Published:Updated:

"கமலை ஏன் கிஸ் அடிக்கலை'னு கேட்கிறாங்க!" - 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' ஷூட்டிங்ல மீட்டிங் - 14

"கமலை ஏன் கிஸ் அடிக்கலை'னு கேட்கிறாங்க!" - 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' ஷூட்டிங்ல மீட்டிங் - 14
"கமலை ஏன் கிஸ் அடிக்கலை'னு கேட்கிறாங்க!" - 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' ஷூட்டிங்ல மீட்டிங் - 14

`ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் அரட்டை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்' என்றது தாத்தா பாட்டி காலம். `ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்' என்றால், `ஊருக்கு எப்படி ராஜா இருப்பார், நாட்டுக்குத்தானே ராஜா இருக்கணும்?' என்றது நம் காலம்.

`ஒரு ஊருல..' என நாம் தொடங்கினால், முடிப்பதற்குள்ளே `ஒரு ராஜகுமாரிப்ப்பா.. அவ பேரு ராசாத்தி' என்கிறது, இன்றைய குழந்தை. அந்த அளவுக்கு பிரைம் டைமில் ஒளிபரப்பாகி, குழந்தைகளையும் கவர்ந்துவிட்ட, `ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்தான் இந்த வார `ஷூட்டிங்ல மீட்டிங்' ஏரியா.

சென்னை - புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக மகாபலிபுரம், அங்கிருந்து திருக்கழுக்குன்றம். அந்த மலைக்கோவில் தலத்தின் முகப்பில் இருக்கிறது, வயல்வெளிகள் சூழ்ந்த அந்தப் பச்சைப் பசேல் கிராமம். தொடரில் ஹீரோ இனியனின் (வசந்த்) வீடு. இந்த வீட்டின் எதிரே மரத்தடியில் மதிய உணவுக்காகக் கூடியிருந்தது யூனிட்.

``கபடி வீரர் இனியனோட வீடு பஸ்கூட நுழையாத கிராமத்துல இருக்கு. அந்த வீட்டுக்கு சூழ்நிலையால் மணமகளா வர்றாங்க, நகரத்துல வசித்த ஹீரோயின் ராசாத்தி. கிராமத்து வீட்டை சென்னைக்குள்ளே செட் போட்டு எடுக்கலாம்தான். ஆனா, அதை நாங்க விரும்பலை. அதனாலதான் ரொம்பவே சிரமப்பட்டு இப்படியொரு அக்மார்க் கிராமத்தைக் கண்டுபிடிச்சு வந்தோம். இந்தக் கிராமத்துல டீக்கடை கூட கிடையாது. ஆனா, சீரியல் ஒளிபரப்பாகி இப்போ நல்லா போய்க்கிட்டு இருக்கிறதால, இனியனோட இந்த வீட்டுக்கும் இந்தக் கிராமத்துக்கும் ஒரு அடையாளம் கிடைச்சிருக்கு!" என்றபடி நம்மை வரவேற்ற தொடரின் இயக்குநர் தேவேந்திரன், இனியன், ராசாத்தி (அஷ்வினி) மற்றும் கோ ஆர்ட்டிஸ்டுகள், டெக்னீஷியன்களை நமக்கு அறிமுகப்படுத்தினார்.

``என்னோட கதாநாயகியைத் தேட அலைஞ்சதையும் சொல்லுங்க சார்.." என அவரிடம் இனியன் ரெக்வெஸ்ட் வைக்க, அந்த மேட்டருக்கு வந்தார், இயக்குநர்.

``உடல் பருமனான ஒரு பொண்ணு மனசுதான் கதைனு தீர்மானமாச்சு. நிஜமாகவே குண்டா இருக்கிற நடிகை நடிச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு. ஓரளவு குண்டா இருந்த சில நடிகைகள் மறுத்துட்டாங்க. பிறகுதான் புதுமுகம்னாலும் பரவாயில்லைனு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரானு நாலு ஸ்டேட்லேயும் சுத்தினோம். நிறைய பேரை சந்திச்சோம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணங்களால செட் ஆகலை. கடைசியா `குண்டுப் பொண்ணோட மனசு'ங்கிற இந்த கான்செப்டையே விட்டுட்டு வேறு கதை ரெடி பண்ணலாமானு நினைச்சுக்கிட்டு இருந்தப்போதான், கன்னட சேனல்ல ஒரு ரியாலிட்டி ஷோவில் அஷ்வினியைப் பார்த்தோம். ராசாத்தி கேரக்டருக்கு கடைசி முயற்சியா ட்ரை பண்ணிப் பார்க்கலாம்னு கிளம்பி பெங்களூரு போனோம். சில பல தயக்கங்கள், சந்தேகங்கள் அவங்களுக்கு இருந்தது. அதையெல்லாம் கிளியர் பண்ணிக் கூட்டிட்டு வந்தோம்!'' என்றார், தேவேந்திரன்.

``ஷூட்டிங் அனுபவம் எப்படி?" இனியனிடம் கேட்டோம்.

``சினிமாவோ சீரியலோ, வழக்கமா, ஹீரோனா ஹீரோயினோட கெமிஸ்ட்ரி பற்றிய பேச்சுதான் தூக்கலா இருக்கும். `இந்த ஹீரோயின்கூட உனக்கு எப்படி மச்சி கெமிஸ்ட்ரி?'னு நண்பர்கள் கலாய்க்கிறாங்க. அதுக்கேற்ற மாதிரியே இப்போ எந்நேரமும் ராசாத்தியைத் திட்டிக்கிட்டிருக்கிற கேரக்டர் நான். ஆனா, அந்தப் பொண்ணு இருக்கே... செம ஷார்ப்!. யார் என்ன சொன்னாலும் காதுல ஏத்திக்க மாட்டாங்க. இந்தக் கிராமத்துல எங்களைப் பார்க்க திரள்கிற கூட்டத்தைக்கூட தனக்குக் கூடுறதாகவே சொல்வாங்க. `ஆமா, வயக்காட்டுக்குள்ள யானை புகுந்திடுச்சு'னு நினைச்சு விரட்ட மக்கள் வர்றாங்க'னு சொன்னா, `யேய் மேன்.. என் வெயிட்டுக்குக் காரணம் நல்ல கொழுப்பு தெரியுமா, ஒண்ணும் ஆகாது'னு சிரிச்சுட்டு கடந்து போயிடுவாங்க!" என்ற இனியன், ``நாங்கதான் அவங்களை பட்டப்பேரு வெச்சுக் கூப்பிடுறோம்னு நினைக்காதீங்க. அவங்க டைரக்டர் உட்பட எங்க எல்லோருக்கும் பட்டப்பேர் வெச்சிருக்காங்க. அதை என்னனு கேளுங்க" என்றார்.

சபீதானந்த், கோவை பாபு என சீனியர் ஆர்ட்டிஸ்டுகளிடம் கலாய்க்கிற அளவுக்கு ஒட்டிவிட்டாராம், அஷ்வினி.

``வந்த கொஞ்ச நாள்லேயே என்னோட ஃபேமஸான `மைனர்' டயலாக்கைப் பத்தி விசாரிச்சுத் தெரிஞ்சுகிட்டு என்னையே ஓட்டுறாங்கனா பாருங்க" என்கிறார், கோவை பாபு.

``வசந்த் சொன்னது போலவே இந்த சீரியலோட சக்ஸஸுக்குப் பின்னாடி அஷ்வினிக்கு முக்கியமான பங்கு இருக்கு. ரொம்ப பாசிட்டிவான பொண்ணு. தன் உடல் எடையை நினைச்சு எந்தக் காரணத்துலேயும் ஃபீல் பண்ணின மாதிரி எனக்குத் தெரியலை. இப்படித்தான் இருக்கணும்" என்கிறார், ராசாத்தியின் அம்மாவாக நடிக்கும் சபீதானந்த்.

`ராசாத்தி' அஷ்வினியிடம் பேசினோம்.

``தமிழ் சீரியல் பெரிய ரீச் தரும்னு கேள்விப்பட்டிருக்கேன். இப்போ ஃபீல் பண்றேன். இப்படியொரு சீரியல்ல நான் நடிக்க அனுமதிச்ச என் கணவருக்கும், ஃபேமிலிக்கும் முதல் நன்றி. சென்னையைவிட இந்த வில்லேஜ் ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்தக் கிராமத்திலேயே தங்கியிருந்துதான் மொத்த ஷூட்டிங்னு சொன்னாலும் ஓகே சொல்லிடலாம்னு இருக்கேன்.

அப்புறம் ஷூட்டிங் ஸ்பாட்ல கலாய்க்கிறவங்க ஜாலிக்காகப் பண்றாங்க. அதை நானும் சீரியஸாவே எடுத்துக்கமாட்டேன். இனியன் மட்டும் கொஞ்சம் ஓவரா கலாய்ப்பார். கேட்டா, `டயலாக் ரிகர்சல் பண்ணிப் பார்க்கிறேன்'னு சொல்லிக்கிட்டிருக்கார். நான் கட்டில்ல படுத்திருக்கிறப்போ கட்டில் உடைஞ்சிடற மாதிரி ஒரு சீன் கொஞ்ச நாளைக்கு முன்னாடி எடுத்தாங்க. செமயா ரீச் ஆன சீன் அது. அதேபோல, அப்பாவியான என் குணத்தை எப்படியும் கொஞ்சம் மாத்துவாங்கனு நினைக்கிறேன். அப்போ புருஷனை அடிக்கிற மாதிரி சீனும் வரும். அப்போ கவனிச்சிக்கலாம்னு இருக்கேன்'' என்றவரிடம், சமீபத்தில் ப்ரியா வாரியர் ஸ்டைலில் கமல்ஹாசனிடம் கண் அடித்த அனுபவத்தைக் கேட்டதும், முகம் முழுக்க வெட்கம்!

`விஸ்வரூபம்' சம்பந்தப்பட்ட டெலிவிஷன் ஷோவுக்கு வந்திருந்தார். சின்ன வயசுல அவர் கண் அடிச்சதைப் பத்தியெல்லாம் பேசிக்கிட்டிருந்தப்போ, `திடீர்னு இங்கே யாராச்சும் கமல் சார்கிட்ட கண் அடிக்க விருப்பமா?'னு கேட்க, அந்த சான்ஸ் எனக்கு வந்தது. அந்த நிமிடத்தை இன்னும் என்னால நம்பவே முடியலை. டிவியில அந்த ஷோ வந்தபிறகு அவ்ளோ ரெஸ்பான்ஸ். `ப்ரியா வாரியரின் பினாமி'னு ஒருத்தர் மீம்ஸ் போட்டிருக்கார். `கண் அடிச்சதோட ஏன் நிறுத்திட்டீங்க, கிஸ் அடிக்க சான்ஸ் கிடைக்கலையா?'னு கேட்குறாங்க. அப்பப்பா... எவ்ளோ என்கொயரி?" - சிலிர்க்கிறார், ராசாத்தி.

ரம்மியமான அந்தச் சூழலில் சின்ன ஓய்வுக்குப் பிறகு மறுபடியும் ஷூட்டிங் தொடங்கியது.

``இனியன் - ராசாத்தி திருமணம் ஒரு நிர்பந்தத்துல நடந்திடுது. காதல் தோல்வியால இனியன் ராசாத்தியை ஒரு பொருட்டாகவே நினைக்காம இருக்கார். கணவர் மனம் மாறிடுவார்னு நம்பிக்கையில இருக்கிறாள், ராசாத்தி. இதுக்கிடையில இனியன் வாழ்க்கையில இன்னொரு பெண்ணும் வர்றாங்க. அவங்களாலேயும் ராசாத்திக்குப் பிரச்னை. வீட்டுக்குள்ளேயே இருக்கிற நாத்தனார் ஒருபுறம் டார்ச்சரா இருக்கார். எல்லாப் பிரச்னைகளையும் வெகுளித்தனமான முகத்தை வெச்சே சமாளிச்சுக்கிட்டு வர்ற ராசாத்திகிட்ட, கணவர் ஒரு சத்தியம் கேட்கிறார். அது என்ன, சத்தியம் பண்ண ராசாத்தி சம்மதிக்கிறாரா இல்லையா, அதுக்குப் பிறகு என்ன நடக்கும்... இதெல்லாம்தான் இனி வரும் நாள்கள்ல தெரியும்!" எனக் கதையின் அடுத்த நகர்வுகள் குறித்துத் தெரிவித்த இயக்குநர் டேக் கிளம்ப, நாமும் கிளம்பினோம்.

அடுத்த வாரம் வேறொரு சீரியல் ஸ்பாட்டில் சந்திப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு