நடித்து அனைவரையும் ஈர்த்தவர், தற்போது நெகட்டிவ் ரோலில் இறங்கி அடிக்கிறார். அப்பாவியாக இருந்தவரா இன்று இப்படி என ஆச்சர்யத்துடன் அவரைத் தொடர்புகொண்டு பேசினோம். தொடர்ந்து பேசும் முன்பு அவரைப் பற்றிய குட்டி பயோ...

பெயர்: சுபத்ரா

அறிமுகம்: மாடல்

தற்போது நடிப்பது: 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி', 'மின்னலே'

எதிர்காலத் திட்டம்: சீரியல் அல்லது சினிமாவுக்கு டயலாக் எழுதணும்

''மாடலிங் மூலமா என் மீடியா பயணம் ஆரம்பமாச்சு. 'சென்னை சில்க்ஸ்' விளம்பரம் பண்ணினேன். தொடர்ந்து, ஜெயா டிவியில் ஆங்கரிங் வாய்ப்பு கிடைச்சது. எனக்கு அது புதுசு. முயற்சி செய்துபார்ப்போம்னு இறங்கிட்டேன். ஆரம்பத்துல தடுமாற்றம் இருந்துச்சு. சீக்கிரமே ஆங்கரிங் ரூட்டைப் பிடிச்சுட்டேன். அப்போ, ஜெயா டிவியில் 'திரும்பி பார்க்கிறேன்' நிகழ்ச்சி நடந்துட்டிருந்துச்சு. அந்த நிகழ்ச்சிக்காக ஆங்கரிங் பைட் வாங்கறதுக்கு, பாலச்சந்தர் சாரைப் பார்க்கப் போயிருந்தேன். என்னைப் பார்த்தவர், அவருடைய 'இலக்கணம் மாறுமோ' சீரியலில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அப்புறம் நிறைய சீரியல் வாய்ப்புகள் அமைஞ்சது'' என்கிற சுபத்ரா, நாயகி டு வில்லி பயணத்தைப் பகிர்கிறார்.

'' '7 c', 'தேவதை' போன்ற சீரியல்களில் மெயின் ரோலில் நடிச்சேன். 'கைராசிக் குடும்பம்' சீரியல் வரையில் ஹீரோயின் கதாபாத்திரம்தான். அப்போ பலரும் எனக்கு இதுதான் சரி. இந்த முகவெட்டுக்கு  நெகட்டிவ் ரோல் செட்டே ஆகாதுன்னு சொல்வாங்க. அதனாலேயே, நெகட்டிவ் ரோலில் நடிச்சு நிரூபிக்கணும்னு நினைச்சேன். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'தமிழ்க்கடவுள் முருகன்' சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரம் வந்ததும் சட்டுன்னு பிடிச்சுக்கிட்டேன். இப்போ, 'மின்னலே', 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' போன்ற இரண்டு சீரியல்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். பாஸிட்டிவ் கதாபாத்திரத்திலேயே நடிச்சுட்டு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறது ஆரம்பத்தில் சவாலா இருந்துச்சு. 

வீட்டுல நிறைய ஹோம் ஒர்க் பண்ணுவேன். பாடி லேங்குவே, ஃபேஸ் ரியாக்‌ஷன்ஸ் எனத் திரும்ப திரும்ப செஞ்சு பார்ப்பேன். இப்போ வெளியில் என்னைப் பார்க்கும் ஆடியன்ஸ், ''முன்னாடி எப்பவுமே அழுதுட்டே இருந்தீங்க. இப்போ சூப்பரா கலக்கறீங்க'னு பாராட்டறாங்க. சிலர் திட்டறதும் ஒரு பக்கம் இருக்கு. ரெண்டுமே பிடிச்சிருக்கு. 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' சீரியலில் உறவாடி கெடுக்கும் கிராமத்து கேரக்டர். அதுக்கு சிம்பிள் மேக்கப் போதும். 'மின்னலே' சீரியலில் ரிச்சான வில்லி. அதுக்கு தனித்துவமா காட்ட, விதவிதமான வெயிட்டான ஜூவல்லரி கலெக்‌ஷன்ஸ்களை செலக்ட் பண்ணுவேன். சிம்பிள் சேலை கட்டினாலும் வெயிட் ஜூவல்லரிஸ் போடும்போது வேற லுக் கொடுக்கும். பாஸிட்டிவ் கதாபாத்திரத்தைவிட நெகட்டிவ் ரொம்பவே கஷ்டம்னு புரியுது'' என்ற சுபத்ரா, பர்சனல் பக்கங்களையும் புரட்டுகிறார்.

''எனக்குத் திருமணம் ஆகிடுச்சு. ஃபேமிலியில் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறாங்க. யூஜி சைக்காலஜி படிச்சிருக்கேன். இப்போ, எம்.எஸ்.சி சைக்காலஜிக்கு அப்ளை பண்ணியிருக்கேன். சின்னத்திரையில் சிலர் சட்டுன்னு தற்கொலை முடிவை எடுத்துடறாங்க. பொறுமையா யோசிச்சா அது எவ்வளவு பெரிய அபத்தம்னு புரியும். மன உளைச்சலில் இருக்கிறவங்களுக்கு இலவசமா கவுன்சிலிங் கொடுக்கும் எண்ணமும் எனக்கு இருக்கு. தவிர, நான் டயலாக் எழுதுவேன். டயலாக் எழுதுறதுல விஜய் டிவியின் ரமணன் சார் என் குரு. அவர்கிட்ட நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். வருங்காலத்தில் சீரியல், சினிமா என டயலாக் எழுதும் எண்ணம் இருக்கு. முன்னாடி, 'பிள்ளை நிலா' என ஒரு படத்தில் ஹீரோயினா நடிச்சேன். அப்புறம் சினிமாவில் நடிக்கும் எண்ணம் முடிஞ்சுடுச்சு. இப்போ, மறுபடியும் நடிக்க முடிவு பண்னியிருக்கேன். சீக்கிரமே வெள்ளித்திரையிலும் என்னைப் பார்க்கலாம்'' எனப் புன்னகைக்கிறார் சுபத்ரா.

அடுத்த கட்டுரைக்கு