Published:Updated:

"நம்மட நாடு வர்ஷகால கெடுதியிலானு" பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அறிவித்த மோகன்லால்

கடந்த சனிக்கிழமை நடந்த மலையாள பிக் பாஸ் எபிசோடில், கேரள வெள்ள பாதிப்பை அறிவித்தார், மோகன்லால்.

"நம்மட நாடு வர்ஷகால கெடுதியிலானு" பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அறிவித்த மோகன்லால்
"நம்மட நாடு வர்ஷகால கெடுதியிலானு" பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அறிவித்த மோகன்லால்

யற்கையின் தேசமான கேரளாவை இயற்கையின் சீற்றமே சீரழித்திருக்கிறது. வரலாறு காணாத பெருவெள்ளத்தைச் சந்தித்திருக்கிறது கேரளம். கேரளாவில் உள்ள எல்லா அணைகளும் திறந்துவிடப்பட்டிருக்கின்றன. 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள்  முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்த இழப்பு 20,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடுகிறார்கள். `100 ஆண்டுகளில் இல்லாத பெரும்சேதம் இது’ என்கிறார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். தேசியப் பேரிடர் மீட்புக் குழு, முப்படை வீரர்கள், காவல்துறையினர், அரசியல் தலைவர்கள், இளைஞர்கள் என அத்தனை பேரும் மீட்புப் பணிக்காகக் களமிறங்கியுள்ளனர். உலகம் முழுவதிலிருந்தும் கேரள மக்களுக்காக உதவிக் கரங்கள் நீள்கின்றன. ஒரு பக்கம் இப்படி மாநிலமே சோகத்தில் இருக்க… இன்னொரு பக்கம் அங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போதும்போல தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

மோகன்லால் தொகுத்து வழங்க 16 போட்டியாளர்களுடன் இந்த ஆண்டுதான் மலையாளத்தில் தொடங்கப்பட்டது பிக்பாஸ். காமெடி,  அடிதடி, புறணி எனத் தமிழ் பிக்பாஸில் இருக்கும் எல்லாக் காட்சிகளும் மலையாள வெர்சனிலும் இருந்தன. சொல்லப்போனால் தமிழைவிட அங்கே சண்டையெல்லாம் காரசாரம். சென்ற வாரம் கமல்கூட சிறப்பு விருந்தினராக மலையாள பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று வந்தார். இப்போது மழை வெள்ளத்தால் கேரளாவே தத்தளிக்க என்டர்டெயின்ட்மென்ட் இண்டஸ்ட்ரீ வழக்கமாக சந்திக்கும் அதே தர்மசங்கடத்துடன் மலையாள பிக்பாஸை தொடர வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது ஏசியாநெட் டீம். `நாட்ல என்ன நிலைமை, இப்போ இதெல்லாம் தேவையா?’ என்று சிலர் ஷோல்டரைத் தூக்கினாலும், அவர்களுக்கு அதுதானே பிசினஸ் என்கிற புரிதலுடன்தான் இதை அணுகவேண்டியிருக்கிறது.  

`வெளிஉலகத் தொடர்பு துளியுமின்றி 100 நாள்கள்’ என்பதுதான் பிக்பாஸின் அடிப்படை விதி. அதனால் வெளியில் நடக்கும் எந்த விஷயங்களையும் வீட்டுக்குள் இருப்பவர்களுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்வார்கள். ட்வின் டவர் தாக்கப்பட்டபோது அமெரிக்காவில்  பிக்பாஸ் சீசன் 2, கடைசி 3 போட்டியாளர்களுடன் ஃபைனலை நெருங்கிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அந்தச் செய்தியை அறியாதவர்கள் உலகிலேயே அந்த 3 பேராகத்தான் இருப்பார்கள். ஒருவாரம் கழித்து விஷயத்தைச் சொன்னார்கள். அதுவும் ஏன் தெரியுமா. அந்தத் தாக்குதலில் பலியானவர்களில் அந்த 3 பேரில் ஒருவரின் உறவினரும் இருந்தார்.  சென்ற ஆண்டு நம்மூரில் பிக்பாஸ் நடந்தபோது பெரிதாக எதுவும் நடக்காததால் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு அறிவிக்க வேண்டிய தேவை வரவில்லை. ஆனால், இந்த ஆண்டு சில நாள்களுக்கு முன்பு திமுக தலைவர் மு.கருணாநிதி மறைந்த போது அதை பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு அறிவித்து 2 நிமிடம் அஞ்சலி செலுத்தச் சொன்னார்கள். இந்த ஆண்டுதான் மலையாள பிக்பாஸ்க்கு முதல் சீசன், இதற்குள் இப்படி ஓர் அசம்பாவிதம் நடந்துவிட உள்ளிருப்பவர்களுக்கு அறிவிக்கவேண்டிய கட்டாயம்.  இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உள்ளிருப்பவர்களுக்கு கேரளாவில் வெள்ளம் வந்தது மட்டுமல்ல, மழை வந்ததே தெரியாது. காரணம் பிக்பாஸ் வீடு செட் இருப்பது கேரளாவில் இல்லை மும்பையில். கடந்த சனிக்கிழமை நடந்த எபிசோடில் மோகன்லால் போட்டியாளர்களுக்கு வெள்ளம் பற்றி அறிவித்தார்.

``ஓணம் சீஸன்ல கேரளம் ரொம்ப கஷ்டமான சூழ்நிலைல இருக்கு. மழை வெள்ளத்தால் வருந்தத்தக்க பல விஷயங்கள் கேரளாவில் நடந்துருக்கு. இதுவரை நாம் பார்த்திராத பிரளயம் இது. கேரளாவின் பல பகுதிகள் நீரினால் சூழப்பட்டிருக்கிறது. இந்த இக்கட்டான சூழல்ல ஓணம் கொண்டாட வேணாம்னு நம்ம கவர்மென்ட் முடிவு பண்ணிருக்காங்க. பிக்பாஸ் வீட்லயும் நாம ஓணம் பெருசா கொண்டாட வேணாம்னு முடிவு பண்ணிருக்கோம். நிறைய ப்ளான் பண்ணியிருந்தோம். ஆனா இப்போ அதெல்லாம் வேணாம். யாரும் பயப்பட வேண்டாம். உங்க வீட்ல எல்லார்கிட்டயும் பேசிட்டோம். எல்லாரும் பத்திரமா இருக்காங்க. அவங்க போன்ல பேசுனதை ரெக்கார்டு  பண்ணியிருக்கோம். நீங்களே கேளுங்க.” என்று சொல்லி ஒவ்வொரு போட்டியாளர்களின் உறவினர்கள் பேசியதையும் அவர்களுக்குப் போட்டுக்காட்டினார்கள்.  எல்லாருடைய முகத்திலும் அதிர்ச்சி தெரிந்தாலும், இது அவர்களுக்கு ஓர் ஆறுதலாக இருந்திருக்கும்.

``நல்லவேளையா உங்கள் யாருடைய ஃபேமிலிக்கும் பிரச்னை இல்ல. அதே சமயத்தில் கேரளா மிகப்பெரிய சோகத்தில் இருக்கு. இதிலிருந்து மீண்டு வர எல்லாரும் ஒரு நிமிசம் பிரார்த்திப்போம்” என்று சொல்ல அனைவரும் எழுந்துநின்று பிரார்த்தனை செய்தனர். அதன்பிறகு வழக்கமான கமல் ஸ்டைல் குறுக்குவிசாரணை, புகார்கள், சண்டைகள், டாஸ்க் எனத் தொடர்ந்தது.  எவிக்சன் பற்றி வந்தபோது, ``இப்படியொரு சூழலில் மக்கள் யாரும் பெரிதாக ஓட்டுப் போடாததால், இந்த வாரம் எவிக்சன் கிடையாது. இப்போது எவிக்சன் லிஸ்டில் இருப்பவர்கள் அடுத்தவாரமும் அப்படியே தொடர்வார்கள்” என்று முடித்தார் லாலேட்டன். 

``ஏண்டா இந்தச் சூழ்நிலைல பிக்பாஸ் தேவையா?“ என்றும், ``ரஞ்சினி ஹரிதாஸை காப்பாத்தத்தான எவிக்சன் இல்லைனு சொல்லிட்டீங்க!” என்றும் சோசியல் மீடியாவில் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள் மலையாள மக்கள்.  அதேசமயத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் சிலர் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டும் வருகிறார்கள்.