Published:Updated:

``எனக்கும் என் மகனுக்கும் ஒரே வயசுதான்!’’ 'நாயகி' மீரா கிருஷ்ணன்

``எனக்கும் என் மகனுக்கும் ஒரே வயசுதான்!’’ 'நாயகி' மீரா கிருஷ்ணன்
``எனக்கும் என் மகனுக்கும் ஒரே வயசுதான்!’’ 'நாயகி' மீரா கிருஷ்ணன்

``என் மகனாக நடிக்கும் திலீப்புக்கும் எனக்கும் ஒரே வயசு. ஆனா, 'மகனே!' 'அம்மா!' எனக் கூப்பிட்டு நடிக்கும்போது, ஸ்பாட்ல சிரிப்பலை வரும்."

``தமிழ்நாட்டுக்கு ஷிஃப்ட்டாகி ஒன்பது வருடங்கள் ஆகுது. இப்போதான் ரசிகர்களிடம் அங்கீகாரம் கிடைச்சிருக்கு" என மகிழ்ச்சியுடன் பேசுகிறார் மீரா கிருஷ்ணன். சன் டிவி 'நாயகி' சீரியலில், வசந்தி ரோலில் நடித்துவருபவர்.

"உங்க ஆக்டிங் கரியர் தொடங்கியது எப்படி?"

"என் பூர்வீகம், கேரளாவின் கோட்டயம். நான் கிளாசிக்கல் டான்ஸர். கேரளாவில் புகழ்பெற்ற, 'கேரளா ஸ்கூல் ஃபெஸ்டிவல்' நிகழ்ச்சியில் வெற்றிபெற்றேன். மலையாள சினிமா, சீரியல் ஆர்டிஸ்டுகள் பலருக்கும் அந்த நிகழ்ச்சிதான் முதல் வெற்றி மேடை. அந்த அடையாளத்தால், பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தேன். தொடர்ந்து டான்ஸில் ஆர்வம் செலுத்தினேன். 'மார்கம்' படம் மூலமாக, சினிமாவில் ஹீரோயினா அறிமுகமானேன். சிறந்த நடிகைக்கான (நடுவர் குழு) கேரள மாநில அரசின் விருதும் கிடைச்சது."

"சினிமாவில் பெரிதாகக் கவனம் செலுத்தாமல் போனது ஏன்?"

"முதல் படத்துக்குப் பிறகு, நிறைய சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. ஆனால், என் காலேஜ் படிப்பு பாதிக்கவே, வாய்ப்புகளை மறுத்துட்டேன். இதுவரை மூணு மலையாளப் படங்களில்தான் நடிச்சிருக்கேன். அதேநேரம், ஆங்கரிங், சீரியல் ஆக்டிங்னு படிப்பு பாதிக்காத வகையில், சின்னத்திரையில் ஆக்டிவா வொர்க் பண்ணினேன். காலேஜ் முடிஞ்சதும் கல்யாணம், ரெண்டு ஆண் குழந்தைகள், குடும்பப் பொறுப்புகள் என சினிமா பக்கம் யோசிக்கவே நேரமில்லாமல் போயிருச்சு. என் கணவர் சிவக்குமார், லாரன்ஸ் மாஸ்டரிடம் கோ-டைரக்டரா வொர்க் பண்றார். அவர் சினிமாவிலும் நான் சின்னத்திரையிலும் இருக்கோம்."

" 'நாயகி' சீரியல் வாய்ப்பு பற்றி..."

"கல்யாணத்துக்குப் பிறகு சென்னைக்கு ஷிஃப்ட் ஆகிட்டோம். வீட்டுல தமிழ்தான் பேசுவோம். அதனால், தமிழ் மொழியும் தமிழ்நாடும் எனக்குப் பரீட்சயம். ஆனாலும் சரியான தமிழ் வாய்ப்புகள் அமையலை. ஐந்து வருஷத்துக்கு முன்னாடி, கலைஞர் டிவியில் 'பொக்கிஷம்' சீரியல் வந்துச்சு. அதில், ஹீரோயினா அறிமுகமானேன். அப்பவும் தமிழ்நாட்டில் பெரிய அடையாளம் கிடைக்கலை. சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். ஒருநாள் அம்பிகா மேடம் போன் பண்ணி, 'நான் 'நாயகி' சீரியலில் கமிட் ஆகியிருக்கேன். அதில் ஒரு நல்ல ரோல் இருக்கு. நீங்க பண்றீங்களா'னு கேட்டாங்க. நிறைய மலையாள சீரியல்களில் நடிச்சுட்டேன். எல்லாமே ஹீரோயின் ரோல். ஆனால், 'நாயகி' சீரியலில் 27 வயசு பையனுக்கு அம்மா ரோல். முதலில் ரொம்பவே தயங்கினேன். அப்புறம்தான் டைரக்டர் குமரன் சாரை சந்திச்சேன். அவர் ஐந்து நிமிடம் பேசிட்டு, ஓகேனு சொல்லிட்டார். எனக்கு எந்த டெஸ்டும் நடக்கலை. கேரக்டரின் முக்கியத்துவம் புரிஞ்சதும் உற்சாகமா நடிக்க ஆரம்பிச்சுட்டேன்."

"வசந்தியை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?''

(சிரிக்கிறார்) "இப்போ எங்கே போனாலும், வசந்தி எனச் சொல்லித்தான் மக்கள் பாராட்டறாங்க. இதுக்கு மேலே என்ன சொல்றது? அம்மா ரோலில் மெச்சூரிட்டி தெரிய, கொஞ்சம் வெயிட் போட்டேன். எனக்கு டல் மேக்கப், காஸ்டியூம்ஸ் இருக்கும். மற்ற நேரங்களில் இயல்பான என் தோற்றத்தில் இருப்பேன். மக்கள் பலரும் என்னை உற்றுப் பார்ப்பாங்க. பக்கத்துல வந்து, 'உங்களுக்கு அக்கா யாராச்சும் இருக்காங்களா? அவங்க பேரு வசந்தியா'னு கேட்பாங்க. சிரிப்புதான் வரும். 'அது நான்தான். கேரக்டருக்காக அப்படி மேக்கப் போட்டிருப்பேன்'னு சொல்வேன்."

"ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றி..."

"என் மகனாக நடிக்கும் திலீப்புக்கும் எனக்கும் ஒரே வயசு. ஆனா, 'மகனே!' 'அம்மா!' எனக் கூப்பிட்டு நடிக்கும்போது, ஸ்பாட்ல சிரிப்பலை வரும். என் ஜோடியா நடிக்கும் சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி சாருக்கும் எனக்கும் வயசு வித்தியாசம் அதிகம். சீரியலில் அவர் அடிக்கடி என்னைத் திட்டிகிட்டே இருப்பார்; அடிப்பார். அப்படி நடிக்கும்போதெல்லாம், 'மன்னிச்சுக்கோம்மா. ஸாரிம்மா'னு சொல்வார். இப்படி நிறைய சுவாரஸ்யங்கள் நடக்கும். என் சின்ன வயசுல அம்பிகா மேடத்தின் நடிப்பைப் பார்த்து ரசிச்சு வியந்திருக்கேன். இப்போ அவங்க தங்கையா நடிக்கிறதில் ரொம்ப சந்தோஷம். இப்போ, விளம்பரப் படங்களிலும் நடிக்கிறேன். புதுசா ஒரு சீரியலில் கமிட் ஆகியிருக்கேன். அம்மா ரோல்தான் தொடர்ந்து வருது. ஆனாலும் வருத்தம் இல்லை. இது நடிப்புதானே. மக்கள் ரசிக்கிறாங்கன்னா ஓகே. இப்போதும் பல நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடறேன். முன்னாடி டான்ஸ் கிளாஸ் எடுத்துட்டிருந்தேன். மறுபடியும் கிளாஸ் எடுக்கும் எண்ணம் இருக்கு."

அடுத்த கட்டுரைக்கு