Published:Updated:

``பாடகியாகவும் நடிகையாகவும் பிஸியா ஓடிட்டிருக்கேன்!" - `மாயா' அனிதா

வெ.வித்யா காயத்ரி
``பாடகியாகவும் நடிகையாகவும் பிஸியா ஓடிட்டிருக்கேன்!" - `மாயா' அனிதா
``பாடகியாகவும் நடிகையாகவும் பிஸியா ஓடிட்டிருக்கேன்!" - `மாயா' அனிதா

பாடகியாக அறிமுகமாகி, வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருப்பவர், அனிதா. அவரது குரலுக்கும் நடிப்புக்கும் ஏராளமான ரசிகர்கள். தற்போது, சன் டிவியின் `மாயா' தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரிடம் பேசுவதற்கு முன்னர், அவரைப் பற்றிய குட்டி பயோ...

பெயர்: அனிதா

அறிமுகமான படம்: இருவர் 

அறிமுகமான சீரியல்: சிவசங்கரி

தற்போது நடிப்பது: `மாயா' சீரியல்

எதிர்காலத் திட்டம்: பாட்டு, நடிப்புன்னு பயணிக்க ஆசை.

``நான் முதன்முதலா அறிமுகமானது சிங்கராக. நிறைய நிகழ்ச்சிகளில் பாடிட்டிருந்தேன். ஒரு ஷோவில் என்னைப் பார்த்துட்டு, `இருவர்' படத்தில் ரேவதி மேமுடைய பொண்ணா நடிக்கக் கூப்பிட்டாங்க. அடுத்து, `ஆஹா' படத்தில் விஜயகுமார் சாரின் பொண்ணாக, மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடிச்சேன். அந்தப் படம் முடிஞ்சதும், விஜயகுமார் அங்கிள் ரஜினி சாரைப் பார்க்க என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. `விஜயகுமாருக்கு மட்டும்தான் பொண்ணா நடிப்பியா, எனக்குப் பொண்ணா நடிக்க மாட்டியா?'னு விளையாட்டா கேட்டார். `நீங்களும் கூப்பிடுங்க அங்கிள். நான் நடிக்கிறேன்'னு சொல்லிட்டு வந்தேன். சும்மா விளையாட்டுன்னுதான் நினைச்சேன். ஆனால், படையப்பா பட ஆடிஷனுக்குக் கூப்பிட்டு, உடனே செலக்ட் பண்ணிட்டாங்க. ரஜினி சார் பொண்ணாவும் நடிச்சேன். அந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்ல என் பிறந்தநாளை செலிபிரேட் பண்ணினது, வாழ்நாளில் மறக்கமுடியாத தருணம். 

தொடர்ந்து, `அன்புடன்', `மெளனம் பேசியதே' போன்ற படங்களில் நடிச்சேன். படிப்புக்காக பிரேக் எடுத்துட்டு மறுபடியும் `தில்லுமுல்லு',  `யாகாவாராயினும் நா காக்கா', `காஞ்சனா 2' படங்களில் நடிச்சேன். படிப்புக்காக பிரேக் எடுத்திருந்தபோதே, சீரியல் வாய்ப்பு வந்துச்சு. `சிவசங்கரி' என்கிற சீரியல் அறிமுகமானேன். தொடர்ந்து, `உதிரிப்பூக்கள்', `தெய்வமகள்', `வள்ளி', `விதி' என நிறைய சீரியல்களில் நடிச்சேன். இப்போ, `மாயா' சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரம். ஜீ தமிழ் `சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்' நிகழ்ச்சியின் பேனல் ஜட்ஜாகவும் இருக்கேன்'' என்றவரிடம், படங்களுக்குப் பாடல் பாடிய அனுபவம் குறித்துக் கேட்டதும் குஷியாகிறார்.

``பாலபாரதி சாரின் இசையில், `நாங்க' படத்தில் பாடகியா அறிமுகமானேன். `இமான்' சாரின் இசையில் நிறைய படங்களுக்குப் பாடியிருக்கேன். விஜய் சேதுபதி சாரின் `கருப்பன்' படத்தில் வரும் `முறுக்குமீசை மாமா' பாடல் நான் பாடினதுதான். அந்தப் பாடலுக்காக இமான் கூப்பிட்டப்போ பயங்கர அதிர்ச்சியா இருந்துச்சு. நிஜமாவே இமான் சார்தான் நம்மைப் பாடச் சொல்றாரான்னு சந்தேகம் வந்துருச்சு. அப்புறம், அவருடன் சேர்ந்து நிறைய நிகழ்ச்சிகளிலும் பாடியிருக்கேன். அந்த அனுபவங்கள் எல்லாம் வார்த்தையில் சொல்ல முடியாதவை. 

`மாயா' சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரம் மாதிரி, சீக்கிரமே வரப்போகும் ஒரு சீரியலில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். `மாயா' சீரியலில் ரிச்சான வில்லி. அது, மற்ற சீரியல்களில் வருகிற வில்லி மாதிரியான கதாபாத்திரம் இல்லை. காமெடி கலந்த வில்லி கதாபாத்திரம். என் காஸ்டியூம் விஷயத்தில் நான் ரொம்ப கவனமா இருப்பேன். என் டிரஸுக்கு மேட்ச்சா அக்சஸரீஸ் போடுவேன். ஒரு சேலைக்குப் பொருத்தமான அக்சஸரீஸ் கிடைக்கலைன்னா, வேறு பார்த்துப்போம்னு அட்ஜெஸ் பண்ணிக்க மாட்டேன். எப்போ அதுக்கு மேட்ச்சா கிடைக்குதோ அப்போதான் அந்த டிரஸைப் போடுவேன். காட்டன் சேலை கட்டினால், அதுக்கேற்ற திரட் டைப் மெட்டல் ஜூவல்லரி போடுவேன். சில்க், பட்டு ஆடைகள் என்றால், அதுக்கேற்ற கோல்டு, குந்தன் செட் நகைகளைப் போடுவேன். எப்பவும் சேலையுடன் பார்டர் கலருக்கு மேட்ச் ஆகும் அக்சஸரீஸை செலக்ட் பண்ணுவேன்'' எனப் புன்னகைக்கிறார் அனிதா.